“அண்டிவரும் உற்றார் பசித்தங் கிருக்கவே
அன்னியர்க் குதவுவோரும்,
ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
அற்பரை அடுத்தபேரும்,
கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
கொண்டாடி மருவுவோரும்,
கூறுசற் பாத்திரம் இருக்கமிகு தானமது
குணம்இலார்க் கீந்தபேரும்,
கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்
கைவிட் டிருந்தபேரும்,
கரிவாலை விட்டுநரி வால்பற்றி நதிநீர்
கடக்கின்ற மரியாதைகாண்!
வண்டடர் கடப்பமலர் மாலிகா பரணம்அணி
மார்பனே அருளாளனே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
இதன் பொருள் –
வண்டு அடர் கடப்பமலர் மாலிகா ஆபரணம் அணி மார்பனே - வண்டுகள் நெருங்கும் கடப்பமலரால் ஆன மாலையையும் அணிகலனையும் அணிந்த திருமார்பினரே!
அருளாளனே – அருளை உடையவரே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – தன்னை நாடி வரும் உறவினர் பசியுடன் இருக்க, பிறர்க்கு உதவி செய்பவரும்,
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டுப் பின் அற்பரை அடுத்த பேரும் - குற்றம் அற்ற நல்லோரிடம் கொண்ட நட்பை விடுத்து, கீழ்மக்களிடம் நட்புக் கொண்டவரும்,
கொண்ட ஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக் கொண்டாடி மருவுவோரும் – மணம் புரிந்துகொண்ட இல்லாள் ஒருத்தி இருக்கவும் வேசையைப் பாராட்டி, அவளோடு கலந்து இன்புற்று இருப்போரும்,
கூறு சற்பாத்திரம் இருக்கக் குணம் இலார்க்கு மிகு தானம் அது ஈந்த பேரும் – சொல்லப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்கும் தக்கவர்கள் இருக்க, தகாதவர்களுக்கு மிகுந்த பொருளைத் தானமாக வழங்கியவரும்,
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரைக் கைவிட்டு இருந்த பேரும் - (அப்போதுதான்) தன்னைப் பார்க்க வருகின்ற புதியவர்களை நம்பி, முன்னமே பழகி இருந்தவர்களைக் கைவிட்டு இருந்தவர்களும்,
கரி வாலை விட்டு, நரிவால் பற்றி நதிநீர் கடக்கின்ற மரியாதைகாண் - யானையின் வாலை விட்டுவிட்டு, நரியின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றுநீரைக் கடக்கும் தன்மை உடையவர்கள் என்பதை அறிக.
விரிவுரை
‘மாலிகா’ என்னும் வடசொல், தமிழில் மாலை என்று பொருள்படும். ஆசு - குற்றம். தபுதல் - கெடுதல். சற்பாத்திரம் – ஒழுக்க நெறியில் நின்றோரும், அதிதிகளும்.
“கரிவாலை விட்டு நரிவால் பிடித்தல்” என்பது ஒரு பழமொழி. பிறரை ஏமாற்றி, வஞ்சித்துத் தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணம் நரிக்கு உண்டு என்று சொல்லப்படும். அத்தகைய எண்ணம் உடையோர்கள் நரிக்குணம் உடையோர் என்று சொல்லப்படுவர். நரியின் வாலைப் பிடித்தக் கொண்டு நதியைக் கடக்க எண்ணுவது ஒருவனுக்குப் பெருந்துன்பமாகவே முடியும். கரி – யானை. யானையின் வாலைப் பிடித்துக் கொண்டால், நதியைக் கடக்க முடியும்.
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் –--
தான் அடைந்த பெரிய செல்வத்தால், தனக்கும் தனக்குத் துணையாக இருக்கும் சுற்றத்தவர்க்கும் எல்லா வித நன்மைகளையும் செய்துகொள்வதற்கு அறியாமல், பெற்ற செல்வத்தைப் பெருக்கவும், காக்கவும் வல்லமை இல்லாமையால், தன்னோடு சம்பந்தம் இல்லாத அயலவர் அதனால் உண்டான பயன்களை நிறைய அனுபவித்து இருக்க, சுற்றத்தார் பசி நோயால் வருந்துவர். அறிவில்லாதவன் பெற்ற செல்வமானது உதவ வேண்டியவர்க்கு உதவாமல், அயலவர் அனுபவிப்பதற்கு உரியது ஆகும் என்பதை காட்ட, “ஏதிலார் ஆர, தமர் பசிப்பர், பேதை பெரும்செல்வம் உற்றக் கடை” என்னும் திருக்குறளை அருளினார் நாயனார். “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்” என்பது ‘வெற்றிவேற்கை’
“விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார், வம்பர்க்கு உதவல்,
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக்
கரும்பனை அன்னது உடைத்து.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
இரும் பணை வில் வென்ற புருவத்தாய் - பெரிய மூங்கிலால் ஆகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினை உடையவளே! விரும்பி அடைந்தார்க்கும் - உணவிற்கு ஒன்றும் இன்மையால் வருந்தி, அறிமுகம் உள்ளதால் தன்னை விரும்பி வந்து அடைந்த அதிதிகளுக்கும், சுற்றத்தவர்க்கும் - தம் உறவினர்க்கும், வருந்தும் பசி களையார் - அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காதவராகி, வம்பர்க்கு உதவல் – புதிதாக வரும் அயலார்க்கு உதவி செய்தல், ஆற்ற கரும்பனை அன்னது உடைத்து - மிகவும் (தன்னைப் பாதுகாத்து வளர்த்ம்ர்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனையைப் போலும் தன்மையை உடையது.
“பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்று உகுக்கும்;
வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.” --- நாலடியார்.
இதன் பொருள் ---
பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் - பொன்னின் நிறத்தை உடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிரானது, மேலே மூடியுள்ள தாளுடன் உள்ளிருக்கும் கருவும் வாட, மின்னல் மிளிரும் மேகம் கடல்பகுதியில் நீர் சொரிந்து பெய்யும்; வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக் கால் வண்மையும் அன்ன தகைத்து - அறியாமையுடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தை அடைந்தால் அவருடைய கொடைத் திறமும் அதுபோன்ற இயல்பினதே ஆகும். (புன்மக்கள் செல்வம் தேவையற்றோர்க்கு எல்லாம் கொடுக்கும்படி நேர்ந்து வீணாகச் செலவழியும்.)
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டுப் பின் அற்பரை அடுத்த பேரும் ---
ஆசு – குற்றம். தபுதல் – நீக்குதல். பெரியோரைத் துணைக் கொண்டு வாழ்ந்தால், ஒருவனிடத்து உள்ள குற்றங்கள் அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறையும். தெய்வத்தாலாவது, மனிதராலாவது தனக்கு வந்த துன்பங்களை நீக்கும் விதத்தை அறிந்து நீக்கி, பின்னர் அது போன்ற துன்பங்கள் வாராதபடி, முன்னமே அறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை, அவர் மகிழத் தக்கனவற்றைச் செய்து, அவரைத் துணையாக்கிக் கொள்ளவேண்டும்.
தெய்வம் என்பது ஊழைக் குறிக்கும். எனவே, ஊழால் வரும் துன்பங்களான மழையில்லாமையாலும், அதிக மழையாலும், காற்று, தீ, பிணி முதலியவற்றாலும் வருவன. இத் துன்பங்கள் தம்மோரையும், கடவுளரையும் நோக்கிச் செய்யும் சாந்தி முதலியவைகளால் நீக்கப்படும். மக்களால் வரும் துன்பங்கள் ஆவன; பகைவர், கள்வர், சுற்றத்தார், தொழில் புரிவோர் ஆகிய இவர்களால் வருவன. அத் துன்பங்கள் சாம, பேத, தான, தண்டம் என்னும் நால்வகை உபாயங்களுள், தக்க உபாயத்தால் நீக்கப்படும்.
தெய்வத்தால் வரும் துன்பங்களை தீ நிமித்தம் அல்லது அறிகுறிகள் ஆகியவைகளால் அறிந்து, சாந்திகளால் காத்துக் கொள்ளலாம். மனிதரால் வரும் துன்பங்களை அவரது குணம், இங்கிதம், ஒழுக்கம், செயல் ஆகியவற்றால் அறிந்து, நால்வகை உபாயங்களுள் ஒன்றால் காத்துக் கொள்ளலாம். இவ்விரண்டுக்கும் பெரியோரது துணை நிச்சயம் தேவை. எனவேதான், “உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
“மூத்தோர் சொல்லும் முழுநெல்லிக் காயும் முன் துவர்க்கும் பின் இனிக்கும்” என்னும் பழமொழிக்கு ஏற்ப மூத்தோர் கூறும் அறிவுரைகள் தொடக்கத்தில் இன்பம் தருவனவாக இரா. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது, மூத்தவர்களின் அறிவுரைகள் ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும், இறுதியில் இனிமையான பயனைத் தரும் என்பதை உணர்த்தும் ஒரு பழமொழி. இது, மூத்தவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் வழங்கும் வழிகாட்டுதல்கள், வாழ்வின் கசப்பான உண்மைகளைப் போன்றே, ஆரம்பத்தில் சில சிரமங்களைத் தந்தாலும், பின்னாளில் அவை நமக்கு நன்மைகளையும், தெளிவையும் அளிக்கும் என்பதால் அமிர்தம் போன்றது என்பதை அறிவுறுத்த வந்த பழமொழி. “பெரியோர்களிடைக் கரவாகி” என்பார் அருணகிரிநாதர். சிறியோர் அறியாமையால் செய்யம் தவறுகளைச் சுட்டிக்காட்டி, பெரியோர் இடித்து உரைப்பர். அது சிறியோருக்குத் துன்பம் தருவதாகத் தோன்றும். எனவே, பெரியோர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் விலகுவதும், அவரைக் காண நேர்ந்தால் காணாதது போல் விலகிச் செல்வதும் பேதைகளின் இயல்பு.
“செயல்வேண்டா நல்லனசெய்விக்கும்; தீய
செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன்
தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்
முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
மூத்தார் வாய்ச்சொல் - அறிவால் மூத்த அமைச்சர்கள் கூறும் சொற்கள், செயல் வேண்டா நல்லன செய்விக்கும் - செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின் - அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின், விலக்கும் - இடைநின்று தடுத்தலைச் செய்யும், இகல் வேந்தன் தன்னை - பகை அரசனை, நலிந்து - வலியுறுத்தி, தனக்கு உறுதி கூறலால் - அவனுக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால்.முன் இன்னா - முன்னே துன்பம் தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.)
அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும் தீயன விலக்கும் என்பதாம். அமைச்சருக்குச் சொன்னதால், இது மனித இனத்துக்கே பொருந்தும் எனக் கொள்ளுதல் வேண்டும்.
“கங்கைநதி பாவம், சசிதாபம், கற்பகம்தான்
மங்கல் உறும்வறுமை மாற்றுமே, - துங்கமிகும்
இக்குணம்ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்
அக்கணமே போம்என்று அறி.” --- நீதி வெண்பா.
இதன் பொருள் ---
கங்கை நதியானது பாவத்தை நீக்கும். திங்கள் வெப்பத்தைப் போக்கும், கற்பகமரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்யும் வறுமையையும் நீக்கும். பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும், உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால், அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.
கொண்ட ஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக் கொண்டாடி மருவுவோரும் –--
கொண்ட கணவன் இருக்க, வேறு ஓர் ஆடவனை விரும்பும் பெண்ணும் பரத்தை என்றே கருத வேண்டும். விரும்பி மணம் புணர்ந்து கொண்ட மனையாள் இல்லத்தில் இருக்க அவளோடு கூடி இன்பத்தைத் துய்க்காது, பரதாரம் துய்த்தல், மாக வயப்பட்டு அறிவு மயக்கம் கொண்டவர்கள் செய்யும் தகாத செயல். நீதிமுறை தவறி, பிறனுடைய மனையாளிடத்தல் இன்பம் வேண்டிச் செல்வோனிடத்து, பகையும், குடிப் பழியும், அச்சமும், பாவமும் என்னும் இந் நான்கு குற்றங்களும் என்றும் நீங்காமல் இருப்பன, அவன் இம்மை மறுமை நலன்களை இழப்பான் என்பதை அறிவுறுத்த, “பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவா ஆம் இல் இறப்பான்கண்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
“அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் – அந்தப் பெரிய அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவே ஆதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் - நாள்தோறும் நினைக்கும் இடத்து அதற்கு ஏற்ற தண்டனை என்பது உண்மையாக அரசனது கொலைக் கட்டளையாக அமையும் என்பதாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் - நாள்தோறும் “கும்பிபாகம்” நரகத்துக்கே செல்வதற்கு உருவாகிய செயல் அது ஆதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாண் உடையார் -பழி பாவங்கட்கு அஞ்சுதல் உடையார் பிறன் மனைவியை விரும்பாமல் இருக்கவேண்டும்.
“அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா, - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம், புகழ், தக்கார் நேயம், ஆண்மை என இந் நான்கும்; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை விரும்புவாரிடத்தில் சேரமாட்டா; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.
“புக்க இடத்து அச்சம், போதரும் போது அச்சம்,
துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம்,
எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
புக்க இடத்து அச்சம் – பிறன் மனைவி இருக்கும் இடத்தில் புகும்போது அச்சம்; போதரும் போது அச்சம் - திரும்பி வரும்போது அச்சம்; துய்க்கும் இடத்து அச்சம் - இன்பத்தை நுகரும்போது அச்சம்; தோன்றாமல் காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ள வேண்டுமே என்னும் அச்சம்; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும்; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - இவற்றை எல்லாம் கருதாமல், ஒருவன் பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதல் ஏனோ? (பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதலில் முழுதும் அச்சமே அல்லாமல் இன்பமே இல்லை)
“காணின் குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்;
ஆண்இன்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
காணின் குடிப்பழி ஆம் - பிறர் கண்டு விட்டால் குடிக்குப் பழிச்சொல் வந்து சேரும்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை இல்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்காலம் நரகத் துன்பத்தைப் பின்பு உண்டு பண்ணும். துச்சாரி - தீயொழுக்கம் உடையவனே! நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு? எனக்குச் சொல்.
"ஓவியம் அமைந்தநகர் தீ உண உளைந்தாய்,
கோஇயல் அழிந்தது என, வேறொரு குலத்தோன்
தேவியை நயந்துசிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ?". - கம்பராமா. யுத்த. மந்திரப்படலம்,
இதன் பதவுரை ---
கோ இயல் அழிந்தது என - நமது ஆட்சியின் தன்மை அழிந்து விட்டது என்று; ஓவியம் அமைந்த நகர் - சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை மாநகரத்தை; தீ உண உளைந்தாய் - (அனுமன் வைத்த) தீ உண்டமைக்கு மனம் வருந்தினாய்; வேறு ஒரு குலத்தோன் தேவியை நயந்து - அரக்கர் இனம் அல்லாத வேறு ஒரு குலத்தவனான இராமனுக்கு உரிய மனைவியான சீதையை விரும்பி; சிறை வைத்த செயல் நன்றோ - (கவர்ந்து வந்து) சிறையில் வைத்த உனது செயல் நல்லதோ? பாவியர் உறும் பழி - பாவம் செய்தவர் அடையும் பழிகளிலே; இதின் பழியும் உண்டோ - இதை விடவும் கொடிய பழி வேறு உள்ளதோ?
“கொலை அஞ்சார் பொய்ந் நாணார் மானமும் ஓம்பார்
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார் - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிதுமற்று என்செய்யார்?
காம்ம கதுவபட் டார்.” -- நீதிநெறி விளக்கம்
இதன் பதவுரை ---
காமம் கதுவப்பட்டார் - காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலை அஞ்சார் - கொலை புரியப் பயப்படார், பொய் நாணார் - பொய் சொல்லக் கூசார், மானமும் ஓம்பார் - தம் பெருமையையும் பாதுகாவார், களவு ஒன்றோ - களவு செய்தல் ஒன்று மட்டுமா? (அதற்கு மேலும்) ஏனையவும் செய்வார், மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார், இஃது - இந்தக் காமம், பழியொடு பாவம் என்னார் - பழியொடு பாவம் ஆகுமே என்றும் நினையார், (அங்ஙனமாயின் அவர்) பிறிது என் செய்யார் - வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.
“இன்பமோ சிறிது ஆகும், இதில்வரும்
துன்பமோ கரை இல்லாத் தொடுகடல்
என்பது, ஆரும் இவனால் அறிய, இவ்
வன்பது அன வினையால் வருந்துவான்.” - தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன் பதவுரை ---
இன்பமோ சிறிது ஆகும் - (காமத்தால் வரும்) இன்பமோ அற்பமாகும், இதில் வரும் துன்பமோ கரை இல்லாத் தொடு கடல் - இதனால் விளையும் துன்பமோ கரையில்லாத கடலாகும், என்பது - என்னும் உண்மையை, ஆரும் இவனால் அறிய - யாவரும் இப்பாவியினால் அறிந்து கொள்ள, இவ்வன்பது ஆன வினையால் வருந்துவான் - இக் கொடுமையான தீவினையால் வருந்துவான் ஆயினன்.
கூறு சற்பாத்திரம் இருக்க, குணம் இலார்க்கு மிகு தானம் அது ஈந்த பேரும் –-
கூறு - புகழ்ந்து சொல்லப்படுகின்ற. சற்பாத்திரம் – நல்ல பாத்திரம். நற்குணம் பொருந்தியவர்களை இது குறிக்கும். கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் நிறைந்த நல்லோருக்குத் தானம் கொடுத்தால், அது பெரும்பயனைத் தரும். அல்லாதாருக்குச் செய்த உதவி பாவத்தையே கொடுக்கும்.
மிகு தானம் – மிகுதியாகத் தானம் கொடுத்தல் தானம் அல்லது உதவி என்பது மூன்று வகைப்படும். கைம்மாறு கருதியோ, அச்சம் காரணமாகவோ செய்யப்படுவது 'அதமதானம்'. 'மத்திம தானம் ' என்பது, ஏழை, குருடர், முதலியோர்க்குப் புண்ணியம் கருதிக் கொடுத்தல். 'உத்தம தானம்' என்பது, நல்வழியில் ஈட்டிய பொருளை, கைம்மாறு கருதாமல், புண்ணியம் என்ற எண்ணமும் இல்லாது, வறியவர்க்கும், தக்கார்க்கும் கொடுத்து உதவுதல். தக்க பெரியோர்க்குச் செய்த உதவியானது, அவர்க்குப் பயன்படாது, அவர் மூலமாகப் பிற நல்ல செயல்களுக்குப் பயன்படுவதால், அந்த தானம் "உத்தம தானம்" எனப்பட்டது.
தீயவர்க்குச் செய்த உதவியானது, அவர்க்கே நன்மையாய் முடியும். சில சமயங்களில், தீமையாகவே முடிவதும் உண்டு என்பதால் அது சிறப்பிக்கப்படவில்லை. தீயவர் என்றால், அவர்க்கு உதவியே செய்யக் கூடாதா? என்னும் ஐயம் எழும். அவர்க்குப் பசி தணிவித்தல் மட்டுமே புரிக என்றார் வள்ளல்பெருமான். காரணம், பசி என்பது அரசன், ஆண்டி, செல்வர், வறியவர் எல்லார்க்கும் உள்ளது.
இதனை வைத்தே, ஔவைப் பிராட்டியார், பின்வரும் பாடலை "மூதுரை" என்னும் நூலில் அருளிச் செய்தார்...
"நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே, --- அல்லாத
ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்."
இதன் பதவுரை ---
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணம் உடைய ஒருவர்க்குச் செய்த உதவியானது, கல்மேல் எழுத்துபபோல் காணும் - கருங்கல்லின் மேல் செதுக்கப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும். (ஆனால்) அல்லாத ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - நல்லவர் அல்லாத, உள்ளத்தில் அன்பு இல்லாத மனத்தை உடையவர்க்குச் செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு நேர் - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, ஒப்பாக அப்போதே அழிந்து விடும். (அல்லாத - நல்லவர் அல்லாத. ஈரம் இலா - அன்பு இல்லாத.)
நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும். தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் என்பது இப் பாடலின் கருத்து.
கயவர்களின் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும். "உதவி வரைத்து அன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து." என்னும் இத் திருக்குறளின் மூலம் "ஒருவருக்குச் செய்யும் உதவியானது, அதற்கான காரணமும், பொருளும், காலமும் ஆகிய மூன்று வகையாலும் செய்த உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவரின் தகுதியைப் பொறுத்தே அதன் சிறப்பு அமையும்" என்கின்றார் நாயனார். மூன்று வகையாலும் அல்லாத உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்ததும், தக்க காலத்தில் செய்ததும், பயனை எதிர்நோக்காது செய்த உதவியும் ஆகும். அதாவது, பிறர் செய்த உதவியை ஏற்றுக் கொண்டவர், அவருக்கு அவர் செய்த உதவியின் காரணம் மற்றும் உதவி செய்த பொருளின் அளவு, ஆகியவற்றிற்கு ஏற்ப பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, தமது தகுதிக்கு ஏற்பச் செய்தல் ஆகும்.
உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்வதும், ஆபத்து நேர்ந்த காலத்தில் செய்வதும், பயனை எதிர்பாராது செய்வதும்,
பிறர் செய்த உதவிக்கு ஏற்றவண்ணம், பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, அவர் மனம் மகிழும் வண்ணம், தமது தகுதிக்கு ஏற்றவாறு மறு உதவி செய்வதும் ஆகும். எனவே, காரணம் கருதியும், பொருள் கருதியும், காலம் கருதியும் செய்யும் உதவியானது, ஒரு பயனை நோக்கியதாக இருத்தலால், அது சிறந்தது ஆகாது.
நல்லோர்க்குச் செய்த உதவியானது எப்போதும் நிலைத்து நின்று, நல்ல பயனையே தரும் என்பதற்குப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.
"உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்
தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்." --- நாலடியார்.
இதன் பதவுரை ---
உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - (செயல் ஏதும் இல்லாமல் ஒடுங்கி இருக்கின்ற) மிகச்சிறிய அளவினதான ஓர் ஆலம் விதையானது, ஈண்டி இறப்ப நிழல் பயந்தாங்கு - (மண்ணில் விழுந்து முளைத்துத்) தழைத்துப் (பெரிய மரமாகி) பல நூறு பேர் வந்து தங்கி, இளைப்பாற) மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப் பயனும் தான் சிறிதாயினும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தருகின்ற பொருளும், அளவில் சிறியதே ஆனாலும், தக்கார் கைப்பட்டால் - தகுதியுடைய பெரியோர் கையில் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்து விடும் - வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.
"கடித் தாமரைக் கண்ணன் விழிக் கமலம் தர,
அடித் தாமரைச் சுடர்ப் பரிதி அளித்தருளினை, அதனால்
புதுமலர்ப் பொழில் தில்லை வாண!
உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே.
என்கின்றார் "சிதம்பர செய்யுட் கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகள்.
இதன் பொருள் ---
தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் தனது கண்ணை இடந்து, சிவபெருமான் திருவடியில் இட்டுப் பூசையை நிறைவு செய்தான். அதற்கு, சிவபெருமான் சூரியன் போலப் போரொளி விளங்கும் (சலந்தராசுரனை வதம் செய்த) சக்கரப்படையைத் திருமால் கையில் தந்தான். எனவே, மேலோர்க்குச் செய்த உதவி மேலான பயனை விளைக்கும். சிவபெருமான் அருளிய உதவி, திருமால் புரிந்த பூசைக்கும் மேலானது. எனவே, சிவபெருமான் திருமால் புரிந்த பூசனைக்குக் கைம்மாறாகப் புரிந்த உதவியானது மிக உயர்ந்தது. மேலான பரம்பொருளைப் பூசித்ததால், மேலான பலனைத் திருமால் பெற்றார்.
தக்கார்க்குச் செய்த உதவியானது, பின்னர் பல்கிப் பெருகிப் பயன் தருவது போல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு இருந்த்து என்கிறார் கவிச்சக்கரவர்த்தி.
"மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனுநெறி
போன தண்குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது நீத்தமே." --- கம்பராமாயணம்.
இதன் பதவுரை ---
மானம் நேர்ந்து - மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி - தருமநெறி கருதி; மனுநெறி போன - மனுநீதிப்படி நடக்கும், தண் குடை வேந்தன் புகழ் என - குளிர்ந்த வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்; ஞானம் முன்னிய - ஞான வழியை நாடுகின்ற; நான்மறையாளர் கைத் தானம் என்ன - நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது - சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.
மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன் ஓங்கும். அதுபோல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓயாது இருந்தது
ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் வெண்கொற்றக் குடை நிழலுக்காக ஏற்பட்டது இல்ல. துன்புறும் உயிர்க் குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம் அது. மாவலிச் சக்கரவர்த்தி, "உனது காலடிகளால் மூன்று அடி மண்ணை அளந்து கொள்க" என்று கூறிக்கொண்டு வாமனன் கையிலிருந்த குண்டிகை நீரை வாங்கித் தாரை வார்த்தான். மாவலி தாரை வார்த்த நீரரானது, தனது கையில் பட்டதும், பெற்றவர்களும் இகழும்படியான மிகச்சிறிய வடிவத்தை உடைய வாமனமூர்த்தி, வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். அவன் உயர்ந்த்து எப்படி இருந்தது என்றால், உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல இருந்தது. "உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்ற திருக்குறள் கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல, வாமனமூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்றார் கம்பநாட்டாழ்வார்.
"கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து, எதிர்
வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்,
உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே." --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
கயம் தரு நறும் புனல் - குண்டிகையில் இருந்த, குளத்தின் நறுமணமுள்ள அந்த நீரானது; கையில் தீண்டலும் - தனது கைகளில் தீண்டபப்பட்ட உடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமனமூர்த்தி; எதிர் பார்த்து வியந்தவர் - எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக் கொள -அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல; விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.
இதையே "சிவஞானசித்தியார்" என்னும் மெய்கண்ட சாத்திர நூல் கூறுவதையும் காணலாம்...
"சிவஞானச் செயல்உடையோர் கையில் தானம்
திலம்அளவே செய்திடினும், நிலமலைபோல் திகழ்ந்து,
பவமாயக் கடலின் அழுந் தாதவகை எடுத்து,
பரபோகந் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்
தவம்ஆரும் பிறப்புஒன்றிற் சாரப் பண்ணி,
சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே,
நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி,
நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே."
இதன் பதவுரை ---
சிவஞானச் செயல் உடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடினும் - (விதிவழி இன்றிப் பத்தி வழியில் நின்கின்ற) சிவஞானிகள் கையில் தானம் செய்து அளித்த பொருள் சிறிதே ஆயினும், நிலம் மலைபோல் திகழ்ந்து - நிலமும் மலையும் போல விரிவாகி ஓங்கி விளங்கும். (அத் தானம் செய்த அந்த பத்தருக்கு),
பரபோகம் துய்ப்பித்து - மேலாகிய (சிவசாலோகம் முதலிய பதங்களில் பொருந்தி உள்ள) இன்பங்களை அனுபவிக்கச் செய்து, பவ மாயக் கடலில் அழுந்தாத வகை எடுத்து - சனனம் மரணம் என்னும் கடலின்கண் அமிழ்ந்தாத வண்ணம் எடுத்து, பாசத்தை அறுக்க - பாசத்தினை நீக்க (முத்தியை அளிக்க), தவம் ஆரும் பிறப்பு ஒன்றில் சாரப் பண்ணி - தவம் செய்தற்கு உரிய (உயர்ந்த குலத்தில்) ஒரு பிறவியை அடையச் செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே - சரியை கிரியை யோகங்கள் (ஏனோர்க்குப் போலக் கால நீட்டிப்பும் அருமையும் இன்றி) எளிதில் கைகூடி முற்றுப் பெறச் செய்து, நவம் ஆகும் தத்துவ ஞானத்தை நல்கியே நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தான் - (முடிவில்) புதுமையாகிய உண்மை ஞானநெறியைத் தலைப்படுத்தி முதல்வனது செங்கமல மலர்போலும் திருவடியாகிய வீட்டினை எய்துவிக்கும்.
நமது கருமூலம் ஆறுக்க வந்த திருமூல நாயனாரும் இக் கருத்தை வலியுறுத்திப் பாடி உள்ளார்.
"திலம் அத்தனையே சிவஞானிக்கு ஈந்தால்,
பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்;
நிலம் அத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்,
பலமும் அற்றே, பரபோகமும் குன்றுமே." --- திருமந்திரம்.
இதன் பொருள் ---
கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னே ஆயினும், அதனைச் சிவஞானம் கைவரப் பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெரும் சித்திகளையும், பதமுத்தி, பரமுத்தி, அபர முத்திகளையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல இருந்துகொண்டு, யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலம் அத்தனைப் பொன்னைக் கொடுத்தாலும், அது யாதும் பயன் தராது. அல்லாமல், ஞானம் குறைதற்கும் ஏதுவாகி விடும்.
எனவே, தக்கார்க்கே உதவி செய்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
கண்டு வரு புதியோரை நம்பியே, பழையோரைக் கைவிட்டு இருந்த பேரும் ---
பழைமை என்னும் ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவ நாயனார் இதற்காகப் படைத்து உள்ளார். அதனை ஓதி உணர்க. நெடுநாள் பழகியவரை, அவரிடத்துக் காணும் சிறுகுறை காரணமாக விலக்குதலும் கூடாது. புதிதாக வந்தோரை நம்பி அவர்களைக் கைவிடுதல் கூடாது. பின்வரும் பாடல்களைக் காண்க.
“நல்லார் எனத் தாம் நனிவிரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்;
நெல்லுக்கு உமிஉண்டு, நீர்க்கு நுரைஉண்டு,
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் --- நல்லவர் என்று தாம் பலகாலும் ஆராய்ந்து மிகவும் நேசித்துக் கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர் நல்லவர் அல்லாராய் பிழைபட்டார் எனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக் கொள்ளல் வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டு புல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால், பயன்படுதல் உடைய, நெல்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமி உண்டு, அவ்வாறே நீர்க்கு நுரை உண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு. (உலகத்தில் குற்றம் இருத்தல் இயற்கை. ஆதலால், நண்பரிடத்து அதனைப் பாராட்டுதல் ஆகாது.)
“தமர் என்று தாம் கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமர் இன்மை தாம் அறிந்தாராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம் அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக் கொண்டவரிடத்து இடையே நண்பர் ஆகாத் தன்மையைத் தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் - அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரது நண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல் தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மிக அருமையான கருத்துச் செறிவு கொண்ட இப் பாடல் கருத்துக்கு ஏற்ற விளக்கத்தினை அரிதில் முயன்று தந்து உள்ளேன். அன்பர்கள் படித்துப் பயன் பெற்றுக் கொள்வதோடு, பிறர்க்கும் பயன் விளையத் தருதல் வேண்டும்.
No comments:
Post a Comment