52. தெரிந்து வினையாடல் - 04. எனைவகையான்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்து தொழிலை வைத்தாலும், தொழிலின் இயல்பினாலே வேறுபட்டு விளங்குகின்ற மக்கள் பலர் ஆவார்" என்கின்றார் நாயனார்.

தம்மை ஒரு பதவியில் வைத்த பிறகு, அந்தப் பதவியின் பெருமையால், பலர் தம்மை மறந்தவராகவும், மக்களைத் துன்புறுத்துபவராகவும், கூடுமானால் தமது மேலதிகாரிக்கே கேடு விளைவிப்பவராகவும் உள்ளவர் பலர் உலகத்தில் உண்டு. எனவே, எவ்வளவுதான் ஆராய்ந்து வைத்தாலும், ஆசையின் கொடுமையால், தமது நிலையை மறந்து, கெடுகின்ற மக்கள் பலர் உலகத்தில் உள்ளனர் என்பது அறியப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

"எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான்

வேறுஆகும் மாந்தர் பலர்."

இதற்குப் பரிமேலழகர் உரை ---

எனை வகையான் தேறியக் கண்ணும் --- எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், 

வினை வகையான் வேறாகும் மாந்தர் பலர் --- அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.

(கட்டியங்காரன் போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“தேசிகனாக் கொண்ட சுரர்இறைக்குத் தீங்குஇழைத்தான்

தூசுஆர் துவட்டாச்சேய் சோமேசா --- பேசில்

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறுஆகும் மாந்தர் பலர்.”

இதன் பொருள் ---

சோமேசா!  பேசில் - சொல்லுமிடத்து, எனை வகையால் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினை வைத்த பின்னும்,  வினைவகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ்வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்,

தூசு ஆர் - குற்றங்கள் நிறைந்த,  துவட்டா சேய் - அசுரர் குலத்தில் தோன்றிய துவட்டை என்பவன் பெற்ற புதல்வன் ஆகிய விச்சுவஉருவன் என்பான், தேசிகன் ஆ கொண்ட தன்னைக் குருவாக ஏற்றுக் கொண்ட, சுரர் இறைக்கு - தேவேந்திரனுக்கு, தீங்கு இழைத்தான் - தீமையான வேள்வியைச் செய்தான் ஆகலான் என்றவாறு.

பதவி மனிதன் பண்பை மாற்றிவிடும் என்பது அறியத் தக்கது. 

"அனைய தொல் குரவற் காணும் அளவுநீ துவட்டா ஈன்ற

தனையன் முச் சென்னி உள்ளான் தானவர் குலத்தில் வந்தும்

வினையினால் அறிவால் மேலான் விச்சுவ வுருவன் என்னும்

இனையனைக் குருவாக் கோடி என்னலும் அதற்கு நேர்ந்தான்."


"அழலவிர்ந் தனைய செங்கேழ் அடுக்கிதழ் மளரி வாழ்க்கைத்

தொழுதகு செம்மல் தன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா

விழைதரு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை

வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான்."


"கைதவக் குரவன் மாயம் கருதிலன் வேள்வி ஒன்று

செய்திடல் அடிகல் என்னத் தேவர்கட்கு ஆக்கம் கூறி

வெய்தழல் வளர்ப்பான் உள்ளம் வேறுபட்டு அவுணர்க் கெல்லாம்

உய்திறம் நினைந்து வேட்டான் தனக்குமேல் உறுவது ஒரான்."

என, திருவிளையாடல் புராணத்தில், இந்திரன்பழி தீர்த்த படலத்தில் வரும் பாடல்களைக் காண்க.

கிரேதயுகம் ஒன்றில் இந்திரன் அரியணையில் வீற்றிருந்து அரம்பையர் ஆடலிலும் பாடலிலும் மனத்தைச் செலுத்திக் களித்து இருக்கும்போது, தன் குருவாகிய பிரகஸ்பதி அங்கு வரக் களிமயக்கினால் அவரை வழிபடாது இருந்தான். அது கண்டு பிரகஸ்பதி அங்கு நில்லாது விரைந்து திரும்பிச் சென்றார்.  இந்திரனுடைய செல்வம் குன்றத் தொடங்கியது.  இது, குருவை வழிபடாமையால் வந்த கேடு என்று அறிந்து, அவன் அவரை எங்கெங்கும் தேடினான். ஓரிடத்தும் கண்டானில்லை. அதனால் சத்தியலோகம் சென்று நான்முகனுக்கு நிகழ்ந்த செய்தியைக் கூற, அவன் வஞ்சனையாக,  "உனது குருவை நீ காணும் மட்டும் துவட்டா என்னும் அசரனது மகனாகிய விச்சுவவுருவனைக் குருவாகக் கொள்க" என்றான். அவ்வாறே அவ் விச்சவவுருவனைக் குருவாகக் கொண்டு ஒரு வேள்வி இயற்றிய அளவில், அவன் அசுரர்க்கு நன்மையும், தேவர்க்குத் தீமையும் உண்டாக நினைந்து, அதனைச் செய்ய அதனை அறிந்த இந்திரன் அவனை வச்சிராயுதத்தால் தாக்கினான். அப்போது விச்சுவவுருவனுடைய மூன்று தலைகளும் மூன்று பறவைகளாய்ப் பறந்து சென்றன. அப்பொழுதே பிரமபாவம் இந்திரனைப் பற்றியது. தேவர்கள் அதனைப் பகிர்ந்து மண், மகளிர், நீர், மரம் இவற்றிற்குக் கொடுத்தனர். அது மண்ணினிடம் உவராகியும், மகளிரிடம் பூப்பாகியும், நீரினிடம் நுரையாகியும், மரத்தினிடம் பயின் (பிசின்) ஆகிக் கழிய, அத்தேவர்கள் அதற்கு மாறாக மண் அகழினும் தூர்ந்து வடு நீங்கவும், மகளிர் மகப் பெறும் அளவும் நாயகனோடு இன்பம் நுகரவும், நீர் இறைக்கும் தோறும் ஊறி நிறையவும், மரம் வெட்டும்தோறும் தளிர்த்து நிற்கவும் நலம் உதவினார்கள்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“காண்டல் இன்றிச் சச்சந்தன் கட்டியங்காரற்கு அரசை

மூண்டு அளித்து மாண்டான், முருகேசா! --- வேண்டி

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்

வேறுஆகும் மாந்தர் பலர்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, சச்சந்தன் - சச்சந்தன் என்பவன், காண்டல் இன்றி - நன்கு ஆராய்ந்து கொள்ளாமல், கட்டியங்காரற்கு - கட்டியங்காரன் என்பவனுக்கு, அரசை - தன்னுடைய அரசாட்சியை, மூண்டு அளித்து - அதிகமான அன்பு கொண்டு கொடுத்து, மாண்டான் - இறுதியில் இறந்து ஒழிந்தான்.  வேண்டி - விரும்பி, எனை வகையால் தேறியக் கண்ணும் - எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும், வினை வகையால் - காரியத்தை மேற்கொண்டு செய்யும்பொழுது, வேறாகும் மாந்தர் பலர் – மனம் வேறுபட்டுத் திரிந்து போகும் மக்கள் பலர் உலகத்திலே இருக்கிறார்கள்.

சச்சந்தன் கட்டியங்காரனுடைய உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமல், அரசை அவனிடம் கொடுத்து, இறுதியில் மாண்டு ஒழிந்தான். எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்தாலும், பிறகு காரியத்தை மேற்கொண்டு செய்யுங்கால் மனம் வேறுபட்டுத் திரிந்து போகின்ற மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதாம்.

சச்சந்தன் கதை

ஏமாங்கத நாட்டிலே இராசமாபுரத்திலே சச்சந்தன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் விதேய நாட்டு அரசனாகிய சீதத்தன் மகள் விசயை என்பவளை மணந்து வாழ்க்கை நடத்தினான். எப்பொழுதும் விசயையினுடைய இன்பத்திலே திளைக்கவேண்டும் என்னும் அவா அவனுக்கு அளவு இல்லாது எழுந்தமையின், தன்னுடைய அரசாட்சியைக் கட்டியங்காரன் என்னும் பொல்லாத அமைச்சனிடத்திலே ஒப்புவித்தான்.  அவனுடைய குணநலன்களை அரசன் ஆராய்ந்து அறிந்து கொள்ளவும் இல்லை. அவ்வாறு ஒப்புவித்தால் குற்றம் உண்டாகும் எனப் பிற அமைச்சர் கூறிய அறிவுரைகளையும் அரசன் ஏற்கவில்லை. மனைவியோடு மன்னன் இன்புற்று இருக்குங்கால், அக் கட்டியங்காரனால் எதிர்க்கப்பட்டு அவனை வெல்லும் ஆற்றல் இல்லாமையால் மடிந்து ஒழிந்தான்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...

“காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்

ஆக்குவர் ஆற்றஎமக்கு என்றே அமர்ந்திருத்தல்,

மாப்புரை நோக்கின் மயில்அன்னாய்! பூசையைக்

காப்பிடுதல் புன்மீன் தலை.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மா புரை நோக்கின் மயில் அன்னாய் - மாவடுவை ஒத்த கண்ணையும், மயிலை ஒத்த சாயலையும் உடையாய்!, கருமம் காட்டி - செயலினைக் காட்டிக் கொடுத்து, கயவர் மேல் வைத்தவர் - கீழ்மக்கள் மேல் காரியத்தைச் செய்து முடிக்கும் பொறுப்பினை வைத்தவர், எமக்கு ஆற்ற ஆக்குவர் என்றே அமர்ந்திருத்தல் - எமக்கு மிகவும் செவ்வையாகக் காரியத்தைச் செய்து தருவர் என்று உறுதிகொண்டு வாளா இருத்தல், புன்மீன் தலை - புல்லிய மீன்கள் (உலர்கின்ற) இடத்தில், பூசையைக் காப்பிடுதல் - பூனையைக் காவலாக வைப்பதனோடு ஒக்கும்.

தம்முடைய காரியத்தைக் கீழ்மக்களிடம் ஒப்பித்திருப்பவர் ஒரு நன்மையும் அடையார்.


“அகந்தூய்மை அல்லாரை ஆற்றப் பெருக்கி

இகந்துழி விட்டிருப்பின், அஃதால் - இகந்து

நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் யாமை

நனைந்துவா என்று விடல்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி - மனத்தின்கண் தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெருக்கிக் கொண்டு, இகந்த உழி விட்டிருப்பின் - தம் காரியத்தை முடிக்கும்பொருட்டு அவரைத் தூரத்தே செல்ல விட்டு இருப்பின், அஃது - அச்செயல், நினைந்து தெரியானாய் - மனதின்கண் ஆராய்ந்து அறியானாய், யாமை - (ஆமையைப் பிடித்த ஒருவன்) அந்த ஆமையை, நீள் கயத்துள் இகந்து - நீண்ட குளத்திற்குப் போய், நனைந்து வா என்று விடல் - நீரால் நனையப் பெற்றுத் திரும்பி வா என்று சொல்லி விடுதலை ஒக்கும்.

மனத்தூய்மை இல்லாதாரை, தூரத்து இடத்துள்ள கருமத்தை முடிக்க அனுப்புதல் கூடாது.

ஆமையைக் குளத்திற்கு அனுப்பினால், அது திரும்ப வராதது போல, மனத்தூய்மை இல்லாரும் காரியம் முடித்துத் திரும்புதல் இல்லை ஆகும்.




No comments:

Post a Comment

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...