“வேசியரும், நாயும், விதிநூல், வயித்தியரும்,
பூசுரரும், கோழிகளும், பொன்அனையாய், - பேசில்ஓரு
காரணந்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்,
காரணந்தான் அப்பிறப்பே காண்.” நீதிவெண்பா.
திருமகளைப் போன்ற அழகிய பெண்ணே! சொல்லுமிடத்து, பரத்தையரும், நாய்களும், சட்ட நூலும், மருத்துவரும், பார்ப்பனரும், கோழிகளும் ஒரு காரணமும் இல்லாமலே பார்த்த உடனே பகையாகி விடுவர். அவ்வாறு பகை ஆவதற்குக் காரணம், என்ன என்றால், அதனதன் இயல்பே ஆகும். அக் குணம் மாறாது. இதனை அறிந்துகொள்.
ஒரு விலைமகள் மற்றொரு விலைமகளைக் கண்டால் தன் தொழில் போட்டி காரணமாகக் காரணமின்றிப் பகைத்துக் கொள்வாள்.
இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டால் எவ்விதக் காரணமுமின்றி குரைத்துக் கொண்டு சண்டையிடத் தொடங்கும்.
விதிநூல் வல்லவர் எனப்படும் சோதிடர்கள் தங்களுக்குள் முரண்பட்டுப் பேசுவர். ஒருவர் கருத்தை மற்றொருவர் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார். திருக்கணித முறை சிறந்தது என்பார் ஒருவர், மற்றொருவர் வாக்கிய பஞ்சாங்க முறைதான் சிறந்தது என்பார். தங்களுக்குள் மாறுபட்டுப் பூசலிட்டுக் கொண்டு இருப்பர்.
வயித்தியர் எனப்படும் மருத்துவர்களும் அவ்வாறே. ஆங்கில மருத்தவர் கருத்து பிறதுறை மருத்துவர்களுக்கு உடன்பாடாக இருக்காது. பிறதுறை என்பன, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இன்னபிற துறைகள். தங்களின் தொழில் போட்டி மற்றும் அறிவை நிலைநாட்டும் முனைப்பால் ஒரு மருத்துவ வல்லுநர் மற்றொருவரைக் கண்டால் உடன்படாமல் பகைமை உணர்வு கொள்வார். மாறுபட்டுப் பூசல் இடுவார்.
பூசுரர் என்பது உயிர்கள் மீது அழகிய தண்மை உடையவர்களைக் குறிக்கும். இவர்களை “அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவார்” என்று குறிப்பிட்டார் திருவள்ளுவ நாயனார். (சுரர் என்பது தேவர்களைக் குறிக்கும். அசுரர் என்பது இரக்கம் என்பது இல்லாத அரக்கர்களைக் குறிக்கும். பூசுரர் என்பது பூவுலகில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களைக் குறிக்கும். “பூசுரன் ஞானசம்பந்தன்” என்று திருஞானசம்பந்த நாயானார் தம்மைக் குறிப்பிட்டுள்ளார். அறவழியில் ஒழுகுவோரை அந்தணர் ஆவார்.) இப்போது இது தொழில்முறை ஆகிவிட்டது. சடங்குகளைச் செய்விக்கும் அந்தணர்கள், தங்களுக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் தட்சணை என்னும் தக்கணை காரணமாகத் தொழில் போட்டி கொண்டு ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வர். நான் திருமுறை வழியில்/தமிழ்நெறியில் திருமணம் முதலிய சடங்குகளைத் தமிழில் ஏறக்குறைய 50 ஆண்டுகளாகச் செய்து வந்தேன். பலரைப் பயிற்றுவித்தும் உள்ளேன். திருவள்ளுவ நாயனார் பொருள் கருதித் திருக்குறள் இயற்றவில்லை. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பொருள் கருதி அருட்பாடல்களைப் பாடவில்லை. அவர்கள் மூலம் அறிந்த தமிழை விற்பது பாவம் என்பதால், தட்சணையாக எதையும் கேட்டுப் பெறமாட்டேன். அவர்களாக மனம் உவந்தளிப்பதை ஏற்றுக் கொள்வேன். அப்படி ஏற்றுக் கொள்வதையும் நான் அனுபவிக்காமல், நல்ல காரியங்களுக்குக் கொடுத்து விடுவேன். இது பிறருக்குப் பொறாமையை உண்டாக்கியது. என்னிடத்தில் பயின்றவர்களே, பொறாமை கொண்டு விலகி, தனியாகத் தொழில் நடத்தியதும் உண்டு.
இரண்டு சேவல்கள் அல்லது கோழிகள் ஓரிடத்தில் கூடினால், அவை காரணமில்லாமல் உடனே ஒன்றோடொன்று மோதி சண்டையிட ஆரம்பிக்கும்.
சில பிறவிகளின் குணமானது இயல்பாக மாறாது என்பது கருத்து.
(விதிநூல் - சட்ட நூல். பூசுரர் - பார்ப்பனர். பொன் - இலக்குமி.)
No comments:
Post a Comment