060.ஊக்கம் உடைமை - 06. உள்ளுவது எல்லாம்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "எண்ணுவது எல்லாம் உயர்வு பற்றியே இருக்கவேண்டும். மற்றபடி, அவ் உயர்வு கூடாவிட்டாலும், உயர்வாக எண்ணுவது தள்ளக் கூடாத தன்மையை உடையது" என்கின்றார் நாயனார்.

முயற்சியானது ஊழ்வகையால் தள்ளப்பட்டாலும், முயற்சியில் தள்ளாத இயல்பு நல்லோரால் பழிக்கப்படாது. போற்றப்படும்.


இதற்குத் திருக்குறள்...

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்று அது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் --- அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; 

அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லை ஆயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.

(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“மேல்நிகழ்வது ஏதெனினும் வென்றி எனத் தென்மதுரை

ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனைப்போல்,

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்று அது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”


இதன் பொருள் ---


தருமியின் பொருட்டு வாதுக்கு வந்த சிவபிரானிடம், நெற்றிக் கண்ணைக் கொண்டு என்னைத் தெருட்ட வேண்டாம், நான் இதற்கு அஞ்சமாட்டேன் என்று நக்கீரர் கூறியதை முதல் இரண்டு அடிகள் குறிக்கும். தருமிக்காகச் சிவபெருமான் புலவராகி வந்த அந்நாளில். சிவனார் நக்கீரரைப் பழித்துக் கூறிய செய்யுளும், அதற்கு மாறாக நக்கீரர் பகர்ந்த பாட்டும் கீழ் வருவனவாகும்...


அங்கம் குலுங்க அரிவாளின் நெய்தடவிப்

பங்கம் படஇரண்டு கால் பரப்பிச் ---  சங்குஅதனை

கீர்கீர் என அறுக்கும் கீரனோ, என்கவியைப்

பாரில் பழுது என்பவன்?.


சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,

பங்கமுறச் சொன்னால் பழுதாமோ? --- சங்கை

அரிந்து உண்டு வாழ்வோம்,  அரனாரைப் போல்

இரந்து உண்டு வாழ்வது இலை.


வங்கியசூடாமணி என்னும் பாண்டியன், தன் மனத்தில் கொண்டு உள்ள கருத்தை ஒரு செய்யுளில் சொல்லவல்லார் இதனைக் கொள்க என ஒரு பொற்கிழியினை அமைத்தனன். புலவரால் அவன் கருத்தை அறிய இயலாமல் போகவே, தருமி என்பான், சிவபிரான் பாடிக்கொடுத்த "கொங்குதேர் வாழ்க்கை" என்ற செய்யுளை அரசன்முன் கொண்டு சென்று காட்டிக் கிழியை அறுக்கவரும் சமயம், நக்கீரர் அது குற்றமுடைய செய்யுள் என்று கூறிவிட்டார். ஆகவே, சிவபிரான் புலவராகி வந்து நக்கீரரோடு வாதிட்டு, அவரைப் பொற்றாமரையில் வீழ்த்தி, கிழியை தருமிக்கு வழங்கி மறைந்து அருளினார் என்பது வரலாறு. திருவிளையால் புராணத்தில் காண்க.



பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“இசையும் எனினும், இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்

நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்?” ---  நாலடியார்.


இதன் பொருள் ---


இசையும் எனினும் இசையாதெனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் --- கைகூடும் எனினும் கைகூடாது எனினும் பழித்தல் இல்லாத வகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள் எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் --- விரைவோடு நரி என்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பை விடப் பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப் பொருந்திய அம்பு?


அரிய காரியங்களையே எண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு.


No comments:

பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆராத காதலாகி (பொது) முருகா!  பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல்,  தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரி...