060. ஊக்கம் உடைமை - 02. உள்ளம் உடைமை

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை


இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "ஒருவனுக்கு ஊக்கம் உடைமையே உடைமை ஆகும்; பொருள் உடைமை என்பது நிலைத்து இராமல் நீங்கிப் போகும்" என்கின்றார் நாயனார்.

ஊக்கம் இல்லாமல் இருப்பவனுக்குத் தானே பொருள் தேடிக்கொள்ளும் வல்லமை இல்லாது இருப்பதுடன், அவனது மூதாதையர் தேடி வைத்துச் சென்ற பொருளையும் காக்க அறியாமல் இழப்பான். மேலும் பொருளானது நிலையற்றதாய் அழிந்து போகும் தன்மையை உடையது. ஊக்கம் இல்லாதவன் நிலையற்ற பொருளைக் கொண்டு நிலைத்த அறத்தையும் செய்ய இயலாதவனாய் சோம்பி இருப்பான்.


இதற்குத் திருக்குறள்....

உள்ளம் உடைமை உடைமை, பொருள் உடைமை

நில்லாது நீங்கி விடும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உள்ளம் உடைமை உடைமை --- ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; 

பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் --- மற்றைப் பொருள் உடைமை நிலை நில்லாது நீங்கிப்போம்.

('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"புல்லாய் வந்து, உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை

நில்லாது நீங்கிவிடும் என்பதால் உனை நெஞ்சில்வைத்தோர்

எல்லாரும் வாழ்வர், திருப்பாற் கடலிடத்தே பிறந்த

நல்லாளை நெஞ்சில்கொள் புல்லாணியம்பதி நாயகனே".


இதன் பொருள் ---


ஒருவனுக்கு ஊக்கம் உடைமையே உடைமை ஆகும். பொருள் உடைமை என்பது நிலைத்து இராமல் நீங்கிப் போகும் என்பதால், திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளை நெஞ்சில் வைத்துள்ள, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமானே! உன்னைத் தனது நெஞ்சில் வைத்து வழிபடுவோர் எல்லாரும் வாழ்வர்.


திருமாலைத் தனது நெஞ்சில் வைத்து இருக்கும் ஊக்கம் உடைமையே உண்மையான உடைமை. அதுவே ஒருவனுக்கு எல்லாச் செல்வத்தையும் தருவது ஆகும்.


திருப்பால் கடலிடத்தே பிறந்த நல்லாள் - திருமகள்.  நெஞ்சிற்கொள் - மார்பிலே கொண்ட.



பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்..


“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்

திருவுடையார் ஆயின் திரிந்தும் --- வருமால்

பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்

திருவினும் திட்பம் பெறும். --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


பெருவரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, திரு உடையர் ஆயின் - செல்வம் உடையவர்களுக்கு ஆயின், அருவிலை மாண் கலனும் ஆன்ற பொருளும் திரிந்தும் வரும் - (அவர் தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலை பெறாது மாறி வரும் இயல்பை உடையன, பிரிவின்று - (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதல் இல்லை, அதனால் - அத்தன்மையால், திருவினும் திட்பம் பெறும் - செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.


அறிவுச் செல்வம் பொருட்செல்வம் போல் பிரிதல் இல்லாமையால் அதனையே ஊக்கத்தோடு தேடுதல் வேண்டும்.


No comments:

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...