பொது --- 1131. அகரமுதலென

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அகர முதலென (பொது)


முருகா! 

சிவபரம்பொருளுக்கு உபதேசித்ததை அடியேனுக்கும் விளங்குமாறு உபதேசித்து அருள் புரிவீர்.


தனதனன தந்தந்த தத்ததன

     தனதனன தந்தந்த தத்ததன

          தனதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான


அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்

     அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்

     அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய


அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய

     முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய

     அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம்


நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை

     நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை

     நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும்


நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு

     பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய

     நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே


தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு

     டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு

     தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத  தத்ததகு ...... தீதோ


தனதனன தனதனன தந்தந்த னத்ததன

     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு

     தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும்


மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்

     அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட

     முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி


முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி

     நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட

     முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.



                                         பதம் பிரித்தல்



அகரமுதல் என உரைசெய் ஐம்பந்தொர் அக்ஷரமும்,

     அகில கலைகளும், வெகுவிதம் கொண்ட தத்துவமும்,

     அபரிமித சுருதியும் அடங்கும் தனிப்பொருளை, எப்பொருளும் ...... ஆய,


அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை, துரிய

     முடிவை, அடி நடு முடிவில் துங்கம் தனை, சிறிய

     அணுவை, அணுவினின், மலமும், நெஞ்சும், குணத்ரயமும் அற்றது ஒரு ...... காலம்


நிகழும் வடிவினை, முடிவில் ஒன்று என்று இருப்பதனை,

     நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து, எங்கும் நிற்பதனை,

     நிகர் பகர அரியதை, விசும்பின் புர த்ரயம் எரித்தபெரு ...... மானும்


நிருப! குருபர! குமர! என்றென்று, பத்திகொடு

     பரவ அருளிய மவுன மந்த்ரம் தனை, பழைய

     நினது வழி அடிமையும் விளங்கும் படிக்கு, இனிது உணர்த்தி அருள் ...... வாயே.


தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு

     டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு

     தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ


தனதனன தனதனன தந்தந்த னத்ததன

     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு

     தரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும்,உடுக்கையும் ...... யாவும்


மொகுமொகு என அதிர, முதிர் அண்டம் பிளக்க, நிமிர்

     அலகை கரணம் இட, உலகு எங்கும் ப்ரமிக்க, நடம்

     முடுகு பயிரவர் பவுரி கொண்டு இன்புறப் படுக  ளத்தில் ஒரு ...... கோடி


முது கழுகு, கொடி, கருடன், அங்கம் பொர, குருதி

     நதி பெருக, வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட,

     முரசு அதிர, நிசிசரரை வென்று, இந்திரற்கு அரசு அளித்த ...... பெருமாளே.



பதவுரை

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு, டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு, தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ, தனதனன தனதனன தந்தந்த னத்ததன, டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு, தரரரர ரிரிரிரிரி என்றென்று ---  தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு, டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு, தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ, தனதனன தனதனன தந்தந்த னத்ததன, டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு, தரரரர ரிரிரிரிரி என்ற தாளவரிசைகளை விதவிதமாக ஒலித்து,


இடக்கையும் உடுக்கையும் யாவும் --- இடக்கை என்றதோர் கருவியும், உடுக்கை என்ற வாத்தியமும், மற்ற எல்லா விதமான வாத்தியங்களும்,


மொகுமொகு என அதிர --- மொகு மொகு என்று முழங்கவும்,


முதிர் அண்டம் பிளக்க --- பழமையான அண்டங்கள் பிளக்கவும்,


நிமிர் அலகை கரணம் இட --- நீண்ட பேய்கள் களிப்பின் மிகுதியால் கரணம் போடவும்,


உலகு எங்கும் ப்ரமிக்க --- உலகம் எங்கிலும் உள்ள மக்கள் திகைத்து நிற்கவும்,


நட முடுகு பயிரவர் பவுரி கொண்டு இன்புற --- வேகமாக நடனம் செய்கின்ற பயிரவர்கள் பவுரிக் கூத்தினை ஆடி இன்பத்தை அடையவும்,


படுகளத்தில் --- அசுரர்கள் சேனைகள் இறந்து பட்டுள்ள போர்க்களத்தில் 


ஒரு கோடி முதுகழுகு --- கோடிக்கணக்கான முதிர்ந்த கழுகுகள்,


கொடி --- காக்கைகள்,


கருடன் --- கருடன் முதலியவைகள் 


அங்கம் பொர --- மாண்ட பிணங்களைப் பொருந்தி அருந்தவும்,


குருதி நதி பெருக --- இரத்த வெள்ளம் பெருகவும்,


வெகுமுக கவந்தங்கள் நிர்த்தம் இட --- பல முகங்களை உடைய உடம்புகள் கூத்தாடவும்,


முரசு அதிர --- முரசு வாத்தியம் பேரொலி முழக்க,


நிசிசரரை வென்று --- அசுரர்களை வெற்றி கொண்டு,


இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே --- தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்த பெருமையின் மிக்கவரே!


அகரமுதல் என உரைசெய் --- அகரம் முதலாக உரைக்கப்படும்


ஐம்பந்தொர் அக்ஷரமும் --- ஐம்பத்தொரு எழுத்துக்களும்,


அகில கலைகளும் --- உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும்,


வெகுவிதம் கொண்ட தத்துவமும் --- அநேக விதமான உண்மைக் கருத்துக்களும்,


அபரிமித சுருதியும் --- அளவிட முடியாத வேதங்களும்,


அடங்கும் தனிப் பொருளை --- தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள ஒப்பற்ற பரம்பொருளை,


எப்பொருளும் ஆய --- தன்னைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் தானே ஆகி விளங்கும்


அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை --- அறிவை அறிவால் அறிபவர் அறிந்து அனுபவிக்கும் இன்பத்தையும்,


துரிய முடிவை --- துரிய நிலையின் முடிவாக விளங்குவதையும்,


அடி நடு முடிவில் துங்கம் தனை ---  முதல், இடை, முடிவில் தூய்மையாகத் திகழ்வதையும்,


சிறிய அணுவை --- அணுவைக் காட்டிலும் சிறிய அணுவாக விளங்கும் பொருளை,


அணுவினின் மலமும் --- ஆன்மாவை அணுவாக்கும் ஆணவ மலமும்,


நெஞ்சும் --- மனமும்,


குணத்ரயமும் --- மூன்று குணங்களும் 


அற்றதொரு காலம் நிகழும் வடிவினை --- கடந்ததாகிய ஒப்பற்ற சமயத்தில் விளங்கும் அருளுருவத்தையும்,


முடிவில் ஒன்று என்று இருப்பதனை --- முடிவில் ஒன்றே ஆகி இருப்பதனையும்,


நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை ---

நிறைவும், குறைவும், நீங்கிப் போவதும் இன்றி எங்கும் எப்பொருளிலும் கலந்து நிற்கின்றதனையும்,


நிகர்பகர அரியதை ---  இதற்கு சமம் அதுதான் என வேறொரு பொருளை ஒப்புரைக்க இயலாததை,


விசும்பின் புரத்ரயம் எரித்த பெருமானும் --- வானில் பறக்கும்படியான மூன்று புரங்களையும் எரித்த சிவபெருமானும்,


நிருப --- தலைவரே!


குருபர --- மேலான குருவே!


குமர --- அழியாத இளம்பூரணரே!


என்று என்று பத்திகொடு --- என்று கூறி அன்புடன்


பரவ அருளிய மவுன மந்த்ரம் தனை --- துதி செய்ய, உபதேசித்து அருளிய பேசாத மந்திரமாகிய ஊமை எழுத்தையும்,


பழைய நினது வழி அடிமையும் விளங்கும் படிக்கு --- தேவரீரது பழைமையான வழிவழி அடியேனுக்கும் விளங்கும்படி


இனிது உணர்த்தி அருள்வாயே --- இனிதே உணர்த்தி அருள்புரிவீர்.


பொழிப்புரை


தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு, டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு, தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ, தனதனன தனதனன தந்தந்த னத்ததன, டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு, தரரரர ரிரிரிரிரி என்ற தாளவரிசைகளை விதவிதமாக ஒலித்து, இடக்கை என்றதோர் கருவியும், உடுக்கை என்ற வாத்தியமும், மற்ற எல்லா விதமான வாத்தியங்களும், மொகு மொகு என்று முழங்கவும், பழமையான அண்டங்கள் பிளக்கவும், நீண்ட பேய்கள் களிப்பின் மிகுதியால் கரணம் போடவும், உலகம் எங்கிலும் உள்ள மக்கள் திகைத்து நிற்கவும், வேகமாக நடனம் செய்கின்ற பயிரவர்கள் பவுரிக் கூத்தினை ஆடி இன்பத்தை அடையவும், அசுரர்கள் சேனைகள் இறந்து பட்டுள்ள போர்க்களத்தில் கோடிக்கணக்கான முதிர்ந்த கழுகுகள், காக்கைகள், கருடன் முதலியவைகள் மாண்ட பிணங்களைப் பொருந்தி அருந்தவும், இரத்த ஆறு பெருகவும், பல முகங்களை உடைய உடம்புகள் கூத்தாடவும், முரசு வாத்தியம் பேரொலி முழக்க, அசுரர்களை வெற்றி கொண்டு, தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்த பெருமையின் மிக்கவரே!

அகரம் முதலாக உரைக்கப்படும் ஐம்பத்தொரு எழுத்துக்களும், உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும்,  அநேக விதமான உண்மைக் கருத்துக்களும்,  அளவிட முடியாத வேதங்களும், அடங்கியுள்ள ஒப்பற்ற பரம்பொருளை,  தன்னைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் தானே ஆகி விளங்கும் அறிவை அறிவால் அறிபவர் அறிந்து அனுபவிக்கும் இன்பத்தையும், துரிய நிலையின் முடிவாக விளங்குவதையும், முதல், இடை, முடிவில் தூய்மையாகத் திகழ்வதையும், அணுவைக் காட்டிலும் சிறிய அணுவாக விளங்கும் பொருளை, ஆன்மாவை அணுவாக்கும் ஆணவ மலமும், மனமும், மூன்று குணங்களும் கடந்ததாகிய ஒப்பற்ற சமயத்தில் விளங்கும் அருளுருவத்தையும், முடிவில் ஒன்றே ஆகி இருப்பதனையும்,

நிறைவும், குறைவும், நீங்கிப் போவதும் இன்றி எங்கும் எப்பொருளிலும் கலந்து நிற்கின்றதனையும், இதற்கு சமம் அதுதான் என வேறொரு பொருளை ஒப்புரைக்க இயலாததை, வானில் பறக்கும்படியான மூன்று புரங்களையும் எரித்த சிவபெருமானும், தலைவா, மேலான குருவே, அழியாத இளம்பூரணா என்று கூறி அன்புடன் துதி செய்ய, உபதேசித்து அருளிய பேசாத மந்திரமாகிய ஊமை எழுத்தையும், தேவரீரது பழைமையான வழிவழி அடியேனுக்கும் விளங்கும்படி இனிதே உணர்த்தி அருள்புரிவீர்.


விரிவுரை


அகர முதல் என உரைசெய் ஐம்பந்தொர் அக்ஷரமும் ---


உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரமுதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தோர் அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களை மாத்ருகா மந்திரம் என்றும், மாலா மந்திரம் என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.


மந்திரங்கள் விந்துவினின்றும் தோன்றியவாம்.

சுத்தமாம் விந்துதன்னில் தோன்றிய ஆதலானும்... ---  சிவஞானசித்தியார்.


உலகத்திற்கு முதற்காரணம் விந்து மோகினி மான் என மூன்றாகும். இந்து விந்து சத்தியே சுத்தமென்றும், பிராகாசமென்றும், அபரவிந்து என்றும் சொல்லப்படும். ஆகவே, குண்டலி என்னும் பரவிந்து, விந்து முதலிய மூன்றிற்கும் காரணம் என்க. 


சுத்தமாயை என்னும் இப் பரவிந்துவினிடத்தே கந்தவேளது ஞானசத்தி பதிய நாதம் உண்டாகும். அந்த நாதத்தினின்றும் களங்கம் இல்லாத சரற்காலத்துச் சந்திரன் போலக் குண்டலி வடிவாக அபரவிந்து தோன்றும். அவ் விந்துச் சத்தியினின்றும் குமரவேளது இச்சையினாலே, அம்பிகை என்னும் விந்துக் காரிய சத்தி தோன்றும்.  அதினின்றும், வாமை, சேட்டை, ரௌத்ரி என்னும் முச்சத்திகளும் தோன்றும். அவற்றுள் வாமை நித்திரை செய்யும் குண்டலி வடிவாகவும், சேட்டை தண்ட வடிவாகவும், ரௌத்திரி இரண்டு களைக் கொம்பு வடிவாகவும் விளங்கும். அவற்றில் இருந்து ஜயை, விசயை, அதீதை, பராசிதை என்னும் நான்கு சத்திகள் தோன்றும். அவற்றினின்றும் நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை என்ற ஐந்து கலைகள் காரணமாகச் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நான்கு வாக்குகளும் தோன்றும்.


சூக்குமை என்னும் வாக்கைச் சாந்தி, சாந்தியாதீதம் என்னும் இரு கலைகளும், பைசந்தி என்னும் வாக்கை வித்தியா கலையும்,  மத்திமை என்னும் வாக்கை பிரதிட்டாகலையும், வைகரி என்னும் வாக்கை நிவிர்த்தி கலையும் காரியப்படுத்தும்.


இங்ஙனம் நாதகாரிய வாக்குகளினின்று சுரங்களும், அந்தச் சுரங்களினின்று ஐம்பத்தொரு அட்சரங்களும் தோன்றும்.  


ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்,

ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்,

ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்

ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே. ---  திருமந்திரம்.



அகில கலைகளும் ---


கலை - அறியாமையை அகழ்ந்து எடுப்பது. கலைகள் அறுபத்து நான்கு வருமாறு...


அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தருமசாத்திரம், யோகசாத்திரம், மந்திர சாத்திரம், சகுனசாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதியாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரிட்சை, கனகபரிட்சை, இரதபிரட்சை, கசபரிட்சை, அசுவபரிட்சை, இரத்தினபரிட்சை, பூமிபரிட்சை, சங்கிராமவிலக்கணம், மல்லயுத்தம், ஆகருடணம், உச்சாடனம், வித்துவேடணம், மதனசாத்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தருவவாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவாதம், காரூடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாயகமனம், பரகாயப்பிரவேசம், அதிரிசயம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்கினித்தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப்பிரயோகம்.


வெகுவிதம் கொண்ட தத்துவம் ---


தத்துவம் - உண்மைப் பொருள். சிவபெருமான் முப்புரம் எரித்தார் என்பது வரலாறு. அதன் உட்பொருள் மும்மல நீக்கம் ஆகும்.


முப்புரம் ஆவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார்அறி வாரே.. --- திருமந்திரம்.


அபரிமித சுருதி ---


அபரிமிதம் - அளவின்மை. சுருதி - செவியால் கேட்டு அறிவது.  அதற்கு எழுதாக் கிளவி என்று ஒரு பேரும் உண்டு.  பரம்பரையாகக் கேட்டு வருவது.


அறிவை அறிபவர் அறியும் இன்பம் ---


பொன் பொருள் மனை மக்கள் பதவி முதலியவைகளில் இன்பம் இல்லை. அவற்றால் துன்பமே விளையும். அறிவை அறிவதுவே இன்பம்.  அறிவை அறிவால் அறிதல் வேண்டும்.


அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்

     அடியார் இடைஞ்சல் ...... களைவோனே.. ---  (விறல்மாரன்) திருப்புகழ்.


அரவுபுனைதரு புனிதரும் வழிபட

     மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்

     அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே”   --- (குமரகுருபர) திருப்புகழ்


துரிய முடிவை ---


துரிய முடிவு - துரிய அதீதம். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என அவத்தை ஐந்து வகைப்படும்.  இந்த ஐந்திலும், ஆன்மா முறையே புருவநடு, கண்டம், இதயம், நாபி, மூலாதாரம் என்ற ஐந்து இடங்களைப் பற்றி நிற்கும்.


சாக்கிரம் ---   ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, கரணம் 4, புருடன் 1, தன்மாத்திரை 5, வசனாதி 5, வாயு 10, ஆக 35 தத்துவங்களுடன் கூடி ஆன்மா தொழிற்படும்.


சொப்பனம் ---  தன்மாத்திரை 5, வசனாதி 5, வாயு 10, கரணம் 4, புருடன் ஆக 25 தத்துவங்களுடன் கூடி ஆன்மா தொழிற்படும்.


சுழுத்தி ---  சித்தம் 1, பிராணன் 1, புருடன் 1 ஆக, இந்த மூன்றுடன் கூடி ஆன்மா தொழிற்படும்.


துரியம் ---  பிராணன் புருடன் என்ற இரண்டு மட்டுமே ஆகி இருக்கும்.


துரியாதீதம் ---  புருடன் மட்டுமே தனித்து நிற்கும்.


   சாக்கிரமா நுதலினில்இந் திரியம் பத்தும்

        சத்தாதி, வசனாதி, வாயு பத்தும்,

    நீக்கமில்அந் தக்கரணம், புருட னோடு

        நின்றமுப் பான்ஐந்து நிலவும், கண்டத்து

    ஆக்கியசொப் பனம்அதனில் வாயு பத்தும்

        அடுத்தனசத் தாதிவச னாதி ஆக

    நோக்குகர ணம்புருடன் உடனே கூட

        நுவல்வர்இரு பத்தைந்தா நுண்ணி யோரே.


    சுழுத்திஇதயம் தனில், பிராணம் சித்தம்

        சொல்லரிய புருடனுடன் மூன்று அதுஆகும்,

    வழுத்தியநா பியில்துரியம் பிராண னோடு

        மன்னுபுரு டனுங்கூட வயங்கா நிற்கும்,

    அழுத்திடுமூ லந்தன்னில் துரியா தீதம்,

        அதனிடையே புருடன்ஒன்றி அமரும், ஞானம்

    பழுத்திடும்பக் குவர் அறிவர் அவத்தை ஐந்தில்

        பாங்குபெறக் கருவிநிற்கும் பரிசு தானே.  ---  தாயுமானார்.


அடி நடு முடிவில் துங்கம் தனை ---


எப்போதும் பரிசுத்தமான பொருள். அதன் தூய்மைக்கு ஒருபோதும் இழுக்குறாது. மாறுபாடு இன்றி விளங்குவது என்க.


சிறிய அணுவை ---  


அணுவுக்கு அணுவாக விளங்குவது.


அணுவிலும் அணுவாய், பெரிதிலும் பெரிதாய் உள்ள (பரம) ஆன்மா இந்தச் செந்துவினது இதய குகையில் இருக்கின்றது. தன்னுடைய மகிமைக்கு ஏதுவாயுள்ள அதனைக் கன்ம நீக்கம் உள்ளோன் தனக்கு ஆதாரமான ஈசனது ஒளியினால் சோகமில்லாதவனாய்க் காண்கின்றான்.


அணுவின் மலமும் நெஞ்சும் குணத்ரயமும் அற்றது ஒருகாலம் நிகழும் வடிவினை ----


ஆன்மாவை அணுவாக்குவதனால் மூலமலம் ஆணவம் எனப்படும். அதை சகசமலம் எனவும் அறிக.


மலம், மனம், முக்குணம் இவைகளினின்று நீங்கிய நிலை சுத்தம் எனப்படும்.


முடிவில் ஒன்று என்று இருப்பதனை ---


உலகமெல்லாம் ஒடுங்கியபோது, அவைகள் ஒடுங்கும் பற்றுக்கோடாய் தான் ஒடுங்காது தானேயாய் நிற்கும் தனிப்பொருள்.

பிரபஞ்ச லயத் தானமாய் உள்ளதும், சாந்தமாய் இருப்பதும், அத்துவைதமாய் உள்ளதும் ஆகிய சிவத்தை (மூவர்க்கும் மேம்பட்ட) நான்காவது பொருளாக நினைக்கின்றனர்.  அது ஆன்மா.  அவன் அறியத்தக்கவன்.


நிறைந்து எங்கும் நிற்பதனை ---


இறை யாண்டும் நீக்கமின்றி நிறைந்தும் மறைந்தும் நிற்கின்றது.  கடல் நீரில் உப்பு நிறைந்ததும் மறைந்தும் இருப்பது போல் என்று அறிக.


பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற

பரிபூரண ஆனந்தமே... ---  தாயுமானார்.


நிகர் பகர அரியதை ---


"தனக்குவமை இல்லாதான்" என்ற பொய்யாமொழிப்படி பரம்பொருள் உவமை இல்லாதது.


ஒப்புஉடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;

     ஓர்ஊரன் அல்லன்; ஓர்உவமன் இல்லி,

அப்படியும் அந்நிற மும்அவ் வண்ணமும்

     அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தின் இவ்வண் ணத்தன்

     இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே.    ---  அப்பர்.


பத்திகொடு பரவ ---


ஆதிகுரு மூர்த்தமாகி, கல்லாலின் புடையமர்ந்து, எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தன்னை இருந்தபடி இருந்து காட்டிய தென்முக தேசிகன், குருவின் இன்றியமையாமைய உலகினர்க்கு உணர்த்துவான் வேண்டி, தனக்குத் தானே மகனாகி, தன்னிடத்தில் தானே உபதேசம் பெற்றனர்.


நாதா குமரா நம என்று அரனார்

ஓதாய் என, ஓதியது எப்பொருள்தான்..... ---  கந்தர் அநுபூதி.


வேரிமதி மத்தமதி தாதகி கடுக்கைபுனை

வேணியர் துதிப்பதுஒரு கேள்விக் காரனும்... ---  திருவேளைக்காரன் வகுப்பு.


மவுன மந்த்ரம் தனை ---


சிவபெருமான் செவியில் செவ்வேள் பரமன் ஓதி அருளிய மோன மந்திரம்.


மந்திரம். மந் - நினைத்தல். திர – காப்பாற்றுதல்.  நினைப்பவரைக் காப்பாற்றுவது என்று பொருள்படும்.


ம – மாயை. திரா - தாண்டுவித்தல். மாயையைத் தாண்டுவிப்பது.


பழைய நினது வழி அடிமை ---


அருணகிரிநாதர் ஆறுமுகக் கடவுளுக்கு வழிவழியாகவும், முற்பிறப்புக்களிலும் அடிமைத் திறம் பூண்டவர். இதனை அவருடைய அருமை வாக்குகளினால் அறிக.


தஞ்ச மாகிய வழிவழி அருள்பெறும்

   அன்பி னால்உனது அடிபுகழ் அடிமைஎன் ...... எதிரேநீ... ---  (பஞ்சபாதக) திருப்புகழ்.


எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தன்என

இனிதுகவி அப்படிப்ர சாதித்த பாவலனும்..... ---  வேடிச்சிகாவலன் வகுப்பு.


முடியவழி வழிஅடிமை எனும்உரிமை அடிமைமுழுது

    உலகறிய மழலைமொழி  ......  கொடுபாடும் ஆசுகவி

முதலமொழி வன,நிபுண மதுபமுகர் இதமவுன

    முகுளபரி மளநிகில  ......  கவிமாலை சூடுவதும்.... ---  சீர்பாத வகுப்பு.



விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே ---


முக்கண் பரம்பொருளுக்கு உபதேசித்த மவுன உபதேசப் பொருளை அடியேனுக்கு விளங்கும்படியான முறையில் உணர்த்தி அருள் புரியுமாறு வேண்டுகின்றனர் அருணகிரியார்.


எல்லாம் அறிந்தவரும் பிரணவ மந்திரத்தைப் பீடமாகக் கொண்டவரும் ஆகிய பரமேசனுக்கு உபதேசித்ததை, ஒன்றும் அறியாத எனக்கு உபதேசித்தால்தான் உபகாரமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். “உபதேச மந்தரப் பொருளாலே உனை தாநான் நினைந்து அருள் பெறுவேனோ” என்றார் பிறிதொரு திருப்புகழில்.


தகுதகுகு ….... இடக்கையும் உடுக்கையும் ---


இடக்கை - ஒருவகையான தோல் கருவி. யுத்தகளத்திலே வீரர்களுக்கு வீரவுணர்ச்சி உண்டாகும் பொருட்டு செருப்பறை முழக்குவார்கள்.  அந்த வாத்தியங்களின் ஒலிவகையை இந்த ஐந்தாவது ஆறாவது அடிகளில் மிகவும் அழகாக அடிகள் கூறுகின்றனர்.


அலகை கரணம் இட ---


அலகை - பேய்.  


மாண்ட அசுரர்களது தசைகளைத் தின்று, மிகுந்த மகிழ்ச்சியினால் பேய்கள் கரணம் போடுகின்றன.


வெகுமுக கவந்தங்கள் நிர்த்தம் இட ---


அரக்கர்களின் நூறு, ஆயிரம் என்ற பல எண்ணிக்கையில் உள்ள தலைகள் அறுபட்டபின், அந்த உடம்புகள் வீரவுணர்ச்சியினால் கூத்தாடுகின்றன.  


கவந்தம் - தலையில்லாத உடம்பு.


முரசு ---


கானகத்திலே தன்னிச்சையாகத் திரியும் ஆனேறு புலியுடன் போராடி, அப் புலியைக் கொன்றதானால், அந்த இடபத்தின் தோலால் செய்து வெற்றியின் அறிகுறியாக முழங்குவது முரசு ஆகும்.  அரசர்கள் முரசு வாத்தியத்தைப் பூசிப்பர்.



நிசிசரர் ---


நிசி - இரவு. இருள் நிறைந்தது.  சரர் - சஞ்சரிக்கின்றவர்.


இரவிலே உலாவுபவர் இராக்கதர். அதாவது இருட்டிலே - பாவநெறியிலே வாழ்கின்றவர்கள். இப்பொழுதும் நியாயத்திற்கு மாறாக விற்பதை இருட்டு வியாபாரம் என்பது வழக்கு. தீயவரை வென்று தூயவரை வடிவேல் பெருமான் வாழ வைத்தனர்.


கருத்துரை


முருகா! சிவபரம்பொருளுக்கு உபதேசித்ததை அடியேனுக்கும் விளங்குமாறு உபதேசித்து அருள் புரிவீர்.













No comments:

பொது --- 1131. அகரமுதலென

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அகர முதலென (பொது) முருகா!  சிவபரம்பொருளுக்கு உபதேசித்ததை அடியேனுக்கும் விளங்குமாறு உபதேசித்து அருள் புரிவீ...