060. ஊக்கம் உடைமை - 08. உள்ளம் இலாதவர்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், " உள்ளத்தின் பண்பாகிய ஊக்கம் உடைமை இல்லாதவர், இவ்வுலகத்தில் வள்ளன்மை உடையவர் என்னும் கிளர்ச்சியை அடையமாட்டார்" என்கின்றார் நாயனார்.

ஒருவனுக்கு உள்ளத்தில் ஊக்கம் இல்லையானால், முயற்சி இருக்காது, முயற்சி இல்லாமல் போகவே பொருள் சேராது, பொருள் சேராது போகவே கொடை இராது. இவை யாவும் இல்லாமல் போகவே, மதிப்பு இல்லாமல் போகும்.


இதற்குத் திருக்குறள்... 

உள்ளம் இலாதவர் எய்தார், உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்;

உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் --- இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத் தாம் மதித்தலைப் பெறார்.

(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து சென்ன மல்லையர் பாடியருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“நல்லதினம் என்றே நரகன்இறு நாள்உலகில்

செல்லவரம் பெற்றான் சிவசிவா --- வல்லமைசேர்

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு. “


இதன் பொருள் ---


கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன் கேட்டுக்கொண்டபடி, கண்ணனால் ஏற்படுத்தப்பட்ட நரசதுர்த்தசி அல்லது தீபாவளிப் பண்டிகை ஐப்பசித் திங்களில் நடக்கின்றது. அன்று தலை முழுகுவோர் கங்கையில் முழுகிய பயனை அடைவர்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.   


“மலர்ந்தசெவ் வந்திப் போதும் 

வகுளமும் உதிர்ந்து வாடி

உலர்ந்து, மொய்த்து அளிதேன் நக்கக் 

கிடப்பன, உள்ளம் மிக்க

குலந்தரு நல்லோர் செல்வம் 

குன்றினும் தம்பால் இல்என்று

அலந்தவர்க்கு உயிரை மாறி

யாயினும் கொடுப்பர் அன்றோ”. ---  தி.வி.புராணம்.


இதன் பொருள் ---


மலர்ந்த செவ்வந்திப் போதும் வகுளமும் - விரிந்த  செவ்வந்தி மலரும் மகிழம் பூவும், உதிர்ந்து வாடி உலர்ந்தும் - நிலத்தில் உதிர்ந்து வாடிப் புலர்ந்தும், அளி மொய்த்துத் தேன் நக்கக் கிடப்பன - வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணக் கிடப்பனவாயின; உள்ளம் மிக்க - உள்ள மிகுதியையுடைய, குலம்தரு நல்லோர் - உயர்குடிப் பிறந்த நல்லோர்கள், செல்வம் குன்றினும் - செல்வம் சுருங்கிய விடத்தும், தம்பால் இல் என்று அலந்தவர்க்கு - தம்மிடத்து வந்து இல்லை என்று கூறி வருந்தியவர்க்கு, உயிரை மாறியாயினும் கொடுப்பர் அன்றோ - தம்முயிரை மாறியாகிலும் கொடுப்பார் அல்லவா?!


     உள்ள மிகுதி - மனவெழுச்சி; சுருங்கா உள்ளம்.  பூக்கள் உலர்ந்து கிடந்தும்  ஒண்டுகள் தேனை நக்கக் கிடக்கின்றன என்னும் பொருளை நல்லோர் செல்வம் குன்றினும், அலந்தவர்க்கு உயிரை மாறியாயினும் கொடுப்பர் என்பது கருத்து. 


No comments:

மூலம் 17

 “நட்டாரை ஆக்கி, பகைபணித்து, வை எயிற்றுப் பட்டுஆர் அகல்அல்கு லார்படிந்து, - ஒட்டித் தொடங்கினார், இல்லகத்து அன்பில் துறவா உடம்பினான் ஆய பயன்....