060. ஊக்கம் உடைமை - 07. சிதைவு இடத்து

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "உடம்பை மறைக்கும் அளவுக்கு அம்புகளால் புண்பட்ட போதும், ஆண் யானையானது, தனது பெருமையை நிலைநாட்டும். மன வலிமை உடையவர் அழிவு நேர்ந்த காலத்தும் மனம் தளரார்" என்கின்றார் நாயனார்.

யானையானது போர்க்களத்தில், பகைவர்களால் எறியப்பட்ட பல அம்புகள் வந்து தனது உடம்பில் தைத்து, அதனால் புண்பட்டபோதும், அதனால் தளர்ச்சி அடையாமல், தன்னைச் செலுத்துகின்ற தலைவனுக்கு வெற்றியை உண்டுபண்ணும்படி அசையாமல் நிற்கும். அதுபோல, புகழ் ஒன்றேயை பொருளாக் கருதுகின்ற ஒருவன், தான் கொண்ட எண்ணம் முடியாவிட்டாலும், அதற்காகத் தளர்ந்து, தனது ஊக்கத்தை விட்டுவிடாது தனது பெருமையை நிலைநாட்டுவான்.


இதற்குத் திருக்குறள்... 

சிதைவு இடத்து ஒல்கார் உரவோர், புதை அம்பின்

பட்டுப் பாடு ஊன்றும் களிறு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

களிறு புதை அம்பின் பட்டுப் பாடு ஊன்றும் --- களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; 

உரவோர் சிதைவிடத்து ஒல்கார் --- அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.'

(புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“கல்லான் கடைசிதையும், காமுகன் கண்காணான்,

புல்லான் பொருள்பெறவே பொச்சாக்கும்,-நல்லான்

இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்

நடுக்கமும் நன்மகிழ்வும் இல்.”    --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


கல்லான் கடை சிதையும் - கல்லாதவன் கடையனாய் அழிவான், காமுகன் கண் காணான் - காமுற்ற ஒருவன் கண் தெரியாதவன் ஆவான், புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் - அற்பன் பொருள் பெற்ற அளவிலேயே தன் நிலையை மறந்து ஒழுகுவான், நல்லான் - அறிவுடையவன், இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும் , நடுக்கமும் நன் மகிழ்வும் இல் - துன்பமுற்ற இடத்து வருந்துதலும் இன்பமுற்ற இடத்து மகிழ்தலும் இலனாவன்.


காமுகன் கண்காணான் என்பது, காம மயக்கத்தால் தான் சேர்தற்குரிய மகளிர் இவர் எனவும், சேரத் தகாதார் இவர் எனவும் அறியானாய் ஒழுகுதல். ''காமத்துக்குக் கண்ணில்லை'' என்பது பழமொழி. அன்றி, அக் கெட்ட ஒழுக்கத்தால் உடல்நிலை கெட்டுக் கண் பார்வையினை இழப்பான் என்றும் கொள்ளலாம். கடை-கடையன்; இழிந்தவன்.



“எமக்குத் துணையாவார் வேண்டும் என்று எண்ணித்

தமக்குத் துணையாவார்த் தாம்தெரிதல் வேண்டா,

பிறர்க்குப் பிறர் செய்வது உண்டோ, மற்று இல்லை

தமக்கு மருத்துவர் தாம்.: ---  பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


எமக்கு துணையாவார் வேண்டும் என்று எண்ணி - எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து, தமக்குத் துணையாவர் தாம் தெரிதல் வேண்டா - தமக்கு உதவி செய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டா,  பிறர்க்கு பிறர் செய்வதுண்டோ - பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத் தக்கது ஒன்று உண்டோ?, இல்லை - துணை ஆவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை, தமக்கு மருத்துவர் தாம் - தம் நோயைத் தடுப்பார் தாமே ஆவர்.


நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொளல் வேண்டும்.


No comments:

மூலம் 17

 “நட்டாரை ஆக்கி, பகைபணித்து, வை எயிற்றுப் பட்டுஆர் அகல்அல்கு லார்படிந்து, - ஒட்டித் தொடங்கினார், இல்லகத்து அன்பில் துறவா உடம்பினான் ஆய பயன்....