திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 59 -- ஒற்றாடல்
அதாவது, பகைவர், நட்பினர், அயலார் ஆகிய மூன்று சாராரிடத்தும் நிகழுபவைகளை அறிந்து கொள்வதற்கு ஒற்றரை வைத்து ஆளும் முறைமையைச் சொன்னது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒற்றரும், புகழ் சார்ந்த நூல்முறைகளும் ஆகிய இவை இரண்டும் தன்னிரண்டு கண்களாகக் கொண்டு ஒருவன் தெளிவு பெறவேண்டும்" என்கின்றார் நாயனார்.
தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் சென்று, அங்கு நிகழ்வனவற்றை அறிந்து அறிவிப்பதால் ஒற்றரும், அவ் ஒற்றர் சொன்ன செய்திகளை நீதிநூலில் சொல்லப்பட்டுள்ள வழியே சென்று ஆராய்ந்து தெளியவேண்டி உள்ளதால், அந்த நீதிநூல்களும் ஒருவனுக்கு இரு கண்களைப் போன்றவை ஆகும்.
ஒற்றரை ஊனக் கண் என்றும், நீதிநூல்களை ஞானக்கண் என்றும் கொள்வது சிறப்பாக அமையும்.
இதற்குத் திருக்குறள்...
ஒற்றும், உரைசான்ற நூலும், இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் --- ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்;
மன்னவன் கண் தெற்றென்க --- அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந் நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளை எல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக் கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாக வந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
"எற்றுஇன்றி ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன்கண் என்பர், ஈதுஉன் செயல்பொருந்தும்
முற்றின்ப மன்னர் முறைமை, நின்பாத முளரியின்மேல்
பற்று என்று நான் பெறுவேனோ புல்லாணிப் பதிக்கொண்டலே".
இதன் பொருள் ---
என்னவோ என்று தெளிய முடியாதவைகளை அறிந்து சொல்லுகின்ற ஒற்றரும், புகழமைந்த நீதிநூல்களும் ஆகிய இவை இரண்டும், தெளியத் துணை புரிவன என்று பெரியோர் சொன்னதால், உனது தொழிலாகிய காத்தல் தொழிலைப் புரிகின்ற மன்னருக்கு இவை இரண்டும் பொருந்தும். ஒற்று, நீதிநூல் ஆகிய இரண்டில் பற்று வைத்துத் தெளிகின்ற, எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற மன்னர்களைப் போல், திருப்புல்லாணிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருமாலே! அடியேன் உனது திருவடித் தாமரையின் மேல் அன்பு வைத்துத் தெளிந்த ஞானத்தை எப்போது பெறுவேனோ?
முற்றின்ப மன்னர் - எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற அரசர்கள். பாதமுளரி - திருவடித் தாமரை. பற்று - அன்பு.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“எள்ளப் படுமரபிற்று ஆகலும், உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும், முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும், இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.” --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, முறையை உடையதாதலும், உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தைக் கேட்டுப் பின் மறவாத, கூரறிவுடைமையும்; உள் பொருள் முட்டு இன்றி சொல்லும் உணர்ச்சியும் - அப் பொருளை, தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய ஒற்று ஆள் குணம் - அறிவுள்ள வேவுகாரனது தன்மையாம்.
No comments:
Post a Comment