திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை
மன எழுச்சியோடு இருப்பது. மனத்தில் தளர்வு கொள்ளாமல் இருப்பது. உற்சாகத்தோடு இருப்பது. "முயற்சி, தாளாண்மை, ஊக்கம், முந்துதாள், உத்தி, யோகம், இயற்றலே, உஞற்று, உழப்போடு ஆள்வினை, இவை உற்சாகம்" என்பது சூடாமணி நிகண்டு.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவனுக்குச் சிறந்த உடைமையாவது மன எழுச்சியே ஆகும். அது அல்லாத கல்வி, செல்வம் போன்றவை உடைமைகள் ஆகா" என்கின்றார் நாயனார்.
மன எழுச்சி என்னும் ஊக்கத்தை உடையவரே எல்லாச் செல்வங்களையும் அடைதல் கூடும். ஊக்கம் இல்லாதவர் ஒரு பொருளையும் தாமே முயன்று தேடுதற்கு இல்லாததோடு, முன்னர் தமது முன்னோர் தேடி வைத்த பொருளையும் தமது ஊக்கம் இன்மையால் காக்கும் வல்லமை இல்லாததால், அதனையும் இழப்பர் என்றார்.
இதற்குத் திருக்குறள்...
உடையர் எனப்படுவது ஊக்கம், அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
உடையர் எனப்படுவது ஊக்கம் --- ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்;
அஃதில்லார் மற்று உடையது உடையரோ --- அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.” --- கொன்றைவேந்தன்.
இதன் பொருள் ---
செய்யும் தொழிலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும்.
“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையார் ஆயின் திரிந்தும் --- வருமால்
பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
திருவினும் திட்பம் பெறும். “ --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
பெருவரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, திரு உடையர் ஆயின் - செல்வம் உடையவர்களுக்கு ஆயின், அருவிலை மாண் கலனும் ஆன்ற பொருளும் திரிந்தும் வரும் - (அவர் தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட அணிகலன்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன, பிரிவு இன்று - (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின், அவர் தம் செல்வம்) பிரிதல் இல்லை, அதனால் - அத்தன்மையால், திருவினும் திட்பம் பெறும் - செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.
அறிவுச் செல்வம் பொருட்செல்வம் போல் பிரிதல் இல்லாமையால் அதனையே ஊக்கமுடன் தேடுதல் வேண்டும்.
No comments:
Post a Comment