060. ஊக்கம் உடைமை - 04. ஆக்கம் அதர்வினாய்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "செல்வமானது கலக்கம் இல்லாத மன எழுச்சியை உடையவனின் இடத்தைச் சென்று அடைய, வழி கேட்டுச் செல்லும்" என்கின்றார் நாயனார்.

எவ்வளவு துன்பம் வந்தாலும், தளர்ச்சி அடையாது, எடுத்த செயலை முடிக்க இரவும் பகலும் உழைக்கின்றவன் வாழும் வீட்டினைச் செல்வத்துக்கு அதிதேவதையாய் இருக்கும் திருமகளானவள் வழி வினாவிச் சென்று, அவனுடைய வீட்டிலே போய்ச் சேருவாள். எனவே, ஊக்கம் உடையவனுக்குப் பொருள் சேருவது உறுதி.


இதற்குத் திருக்குறள்...

ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும், அசைவு இலா

ஊக்கம் உடையான் உழை.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அசைவு இலா ஊக்கம் உடையான் உழை --- அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; 

ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் --- பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.

(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வீசு புகழ்விசயன் வில்தழும்பு சென்னியின் மேல்

ஈசன் தரித்தான் இரங்கேசா --- ஆசையால்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை.”   


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வீசு புகழ் விசயன் - எங்கும் பரவிய கீர்த்தியை உடைய அருச்சுனன், வில் தழும்பு - வில்லால் அடித்த தழும்பை, ஈசன் - சிவபிரான், சென்னியின் மேல் - தன் சிரசின் மேல், தரித்தான் - (வலியச் சென்று) ஏற்றுக் கொண்டான், (ஆகையால், இது) ஆசையால் - காரியசித்தி பெறவேண்டும் என்னும் ஆசையினால், அசைவு இலா ஊக்கம் உடையான் இடை - இடைவிடாத முயற்சி உடையவனிடத்தில், ஆக்கம் - செல்வமானது, அதர் வினாய் செல்லும் - வழி கேட்டுக் கொண்டு வலிய போய்ச் சேரும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


விளக்கவுரை --- அருச்சுனன், பாசுபத அத்திரம் பெறத் திருக்கயிலை மலைச் சாரலில் கடும் தவம் புரிகையில், சிவபிரான் அவனுடைய வைராக்கியத்தை வியந்து, பார்வதி தேவியோடு வேடவடிவம் தாங்கி வந்து, அவனைக் கொல்லத் துரியோதனன் ஏவியிருந்த மூகாசுரன் என்னும் பன்றியைத் துரத்தினார். அது சென்று, அருச்சுனன் தவம் செய்யும் கம்பத்து அருகில் நின்று அபயதானம் கேட்டது. அப்படியே அவன் தவம் புரிவோர்க்கு அழகாகிய சீவகாருண்ய விசேஷத்தால், அதற்கு அபயம் அளித்தான். உடனே சிவபிரானாகிய வேடன் அங்குச் சென்று, தான் துரத்திய பன்றியை விடச் சொல்லி, அருச்சுனனைக் கேட்டார். அவன் "அபயம் காத்த உயிரைக் கைவிடுவது அழகல்ல" என்று மறுத்தான். 


தவவேடனுக்கும் சிவவேடனுக்கும் சண்டை நடந்தது.  சிவபெருமான், அருச்சுனனுடைய வில் நாணியை அறுத்து விட்டார். ஆகையால், வில் தண்டு நீண்டது. அதுகண்ட அர்ச்சுனனுக்குக் கோபம் மூண்டது. ஆகையால், அவன் அந்தத் தண்டத்தால் சிவபிரான் தலையில் மோதி அடித்துக் காயம் உண்டாக்கினான். அன்பனாகிய அவன் செய்ததை இன்பமாய் ஏற்றுக் கொண்டு, சிவபிரான் அவனுக்கு வேண்டிய பாசுபத அத்திரம் முதலிய பொருள்களைத் துன்பம் தீர வழங்கினார். 


இதனால் விடாத் தவ வைராக்கிய முயற்சியில் சிறந்து ஊக்கம் உடையவனாய் விளங்கிய அருச்சுனர்க்கு, சிவகடாட்சமாகிய ஆக்கம் அதர் வினாய் வலிய வந்து அடைந்தமை காண்க.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“ஊக்கம் அது கைவிடேல்.” ---  ஆத்திசூடி.

இதன் பொருள் ---

நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமையினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)



“உண்மையொராப் பித்தர் உடைமை மயக்கு என்ப,

வண்மைஉற ஊக்கல் ஒருதலையே,-கண்ணீர்

இருபாலும் தோன்று அன்ன ஈர்க்கலார் போழ்வாள்

இருபால் இயங்கலினோடு ஒப்பு. ---  இன்னிலை.

இதன் பொருள் ---

உண்மை ஒரா பித்தர் உடைமை மயக்கு என்ப - உண்மையை அறியாத மயக்கம் உடையவர் செல்வத்தை மயக்கம் தருவது (சிறந்தது அன்று) என்று கூறுவர். ஒருதலையே வண்மை உற ஊக்கல் - துணிவாக வளம் பொருந்தும்படி தேடுவதற்கு ஊக்கங் கொள்க. கண்ணீர் இருபாலும் தோன்று அன்ன - கண்ணின் நீர்மை போன்ற இருபக்கமுள்ள அறம் இன்பங்கள் தோன்றுவதாகிய அத்தன்மை உடையது ஆகிய (செல்வம்) ஈர்க்கலார் போழ்வாள் இருபால் இயங்கலினோடு ஒப்பு - வெட்டுவோர்க்கு வெட்டும் வாளாயுதம் இருபாலும் இயங்குவதனோடு ஒப்பாகும் அது.

செல்வம் அறம் இன்பங்களைத் தோன்றுவிக்கும். செல்வம் இருப்பது வீரர்களுக்கு வாளாயுதம் இருப்பது போன்றது. ஆதலால், செல்வத்தைத் தேட வேண்டியது மக்கள் கடமையாம்.

செல்வத்தினால் அறஞ் செய்து, இன்பத்தையும் நுகர்ந்து பின் முத்தியை அடையலாம் என்ற உண்மை அறியாதவர் செல்வத்தைச் சிறப்பாக மதிக்கமாட்டார். அது மயக்கத்தைத் தருவது என்று வெறுப்பார். அவ்வாறு வெறுப்பவர்க்குத் துறவு வாழ்க்கையே தக்கது. இல்வாழ்வில் இருப்பவர் அவ்வாறு கூறினால் அது மயக்கமேயாம் என்ற கருத்து வெளிப்பட "உண்மை ஒராப் பித்தர்" என்றார் பித்தர் என்றது துறவிகளையே குறிக்கும். 

மக்கள் வாழ்வின் பயன் அறம் செய்தலும், இன்பம் துய்த்தலுமே. ஆதலின் அவை இரண்டும் இருவிழிகளாகக் கொள்ளப்பட்டன. இருபால் என்பது, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றின் நடுவில் நிற்கும் பொருளுக்கு இருபக்கத்தின் நிற்கும் பொருள்களாகிய அறத்தையும் இன்பத்தையும் உணர்த்திற்று "வடுவிலா வையத்து மன்னிய மூன்றின், நடுவணது எய்த இருதலையும் எய்தும்," என நாலடியாரும்,, "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள், ஏனை இரண்டும் ஒருங்கு" எனத் திருவள்ளுவ நாயனாரும் காட்டி செல்வப் பொருள் என்பது, அறத்தையும் இன்பத்தையும் தரும் என நிறுவியிருப்பதும் நோக்குக. வீரர் கையில் வாளிருந்தால், அது இரு பக்கமும் செல்வது போலப் பொருளும் இருபக்கமும் செல்லும், பொருள் இருபக்கம் செல்லுதலாவது அறம் இன்பம் ஆகிய இருபாலும் செல்வது. வாள் பகையைத் தொலைப்பது போலச் செல்வமும் பசி பிணி முதலியவற்றைத் தொலைக்கும் எனக் கொள்க.


“ஆக்கம் இங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல்

ஊக்கம் உண்டாவரேல் உறுவர், அன்னது

நீக்கமில் கொள்கையின் நிற்பரே எனின்

மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால்.”  --- கந்தபுராணம், மாயை உபதேசப் படலம்.

இதன் பொருள் ---

ஆக்கமானது ஒருவருக்கு வந்து சேர வேண்டுமானால், அதற்கான ஊக்கம் உள்ளத்தில் இருந்தால் அதனை அடைவர். இந்தக் கொள்கையில் இடையீடு இல்லாமல் நின்றால், மேலான பெருஞ்செல்வம் விரைந்து வந்து சேரும்.




No comments:

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...