திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 59 -- ஒற்றாடல்
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "முன்னர் ஓர் ஒற்றன் ஒற்றாடிச் சொன்ன கருத்தையும், பின்னர் மற்றும் ஓர் ஒற்றனைக் கொண்டு, அவன் சொன்ன கருத்தையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.
இதற்குத் திருக்குறள்...
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் --- ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்;
மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் =-- பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“கற்று அறி அந்தணாளர்
விருத்திகள் கடவுள் தானத்து
அற்றம்இல் பூசைச் செல்வம்
அபப்புறம் நடக்கை, ஏனைச்
செற்றமில் குடிகள் மற்றும்
அமைச்சரால் தெளிந்தும், வெவ்வேறு
ஒற்றுவிட்டு உணர்ந்தும் வேறு
குறையுண்டேல் ஒறுத்துத் தீர்த்தும்.” --- தி.வி. புராணம்.
இதன் பொருள் ---
கற்று அறி அந்தணாளர் விருத்திகள் - (மறை முதலிய நூல்களைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் விருத்திகளையும், கடவுள் தானத்து அற்றம் இல் பூசைச் செல்வம் -தேவாலயங்களில் நடக்கும் குற்றமில்லாத பூசனைச் சிறப்புக்களையும், அறப்புறம் நடக்கை - அறச் சாலைகளின் நிகழ்ச்சிகளையும், ஏனைச் செற்றம் இல் குடிகள் - அவை ஒழிந்த வெறுப்பு இல்லாத குடிகளின் (வாழ்க்கைகளையும்), மற்றும் - பிறவற்றையும், அமைச்சரால் தெளிந்தும் -மந்திரிகளால் உணர்ந்தும், வெவ்வேறு ஒற்றுவிட்டு உணர்ந்தும் - வேறு வேறு ஒற்றர்களை அனுப்பி அறிந்தும், வேறு குறை உண்டேல் ஒறுத்துத் தீர்த்து - அவைகளுள் வேறு குறைகள் இருக்குமானால் தண்டித்து அக்குறைகளைப் போக்கியும்....
“ஒற்றரைத் தூண்டி அன்னோர்
உறுவலி உணர்வ ரேனும்
மற்றுமோர் ஒற்றின் அல்லால்
அன்னது மனத்துள் கொள்ளார்,
சுற்றுறும் அனிகம் அன்றி
ஒருபுடை துவன்றிச் சூழும்
பெற்றியும் உளதோ என்னா
வேயொரீஇத் தேர்வர் பின்னும்.” --- கந்தபுராணம்.
அறிவுமிக்க அரசர்கள் அல்லது தலைவர்கள், தங்கள் பகைவர்களின் வலிமையை அறிந்துகொள்வதற்காக முதலில் சில ஒற்றர்களை அனுப்பி உளவு பார்ப்பார்கள். அப்படி அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திரும்பி வந்து பகைவர்களின் அசாத்தியமான வலிமையைப் பற்றித் தெரிவித்தால் கூட, அந்த ஒரு தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு உடனடியாக முடிவுக்கு வரமாட்டார்கள். அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, வேறொரு புதிய ஒற்றனை அனுப்பி மீண்டும் ஆராய்வார்கள். தங்களைச் சுற்றியுள்ள பகைப் படை தவிர, வேறு ஏதேனும் ஒரு பக்கத்தில் மறைமுகமாகப் பெரும்படை திரண்டு சூழ்ச்சி செய்கிறதா என்பதையும் மேலும் பல ஒற்றர்களை ஏவித் தெளிவுபடுத்திக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment