பொது --- 1128. பொற்கோவைக்கே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பொற்கோ வைக்கே (பொது)


முருகா! 

சிற்றின்பத்துக்காகப் பொருளைத் தேடி அலையாமல், 

தேவரீரது அருளை நாடி வாழ அருள் புரிவாய்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே

     பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம்


பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ

     கித்தே கைக்குப் ...... பொருள்தேடித்


தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்

     திக்கோ டிப்பச் ...... சிமமான


திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ

     வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ


தற்கோ லிப்பா விப்பார் நற்சீ

     ரைச்சா ரத்தற் ...... பரமானாய்


தப்பா முப்பா லைத்தே டித்தே

     சத்தோர் நிற்கத் ...... தகையோடே


முற்கா னப்பே தைக்கா கப்போய்

     முற்பால் வெற்பிற் ...... கணியானாய்


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


பொன் கோவைக்கே, பல் கோவைக்கே,

     பொய்ப் போகத்தைப் ...... பகர்வார் தம்,


பொய்க்கே, மெய்க்கே, பித்து ஆகிப் போ-

     கித்தே, கைக்குப் ...... பொருள் தேடி,


தெற்கு ஓடி, காசிக்கு ஓடி, கீழ்

     திக்கு ஓடிப் பச் ...... சிமம் ஆன


திக்கு ஓடிப் பாணிக்கு ஓடித் 

     தீவுக்கு ஓடிக் கெட் ...... டிடல் ஆமோ?


தற்கோலிப் பாவிப்பார் நல்

     சீரைச் சாரத் தற் ...... பரம் ஆனாய்!


தப்பா முப்பாலைத் தேடி,

     தேசத்தோர் நிற்க, ...... தகையோடே


முன் கானப் பேதைக்காகப் போய்,

     முன்பால் வெற்பில் ...... கணி ஆனாய்!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை


தற்கோலி பாவிப்பார் நல் சீரைச் சார --- தேவரீரைத் தியானித்து தமது உள்ளத்தில் வைப்பவர்கள் மேலான நற்கதியை அடைவதற்கு,

தற்பரம் ஆனாய் --- பரம்பொருள் என்று அவரவர்கள் கருதும் திருவுருவத்தோடு அவர்தம் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பவரே!

தப்பா முப்பாலைத் தேடி தேசத்தார் நிற்க ---  தவறாமல் நாள்தோறும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நெறிகளைக் கடைப்பிடித்து தேவரீரது அருளுக்காகக் காத்து இருக்கவும்,

தகையோடே முன் கானப் பேதைக்காகப் போய் --- அருளுடனே

        முற்காலத்தில் காட்டில் வீட்டின்பத்தை நாடித் தவம் புரிந்துகொண்டிருந்த வள்ளிநாயகியின் பொருட்டுச் சென்று,

முற்பால் வெற்பில் கணி ஆனாய் --- முதுமலையாகிய வள்ளிமலையில் வேங்கை மரமாக நின்றவரே!

முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

சுத்தா --- தூயவரே!

முத்தா --- பற்று அற்றவரே!

முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

பொன் கோவைக்கே பல் கோவைக்கே --- பொன் காசு வரிசைகளுக்காகவும், வேறு பலவிதமான வரிசைகளுக்காகவும்,

பொய்ப் போகத்தைப் பகர்வார் தம் --- நிலையற்ற சிற்றின்ப சுகத்தை விலை பேசுபவர்களுடைய

பொய்க்கே மெய்க்கே பித்தாகி --- பொய் மொழிகளுக்கும், உடல் அழகுக்கும் காம உணர்வினால் பித்துக் கொண்டு,

போகித்து ஏகைக்கு பொருள் தேடி --- சிற்றின்பத்தை அனுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடி,

தெற்கு ஓடி காசிக்கு ஓடி --- தென்திசையிலுள்ள ஊர்களுக்கு ஓடியும், (வடக்கிலுள்ள) காசி முதலான ஊர்களுக்கு ஓடியும்,

கீழ் திக்கு ஓடி, பச்சிமமான திக்கு ஓடி --- கிழக்குத் திக்கில் ஓடி, மேற்குத் திக்கில் ஓடியும்,

பாணிக்கு ஓடி --- நீண்ட காலம் ஓடித் திரிந்தும்,

தீவுக்கு ஓடிக் கெட்டிடலாமோ --- தீவுகளுக்கு ஓடியும் அடியேன் அழிந்து போகலாமோ?


பொழிப்புரை


தேவரீரைத் தமது உள்ளத்தில் தியானித்து இருப்பவர்கள் மேலான நற்கதியை அடைவதற்கு, அவரவர்கள் கருதும் திருவுருவத்தோடு அவர்தம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் பரம்பொருளே!

தவறாமல் நாள்தோறும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நெறிகளைக் கடைப்பிடித்து தேவரீரது அருளுக்காகப் பலர் இந்த உலகத்தில் காத்து இருக்கவும், அருளுடனே முற்காலத்தில் காட்டில் நான்காவது பாலாகிய வீட்டின்பத்தை நாடித் தவம் புரிந்துகொண்டிருந்த வள்ளிநாயகியின் பொருட்டுச் சென்று, முதுமலையாகிய வள்ளிமலையில் வேங்கை மரமாக நின்றவரே!

முத்தி நிலைக்கு அதிபரே! ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! தூயவரே! பற்று அற்றவரே! உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

பொற்காசு வரிசைகளுக்காகவும், வேறு பலவிதமான வரிசைகளுக்காகவும், நிலையற்ற சிற்றின்ப சுகத்தை விலை பேசுபவர்களுடைய  பொய்ம் மொழிகளுக்கும், உடல் அழகுக்கும் காம உணர்வினால் பித்துக் கொண்டு, சிற்றின்பத்தை அனுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடி, தென்திசையிலுள்ள ஊர்களுக்கு ஓடியும், வடக்கிலுள்ள காசி முதலான ஊர்களுக்கு ஓடியும், கிழக்குத் திக்கில் ஓடி, மேற்குத் திக்கில் ஓடியும், நீண்ட காலம் ஓடித் திரிந்தும், தீவுகளுக்கு ஓடியும் அடியேன் அழிந்து போகலாமோ?


விரிவுரை


தற்கோலி பாவிப்பார் நல் சீரைச் சார தற்பரம் ஆனாய் --- 

கோலுதல் – தியானித்தல். 

பாவித்தல் – பாவனை செய்தல், நுகர்தல். 

சீர் – பெருமை,  செம்பொருள், அழகு, நன்மை, 

தற்பரம் - தத் பரம் - வேதத்துள், `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள். `தன் பரம்` எனப் பிரித்து, தனக்கு மேலாக உணர்கின்ற பொருட்கள் ஆகிய உயிர்கட்கு மேலான பொருள் என உரைத்தலும் உண்டு.

இறைவனைப் பாவித்தல் --  “இறைவன் தன்னை அன்பால் நினைவாரது உள்ளமெனும் தாமரையில் (இதயத் தாமரையில்) அவர் நினைந்த வடிவோடு, சிறிதும் தாமதியாது விரைந்து செல்வான்” என்று “மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார்” என்னும் திருக்குறளுக்கு விளக்கமாகப் பரிமேலழகர் சாதித்து உள்ளதை அறிக. 

“ஒரு நாமம் ஓர் உருவம் வன்றும் இல்லார்க்கு, ஆயிரம் திருநாமம் பாடி” என்றார் மணிவாசகப் பெருமான். உருவமும் பெயரும் அற்ற, பரம்பெருள், யார் யார் எந்த எந்த வடிவில் வழிபடுகின்றார்களோ, அந்த வடிவிலே வந்து அவர்க்கு அருள் புரியும் என்பதுதான் உண்மை. இந்த வடிவம்தான், இந்தப் பெயர்தான் என்று பாவித்து முழங்குவது எல்லாம் வெறும் சமயப் பூசலே. 

"யாதுஒரு தெய்வம் கொண்டீர், 

அத்தெய்வம் ஆகி ஆங்கே

மாதுஒரு பாகனார்தாம் 

வருவர், மற்றத் தெய்வங்கள்

வேதனைப்படும் இறக்கும் 

பிறக்கும் மேல் வினையும் செய்யும்,

ஆதலால், இவை இலாதான் 

அறிந்து அருள் செய்வன் அன்றே."


என்கிறது சைவசித்தாந்தம்.


"எச்சமயத் தெய்வமும் தான் எனநிறைந்த தெய்வம்,

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்"


என்கிறார் வள்ளல் பெருமான்.


“ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்“ 

என்பது அப்பர் தேவாரம். 


"சுருதி வானவனாம் திருநெடுமாலாம் 

சுந்தர விசும்பின் இந்திரனாம்

பருதி வானவனாம் படர்சடை முக்கண் 

பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்

எருது வானவனாம் எயில்கள் மூன்று எரித்த 

ஏறு சேவகனுமாம் "பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம்" கங்கை 

கொண்ட சோளேச்சரத்தானே".      ---  திருவிசைப்பா.


எனவேதான், பரிமேலழகர், "அவர் நினைந்த வடிவத்தோடு" என்று அழகுறக் காட்டினார். இறைவனை உள்ளக் கமலத்தில் வைத்து, இடையறாது வழிபடுவது ஞானபூசை ஆகும். "இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞான பூசை" என்கிறது சைவசித்தாந்தம். இந்த ஞான பூசையைச் செய்து இறைவனுடைய மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவர் பெரியபுராணத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற பூசலார் நாயனார்.


தப்பா முப்பாலைத் தேடி தேசத்தார் நிற்க --- 

முப்பால் – அறம் பொருள் இன்பம். விளக்கத்தைத் திருக்குறளில் காண்க. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களும் அற்றவர்க்கு வாய்ப்பாக அமைந்த வாழ்வியல் முறை இது ஆகும். முப்பாலின் வழி ஒழிகினால், நான்காவது பாலாகிய வீடு வாய்க்கும். 

தவறாமல் நாள்தோறும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நெறிகளைக் கடைப்பிடித்து இறைவன் திருவருளுக்காக ஏங்கி இருப்பவர்கள் பலர் இருக்கு, முருகப் பெருமான் வள்ளிநாயகிக்கு அருள் புரிந்தார்.


“பாம்புஅணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்

பல்நெடுங் காலம்நிற் காண்பான்

ஏம்பலித்து இருக்க என்னுளம் புகுந்த

எளிமையை என்றும்நான் மறக்கேன்”  எனவும்


“செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுஉன்

சேவடி பார்த்துஇருந்து அலச

எம்மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான்ஆர்

என்உடை அடிமைதான் யாதே?”


எனவும் வரும் திரவிசைப்பாப் பாடல்களைக் கருத்தில் கொள்ளுக.


தகையோடே முன் கானப் பேதைக்காகப் போய் --- 

தகைமை – பெருமை,  தகுதி.

கானம் – வள்ளிமலைக் காடு.

பேதை – முருகப் பெருமானை நோக்கித் தவம் புரிந்துகொண்டு இருந்த வள்ளிநாயகி. 


முற்பால் வெற்பில் கணி ஆனாய் --- 


முற்பால் வெற்பு – பழமலை, முதுமலை.  கணி - வேங்கை மரம்.

வள்ளிமலையின் பெருமை சொல்லுதற்கு அரியது என்பதை நமது சொந்தப் புராணம் ஆகிய கந்தப் புராணம் கூறுமாறு காண்க. வள்ளிமலையில் முருகப் பெருமான் வேங்கை மரமாகி நின்றார்.


“கள் இறைத்திடு பூந் தண்தார்க் கடம்பு அணி காளை பன்னாள்

பிள்ளைமைத் தொழில் மேற்கொண்டு, பெட்புடன் ஒழுகும் வண்ணம்

வள்ளியைத் தன்பால் வைத்து, வள்ளிவெற்பு என்னும் நாமம்

உள்ள அக் கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற்று ஆமோ.”   --- கந்தபுராணம். 

 

முத்தா, முத்திப் பெருமாளே --- 

முத்தியை உயிர்கட்கு அருள் புரிபவன் முருகப் பெருமான். “முத்திக்கு ஒரு வித்துக் குருபர” என்று அருணை வள்ளலார் பாடி உள்ளது காண்க. 

முத்தி என்றால், உடம்பை விட்டுச் செல்வது என்று பொருள் அல்ல. இறப்பது என்று பொருள் அல்ல. இறந்து போகின்றவர்கள் எல்லோரும் முத்தி பெற்றவர்கள் அல்ல. "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். உயிரானது இயல்பாகத் தன்னிடத்தே பொருந்தி உள்ள பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். பாசம் என்னும் சொல்லுக்கு, மும்மலம், ஆணவமலம், பற்று, கட்டு என்றும் பொருள் உண்டு. உடம்பொடு வாழும் காலத்திலேயே பாசநீக்கம் பெற்றவர்களானால், அவர்களை, "சீவன் முத்தர்" என்று சொல்லலாம். அந்த முத்தி நிலைக்கு வித்தாக இருப்பவன் இறைவன். “முத்திகு வரு வித்துக் குருபர” என்றார் பிறிதொரு திருப்புகழில்.

 முத்தி என்னும் சொல் ஒரு பொருளைக் குறிக்கும்போது முத்து என வந்தது. வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும்."முத்து" என்னும் சொல்லுக்கு,  அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.

சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது. மற்ற மணிகள் எல்லாம் பட்டை தீட்டப்படால் ஒளி விடும். முத்து பட்டை தீட்டப்படமாலேஇயல்பாகவே ஒளிருவது.

 கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும்,  முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.


பொன் கோவைக்கே பல் கோவைக்கே, பொய்ப் போகத்தைப் பகர்வார் --- 


பொன்னையும் பொருளையும் அளவில்லாது வேண்டி, பெறுகின்ற பொருளின் அளவுக்கு ஏற்பத் தமது உடம்பை விலை பேசி, போகத்தை விலை பகர்பவர்கள் விலைமாதர்கள். 


பொய்க்கே மெய்க்கே பித்தாகி --- 


பொய்யான இன்பத்தை, பொய்யான மனதுடன் விற்கின்ற விலைமாதர்கள், காமுகர் உள்ளத்தைக் கவரும்பொருட்டுத் தமது உடம்பை அணிகலன்களாலும், பூச்சுக்களாலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். காமுகர் அந்த செயற்கையான அழகில் மயங்கிப் புத்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுவார்கள்.


போகித்து ஏகைக்கு பொருள் தேடி, தெற்கு ஓடி காசிக்கு ஓடி, கீழ் திக்கு ஓடி, பச்சிமமான திக்கு ஓடி --- 

பச்சிமம் – மேற்குத் திசை.

பொது மகளிருடைய மெல்லிய தோளைப் பொருந்தும் பொருட்டு அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கப் பொருள் வேண்டும். ஆகவே அருளை மறந்து பொருளை நினைந்து அப்பொருளைத் தேடும் பொருட்டு மாந்தர் பலர் அலைகின்றனர்.

தூய வழியில் பொருள் தேடினாலும் குற்றமில்லை. தீய வழியில் பொருளை ஈட்டுகின்றார்கள். பலரை இம்சித்தும், பொய்யும் புனை சுருட்டும் புகன்றும், களவு செய்தும், பிறருடைய வயிற்றில் அடித்தும் அழிகின்ற பொருளைத் தேடுகின்றனர். அதனால் இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் எய்துகின்றன. இங்ஙனம் பாவ வழியில் தேடிய பொருள் மிகுதியைக் காட்டிலும் வறுமையே நல்லது என்கிறார் திருவள்ளுவர்.


“பழிமலைந்து எய்திய ஆக்கத்தில், சான்றோர்

 கழிநல் குரவே தலை.”               ---  திருக்குறள். 


தீய வழியில் ஈட்டிய பொருளை விலைமாதர்க்கு ஈந்து இவன் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு நரக உலகில் சென்று பன்னெடுங்காலம் பரிதவிக்கின்றான். இது மதியீனம்? தேடிய பொருளைத் தான்கொண்டு போகின்றானுமில்லை. பிறர் பொருட்டுப் பொருள்தேடி, தான் பாவத்தை சுமந்து செல்கின்றான். இவனைக் காட்டிலும் பேதை இல்லை. மிக்க பொருளுடையவர்களும் மேலும் பழி பாவங்கட்கு அஞ்சாது, வறியவர்கட்கு ஈயாது தீயவழிகளில் பெரும் பொருள் ஈட்டவே முயன்று கொண்டிருக்கிறார்கள். அதனால் பிறவிப் பயனைப் பெறாது அவமே மாண்டு ஒழிகின்றனர்.


அதிக பொருளை ஈட்ட வேண்டுமென்ற பேராசையால் தன் தேசத்தை விடுத்து அயல் தேசத்தையடுத்துப் போகின்றான். வங்கம் சோனகம் சீனம் முதலிய தேசங்கட்கெல்லாம் போகின்றான். அயல் தேசஞ் சென்று பஞ்சு படாத பாடு படுகின்றான்.


“பல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்

    தேடிச் சுகந்த அணை மீதில்துயின்று சுகம்

 இட்டாத ரத்துருகி வட்டார் முலைக்குள்இடை

    மூழ்கிக் கிடந்து மய லாகித்துளைந்து சில பிணியதுமூடி”

                                                            ---  (இத்தாரணிக்குள்) திருப்புகழ்.


வெங்காளம் பாணம் சேல் கண், பால்

     மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை

மென்கேசம் தான், என்றே கொண்டார்,

     மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி,

வங்காளம் சோனம் சீனம் போய்

     வன்பே துன்பப் ...... படல் ஆமோ?       --திருப்புகழ்.


“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று “கொன்றை வேந்தன்” என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார் அருளி உள்ளார். முன்னோர் தேடி வைத்த பொருள் உள்ளதே என்று, உழைப்பு இல்லாமல் வாழாதே. உனது உழைப்பில் பொருளைத் தேடு என்றார். உள்ளூரில் பொருளைத் தேட வழியில்லை என்றால், கடல் கடந்து சென்றாவது பொருளைத் தேடு என்பதே இதன் உண்மைப் பொருள்.  திரைகடல் ஒடியும் தேடிய செல்வத்தை, நிலவெடிப்பில் கொட்டிய பாலைப் போல, வீணில் செலவழித்தல் கூடாது. அறம் செய்து நல்வழியை நாடவேண்டும்.


பாணிக்கு ஓடி --- 


பாணி – காலம், நீண்ட காலம்.


தீவுக்கு ஓடிக் கெட்டிடலாமோ --- 


வெங்காளம் பாணம் சேல் கண், பால்

     மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை

மென்கேசம் தான், என்றே கொண்டார்,

     மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி,

வங்காளம் சோனம் சீனம் போய்

     வன்பே துன்பப் ...... படல் ஆமோ?       --திருப்புகழ்.


அதிக பொருளை ஈட்ட வேண்டுமென்ற பேராசையால் தன் தேசத்தை விடுத்து அயல் தேசத்தை நாடிப் போகின்றான். வங்கம் சோனகம் சீனம் முதலிய தேசங்கட்கெல்லாம் போகின்றான். அயல் தேசஞ் சென்று பஞ்சு படாத பாடு படுகின்றான்.


“பல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்

    தேடிச் சுகந்த அணை மீதில்துயின்று சுகம்

 இட்டாத ரத்துருகி வட்டார் முலைக்குள்இடை

    மூழ்கிக் கிடந்து மய லாகித்துளைந்து சில பிணியதுமூடி”

                                                            ---  (இத்தாரணிக்குள்) திருப்புகழ்.


கருத்துரை


முருகா! சிற்றின்பத்துக்காகப் பொருளைத் தேடி அலையாமல், தேவரீரது அருளை நாடி இருக்க அருள் புரிவாய்.



















No comments:

பொது --- 1128. பொற்கோவைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பொற்கோ வைக்கே (பொது) முருகா!  சிற்றின்பத்துக்காகப் பொருளைத் தேடி அலையாமல்,  தேவரீரது அருளை நாடி வாழ அருள...