அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பத்தேழு எட்டு (பொது)
முருகா!
பொய்ப்பொருளைத் தேடி அலையாமல்,
மெய்ப்பொருளை நாடி இருக்க அருள் புரிவாய்.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் ...... படவேயும்
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் ...... கிரைதேடி
எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் ...... திலுமோடி
எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் ...... கடவேனோ
சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்சா டிக்கற் ...... பணிதேசா
சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் ...... சையமார்பா
முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் ...... கிறையோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் (இ)ரட்டால்
வைத்தே பத்திப் ...... படவேயும்,
பைப் பீறல் கூரைப் பாசத் தா
சற்காரத்துக்கு ...... இரைதேடி,
எத் தேசத்து ஓடித் தேசத்தோடு
ஒத்து ஏய் சப்தத் ...... திலும் ஓடி,
எய்த்தே, நத்தா பற்றா, மல் தாது
இற்றே முக்கக் ...... கடவேனோ?
சத்தே! முற்றாய்! அத்தானைச் சூர்
கல் சாடிக் கற்பு ...... அணிதேசா!
சட் சோதிப் பூதிப் பாலத்தா!
அக் கோடல் செச் ...... சைய மார்பா!
முத் தாபத்தார் எட்டா வைப்பா!
வித்தா! முத்தர்க்கு ...... இறையோனே!
முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!
முத்தா! முத்திப் ...... பெருமாளே.
பதவுரை
சத்தே –-- உண்மைப்பொருளே!
முற்றாய் --- என்றும் இளையவரே!
அத்தானைச் சூர் --- அத்தனைச் சேனைகளோடும் கூடிப் போர்க்கு வந்த சூரபதுமனையும், (அத்தனை என்பது அத்தானை என்று வந்தது)
கல் --- கிரவுஞ்ச மலையையும்,
சாடி --- அழித்து,
கற்பு அணி தேசா --- நீதிநெறியை நிலை நாட்டிய ஒளி வடிவானவரே!
சோதிப் பூதி சட் பாலத்தா --- ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திருநெற்றிகளை உடையவரே!
அக் கோடல் செச்சைய மார்பா --- அந்தக் காந்தள்மலர் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த திருமார்பரே!
முத் தாபத்தர் எட்டா வைப்பா --- மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப்பொருளே!
வித்தா --- அறிவில் சிறந்தவரே!
முத்தர்க்கு இறையோனே --- பாசநீக்கம் பெற்றோர்க்கு இறைவரே!
முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!
முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்
என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே!
சுத்தா --- தூயவரே!
முத்தா --- பற்று அற்றவரே!
முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் (இ)ரட்டால் வைத்தே --- பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் (இ)ரட்டு = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால் அமைக்கப்பட்டு,
பத்திப் படவேயும் --- ஒழுங்காக வழபாடு செய்து ஈடேற,
பைப் பீறல் கூரை பாசத் தா ... தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால்
சற்காரத்துக்கு இரை தேடி --- (அதே உடலைப்) பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி,
எத் தேசத்து ஓடித் தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி --- எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று,
எய்த்தே நத்தா பற்றா --- இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு,
மல் தாது இற்றே முக்கக் கடவேனோ --- வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதா?
பொழிப்புரை
உண்மைப்பொருளே! என்றும் இளையவரே! அத்தனைச் சேனைகளோடும் கூடிப் போர்க்கு வந்த சூரபதுமனையும், (அத்தனை என்பது அத்தானை என்று வந்தது) கிரவுஞ்ச மலையையும் அழித்து,நீதிநெறியை நிலை நாட்டிய ஒளி வடிவானவரே! ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திருநெற்றிகளை உடையவரே! அழகிய காந்தள்மலர் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த திருமார்பரே! மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப்பொருளே! அறிவில் சிறந்தவரே! பாசநீக்கம் பெற்றோர்க்கு இறைவரே! முத்தி நிலைக்கு அதிபரே! ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! தூயவரே! பற்று அற்றவரே! உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் (இ)ரட்டு = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால் அமைக்கப்பட்டு, ஒழுங்காக வழபாடு செய்து ஈடேறப் படைக்கப்பட்ட, கிழிபட்டு அழியக் கூடிய தோலால் ஆன பையும், எப்போதும் சிதைந்து போகக் கூடிய சிறு குடிலாகிய இந்த உடல்மீது வைத்த பாசத்தின் வலிமையால், அந்த உடலைப் பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி, எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று, இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு வாழ்ந்து, வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் நாளடைவில் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதா?
விரிவுரை
சத்தே –--
சத்து - உண்மை, என்றும் உள்ளது.
முற்றாய் ---
வயதால் மூப்பினை அடையாதவர் முருகப் பெருமான் என்கிறார். ‘என்றும் இளையாய் அழகியாய்’ என்பது திருமுருகாற்றுப்படை வெண்பா.
“இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ! செந்தில் வந்த
இறைவ! குக! கந்த! என்றும் ...... இளையோனே!” --திருப்புகழ். (அனைவரும்)
“என்றும் அகலாத இளமைக் கார! “ –திருப்புகழ் (சந்தனசவாது)
“சதா காலமும் இளையோனே!”. –திருப்புகழ் (விடுமதவேள்)
அத்தானைச் சூர் ---
அத்தனை என்பது அத்தானை என்று வந்தது. சூர் – சூரபதுமன்.
கல் ---
கல் – மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது.
கற்பு அணி தேசா ---
கற்பு – ஒழுக்கம். நீதிநெறி.
தேசு – ஒளி. தேசு என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் தேஜஸ் என்று வழங்கப்படுகிறது.
சோதிப் பூதி சட் பாலத்தா ---
பூதி என்பது விபூதியைக் குறிக்கும். சோதி – ஒளி, விளக்கம், அறிவு.
“மதியைத் தருவது நீறு” என்றார் திருஞானசம்பந்தர். திருநீறு நல்லறிவை விளங்கச் செய்யும்.
பாலம் – நெற்றி. சட் பாலம் – ஆறு திருநெற்றிகளை உடையவராகிய முருகப் பெருமான்.
முத் தாபத்தர் எட்டா வைப்பா ---
தாபம் – தாகம், வேட்கை, ஆசை. முத் தாகம் – மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று வகையான வேட்கை உள்ளவர்களால் எட்டப்படாத பொருளாக உள்ளவர் முருகப் பெருமான். எனவே, “மூ ஏடணை என்று முடிந்திடுமோ” என்று கந்தர் அனுபூதியில் பாடினார் அடிகளார்.
வைப்பு – சேமப் பொருள். “அடியவர்க்கு எய்ப்பினில் வைப்பு” என்பது தேவாரம். “காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க” என்பது மணிவாசகம். “உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு” என்பது திருவருட்பா.
முத்தர்க்கு இறையோனே! முத்தா! முத்தா! முத்திப் பெருமாளே ---
முத்தி என்றால், உடம்பை விட்டுச் செல்வது என்று பொருள் அல்ல. இறப்பது என்று பொருள் அல்ல. இறந்து போகின்றவர்கள் எல்லோரும் முத்தி பெற்றவர்கள் அல்ல. "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். உயிரானது இயல்பாகத் தன்னிடத்தே பொருந்தி உள்ள பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். பாசம் என்னும் சொல்லுக்கு, மும்மலம், ஆணவமலம், பற்று, கட்டு என்றும் பொருள் உண்டு. உடம்பொடு வாழும் காலத்திலேயே பாசநீக்கம் பெற்றவர்களானால், அவர்களை, "சீவன் முத்தர்" என்று சொல்லலாம். அந்த முத்தி நிலைக்கு வித்தாக இருப்பவன் இறைவன். “முத்திக்கு ஒரு வித்துக் குருபர” என்றார் பிறிதொரு திருப்புகழில்.
முத்தி என்னும் சொல் ஒரு பொருளைக் குறிக்கும்போது முத்து என வந்தது. வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும்."முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.
சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.
கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.
பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் (இ)ரட்டால் வைத்தே ---
பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் (இ)ரட்டு = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால் அமைக்கப்பட்டது உடம்பு.
பத்திப் படவேயும் ---
பத்தி – ஒழுங்கு, வரிசை, சிறப்பு. பத்திநெறியில் நின்று சிறப்பான முத்திப் பேற்றை அடைவதற்கு அமைந்தது இந்த உடல்.
பைப் பீறல் ---
பீறல் – கிழித்தல், கந்தை. தோலால் ஆன பை இந்த உடம்பு. “கள் வைத்த தோற்பை” என்றார் அடிகாளர் பிறிதொரு திருப்புகழில். பை எதுவும் நாளடைவில் கிழிந்து நைந்து போகும். அது நைந்து போவதற்கு முன்னர், இறைவனை நினைந்து உள்ளம் நைந்து உருக வேண்டும்.
கூரை –-
குடிசை. இந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினால் ஆகியது. பஞ்சபூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது. நிலை பேறில்லாதது. நீர்மேல் குமிழிக்கு நிகரானது.
ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்
ஆகின்ற ஆக்கைநீர்மேல்
அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்
அறியாத காலமெல்லாம்
புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே
போந்தநெறி என்றிருந்தேன்
பூராய மாகநின தருள்வந் துணர்த்தஇவை
போனவழி தெரியவில்லை
எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
இறப்பொடு பிறப்பையுள்ளே
எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
திருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகான தங்கம்இவை என்கொலோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. --- தாயுமானவர்.
`ககனமு மநிலமும் அனல்புனல் நிலமமை
கள்ளப் புலால் கிருமிவீடு’ --- திருப்புகழ்.
பொய்யான உடம்பை மெய் என்று நம்பி, தவநெறி சேராது அவநெறி சேர்ந்து, காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி மானுடர் வறிதே கெடுகின்றனர்; பரிதாபம்.
காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்? எங்கே
குடியிருப்பீர்? ஐயோ!நீர் குறித்தறியீர். இங்கே
பாடுபட்டீர். பயன்அறியீர். பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்.
பட்டதெலாம் போதும்.இது பரமர்வரு தருணம்.
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்.
எண்மைஉரைத் தேன்அலன், நான் உண்மையுரைத் தேனே.
ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,
அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,
கூற்றுவருங் கால்அதனுக்கு எதுபுரிவீர், ஐயோ!
கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,
வேற்று உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,
வீண்உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,
சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற
தருணம்இது, சத்தியம், சிற்சத்தியைச் சார்வதற்கே.
பொய் விளக்கப் புகுன்றீர், போது கழிக்கின்றீர்,
புலைகொலைகள் புரிகின்றீர், கலகல என்கின்றீர்,
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்,
கைவிளக்குப் பிடித்து ஒருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர், கருத்து இருந்தும் கருதீர்,
மெய்விளக்கும் எனது தந்தை வருகின்ற தருணம்
மேவியது, இங்கு அடைவீரேல் ஆவிபெறுவீரே.
என்று உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்
பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ, எம்இறைவர்
மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. --- தாயுமானவர்.
“ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே" --கந்தர் அலங்காரம்.
சற்காரத்துக்கு இரை தேடி ---
சற்காரம் – உபசாரம். இந்த உடம்பை உபகரிப்பதற்கு இரையைத் தேடுகின்றோம்.
எத் தேசத்து ஓடித் தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி ---
வெங்காளம் பாணம் சேல் கண், பால்
மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை
மென்கேசம் தான், என்றே கொண்டார்,
மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி,
வங்காளம் சோனம் சீனம் போய்
வன்பே துன்பப் ...... படல் ஆமோ? --திருப்புகழ்.
பொது மகளிருடைய மெல்லிய தோளைப் பொருந்தும் பொருட்டு அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கப் பொருள் வெண்டுமன்றோ? ஆகவே அருளை மறந்து பொருளை நினைந்து அப்பொருளைத் தேடும் பொருட்டு மாந்தர் பலர் அலைகின்றனர்.
தூய வழியில் பொருள் தேடினாலுங் குற்றமில்லை. தீய வழியில் பொருளை ஈட்டுகின்றார்கள். பலரை இம்சித்தும், பொய்யும் புனை சுருட்டும் புகன்றும், களவு செய்தும், பிறருடைய வயிற்றில் அடித்தும் அழிகின்ற பொருளைத் தேடுகின்றனர். அதனால் இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் எய்துகின்றன. இங்ஙனம் பாவ வழியில் தேடிய பொருள் மிகுதியைக் காட்டிலும் வறுமையே நல்லது என்கிறார் திருவள்ளுவர்.
“பழிமலைந்து எய்திய ஆக்கத்தில், சான்றோர்
கழிநல் குரவே தலை.” --- திருக்குறள்.
தீய வழியில் ஈட்டிய பொருளை மாதர்க்கும் மனைவி மக்கட்கும் ஈந்து இவன் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு நரக உலகில் சென்று பன்னெடுங்காலம் பரிதவிக்கின்றான். இது மதியீனம் அல்லவா? தேடிய பொருளைத் தான்கொண்டு போகின்றானுமில்லை. பிறர் பொருட்டுப் பொருள்தேடி, தான் பாவத்தை சுமந்து செல்கின்றான். இவனைக் காட்டிலும் பேதை இல்லை. மிக்க பொருளுடையவர்களும் மேலும் பழி பாவங்கட்கு அஞ்சாது, வறியவர்கட்கு ஈயாது தீயவழிகளில் பெரும் பொருள் ஈட்டவே முயன்று கொண்டிருக்கிறார்கள். அதனால் பிறவிப் பயனைப் பெறாது அவமே மாண்டு ஒழிகின்றனர்.
பெரும்பொருளை ஈட்ட வேண்டுமென்ற பேராசையால், தன் தேசத்தை விடுத்து அயல் தேசத்தை அடுத்துப் போகின்றான். வங்கம் சோனகம் சீனம் முதலிய தேசங்கட்கெல்லாம் போகின்றான். அயல் தேசஞ் சென்று பஞ்சு படாத பாடு படுகின்றான்.
“பல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்
தேடிச் சுகந்த அணை மீதில்துயின்று சுகம்
இட்டாத ரத்துருகி வட்டார் முலைக்குள்இடை
மூழ்கிக் கிடந்து மய லாகித்துளைந்து சில பிணியதுமூடி” --- (இத்தாரணிக்குள்) திருப்புகழ்.
எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்கக் கடவேனோ ---
பல திக்குகளிலும் உழன்று பொருளைத் தேடி இளைத்துப் போகின்றான் மனிதன். மனம் இளைப்பதோடு, உடம்பும் இளைத்துப் போகிறது. இந்த நிலையை முருகப் பெருமானிடம் முறையிடுகின்றார் அருணை வள்ளலார்.
கருத்துரை
முருகா! பொய்ப்பொருளைத் தேடி அலையாமல், மெய்ப்பொருளை நாடி இருக்க அருள் புரிவாய்.
No comments:
Post a Comment