திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பருமன் உடையது, கூரிய கொம்பினை உடையது என்ற போதிலும், யானையானது, புலியின் ஊக்கத்தால் தாக்குற்றால், அதற்கு அஞ்சி நடுங்கும்" என்கின்றார் நாயனார்.
யானையானது பிற விலங்குகளைக் காட்டிலும் பெரிய உடம்பை உடையதாயும், தன்னை எதிர்த்தாரை, தனது கூரிய கொம்புகளால் குத்திக் கொல்லக் கூடியதாயும் இருந்தும், ஊக்கம் இல்லாமையால், ஊக்கம் மிகுந்த புலி ஒன்று, உருவத்தால் சிறியதாய் இருந்தும், கொம்புகள் இல்லாது இருந்தும், அதனைத் தாக்குகின்ற காலத்தில் அஞ்சும். அதுபோல, உள்ள ஊக்கம் இல்லாதவன், பிற வலிமைகளைப் பெற்றிருந்தாலும், பிறரிடத்தில் அஞ்சியே வாழ்வான் என்பது பிறிதுமொழிதல் அணியாகச் சொல்லப்பட்டது.
இதற்குத் திருக்குறள்...
பரியது, கூர்ங் கோட்டது ஆயினும், யானை
வெரூஉம் புலி தாக்குறின்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பரியது கூர்ங் கோட்டது ஆயினும் --- எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்;
யானை புலி தாக்குறின் வெரூஉம் --- யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
(பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினார் ஏகராய்த்
துங்க எறிபத்தர், சோமேசா! --- அங்கம்
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.”
இதன் பொருள்---
சோமேசா! அங்கம் பரியது - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினை உடையது, கூர்ங் கோட்டது ஆயினும் - அதுவுமே அன்றிக் கூரிய தந்தத்தையும் உடையதாயினும், யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்,
துங்கம் எறிபத்தர் - உயர்ந்த எறிபத்த நாயனார், ஏகராய் - தன்னந் தனியராய் இருந்து வைத்தும், வெம் கரியையும் பாகரையும் - சோழ அரசரது கொடிய யானையையும், யானைப் பாகரையும், முன் வீட்டினார் - முன்னே வெட்டி வீழ்த்தினார் ஆகலான் என்றவாறு.
எறிபத்த நாயனார் என்பார் கருவூரில், "திருவானிலை" என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் பசுபதீச்சுரன் பாத தாமரைகளையே பற்றாகக் கொண்டு அவனடியார்களுக்குத் தீங்கு செய்யும் கொடியரைக் கொன்றொழிக்க மழுப்படை ஏந்தி வாழ்கையில், ஒருநாள் சிவகாமியாண்டார் என்னும் அந்தணர் திருஆனிலை அடிகட்குத் திருப்பள்ளித்தாமம் கட்டிச் சாத்த கூடை நிறையக் கொண்டு வந்த பூக்களைப் புகழ்ச்சோழனது பட்டவர்த்தன யானை சிந்த, அதனால் அவர் மிக வருந்துவது கண்டு, யானை சென்ற வழி கேட்டறிந்து, ஓடிப்போய்த் தமது மழுப்படையால் யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்திப் பரிந்து வந்து எதிர்த்த பாகரையும் கொன்று நின்றார்.
இச்செய்தி அறிந்த சோழன் அங்கு வந்து தன் யானையையும் பாகரையும் கொன்றார் ஒரு சிவனடியார் என்பது உணர்ந்து, தான் ஒருவனே அருகில் வந்து, "யானை செய்த கொடுமை யாதோ?" என வினவ, நாயனார் நிகழ்ந்தபடி கூறக் கேட்டு மனம் புழுங்கி, "எனது யானை செய்த கொடுமைக்கு அதையும் பாகரையும் கொன்றமை போதாது. என்னையும் கொல்ல வேண்டும். மங்கல மழுவால் கொல்லுதல் வேண்டாம்" என்று தன் உடைவாளை நீட்டினான். "இவன் அன்பு இருந்தவாறு என்னே! இவனையோ நான் கொல்வது?" என்று நினைந்து, அவ் வாளை வாங்கி நாயனார் தமது கழுத்தில் பூட்ட, அரசன் அவர் கரத்தையும் வாளையும் பிடித்துக் கொண்டு தடுத்தான். அப்போது, "அன்பர்களே! உங்கள் பெருமையை உலகிற்கு அறிவிக்க வேண்டிச் சிவபெருமான் அப் பூக்களைச் சிதறும்படி திருவுள்ளம் பற்றினார்" என்று ஓர் அசரீரி (வானொலி) எழுந்தது. உடனே யானையும் பாகரும் உயிர்பெற்று எழுந்தார்கள். திருப்பூங்கூடையில் பூக்கள் நிரம்பின.
சிவகாமியாண்டார் மகிழ்ந்து தமது திருப்பணிமேல் சென்றார். சோழன் நாயனாரை அப் பட்டவர்த்தன யானை மீதேற்றி அரண்மனை கொண்டு சென்று உபசரித்தான். மேலும் நாயனார் தமது திருத்தொண்டு வழாது நடத்திக் கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவராயினார். உருவத்தால் பெரியதும், கூர்மையான தந்தங்களை உடையது மட்டுமல்லாமல், அரசனது பட்டத்து யானையை, உள்ளத்தில் ஊக்கமும் உறுதியும் மிக்க எறிபத்த நாயனார் வெட்டி வீழ்த்தினார்.
No comments:
Post a Comment