அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மெய்க்கூணைத் தேடி (பொது)
முருகா!
செஞ்சொல் புனை மாலை சிறந்திட அருள் தாராய்.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற் ...... பலகாலும்
வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற் ...... களையோதிக்
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
ரைப்போ லக்கற் ...... பழியாதுன்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற் ...... றருவாயே
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
முற்பால் வெற்பிற் ...... புனமானைப்
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச் ...... சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மெய்க்கு ஊணைத் தேடிப் பூமிக்கே
வித்தாரத்தில் ...... பலகாலும்
வெட்காமல், சேரிச் சோரர்க்கே
வித்து ஆசைச் சொற்- ...... களை ஓதி,
கைக் காணிக் கோணல் போதத்தா
ரைப் போலக் கற்பு ...... அழியாது, உன்
கற்பு ஊடு உற்றே, நல் தாளைப் பா-
டற்கே நல்சொல் ...... தருவாயே.
பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய்,
முற்பால் வெற்பில் ...... புனமானைப்
பொன் தோளில் சேர்கைக்காகப் பா-
தத் தாள் பற்றிப் ...... புகல்வோனே!
முக்கோணத் தானத்தாளைப் பால்
வைத்தார் முத்தச் ...... சிறியோனே!
முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!
முத்தா! முத்திப் ...... பெருமாளே.
பதவுரை
பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய் --- (வேடன், வேங்கை, செட்டி, கிழவன் ஆகிய) பொய்யான வேடங்களை விரும்பித் தரித்து, நாணத்தால் உடல் கோணி நின்று,
முற்பால் வெற்பில் --- முதுமலை ஆகிய வள்ளிமலையில்,
புன மானைப் பொன் தோளில் சேர்க்கைக்காக --- தினைப்புனத்தில் காவல் கொண்டு இருந்த மான் போன்றவளாகிய வள்ளநாயகியின் தோளைத் தழுவ ஆசைப்பட்டு,
பாதத் தாள் பற்றிப் புகல்வோனே --- அம்மையின் திருவடிகளைப் பற்றி, ஆசைமொழிகளைப் புகன்றவரே!
முக்கோண தானத்தாளைப் பால் வைத்தார் முத்தச் சிறியோனே --- முக்கோண வடிவமான சக்கரத்தில் அமைந்து விளங்கும் உமாதேவியைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டுவரான சிவபரம்பொருள் முத்தமிடும் இளம்பூரணரே!
முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!
முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்
என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே!
சுத்தா --- தூயவரே!
முத்தா --- பற்று அற்றவரே!
முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
மெய்க்கு ஊணைத் தேடி பூமிக்கே --- உடம்பைப் பேணுவதற்குத் தேவையான உணவுக்காக பூமியில் பொருளைத் தேடி உழன்று,
வித்தாரத்தில் --- விற்பன்னமாக,
பல காலும் வெட்காமல் --- பலகாலமும் நாணம் இல்லாமல்,
சேரிச் சோரர்க்கே வித்து ஆசைச் சொற்களை ஓதி --- பரத்தையர் சேரியில் வாழும் வஞ்சக உள்ளம் கொண்ட வேசியரைத் தேடி, அவரிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி,
கைக்காணிக் கோணல் போதத்தாரை போலக் கற்பு அழியாது --- பரத்தையர்களுக்குத் தாம் முன்பு வருந்தித் தேடிய பொருளைக் கொடுக்கும் கோணல் வழியில் செல்லும் அறிவீனரைப் போல அடியேன் ஒழுக்க நெறியில் பிறழாமல்,
உன் கற்பு ஊடு உற்றே --- தேவரீரை வழிபட்டு உய்யும் உள்ள உறுதியோடு,
நல் தாளைப் பாடற்கே நல் சொல் தருவாயே --- தேவரீரது சிறந்த திருவடிகளைப் பாடும்பொருட்டு செஞ்சொற்பொருளை உபதேசித்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
வேடனாகவும், வேங்கை மரமாகவும், வளையல் செட்டியாகவும், முதுகிழவன் ஆகவும் பொய்யான வேடங்களை விரும்பித் தரித்துக் கொண்டு நாணத்தால் உடல் கோணி நின்று, முதுமலை ஆகிய வள்ளிமலையில், தினைப்புனத்தில் காவல் கொண்டு இருந்த மான் போன்றவளாகிய வள்ளநாயகியின் தோளைத் தழுவ ஆசைப்பட்டு, அம்மையின் திருவடிகளைப் பற்றி, ஆசைமொழிகளைப் புகன்றவரே!
முக்கோண வடிவமான சக்கரத்தில் அமைந்து விளங்கும் உமாதேவியைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டுவரான சிவபரம்பொருள் முத்தமிடும் இளம்பூரணரே!
முத்தி நிலைக்கு அதிபரே! ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! தூயவரே! பற்று அற்றவரே! உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
உடம்பைப் பேணுவதற்குத் தேவையான உணவுக்காக பூமியில் பொருளைத் தேடி உழன்று, தேடிய பொருளைக் கொண்டு சுற்றம் தழுவி வாழாமல், விற்பன்னமாகப் பலகாலமும் நாணம் இல்லாமல், பரத்தையர் சேரியில் வாழும் வஞ்சக உள்ளம் கொண்ட வேசியரைத் தேடி, அவரிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி, பரத்தையர்களுக்குத் தாம் முன்பு வருந்தித் தேடிய பொருளைக் கொடுக்கும் கோணல் வழியில் செல்லும் அறிவீனரைப் போல அடியேன் ஒழுக்க நெறியில் பிறழாமல், தேவரீரை வழிபட்டு உய்யும் உள்ள உறுதியோடு தேவரீரது சிறந்த திருவடிகளைப் பாடு உய்யும்பொருட்டு செஞ்சொற்பொருளை உபதேசித்து அருள் புரிவீராக.
விரிவுரை
பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய்..... தாள் பற்றிப் புகல்வோனே ---
வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.
வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.
முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.
நாந்தகம் அனைய உண்கண்
நங்கை கேள், ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கு எல்லாம்
இறைவியாய் இருக்கும் நின்னைப்
பூந்தினை காக்க வைத்துப்
போயினார், புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்
அயன் படைத்திலன் கொல் என்றான். – கந்தபுராணம்
வார் இரும் கூந்தல் நல்லாய்,
மதி தளர்வேனுக்கு உன்தன்
பேரினை உரைத்தி, மற்று உன்
பேரினை உரையாய் என்னின்,
ஊரினை உரைத்தி, ஊரும்
உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச்
செல்வழி உரைத்தி என்றான். -- கந்தபுராணம்
மொழிஒன்று புகலாய் ஆயின்,
முறுவலும் புரியாய் ஆயின்,
விழிஒன்று நோக்காய் ஆயின்
விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்
வழி ஒன்று காட்டாய் ஆயின்,
மனமும் சற்று உருகாய் ஆயின்
பழி ஒன்று நின்பால் சூழும்,
பராமுகம் தவிர்தி என்றான். -- கந்தபுராணம்.
உலைப்படு மெழுகது என்ன
உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல
வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள்
கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ
அறுமுகன் ஆடல் எல்லாம். -- கந்தபுராணம்.
இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.
வனசரர் ஏங்க, வான முகடுஉற ஓங்கி, ஆசை
மயிலொடு பாங்கிமார்கள் ...... அருகாக
மயிலொடு மான்கள் சூழ, வளவரி வேங்கை ஆகி,
மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே! --தினமணி (திருப்புகழ்)
தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை
வேங்கை மரத்து எழிலைக் கொடு நிற்பவ! --- (கூந்தல்) திருப்புகழ்.
எல்லாம் வல்ல பரம்பொருளாகிய எம்பெருமான் வேங்கை மரமாய் நின்றதன் உண்மையைக் கந்தபுராணம் விளக்குமாறு காண்க.
ஆங்கு அது காலை தன்னில்,
அடி முதல் மறைகள் ஆக,
ஓங்கிய நடுவண் எல்லாம்
உயர் சிவநூல் அது ஆக,
பாங்கு அமர் கவடு முற்றும்
பல் கலை ஆக, தான் ஓர்
வேங்கையின் உருவம் ஆகி
வேல்படை வீரன் நின்றான். --- கந்தபுராணம்.
நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன். தாமதிக்காமல் வா" என்றார். என்னம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.
“குறவர் கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று,
குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குமர கோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.” --அறிவிலாப் பித்தர் (திருப்புகழ்)
“புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே” --கனமாய்எழுந்து (திருப்புகழ்)
“ஓடும் இனி என்று அவள் உரைத்தமொழி கேளா,
நீடுமகிழ்வு எய்தி அவண் நின்ற குமரேசன்
நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த
வேடம் அது கொண்டுவரும் வேடர் எதிர் சென்றான்.” --கந்தபுராணம்.
இனி வளையல் செட்டியாராகப் போய், ஒரு திருவிளையாடல் புரிந்தார் என்றும் வழக்கில் உள்ளது. கந்த புராணத்தில் இல்லை. அண்மையில் இருந்த கந்தப்பதேசிகர் இது குறித்துக் கூறி உள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்களிலும் இது குறித்துக் கூறப்பட்டு உள்ளது
“சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி என்று எத்தி வந்து, ஆடி நிர்த்தங்கள் புரி
சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ......எங்கள் கோவே! --தத்தை என்று (திருப்புகழ்)
“செட்டி என்று வன மேவி, இன்ப ரச
சத்தியின் செயலினாளை அன்பு உருக
தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே.” --கட்டிமுண்டக (திருப்புகழ்)
----------பட்டி வள்ளி
கைவளையல் ஏற்றி, இரு காலில் வளைந்து ஏற்றி,
மைவளையும் நெஞ்ச மயல் ஏற்றி --- வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு வியாபாரம் செய் செட்டி --- வெருட்டிஒரு
வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியும் குறச் செட்டி --- பாடா நல்
கீரனைப் பூதத்தால் கிரிக் குகையுள் கல்சிறை செய்து
ஓர் அறிய பாவை உகந்து அணைந்து --- கீரனுக்கு
விட்டுவழி காட்டிஇடும் வேளைண்மையாம் செட்டி,
ஆட்டில் உவந்து ஏறும் அன்னதான செட்டி --- ஈட்டுபுகழ்
தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி
நா வேந்தர்க்கே இன்பம் நல்குசெட்டி --- பூ ஏந்திக்
கண்டு பணிபவர்தம் காசு பறிக்கும் செட்டி
பண்டு அறுவர் ஊட்டு தனபால செட்டி --- தொண்டர்
மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
குதிரை மயிலாம் குமர செட்டி --- சதிருடனே
சீவபர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி
மூவர் வணங்கும் முருகப்ப செட்டி --- பாவனைக்கும்
அப்பாலுக்கு அப்பால் ஆம் ஆறுமுகச் செட்டி... --- தணிகை சந்நிதிமுறை.
வள்ளிநாயகியின் திருக்கையையும், திருவடியையும் பிடித்தது...
பாகு கனிமோழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா! --- சுவாமிமலைத் திருப்புகழ்.
“கனத்த மருப்பு இனக் கரி, நல்
கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக் குதலைச் சிறுக் குயிலைக்
கதித்த மறக் குலப் பதியில்
களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.” --- பொதுத் திருப்புகழ்.
“தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித்
தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.” --- திருப்புகழ்.
“கூன்ஏறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்புஅறிந்து அருகுஅணைத்து,உன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கஎனக்
குறையிரந்து அவள் தொண்டைவாய்த்
தேன்ஊறு கிளவிக்கு வாய்ஊறி நின்றவன்
செங்கீரை ஆடி அருளே.
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடி அருளே” --- குமரகுருபரர்
நல் தாளைப் பாடற்கே நல் சொல் தருவாயே ---
“இருள் நிறை அம்ஓதி மாலிகை
சருவி உறவான வேளையில்,
இழை கலைய, மாதரார் வழி
இன்புற்று அன்புற்று..... அழியாநீள்
இரவுபகல் மோகன் ஆகியெ,
படியில் மடியாமல், யானும்உன்
இணைஅடிகள் பாடி வாழ என்
நெஞ்சில் செஞ்சொல் ...... தருவாயே.”
என அடிகளார் பிறிதொரு திருப்புகழ்ப் பாடலிலும் இவ்வாறு வேண்டி உள்ளது அறிக. சொல்லில் இனிமையும் தன்மையும் மிகுதியான பொழுது அது செஞ்சொலாகின்றது. தமிழுக்கே உரிய தனிப் பெருமை செஞ்சொல். அருணகிரிநாதர் செந்தில் திருப்புகழில் நான்கு திசைகளைப் பற்றிக் கூற வருகின்றார். ஏனைய திசைகளை மேல்திசை கீழ்த்திசை வடதிசை என்று கூறினார். தென்திசையை மட்டும் பொதுவாகத் தென்திசை என்று கூறாமல் “செஞ்சொல் மாதிசை” என்று கூறினார். பெருமை மிகுந்த திசை என்றும் குறிப்பிட வேண்டி மாதிசை என்றார். செஞ்சொல் என்றால் தமிழ் என்றே பொருள். “செஞ்சொல் புனைமாலை சிறந்திட” என்கின்றார் கந்தர் அநுபூதியில்.
கருத்துரை
முருகா! செஞ்சொல் புனை மாலை சிறந்திட அருள் தாராய்.
No comments:
Post a Comment