திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 60 -- ஊக்கம் உடைமை
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "நீர் ஏற்றத்தின் அளவுக்கு மலர்த் தாளின் நீளம் இருக்கும். அதுபோலவே, மக்கள் தம்முடைய மன எழுச்சியின் ஏற்றத்திற்கு ஏற்ப அவர்தம் உயர்வு இருக்கும்" என்கின்றார் நாயனார்.
தாமரை முதலிய நீர்ப் பூக்களின் கொடிகளின் தாள்கள் எவ்வளவு ஆழ்ந்த நீரில் உள்ளனவோ, அந்த ஆழத்திற்குத் தக்கதாக, தாமரைத் தண்டுகளும் நீண்டு இருக்கும். அதுபோலவே, ஊக்கம் உடையவன் எவ்வளவு அதிகமாக ஊக்கம் கொண்டு முயல்கின்றானோ, அவ்வளவு அதிகமாக உயர்வு பெறுவான்.
"நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்" என்னும் ஔவைப் பிராட்டியின் அருள் வாக்கு இங்கு வைத்து எண்ணத் தக்கது.
இதற்குத் திருக்குறள்...
வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் --- நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்;
மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு --- அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
“பார்த்த குரவர் பணிமுயன்றார், கண்ணுதலார்
தீர்த்தத்து இயலும் திறம் நின்றார் --- நீர்த்தடத்து
வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.”
இதன் பொருள் ---
பார்த்த குரவர் - பிறவிக் குருடராய் இருந்து, பின் சிவபெருமான் அருளால் கண்பெற்ற பெரியவராகிய தண்டியடிகள் நாயனார். தண்டியடிகள் திருவாரூரில் திருக்குளத்தை அகலப்படுத்த முயன்றபோது, சமணர்கள் இடையூறு செய்யவே, பரமசிவன் அருளால் இடையூறு நீங்கி, நாயனாருடைய முயற்சி நிறைவேறியது.
தண்டியடிகள் நாயனார் வரலாறு
தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர். பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே இறைவனை வழிபடுவார். அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல்பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.
தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார். கயிற்றைத் தடவிக்கொண்டே போய் மண்ணை வெட்டுவார். அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.
இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள். அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை. உனக்குக் கண்தான் இல்லை. செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை எனது கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணுமாறு கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று இறைவனை இறைஞ்சினார். "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார். துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.
சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள். நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.
பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான். அவன், தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான். நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சபதத்தையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார். மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான். சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.
தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே! சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான். நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும். சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார். சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.
அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான். தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்பார் பாடியருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“ஏறிய ஓடக்கோல் இசைஞானச் செந்தமிழால்
ஆறு கடந்தார் தோணியார் மகனார், --- வீறுஅடங்கா
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. “
இதன் பொருள் ---
ஆன்மாக்களுக்குத் தோன்றாத் துணையாயிருந்து திருவருள் செய்யும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களைத் தரிசிக்கும் பெருவிருப்பு உடையராய்த் திருஞானசம்பந்தப் பிள்ளையார், கொட்டமே கமழும் கொள்ளம்பூதூருக்குச் சமீபமாக எழுந்தருளினார். அங்கே முள்ளிவாய்க்கரையை அடைந்தார். ஆறு மிகப் பெருக்கெடுத்து ஓடுதலால் ஓடக்கோல் நிலைக்கவில்லை. அதனால் ஓடக்காரர்கள் கரையிலே ஓடத்தை நிறுத்திவிட்டுப் போயினர். திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஓடத்திலே சிவனடியார்களை ஏற்றி நாவலமே கோலாகக் கொண்டு பதிகம்பாடி அதனைச் செலுத்த, ஓடம் மற்றக் கரையை அடைந்தது. திருத்தோணியப்பர் திருமகனாராகிய சம்பந்தர் சிவபெருமானைத் திருத்தொண்டர்களுடன் தரிசித்து இருந்தனர் என்பது வரலாறு.
நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள். அதுபோல் மக்களுடைய ஊக்கத்தினது அளவினதாம் அவர் உயர்ச்சி எனத் திருவள்ளுவ நாயனார் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் சொல்லி வைத்தது காண்க.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“நாள்களொடு கோள்இயக்கும் நற்பதவியைத் துருவன்
மூள்கருத்தால் பெற்றான், முருகேசா! --- நீள்பெருக்கின்
வெள்ளத்து அனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. “
இதன் பொருள் ---
முருகேசா - முருகப் பெருமானே, துருவன் - துருவனானவன், நாள்களொடு கோள் இயக்கும் நற்பதவியை - விண்மீன்களொடு ஒன்பது கோள்களை இயக்கும் நல்ல பதவியை, மூள் கருத்தால் பெற்றான் - தனக்கு உண்டாகிய உயர்ந்த கருத்தினாலே அடையப் பெற்றான். நீள் பெருக்கின் - நீண்ட பெருக்கினை உடையதாகிய, வெள்ளத்து அனையது மலர் நீட்டம் - நீரின் அளவா உள்ளது நீர்ப் பூக்களின் உயர்ச்சி, அதைப் போல, மாந்தர் தம் - மனிதர்களுடைய, உள்ளத்து அனையது உயர்வு - ஊக்கத்தின் அளவாகும் பெருமையும்.
துருவன் தான் கொண்டிருந்த உயர்ந்த கருத்தினாலே நாள்களையும் கோள்களையும் இயக்கும் உயர்ந்த பதவியைப் பெற்றான். மலர்களின் உயர்ச்சி நீரின் அளவினதாக இருக்கும். மனிதர்களுடைய பெருமை அவர்களுடைய முயற்சியின் அளவினதாக இருக்கும் என்பதாம்.
துருவன் கதை
உத்தானபாதன் என்னும் அரசனுக்குச் சுருதி சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தனர். மூத்தாள் சுருதி. இளையாள் சுநீதி. இருவருக்கும் உத்தமன், துருவன் என்னும் இரண்டு மக்கள் இருந்தனர். மூத்தாள் மகனாகிய உத்தமன் தந்தையின் மடியில் இருக்கும்போது இளையான் மகனாகிய துருவனுந் தந்தையின் மடியில் ஏறச் சென்றான். அதனைச் சுருதியாகிய மூத்தவள் தடுத்தாள். துருவன் சிறுவனாக இருந்தும் அதனைப் பொறாமல், தாயினிடத்திலே கூறி உடன்பாடு பெற்றுக்கொண்டு, எழு முனிவர்களிடம் போய் அவர்களுடைய அருளுரைப்படியே தவம் புரிந்தான். இந்திரனால் ஏவப்பட்ட பூதம் முதலியவைகட்குச் சிறிதும் அஞ்சாது நின்று நாள்களையும் கோள்களையும் பிணித்த உருளையை சுழற்றி விளங்கும் பெரும் பதவியைத் திருமாலால் பெற்றான். அதனால் தன்னுடைய தாயோடு மிகுந்த சிறப்பை அடைந்தான். உள்ளத்தின் ஊக்கத்தினாலேதான் இத்தகைய சிறந்த பேற்றைப் பெற்றான் துருவன்.
பின்வரும் தேவாரப் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த்துள்ளதை அறியலாம்...
“உள்ளம் உள்கி உகந்து சிவன்என்று
மெள்ள உள்க வினைகெடும், மெய்ம்மையே,
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.” --- அப்பர்.
இதன் பொருள் ---
உள்ளத்தால் தியானித்து, மகிழ்ந்து, "சிவன்" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே. சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார் பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக. உள்ளத்தில் ஊக்கத்தோடு இறைவழிபாடு செய்து வந்தால், வினைகள் கெடுவது உறுதி.
No comments:
Post a Comment