வயலூர் --- அரிமருகோனே நமோநம

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 அரி மருகோனே (வயலூர்)

முருகா!

உபதேசப் பொருளாலே, உன்னை நான் நினைந்து

அருள் பெறவேண்டும்.

  

தனதன தானான தானந் தனதன தானான தானந்

     தனதன தானான தானந் ...... தனதான

  

அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்

     றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்

 

அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்

     றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை

 

பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்

     பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்

 

பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்

     பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்

 

கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்

     கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்

 

கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்

     களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்

 

குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்

     குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா

 

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்

     குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

அரி மருகோனே! நமோ என்று, றுதி இலானே! நமோ என்று,

     அறுமுக வேளே! நமோ என்று, ...... உனபாதம்

 

அரகர சேயே! நமோ என்று, மையவர் வாழ்வே! நமோ என்று,

     அருண சொரூபா! நமோ என்று, ...... உளது ஆசை.

 

பரிபுர பாதா! சுரேசன் தருமகள் நாதா! அராவின்

     பகை மயில் வேலாயுத! ஆடம் ...... பர! நாளும்

 

பகர்தல் இலா தாளை, ஏதும் சிலது அறியா எழை, நான்உன்

     பதிபசு பாச உபதேசம் ...... பெறவேணும்.

 

கர தல சூலாயுதா! முன் சலபதி போல் ஆரவாரம்

     கடின சுரா பான சாமுண் ...... டியும் ஆட,

 

கரி பரி மேல் ஏறுவானும், செயசெய சேனாபதீ என்,

     களமிசை தான் ஏறியே அஞ் ...... சிய சூரன்

 

குரல்விட, நாய்பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம்

     குடல்கொளவே பூசல் ஆடும் ...... பலதோளா!

 

குடதிசை வார் ஆழி போலும், படர் நதி காவேரி சூழும்

     குளிர் வயலூர் ஆர மேவும் ...... பெருமாளே.

  

பதவுரை

 

         கரதல சூலாயுதா --- திருக்கையில் சூலாயுதத்தை ஏந்தியவரே!

 

         முன் சலபதி போல் ஆரவாரம் --- முன்னொரு நாளில்  கடல் போலப் பேரோலி செய்து,

 

         கடின சுராபான சாமுண்டியும் ஆட --- கொடிய கள்ளைக் குடித்தல் உடைய துர்க்கை ஆட,

 

         கரிபரி மேல் ஏறுவானும் செயசெய சேனா பதீயென் --- ஐராவதம் என்னும் யானையை வாகனமாகக் கொண்ட இந்திரனும், ஜெய! ஜெய! சேனாபதியே! என்று ஆரவாரம் செய்யவும்,

 

         களமிசை தான் ஏறியே --- போர்க்களத்தில் தேவரீர் புகுந்ததால்

 

         அஞ்சிய சூரன் குரல்விட --- அஞ்சி நடுங்கிய சூரபதுமன் கூக்குரலிடவும்,

 

         நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல்கொளவே --- நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் போர்க்களத்தில் இறந்துபட்ட பிணங்களின் குடலைப் பற்றி இழுத்துத் தின்னவும்,

 

         பூசலாடும் பல தோளா --- போர் புரிந்த வல்லமை பொருந்திய திருத்தோள்களை உடையவரே!

 

         குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழும் --- மேற்குத் திசையில் இருந்து பெரிய கடல் போன்று பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்துள்ள,

 

         குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே --- குளிர்ச்சி பொருந்திய வயலூரில் திருவுள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

         உன பாதம் --- தேவரீரது திருவடிகளில் விழுந்து

 

         அரிமருகோனே நமோ என்று --- திருமாலின் மருமகரே, உமக்கு வணக்கம் என்றும்,

 

         அறுதி இலானே நமோ என்று --- முடிவு இல்லாதவரே! உமக்கு வணக்கம் என்றும்,

 

         அறுமுக வேளே நமோ என்று --- ஆறுமுகப் பரம்பொருளே! உமக்கு வணக்கம் என்றும்,

 

         அரகர சேயே நமோ என்று --- உயிர்களின் பாவம் தீர்க்கும் சிவபெருமான் திருமளனே! உமக்கு வணக்கம் என்றும், 

 

         இமையவர் வாழ்வே நமோ என்று --- தேவர்களின்  வாழ்வாக உள்ள செல்வமே! உமக்கு வணக்கம் என்றும்,

 

         அருண சொரூபா நமோ என்று --- செம்மேனி சொரூபரே! உமக்கு வணக்கம் என்றும்,

 

         உளது ஆசை --- பலவிதங்களிலும் உம்மைத் துதித்திப் போற்ற எனக்கு ஆசை உள்ளது.

 

         பரிபுர பாதா --- வெற்றிச் சிலம்பு அணிந்த திருப்பாதங்களை உடையவரே!

 

         சுரேசன் தரு மகள் நாதா --- தேவேந்திரன் மகள்  ஆகிய தேவயானையின் தலைவரே!

 

         அராவின் பகை மயில் வேலாயுத ஆடம்பர --- பாம்பின் பகையான மயில் மீது அமர்ந்து, வேலாயுதத்தைத் திருக்கையில் தாங்கி, பல வாத்தியங்கள் முழங்க ஆடம்பரமாக வருபவரே!

 

         நாளும் பகர்தல் இலா தாளை --- நாளும் நினைத்துப் போற்றிப் புகழாத தேவரீரது திருவடிகளைப் பற்றி

 

         ஏதும் சிலது அறியா ஏழை நான் --- சிறிதளவும் ஏதும் அறியாத ஏழையாகிய நான், 

 

         உன் பதிபசு பாச உபதேசம் பெறவேணும் --- உமது திருவாயால், பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உபதேசம் பெற அருள் புரியவேண்டும்.

 

 

பொழிப்புரை

 

 

         திருக்கையில் சூலாயுதத்தை ஏந்தியவரே!

 

         முன்னொரு நாளில்  கடல் போலப் பேரோலி செய்து,கொடிய கள்ளைக் குடித்தல் உடைய துர்க்கை ஆடஐராவதம் என்னும் யானையை வாகனமாகக் கொண்ட இந்திரனும், ஜெய! ஜெய! சேனாபதியே! என்று ஆரவாரம் செய்யவும், போர்க்களத்தில் தேவரீர் புகுந்ததால் அஞ்சி நடுங்கிய சூரபதுமன் கூக்குரலிடவும்,  நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் போர்க்களத்தில் இறந்துபட்ட பிணங்களின் குடலைப் பற்றி இழுத்துத் தின்னவும், போர் புரிந்த வல்லமை பொருந்திய திருத்தோள்களை உடையவரே!

 

         மேற்குத் திசையில் இருந்து பெரிய கடல் போன்று பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்துள்ள, குளிர்ச்சி பொருந்திய வயலூரில் திருவுள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

         தேவரீரது திருவடிகளைப் பணிந்து, திருமாலின் மருமகரே, உமக்கு வணக்கம் என்றும்,  முடிவு இல்லாத மூர்த்தியே! உமக்கு வணக்கம் என்றும், ஆறுமுகப் பரம்பொருளே! உமக்கு வணக்கம் என்றும்,  உயிர்களின் பாவம் தீர்க்கும் சிவபெருமான் திருமளனே! உமக்கு வணக்கம் என்றும்,  தேவர்களின்  வாழ்வாக உள்ள செல்வமே! உமக்கு வணக்கம் என்றும், செம்மேனி சொரூபரே! உமக்கு வணக்கம் என்றும், பலவிதங்களிலும் உம்மைத் துதித்திப் போற்ற எனக்கு ஆசை உள்ளது.  

 

     வெற்றிச் சிலம்பு அணிந்த திருப்பாதங்களை உடையவரே!

      தேவேந்திரன் மகள் ஆகிய தேவயானையின் தலைவரே!

       பாம்பின் பகையான மயில் மீது அமர்ந்து, வேலாயுதத்தைத் திருக்கையில் தாங்கி, பல வாத்தியங்கள் முழங்க ஆடம்பரமாக வருபவரே! 

        நாளும் நினைத்துப் போற்றிப் புகழும்படி, தேவரீரது திருவடிப் பெருமைகளைப் பற்றி,  சிறிதளவும் ஏதும் அறியாத ஏழையாகிய நான், உமது திருவாயால், பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உபதேசம் பெற அருள் புரியவேண்டும். 

 

விரிவுரை

 

அருண சொரூபா நமோ ---

 

அருணம் --- செம்மை, சிவப்பு.

 

"செய்யன், சிவந்த ஆடையன்" என்பது திருமுருகாற்றுப்படை.

 

"செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே" என்று அடிகளார் திருத்தணிகைத் திருப்புகழில் ஓதியது காண்க.

 

"முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே” எனக் கந்தர் அநுபூதி அருள்வதும் காச்க.

 

உளது ஆசை ---

 

இறைவனை வணங்கி ஈடேற வேண்டும் என்றுதான் உயிருக்கு ஆசை. இருந்தாலும், புலன்களின் வசப்பட்டு, இறைவனை மறந்து, உலகியலில் உழல்வது உயிரின் இயல்பு. மழைவிட்டும் தூவானம் விடாத நிலை இது.

 

உழைஇட்ட விழிமடவார் உறவுவிட்டும்,

     வெகுளிவிட்டும், உலக வாழ்வில்

பிழைவிட்டும், இன்னம்இன்னம் ஆசைவிடாது

     அலக்கழியப் பெற்றேன்! அந்தோ!

தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீள்

     நெறியே! என் தன்மை யெல்லாம்

மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை

     யாய் இருந்த வண்மை தானே. --- தண்டலையார் சதகம்.

 

இதன் பதவுரை ---

 

தழையிட்ட கொன்றை புனை தண்டலை நீள் நெறியே --- செழிப்புடைய கொன்றைமலர் அணிந்த  தண்டலையில்  எழுந்தருளிய நீள்நெறி நாதரே!, உழை இட்ட விழி மடவார் உறவு விட்டும் --- மானின் கண்களைப் போன்ற கண்களையுடைய  பெண்களின் நட்பை விட்டும், வெகுளி விட்டும் --- சீற்றத்தை மாற்றிக்கொண்டும், உலக வாழ்வில் பிழைவிட்டும் --- உலக  வாழ்க்கையில் நேரும் பிழைகளைத் திருத்திக்கொண்டும், இன்னம் இன்னம் ஆசைவிடாது --- மேலும் மேலும் பற்றுவிடாமல், அலக்கழியப் பெற்றேன் --- துன்பப் படுகிறேன், அந்தோ --- ஐயோ!, என் தன்மை எல்லாம் --- என்னுடைய இயற்கை எல்லாம், மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய் --- மழை விலகியும் தூவானம், விடாமல், இருந்த வண்ணம் தான் ---இருந்த அழகுதான்.

 

சுரேசன் தரு மகள் நாதா ---

 

சுரர்களுக்கு ஈசன் சுரேசன். சுரர் — தேவர். தேவர்கள் தலைவனான இந்திரன் மகளாகிய தேவயானை அம்மையாரின் மணவாளர் முருகப் பெருமான்.

 

பதிபசு பாச உபதேசம் பெறவேணும் ---

 

பதி, பசு, பாசம் என்பன முப்பொருள்கள். முப்பொருள் உபதேசத்தை, முருகப் பெருமான் குருநாதனாக எழுந்தருளி அருள் புரியவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

 

பதி --- இறைவன்,  பசு - உயிர். பாசம் --- உயிர்களைப் பற்றி உள்ள அறியாமை.

 

பதியாகிய இறைவன் உள்பொருள் என்பதற்குப் பிரமாணம், பதியின் இலக்கணம். பசு என்னும் உயிர்க்குப் பிரமாணம், அதன் இலக்கணம். பாசம் என்பதற்குப் பிரமாணம், அதன் இலக்கணம். இவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

 

பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி, திருமந்திரம் சுருக்கமாக,

 

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்,

பதியினைப் போல்பசு பாசம் அனாதி,

பதியினைச் சென்று அணுகா பசு பாசம்,

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.

 

என்று அறிவிக்கும்.

 

இதன் பொருள் ---

 

(பதி ஒன்றுதனே என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமே அல்லாமல், அவை பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும். அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றி நில்லாது விட்டு நீங்கும். என்று அருளிச்செய்தார்.

 

இறைவனைப் பாசஞானத்தாலும், பசுஞானத்தாலும் அறிய முடியாது. பதிஞானம் ஒன்றாலேயே அறிந்து அணுகமுடியும். இதை, குருமுகமாக அறிந்து உய்தல் வேண்டும்.

 

உடல், கருவி, உலகம், நுகர் பொருள்கள் ஆகியவை மாயையாகிய பாசப் பொருள்கள். பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகப் பொருள்களை அறியும் அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும்.

 

கண்களுக்கு விளக்குப் போலக் கருவிகள் உலகப் பொருள்களை அறிவதற்குத் துணை செய்கின்றன. அக்கருவிகளே அறிவதில்லை. கருவிகளுக்கு வேறாக அறியும் தன்மையுடைய உயிர் உள்ளது. அவ்வுயிரால் அறியும் அறிவு உயிர் அறிவு அல்லது பசுஞானம் எனப்படும்.

 

பதியைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்பெறும் திருவருள் ஞானமே பதிஞானம் அல்லது சிவஞானம் எனப்படும்.

 

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்

         பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே

நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத

         நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்

ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தே ராம்என்று

         அறிந்து அகல அந்நிலையே ஆகும் பின்னும்

ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க

         உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனமெலாம் ஓட.

 

என்பது சிவஞானசித்தியார்.

 

         சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.

 

கரதல சூலாயுதா ---

 

முருகப் பெருமான் திருக்கையில் சூலாயுதத்தை ஏந்தியவர் என்பதை, "காலனார் வெங்கொடும்" எனத் தொடங்கும் திருப்புகழ் வாயிலாக அறியலாம்.

 

சலபதி போல் ஆரவாரம் ---

 

சலபதி --- கடல்.

 

சுராபான சாமுண்டியும் ஆட ---

 

சுராபானம் என்பது கள்ளைக் குறிக்கும்.

 

சாமுண்டி --- துர்க்கை.

 

நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல்கொளவே ---

 

கோமாயு --- நரி.

 

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ---

 

குடதிசை --- மேற்குத் திசை. மேற்குத் திசையில் இருந்து காவிரி ஆறு பிறக்கின்ற பகுதிக்கு, குடகு என்று பயர் வந்தது.

 

ஆழி --- கடல். வாராழி --- பெரிய கடல். காவிரி ஆறு கடல் போல் பரந்து உள்ளது என்பதை,

 

"திரைக்கடல் பொரு காவிரி மாநதி பெருக்கெடுத்துமெ பாய், வள நீர்பொலி செழித்த நெல், செந்நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ் முருகா" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளதை அறிக.

 

"கடல் போல் காவேரி" எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருப்பதையும் அறிக.

 

குலவெம் சிலையான் மதின்மூன்று எரித்த

     கொல்ஏறு உடைஅண்ணல்

கலவமயிலும் குயிலும்பயிலும்

     கடல்போல் காவேரி

நலம் அஞ்சுஉடைய நறுமாங்கனிகள்

     குதிகொண்டு எதிர் உந்திப்

பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும்

     பழன நகராரே.              --- திருஞானசம்பந்தர்.

 

இதன் பொழிப்புரை ---

 

தோகைகளை உடைய மயில்கள், குயில்கள் வாழ்வதும், கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையில் சேர்ப்பதும் ஆகிய திருப்பழனநகர் இறைவர், உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றை உடைய அண்ணல் ஆவார்.

 

கருத்துரை

 

முருகா! உபதேசப் பொருளாலே, உன்னை நான் நினைந்து அருள் பெறவேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...