ஆத்திசூடி --- 17. ஞயம்பட உரை

 

 

                                                    17. ஞயம்பட உரை.

 

(பதவுரை) ஞயம்பட --- இனிமையுண்டாக, உரை --- பேசு.

 

(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு (விருப்பம் இல்லாதவர்களுக்கும் கூட) இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.

 

     நயம் என்பதன் போலி "ஞயம்"

 

     இனியவை கூறல் என்னும் ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் வைத்துக் காட்டினார்.

 

         நயம் --- இன்பம், அருள், மகிழ்ச்சி, விருப்பம், நன்மை, மேன்மை, பத்தி, நுண்மை.

 

         நயம் பேசுதல் --- மகிழப் பேசுதல், இனிமையாய்ப் பேசுதல்.

 

     நயமாகப் பேசுதல் என்பது பயனுள்ளதாகப் பேசுதலைக் குறிக்கும் என்பது, "நயன் இலன் என்பது சொல்லும், பயன் இல பாரித்து உரைக்கும் உரை" என்னும் திருக்குறளால் விளங்கும். இதன் காரணம், "பயன் இல பல்லார்முன் சொல்லல் நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது" என்னும் திருக்குறளால் விளங்கும். ஒருவன் பயனற்ற சொற்களை விரித்துக் கூறும் உரையானது, அவன் நன்மை இல்லாதவன் என்பதை எடுத்துக் காட்டும். பயனற்ற சொற்களைப் பலர் முன் பேசுதல், தன்னை நேசித்தவரிடத்தில் நன்மை இல்லாத செயல்களைச் செய்வதை விடத் தீமையானது. எனவே, நயம்படப் பேசுதலின் இன்றியமையாமை விளங்கும்.

 

     "வெட்கென்றார் வெஞ்சொலால் இன்புறுவார்" என்கின்றது "நான்மணிக்கடிகை". அறிவிலாதவர், பிறரைக் கொடுமைப்படுத்தும் சொற்களையே சொல்லிச் சொல்லி இன்புறுவர். அவருடைய நாக்கே, அவரது நல்ல நண்பரை அவரிடம் இருந்து பிரித்து விடும். "நா அன்றோ நட்பு அறுக்கும், தேற்றமில் பேதை விடும் அன்றோ வீங்கிப் பிணிப்பின்" என்று நான்மணிக்கடிகை கூறுவதால், பதறிப் பேசுகின்ற நாக்குத் தான் நல்ல நட்பினை அறுக்கக் கூடியது. நல்ல சொற்களைப் பேசுமாறு அறிவில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தினால், நல்ல செயல்களைச் செய்வதைக் கைவிட்டுவிடுவார்கள்.

 

     எனவே, கேட்பவர்க்கு விருப்பம் உண்டாகும்படியாக இனிமையாகப் பேசுதல் வேண்டும். "வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும்" என்று "நல்வழி" என்னு் நூலில் ஔவையார் கூறுவதைக் காணலாம்.

 

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில்

பட்டு உருவுங் கோல்பஞ்சில் பாயாது --- நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.                   --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது --- (வலிமை மிக்கதும் உருவத்தில் பெரியதும் ஆன யானையின் மேலே பட்டு உருவும் அம்பானது, மென்மையான பஞ்சின் மேலே பாயாது; நெட்டு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப்பாறை --- நீண்ட இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கல் பாறையானது, பசு மரத்தின் வேருக்கு நெக்கு விடும் --- பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்து போகும்; (அது போன்றுதான்) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் --- கடும்சொற்கள் இனியசொற்களை வெல்ல மாட்டாவாகும். (இனிய சொற்களே வெல்லும்)

 

     கடல் நீரானது குளிர்ந்த ஒளிக் கதிர்களை உடைய சந்திரனின் வருகையினால் பொங்கும். வெப்பம் பொருந்திய கிரணங்களை உடைய சூரியனின் வருகையினால் பொங்காது. அது போலவே, பெரிய கடலால் சூழப்பட்டு உள்ள, இந்தப் பரந்த உலகத்தில் உள்ளவர்கள் யாரும் இனிய சொல்லைக் கேட்டே மகிழ்வார்கள். அல்லாது, கடும் சொல்லினால் எக்காலத்தும் மகிழமாட்டார்கள் என்கின்றார் "கற்பனைக் களஞ்சியம்" துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பின்வரும் பாடலில்,

 

இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே --- பொன்செய்

அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால், தண் என்

கதிர் வரவால் பொங்கும் கடல்.         --- நன்னெறி.

 

     மென்மையான குரலுடன் இனிமையாகக் கூவுகின்ற குயிலானது இந்த உலகத்தில் உள்ளவர்க்கு எதை உதவியது? எதுவும் இல்லை. அருவருக்கும்படி கத்துகின்ற கழுதையானது யாருக்கு, என்ன கெடுதலைச் செய்தது? ஒன்றும் இல்லை. அவ்வாறு இருக்க, குயிலின் குரலை மட்டும் இந்த உலகம் விரும்பிக் கேட்பது ஏன்? என்றால், அதன் இனிய ஓசையினால் தான். அதுபோலவே, இனிய சொல்லைக் கேட்டு இந்த உலகம் மகிழ்கின்றது. கடும்சொல் பேசுபவரை வெறுக்கின்றது.

 

     ஒருவருக்கு ஒரு பொருளை ஈதல் என்பது இயலாது என்றால், அது ஒருவருடைய வறுமை நிலையைக் காட்டும். வறுமை கொடிதுதான். இனிய சொல்லைக் கூறுவதிலும் வறுமை உண்டானால், அது மிக மிகக் கொடுமையானது என்கின்றார் குமரகுருபர அடிகள்..

 

"ஈகை அரிது எனினும், இன்சொலினும் நல்கூர்தல்,

ஓஓ கொடிது கொடிது அம்மா! --- நா கொன்று

தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட்டு இடின்,மற்று

ஆஆ இவர் என் செய்வார்.         --- நீதிநெறி விளக்கம்.

 

     இன்சொல்லைக் கூறுவதிலும் வறுமை ஏன் உண்டானது? என்றால், அவன் செய்த தீவினையின் பயன். செய்த தீவினை என்னும் கம்மாளனால், அவனுடைய வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டு, நாக்கு சிதைக்கப்பட்டு உள்ளது. அவன் என்ன செய்வான்?

 

     காக்கையையும் அதனைப் போலவே இருக்கும் கரிய குயிலையும் இனிமை மிகுந்த இசைக் குரலால் அல்லாமல், உருவத்தினால் அவற்றின் வேறுபாட்டை அறிய முடியுமோ?  எப்படி உருவத்தால் அறியமுடியாதோ, அது போலவே, கற்ற பெரியோர்களையும் அங்ஙனம் கல்லாத மற்றவர்களையும் அவரவர்கள் பேசும் பேச்சின் இனிமையினால் அல்லாமல் உடலழகினைக் கொண்டு அறிய முடியாது என்கின்றது பின்வரும் பாடல்...

 

வாக்குநயத் தால்அன்றி கற்றவரை மற்றவரை

ஆக்கை நயத்தால் அறியல் ஆகாதே, - காக்கையொடு

நீலச் சிறுகுயிலை நீடுஇசையால் அன்றியே

கோலத்து அறிவருமோ கூறு.             --- நீதிவெண்பா.

 

     ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்ய இயலாது போனாலும், இனிய சொல்லைக் கூறுவது, இருபாலும் நன்மை தரும். இது, அறத்தின்பால் பட்டது, என்பதால், "யாவர்க்கும் ஆன் பிறர்க்கு இன்னுரை தானே" என்று முடித்தார், நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயானர்.

 

     அரிய செய்திகளை எல்லாம் உள்ளட்டக்கி, நமது பெரிய பாட்டியார் சுருக்கமாக "ஞயம்பட உரை" என்று அருளிச் செய்தார்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...