கால் மூடர், அரை மூடர், முழுமூடர் யார்?

 

 

கால் மூடர், அரை மூடர் யார்? முழுமூடர் யார்?

-----

      உயிர்கள் அனைத்திற்கும் அந்தந்த இனத்திற்கு ஏற்ற அறிவு உண்டு. எனவேதான், உயிர்களை ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை என்று பகுத்து வைத்தார்கள் நமது முன்னோர். ஒர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிர்களுக்கு உள்ளவை புலன் அறிவு ஆகும். அந்த அறிவானது தனது தேவையை அறிந்து உயிர் வாழத் தகுந்ததாகவே அமைந்தது. உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது, பார்த்து அறிவது, கேட்டு அறிவது ஆகியவை ஐந்து அறிவுகள். 

 

ஒன்று அறிவு அதுவே உற்று அறிவதுவே,

இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே,

மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே,

நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே,

ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே,

ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனனே,

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே....

 

புல்லும் மரனும் ஓர் அறிவினவே,

நந்தும் முரலும் ஈர் அறிவினவே,

சிதலும் எறும்பும் மூ அறிவினவே,

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே,

மாவும் மாக்களும் ஐ அறிவினவே,

மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே....

 

என்றது ஒல்காப் புகழ் பெற்ற "தொல்காப்பியம்" மரபியலில்.

 

     புல், செடி, கொடி, மரம், மலை முதலியவை உற்று அறிவது ஆகிய ஓர் அறிவினை உடையவை.

 

     சங்கு, சிப்பி, நத்தை முதலியவை, உற்று அறியும் அறிவோடு, சுவைத்து அறிவது ஆகிய இரண்டு அறிவுகளை உடையவை.

 

     செல், எறும்பு முதலியவை, உற்று அறியும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு ஆகிய இரண்டோடு, மோந்து அறிவது என மூன்று அறிவுகளை உடையவை.

 

     நண்டு, தும்பி முதலியவை, உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது என்னும் மூன்று அறிவுகளோடு, கண்டு அறிவது என்னும் நான்காவது அறிவையும் உடையவை.

 

     விலங்குகளும், மக்களில் பகுத்தறிவு இல்லாதவரும், உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது, கண்டு அறிவது என்னும் நான்கு அறிவுகளோடு கேட்டு அறிவது என்னும் ஐந்தாவது அறிவையும் உடையவை. மாக்கள் என்பது, மனித உடம்பை எடுத்து, மன அறிவாகிய பகுத்துணர்வு இல்லாமல் விலங்குபோல் தமது தேவைக்காக மட்டுமே வாழ்பவர்கள்.

 

     தக்கது இது, தகாதது இது என்று பகுத்து அறிந்து, தனக்குத் தக்கதைப் பிறர்க்கும் புரிந்து, தனக்குத் தகாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமல் விடுத்தல் "மன அறிவு" என்னும் "ஆறாவது அறிவு" ஆகும். ஆறாவது அறிவு இருந்தால் அவன் மனிதன். அந்த அறிவு விளக்கம் பெறவேண்டும். அறிவு விளக்கம் பெறுவதற்காகவே இந்த உடம்பு வந்தது.

 

     எனவே, அறிவு விளக்கம் பெறுவதற்காக, பள்ளியில் பயிலத் தொடங்குகின்றோம். ஓரளவுக்கு பிழைப்பு நடத்தும் வல்லமை பெற்ற பிறகு கல்வி கற்பதை நிறுத்திக் கொண்டு, பிழைப்பு நடத்துவதில் நாட்டம் கொள்கின்றோம். அறிவுக்கு எல்லை இல்லை என்பதை அறிதல் வேண்டும். "அறிதோறும் அறியாமை கண்டற்றால்" என்றார் நாயனார். அறிவின் எல்லையானது, நூல்களைப் பயிலப் பயில விரிந்துகொண்டே செல்லும். எனவே, "கற்றனைத்து ஊறும் அறிவு" என்றும் தெளிவித்தார் நாயனார். "என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு?" என்று ஒரு வியப்புக் குறிப்புடன் கூடிய வினாவையும் திருவள்ளுவ நாயனார் எழுப்பினார். சாகும் வரையில் கூட நூல்களைக் கற்காமல் வாழ்நாளை வீணாக்குகின்றவர்களைப் பார்த்துச் சொன்னது மட்டுமல்ல, சாகும் வரையிலும் கூட நூல்களைப் பயிலுவதை விட்டுவிடாமல் அறிவு விளக்கத்தைப் பெற்றுக் கொண்டே இருத்தல் வேண்டும் என்று நாயனார் அறிவுறுத்தினார் என்று கொள்ளுதல் சிறப்பு.

 

     அறிவு விளக்கமானது, வாழ்வியலுக்கு மட்டுமல்லாது அருளியலுக்கும் துணை புரியும். உலகியல் செல்வத்தை மட்டும் காட்டாது, அருளியல் செல்வத்தின் சிறப்பையும் உணர்த்த, திருவள்ளுவ நாயனார், "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்" என்று காட்டி, பொருட்செல்வத்தைப் பற்றிக் கூறும்போது, அது, "பூரியார் கண்ணும் உள" (பொருட் செல்வமானது கீழ்மக்களிடமும் உள்ளது) என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

         அறிவு விளக்கத்தைப் பெற, அறிவு நூல்களைப் பயிலுவதோடு மட்டுமல்லாமல், கற்றறிவு பெற்ற நல்லாரோடு கூடி இருத்தல் வேண்டும். அவ்வாறு பெற்ற அறிவைக் கொண்டு, அதன் வழியில் ஒழுகுதல் வேண்டும் என்பதால் "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று சொல்லப்பட்டது. "முயற்சி திருவினை ஆக்கும்" என்பதால், அறிவு பெறுவதற்கு முயற்சி இருத்தல் வேண்டும். "முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்" என்றதற்கேற்ப, முயற்சி இல்லாமையால், அறியாமையே உயிரினது அறிவில் மிகுந்து உள்ளது. உயிரின் இயற்கை அறிவானது விளக்கம் பெற ஒட்டாதபடி, அறியாமையானது மூடி இருப்பதால், "மூடத்தனம்" என்று சொல்லப்பட்டது. "பேதை" என்றால் அறிவில்லாதவன் என்று பொருள். அவ்வாறே "மூடன்" என்றாலும் அறிவில்லாதவன் என்று பொருள்.

 

     அறிவில்லாத மூடர்களை வகைப்படுத்தி, முழுமூடர் யார் என்று தெரிவிக்கின்றது "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல்...

 

பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்

     பிழைபுறம் சொ(ல்)லும் மூடரும்,

  பெரியோர்கள் சபையிலே முகடுஏறி, வந்தது

     பிதற்றிடும் பெரு மூடரும்,

 

பண்புற்ற சுற்றம் சிரிக்கவே இழிவான

     பழிதொழில் செய்திடும் மூடரும்,

  பற்றற்ற பேர்க்கு முன் பிணைநின்று, பின்புபோய்ப்

     பரிதவித்திடு மூடரும்,

 

கண்கெட்ட மாடுஎன்ன ஓடி, இரவலர் மீது

     காய்ந்து வீழ்ந்திடு மூடரும்,

  கற்று அறிவி(ல்)லாத முழு மூடருக்கு இவர்எலாம்

     கால்மூடர் அரைமூடர் காண்,

 

அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!                          --- அறப்பளீசுர சதகம்.

 

இதன் பொருள் ---

 

     அண்கற்ற நாவலர்க்காகவே தூது போம் ஐயனே --- உன்னை அடுத்து இருப்பது ஒன்றையே அறிந்து இருந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையாரிடம் தூது சென்ற தலைவனே!, அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- அருமை மதவேள் என்பான், எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     பெண் புத்தி கேட்கின்ற மூடரும் --- (காம வயப்பட்டு நின்று) பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அறிவில்லாதவரும்,

 

     தந்தை தாய் பிழை புறம் சொலும் மூடரும் --- தந்தை தாய் செய்யும் குற்றத்தை வெளியிலே சொல்லுகின்ற அறிவு இல்லாதவரும்,

 

     பெரியோர்கள் சபையிலே முகடு ஏறி வந்தது பிதற்றிடும் பெரு மூடரும் --- சான்றோர் வீற்றிருக்கும் சபையிலே மேடை ஏறி நின்று, வாய்க்கு வந்ததைப் பிதற்றுகின்ற பெருத்த மூடரும்,

 

     பண்பு உற்ற சுற்றம் சிரிக்க இழிவான பழிதொழில் செய்திடும் மூடரும் --- நற்பண்புகளை உடைய உறவினர் சிரித்து இகழுமாறு இழிந்த பழிப்புக்கு இடமான செயல்களைப் புரியம் மூடரும்

 

     பற்று அற்ற பேர்க்கு முன் பிணை நின்று பின்பு போய்ப் பரிதவித்திடும் மூடரும் --- எந்த ஆதரவும் இல்லாதவர்களுக்கு முதலில் ஆராயாமல் பிணையாகச் சென்று, பிறகு வருந்துகின்ற மூடரும்,

 

     கண் கெட்ட மாடு என்ன ஓடி இரவலர் மீது காய்ந்து வீழ்ந்திடும் மூடரும் --- கண் இல்லாத குருட்டு மாட்டைபோல ஓடி, இல்லை என்று வந்து இரந்தவர் மேல் சீறி விழுகின்ற மூடரும்,

 

     இவர் எலாம் --- ஆகிய இவர்கள் யாவரும் மூடர்களே. ஆனாலும்,

 

     கற்று அறிவிலாத முழு மூடருக்குக் கால்மூடர் அரைமூடர் --- அறிவு நூல்களைக் கற்று, அவற்றின் பொருளை உணர்ந்து, அவற்றின்படி நடக்கும் அறிவு இல்லாதவர்களே முழுமையான மூடர்கள். இவர்களைப் பார்க்க, மேலே குறித்தோர் யாவரும் கால் மூடரும் அரை மூடரும் ஆவர்.

 

     கருத்து --- "பெண் புத்தி கேட்கின்ற மூடர்" என்றது, காம மயக்கத்தை உண்டு பண்ணுகின்ற பெண்கள் கூறும் பேச்சைக் கேட்டு, அவர்கள் தரும் சிற்றின்பத்திற்காக, அவர்களுக்கு ஏவல் செய்து நடக்கின்றவர்களைக் குறிக்கும்.

 

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனில் கடும் கேடு எனும்

நாமம் இல்லை; நரகமும் இல்லையே.

 

எனவரும் கம்பராமாயணப் பாடல் காண்க.

 

     மேலும், "நாண்பால் ஓரா நங்கையர்" என்றார் கம்பநாட்டாழ்வார். நாணத்தை விட்டுத் திரியும் பெண்களின் பெண்மையை விழைந்து திரியும் காமுகர்க்கு இது கூறப்பட்டது.

 

     மற்ற மூடர்கள் யாவரிலும் சிறந்த முழுமையான மூடர் என்போர், அறிவு நூல்களைக் கற்று, உணர்ந்து, அவற்றின்வழி நடவாதவர்களே என்று சொல்லப்பட்டது.

 

     "மனம், மொழி, மெய் எனப்படும் திரிகரணங்களும் அடங்குவதற்குக் காரணமாகிய நூல்களை ஓதியும், அதன் பயனை அறிந்தும், அதனை அறியும்படி பிறர்க்குச் சொல்லியும், மனம், மொழி, மெய்களால் தான் அடங்கி ஒழுகாத மூடரைப் போன்ற மூடர் உலகத்தில் இல்லை" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     ஓதி, உணர்ந்து, பிறர்க்கு எடுத்துக் கூறுகின்ற வல்லமை உடைய ஒருவன் திரிகரணங்களாலும் அடங்கி ஒழுகவில்லையானால், அவனைப் பிறர் திருத்துவது கூடாத காரியம் என்பதை உணர்த்தவே,

 

ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் அடங்காப்

பேதையின் பேதையார் இல்.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     இத் திருக்குறளை அப்படியே வைத்து, திருப்போரூர் முருகப் பெருமான் மீது ஒரு பாடலைப் பாடி உள்ளார் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.                

                                                              

ஓதியும் உணர்ந்தும் பிறர்தமக்கு உரைத்தும்

     உளமுதல் தான் அடங்காத

பேதையில் போதையார் இலர் என்ற

     பெரியவர் சொற்கு இலக்கானேன்,

கோதுஅறும் ஆறு கொடுமுடிப் பவளக்

     குன்றம் ஒத்து இலகு கட்டழகா!

வேத கோடங்கள் முழங்கிய போரூர்

     வீறிவாழ் ஆறுமா முகனே.    --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

 

இதன் பொருள் ---

 

     குற்றமற்ற ஆறு பவளக் குன்றுகளின் உச்சியைப் போல் உயர்ந்து விளங்கும் கட்டழகினை உடையவனே! வேதகோஷங்கள் முழங்குகின்ற திருப்போரூர் என்னும் திருத்தலத்தல் பெருமையுடன் வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே! மனம், மொழி, மெய்கள் அடங்குவதற்கு ஏதுவாகிய நூல்களை ஓதியும், அவற்றை உணர்ந்தும், பிறர்க்கு அவற்றின் பொருளை உணர எடுத்துச் சொல்லியும், மனமொழி மெய்களால் அடங்கி வாழாத அறிவிலியைப் போல அறிவிலி இல்லை என்னும் பெரியவர்களுடைய சொல்லுக்கு இலக்கணமாக நான் ஆனேன்.

 

 

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார், துரிசு அறார், மூடர்கள்,

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்,

கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.     --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     அளவில்லாத உலக நூற்களைக் கற்றும் அறிவுநூலாகிய சிவஞானம் கல்லாதவர் கலதிகளாகிய வீணர்களாவர். 'இறைவனை மறப்பித்துத் தம்மை மலங்களில் வீழ்க்கும், சிறப்பில்லாதவராகிய தீய சுற்றத்தைவிட்டு இவர்கள் நீங்கார். அதனால் மும்மலக் குற்றம் அறாதவர்களாக இருப்பர். இத்தகையோர் மூடர்கள் எனப்படுவர். பல திசைகளிலும் திருவடி உணர்வு கைவந்த நல்லோர் மாண்பினைக் கண்டும் கேட்டும் அதனைத் தேறி அறியமாட்டாத இவர்கள், உய்யும் நெறியை அறியாதவர்கள் ஆவர். அறிவு நூல்களைக் கற்று, அதன்படி ஒழுகி, இறைவன் திருவடியில் அன்பு பொருந்தி உள்ளோரே முறையை அறிந்தவர் ஆவார்.

 

     இப்படிப்பட்ட முழுமூடர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அறிவு விளங்காது என்கின்றது "சிறுபஞ்சமூலம்" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

 

பூத்தாலும் காயா மரமும்உள, நன்றுஅறியார்

மூத்தாலும் மூவார்,  நூல்தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துஉள, பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.       --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     பூத்தாலும் காயா மரமும் உள --- பூத்து இருந்தனவாயினும், காய்க்காத மரங்களும் உண்டு, (அதுபோல) நன்று அறியார் மூத்தாலும் மூவார் --- நன்மையை அறியாதவர் வயதில் முதிர்ந்து இருந்தாலும், அறிவினால் முதிர்ச்சி இல்லாதவராக இருப்பர். நூல் தேற்றாதார் --- (இவர்கள்) அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் (ஆகையால் இவர் அத்தன்மையர் ஆகவே இருப்பர்) பாத்தி புதைத்தாலும் நாறாத வித்து உள --- பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத விதையும் உண்டு, (அது போல) பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு --- அறிவில்லாதவனுக்கு நன்மையை எடுத்துக் கூறினாலும், அறிவு தோன்றாது.

 

         பூத்தாலும் காயாத மரம் போன்றவர், ஆண்டுகளால் முதிர்ந்ததும், அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதானுக்கு எவ்வுரையாலும் அறிவு உண்டாகாது.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...