இறைவனை அன்பினால் எளிதில் கட்டலாம்

 


அன்பினால் இறைவனைக் கட்டிப் போடலாம்

-----


"அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே!

     அன்பு எனும் குடில்புகும் அரசே!

அன்பு எனும் வலைக்குள் படுபரம் பொருளே!

     அன்பு எனும் கரத்து அமர் அமுதே!

அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே!

     அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே!

அன்பு எனும் அணுவுள் அமைந்த பேரொளியே!

     அன்பு உருவாம் பரசிவமே."


இது வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய "திருவருட்பா".

இதன் பொருள் ---

     அன்பு எப்படும் கைப்பிடியின் அகத்துள் அடங்கும் மலையும். அன்பு எனப்படும் குடிசைக்குள் புகுந்து உறையும் அரசரும், அன்பு எனப்படும் வலையில் சிக்கும் மேலான பெரிய பொருளும், அன்பு எனப்படும் கைக்கிண்ணத்தில் அடங்கும் அமுதமும், அன்பு எனப்படும் சிறுகுடத்துள் ஒடுங்கும் கடலும், அன்பாகிய உயிரின்கண் விளங்குகிற ஒளிர்கின்ற அறிவுப் பொருளும், அன்பாகிய அணுவுக்குள் ஒடுங்கும் பேரொளியும், அன்பு உருவாகிய பரசிவம் ஆகும்.

      “அன்பே சிவம்” என்கிறார் திருமூல நாயனார். வள்ளல் பெருமான் “அன்பு உருவாம் பரசிவமே” என வள்ளல்பெருமான் மொழிகின்றார். தத்துவ உலகில் வழங்கும் சிவமூர்த்தங்களில் மேலான சிவத்தைப் "பரசிவம்" என்பர். இறைவன் மலையினும் மிகப் பெரியவன். மலையைப் போலத் திண்மையும் வல்லமையும் மிக்கவன். திண்மையும் வல்லமையும் உள்ள மலை போல் ஓங்கி உயர்ந்ததாய் சிவம் இருந்தாலும், அன்பு என்னும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் அளவில் சுருங்கிப் பேரின்பத்தை அளிப்பது என்பதால், “அன்பு என்னும் பிடியுள் அகப்படும் மலையே” என்கின்றார். அரசர்க்கு எல்லாம் ஒப்பற்ற தனி பேரரசாய், பெரியதோர் அரண்மனையில் இறைவன் வாசம் செய்து கொண்டு இருந்தாலும், அன்பர் அன்பாகிய எளிய சிறிய குடிசையுள்ளும் புகுந்து மகிழும் எளிமை உடைய இயல்பினை உடையவன், அன்பர்க்கு எளியவன் என்பதை உணர்த்த,  “அன்பு என்னும் குடில் புகும் அரசே” என்கின்றார். "இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளிவந்த பிரானை" என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவனுடைய இந்த எளிவந்த தன்மையைப் பின்வருமாறு பாடுகின்றார் வள்ளல்பெருமான்.

"வான்இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்

     மாதவம் பன்னாள் புரிந்து, மணிமாடம் நடுவே

தேன்இருக்கும் மலர்அணைமேல் பளிக்கு அறையின் ஊடே

     திருவடி சேர்த்து அருள்கஎனச் செப்பி வருந்திடவும்,

நான்இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து, எனக்கே

     நல்லதிரு அருளமுதம் நல்கியது அன்றியும், என்

ஊனஇருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன்

     உள்ளம் எனும் சிறுகுடிசை உள்ளும் நுழைந்தனையே."

இதன் பொருள் ---

     மேலுலகில் இருக்கும் பிரமன், நாரணன் முதலிய தேவர்களும், மற்றவர்களும் பல்லாண்டுகள் பெரிய தவம் செய்து இறைவன் எழுந்தருளும் மணிகள் இழைத்த நெடிய வானத்தின் நடுவில் அமைந்த பளிங்குப் பாறை மேல் பரப்பிய தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த அணை மேல் இருந்தருளும் திருவடிக்கண் எம்மைச் சேர்த்தருள்க எனத் துதித்து வருந்தவும், நான் இருக்கும் குடிசை வீட்டிற்குத் தானே வலிய வந்து உள்ளே நுழைந்து, எளியவனாகிய எனக்கு நல்ல திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளியதோடு, என் தசையோடு கூடிய உடம்பாகிய குடிசைக்குள் மனம் உவந்து நுழைந்து, அடியேனுடைய இல்லம் என்னும் சிறு குடிசைக்கு உள்ளும் புகுந்து அருளினாய்.  இறைவா! உனது இவ்வருட்செயலை என்ன என்று புகழ்வேன்.

எத்தகைய வலைக்கும் அகப்படாத பெரும்பொருளாக இருப்பினும் அன்பு என்னும் மெல்லிய வலைக்குள் எளிதில் அகப்படுவான் இறைவன் என்பதற்கு “அன்பு என்னும் வலைக்குள் படு பரம்பொருள்” என்கின்றார். ஒன்றின் உள்ளும் அடங்குதல் இல்லாத பேரமுதமாய் இறைவன் விளங்கினாலும், அன்பர் அன்புக் கையில் இனிது வந்து அமர்வான் என்கிறார். பரம் என்னும் தன்மையால் அளப்பருங் கடலாக விளங்கினும், அன்பாகிய சிறு குடத்துள் அடங்கி இன்புறுத்துவான் என்கின்றார். அன்பு செய்யும் உயிர்க்கு உணர்வு ஒளியாகவும், சிறுமையால் அணுத் தன்மை உடைந்து உள்ள ஆன்மாவுக்குள், ஆன்ம சிற்சத்தியாய் அமைந்து ஞானவொளியைப் பரப்புவதாக விளங்கும் இயல்பை, "அன்பு என்னும் உயிர் ஒளிர் அறிவே” எனவும், "அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே” எனவும் கூறுகின்றார்.

அன்பு என்னும் பிடியில் அகப்படுகின்ற மலையாக இறைவன் விளங்குகின்றான் என்பதற்கு மகாபாரத்ததில் ஒரு நிகழ்வு சான்றாக அமைந்து உள்ளது.

பஞ்சபாண்டவர்கள் காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒர் ஆண்டு தலைமறைவாக இருந்துவிட்டு வெளி வந்தார்கள். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு உரிய நாட்டை மீட்டும் தங்களுக்குக் கொடுக்கும் படியாகக் கேட்டு வரும்படி தருமபுத்திரர் ஒரு முனிவரைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார். துரியோதனன் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. திருதராஷ்டிரன் அந்த முனிவரைப் பார்த்து, 'என் பிள்ளைகள் பொல்லாதவர்கள். தருமன் நல்லவன் ஆயிற்றே. அவன் எங்கே வாழ்ந்தாலும் அதுதான் அத்தினாபுரம். இத்தனை ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்து பழகினவர்களுக்கு அங்கேயே இருப்பதில் துன்பம் ஒன்றும் இல்லை. எதற்காக மறுபடியும் இந்தப் பொல்லாத பிள்ளைகளோடு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?' என்று சொல்லி அனுப்பினான். அதனைக் கேட்ட தருமபுத்திரர், 'பெரியப்பா சொல்வது நியாயந்தானே?  நாம் உறவினர்களோடு சண்டை போட்டுக் கொண்டு அவர்களை அழித்து விட்டு ஏன் நாட்டில் வாழவேண்டும்? காட்டில் வாழ்ந்தால் நல்லதுதான்' என்று கூறினார்.

"குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும், கொன்று, போர் வென்று,

அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசுதன்னில்,

கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே, கானம்தோறும்,

இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல் இனிது, நன்றே!"       --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

பெரியோர்களையும், உறவினரையும், ஒரு குலத்திலே பிறந்த, அன்பு செய்தற்கு உரிய தம்பிமார்களையும், போரிலே கொன்று, வெற்றி கொண்டு, ஆரவாரத்தையுடைய பெரிய கடலை ஆடையாகவுடைய பூமி முழுவதையும், மற்றொருவரும் இன்றித் தனியே அரசாளுகின்ற, அரசாட்சியைக் காட்டிலும், வஞ்சனை பொருந்திய மனத்தையுடைய பெரிய தந்தையான திருதராட்டிரன், சஞ்சய முனிவனிடத்துச் சொல்லியனுப்பிய சொல்லின்படியே காடுகள்தோறும் சென்று  இரவிலும் பகலிலும் பழங்களையும் கிழங்குகளையும் இலைகளையும் உண்டு, உயிர் வாழ்தல் மிகவும் நல்லதே ஆகும்.

கண்ணபிரான் அவருடைய பேச்சைக் கேட்டான். நீ சொல்வது சரிதான். ஆனால் உன்னுடைய தம்பிமார்கள் என்ன சொல்வார்களோ? அன்று பாஞ்சாலியின் துகிலைத் துச்சாதனன் உரிந்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபதம் செய்திருக்கிறார்கள். அவைகள் எல்லாம் முற்றுப் பெற வேண்டும். பாஞ்சாலி தன் கூந்தலை விரித்துக்கொண்டு நிற்கிறாள். அந்தக் கூந்தலை அவள் முடித்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் செய்யாமல் நீங்கள் மீட்டும் காட்டுக்குப் போய் விட்டால், உலகத்தில் உள்ளவர்கள் ஏசமாட்டார்களா?' என்று கேட்டான். தருமபுத்திரர் யோசித்து, "அப்படியானால் நீ ஒரு முறை தூது போய்விட்டு வா. அவர்கள் பாதி நாடு தரட்டும். இல்லாவிட்டால் ஐந்து ஊர் தரட்டும். அவையும் இல்லாவிட்டால் ஐந்து வீடுகள் தரட்டும். ஒன்றும் இல்லை என்று மறுத்தால் போர் செய்வோம் என்று சொல்லிவிட்டு வா" என்றார். 

கண்ணபிரான் தருமபுத்திரருடைய தம்பிகளின் கருத்தைக் கேட்கத் தொடங்கினான். வீமனைக் கேட்டபோது அவன் மிகவும் சினந்து, "என்னைத் தூது அனுப்புங்கள். எல்லோரையும் என் கதைக்கு இரையாக்கி வருகிறேன். போர்தான் எனது தவம்" என்று கோபத்தோடு சொன்னான். அருச்சுனனும் மிக்க வீறுடன் பேசினன். நகுலனும் சினந்து அப்படியே சொன்னான். பிறகு சகாதேவனிடம் வந்து, "உன் கருத்து என்ன அப்பா?" என்று கேட்டான் கண்ணன். 

சகாதேவன் சிறந்த ஞானி.  சத்தியத்தை உணர்ந்தவன். அவன் சொன்னான்,  "கோபாலா!  இனி என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாதா?  உன் எண்ணம் எதுவோ அதுதான் என்னுடைய எண்ணம்" என்று சொன்னான். இதைக் கேட்ட கண்ணன், 'எல்லோரையும் போல இவன் பேசவில்லையே! இவனிடம் ஏதோ நுட்பமான கருத்து இருக்கிறது. அதை இரகசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்' என்று எண்ணி அவனைத் தனியே அழைத்துச் சென்றான்.

சென்று, அவன் கருத்தைக் கேட்டபோது, சகாதேவன் பின்வருமாறு சொன்னான்.

"சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்? செறிந்த நூறு

மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என்? வழங்கினால் என்?

கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால் என்? குறித்த செய்கை

அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ? ஆதிமூர்த்தி!"   --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! இப்பொழுது தருமபுத்திரன் கருத்தின்படி  நீ தூதுபோனாலும் என்ன? போகாமல் இருந்தாலும் என்ன?  நெருங்கின உறவாகவுள்ள நூறு குமாரர்களுள் முதல்வனாகிய துரியோதனன்  எங்களுக்கு உரிய நிலத்தை வழங்காமல் இருந்தால் என்ன? கொடுத்தால்தான் என்ன?  இந்தப் பாஞ்சலியும்  கூந்தலை எடுத்து முடித்து அலங்கரித்தால் என்ன?  விரித்தபடியே இருந்தால்தான்  என்ன? நீ நினைத்த காரியம் கடைசியில் முடியும் விதம்  அடியேனுக்குத் தெரியுமோ? (எது எப்படி நடந்தாலும் எல்லாம் உனது சங்கற்பத்தின்படியே முடியும்)

"முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று அலகை முலைப்பால் உண்டு,

மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து, பொதுவர் மனை வளர்ந்த மாலே!

ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான் அறிவேன், உண்மையாக;

திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!' என்றான், தெய்வம் அன்னான்."

                                           --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

நறுமணத்தை  வெளிப் பரப்புகின்ற, பசுநிறமான திருத்துழாய் மாலையை அணிந்த  திருமுடியை உடையவனே! குழந்தையாய் இருந்த அந்தக் காலத்தில், பூதனை என்னும் பேய்மகளது முலையின் பாலைப் பருகி அருளியும், இரட்டை மருத மரத்தின் நடுவிலே தவழ்ந்து சென்றும், உயர்ந்த சகடாசுரனை இறந்து கீழ்விழும்படி காலால் உதைத்தும், இடையர்களது மாளிகையிலே வளர்ந்தருளிய, திருமாலே! உனது மாயை  இங்கு ஒருவருக்கும் தெரியாது. நான்  உள்ளபடி அறிவேன். ஆதலால், உனது மனத்தில் நிகழ்கிற எண்ணம் யாதோ அதுவே எனது எண்ணமும் ஆகும் என்று முக்காலத்துச் செய்திகளையும் அறிதலில் கடவுளை  ஒத்தவனான சகதேவன் சொன்னான்.

"நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,

பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!

கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,

மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?" --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

மேகம்போலக் கரிய திருநிறம் உடையவனே! பசுக்களைக் காக்கும் இடையர் சாதியில் வளர்ந்தவனே! போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தன் என்னும் திருநாமம் உடையவனே! நீ பாரதப் போரில் எல்லாரையும் அழியச் செய்து, பூமிதேவியின் சுமை மிகுதியை ஒழிக்க விரும்பி அருளினாய். ஆதலால், உன் கருத்துப்படி நிகழும் பெரிய பாரதப் போரை,  அதனை நடத்தப் போகும் நீயே அல்லாமல்,  ஒழிக்க வல்லவர்  வேறு எவருமில்லை.

"ஆனாலும், ஒரு செயலைச் செய்தால் பாரதப் போர் வாராமல் காக்கலாம், கண்ணா! துரியோதனனோ, தருமனோ அரசாள்வது என்று இல்லாமல், கர்ணன் அரசாள வேண்டும். அதற்கு முன்பு, அவன் அருச்சுனனைக் கொல்லவேண்டும். பாஞ்சாலியின் கூந்தலை முடிப்பதா, விரிப்பதா என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் அவளது கூந்தலைக் களையவேண்டும். பின்பு நான் உன்னைக் கட்டவேண்டும். இவை நடைபெற்றால் பாரதப் போர் வராமல் காக்கலாம்" என்றான் சகாதேவன்.

"பார் ஆளக் கன்னன், இகல் பார்த்தனை முன் கொன்று, அணங்கின்

கார் ஆர் குழல் களைந்து, காலில் தளை பூட்டி

நேராகக் கைப் பிடித்து, நின்னையும் யான் கட்டுவனேல்,

வாராமல் காக்கலாம் மாபாரதம்' என்றான்."  --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

கர்ணன் பூமியை அரசாட்சி  செய்யும்படி  அவனிடத்துப் பகைமையை உடைய அருச்சுனனை முன்னே கொன்றுவிட்டு, சிறந்த மகளான பாஞ்சாலியினது கருநிறம் பொருந்திய கூந்தலை அரிந்துவிட்டு,  உனது கால்களிலே விலங்கு பூட்டி, உனது கைகளையும் பிடித்து உன்னையும் நான் தகுதியாகக் கட்டி வைப்பேனானால், பெரிய பாரதப்போர் நடந்திடாதபடி தடுத்திடலாம் என்று சொன்னான் சகாதேவன்.

சகாதேவன் சொன்னதைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டான். இப்படி வேறு யாராவது சொல்லி இருந்தால், நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறானே என்று தோன்றும். பற்றுக்களை விட்ட ஞானி சகாதேவன் ஒருவனால்தான் இப்படிப் பேசமுடியும். அவனுடைய உயர்ந்த நிலையைக் கண்ணபிரான் தெரிந்து கொண்டு அவனைத் தனியே அழைத்துக் கேட்டான்?  "நீ சொன்னது எல்லாம் சரி. ஒருகால் முன் சொன்ன எல்லாம் நடந்தாலும் நடக்கலாம். என்னை நீ எப்படிக் கட்டுவாய்?" என்று கேட்டான். சகாதேவன் உடனே விடை சொன்னான். 'மற்ற எல்லாம் தெரிந்து கொண்டாய். ஆனால் உன்னை நீ தெரிந்து கொள்ளவில்லையே, கண்ணா! யசோதையால் உன்னைக் கட்ட முடியாமல் போயிற்று என்பதைக் கருதி இப்படிப் பேசுகின்றாய் போலும்! நீ கண்ணனாக எழுந்தருளி இருக்கும் இந்த உருவம் மாத்திரம் அல்ல. உன்னுடைய இயல்பான உருவத்தையும் எனக்குக் காட்டு. நான் கட்டி விடுகிறேன்'  என்றான். கண்ணன் சகாதேவனுடைய மன வலிமையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுப் பலப்பல வடிவங்களைக் கொண்டு நின்றான். கண்ணன் பலப்பல வடிவங்களை எடுத்துக் கொள்ள, சகாதேவன் தனது மனக் கருத்தினால்  மூலவடிவைப் பிணித்து விட்டான்.

"மாயவனும் அன்பன் மனம் அறிவான், 'கட்டுக!' என்று,

ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்;

தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்

தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்."    --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

விசித்திர ஆற்றலை உடையவனான கண்ணனும், தன்னிடத்து மிக்க பத்தி உடையவனான  சகாதேவனது கருத்து நிலையை  அறிதற்பொருட்டு, என்னை நீ கட்டுவாயாக என்று சொல்லி, பொருந்திய பதினாறாயிரம் திருவுருவங்களை ஒருங்கே எடுத்துக்கொண்டான். அப்பொழுது, பரிசுத்தனான  சகாதேவனும்,  அவ்வடிவங்கட்கு எல்லாம் முதன்மையான திருவுருவத்தை இன்னதென்று தனது தத்துவஞானத்தால் அறிந்து, எல்லாவுலகங்களையும் தனது திருவடியால் அளந்த  அப் பெருமானது உபய பாதங்களைத்  தனது மனமாகிய கயிற்றினால் கட்டினான்.

கண்ணபிரான் பலப்பல உருவங்களிலும் தோற்றம் அளித்தபோதும், சகாதேவன் அந்த வடிவங்களை எல்லாம் கண்டு, 'நாம் தெரியாமல் சொல்லிவிட்டோமே எப்படிக் கட்டுவது? என்று மயங்கவில்லை. ஆலமரம் நெடுந்தூரம் தழைத்துப் பரவிக் கிளை விட்டிருந்தாலும் அதன் அடிமரத்தில் கோடரியால் வெட்டினால் மரமே பட்டுவிடும். அப்படி, அத்தனை உருவங்களுக்கும் மூலமாக உள்ள தோற்றம் எது என்பதைச் சகாதேவன் நன்கு உணர்ந்தவன். அதுமாத்திரம் அல்ல.  எங்கே கட்ட வேண்டுமென்பதையும் தெரிந்து கொண்டிருந்தான். மூலமாகிய தோற்றத்தை உள்ளத்தில் வைத்து அந்தப் பெருமானுடைய திருவடிகளைத் தன்னுடைய கருத்தினால் பிணைத்துவிட்டான். 

இப்போது கண்ணன் கட்டுண்டு கிடந்தான். மற்றப் பெரியவர்களுடைய தந்திரத்தினாலே கட்டுப்படாத இறைவன், யசோதை கட்டிய கயிற்றுக்கு அகப்படாத ஆயன், வேதங்களினாலும் சாத்திரங்களினாலும் காண முடியாத கண்ணன், இப்போது மிக எளிதில் சகாதேவனால் கட்டுண்டு கிடந்தான். கண்ணனுக்கே வியப்பு உண்டாகிவிட்டது. நெடுநாள் காணமுடியாமல் கண்ட ஒருவர், தம்முடைய அன்பனை இறுக்கிப் பிணித்து அனைத்துக்கொண்டால் அந்த அணைப்பு ஒரு வகையில் இன்பமாக இருக்கும்; மற்றொரு வகையில் மூச்சுத் திணற அடிக்கும். இந்த நிலையில் கண்ணபிரான் இருந்தான். 'சகாதேவா, என்னை அன்பினாலே நன்கு அறிந்து எப்படிக் கட்டவேண்டுமென்ற உண்மையைத் தெரிந்து என்னைக் கட்டிவிட்டாயே! நீ கட்டினது மிகவும் நல்லது. நீ நல்லவன். நான் இப்போது அத்தினாபுரத்திற்குத் தூது போக வேண்டும். கட்டின காலை விடு' என்று கெஞ்சினான். 

"அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;

என் பாதம்தன்னை இனி விடுக!' என்று உரைப்ப.."   --- வில்லிபாரதம்.

சகாதேவன் மிகச் சிறந்த தந்திரசாலி. கையிலே அகப்பட்டுக் கொண்ட பொருளைப் பயன்படுத்தாமல் விடுவானா?  சகாதேவன் கேட்கின்றான், "கண்ணா, இப்போது நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும். பாரதப் போரில் எல்லோரையும் அழித்துப் பூபாரம் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்போது நான் கேட்கும் வரம் ஒன்று உண்டு. உன் திருவுள்ளக் கருத்தில் சற்றே நெகிழ்ச்சி கொள்ள வேண்டும். உன்னையே சரண் என்று அடைந்திருக்கிற எங்கள் ஐந்து பேரை மாத்திரம் உன்னுடைய கடைக் கண்ணால் காப்பாற்றி அருளவேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். 

"வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,

நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!"   --- வில்லிபாரதம்.

யாருக்கும் கட்டுப்படாத பரம்பொருளாகிய கண்ணபிரானை உள்ளத்தில் தோன்றிய மெய்யன்பினாலே பிணைத்து அவன் திருவடியைக் கட்டி, அந்தச் சமயத்தில் வரம் கேட்டு வாங்கிக் கொண்டான் சகாதேவன். பின்னால் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரிய போர் நடந்தது. மிகக் கடுமையாக நடந்த அந்தப் போரில் ஒவ்வொருவருடைய வீரமும் வெளியாயிற்று. போர் நடந்து அதில் அருச்சுனன் முதலியவர்கள் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த, அதனால் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்றுதான் பாரதத்தைப் படிக்கும்போது  தோன்றுகிறது. ஆனால் அந்தப் போர் நடப்பதற்கு முன்னாலேயே பாரதப் போரின் முடிவு ஒரு சிறிய அறையில் தீர்மானம் ஆயிற்று. கண்ணபிரானுடைய இரண்டு திருவடிகளைத் தன் கருத்தினாலே பிணைத்த சகாதேவன் அந்தப் பெருமானிடம் கேட்டுக் கொண்ட வரந்தான் பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. அவன் அப்போது விண்ணப்பித்த விண்ணப்பமே பிறகு போர்க்களத்தில் அருச்சுனனின் காண்டீபத்திற்கும், தருமனின் அறத்திற்கும் வலிமை தந்தது. திரைக்கு மறைவில் பச்சைப் பசுங்கொண்டலைச் சகாதேவன் பிணித்து அவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பின் வலிமையைக் காட்டிய செயல்தான் அந்த வெற்றிக்கு மூலம் தூயவனாகிய சகாதேவனுக்குத்தான் அந்தப் பெருமானுடைய மூலம் எங்கே இருக்கிறதென்று தெரிந்தது. எத்தனை ஆயிரம் திருவுருவங்கள் எடுத்தாலும் அவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பன இரண்டு திருவடிகள் என்பதை ஞானியும், அன்பனுமான சகாதேவன் நன்கு உணர்ந்து தன் கருத்தைச் செலுத்திக் கட்டினான். 

வள்ளல்பெருமான் பாடியருளிய பாடலின் பொருள் இப்போது நன்கு விளங்கும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...