பிரார்த்தனை என்னும் மருந்து

 

பிரார்த்தனை என்னும் மருந்து

-----

1925-ஆம் ஆண்டில் தோன்றி, 1995 வரை வாழ்ந்திருந்த  "தமிழ்மாமுனிவர்" என்று போற்றப்பட்டு, பல அரிய செயல்களைச் செய்து, வாழ்ந்து காட்டி, நம்மிடையே இருந்து மறைந்த, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளில் ஒன்று,  "அருள்நெறி முழக்கம்" என்னும் நூல், ஆகும். இந்நூல் 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், "பிரார்த்தனை என்னும் மருந்து" என்னும் தலைப்பில் திருச்சிராப்பள்ளியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய உரை. அன்பர்களின் சிந்தனைக்குத் தரப்படுகின்றது.

                                                            ---------------------------

சந்தேகம் மனிதர்களின் நேரிடையான சத்துரு. அது நம்முடன் உடன்பிறந்த ஒரு தொற்றுநோய். அதற்கு நாம் எளிதில் ஆளாகி விடுகின்றோம். சந்தேகம் என்ற ஒன்றினையே நாம் நம் வாழ்நாளில் காணாது வாழ முயற்சிக்க வேண்டும். அது நம் வாழ்வில் நம்மை அறிந்தும் அறியாமலும் இடம் பெற்று விடுகின்றது.

சந்தேகம் உண்டாவதனால் விளைகின்ற தீமைகள் பலப்பல. அதனை மக்கள் சமுதாயம் உணருவதில்லை. சந்தேக எண்ணம் கொண்டவர்கள் - புரிந்து கொள்ளாமல் சந்தேகத்திற்கு ஆளாகின்றவர்கள் - பிறப்பாலேயே சந்தேகப் பிராணியாகத் தோன்றி வாழ்கின்ற அன்பர்கள் செய்கின்ற, செய்ய முனைகின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற காரியங்கள் அனைத்தும் நாட்டில் எவ்வளவு தீமையை விளைவிக்கின்றன என்பதை அவர்கள் எள்ளளவும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற, செய்கின்ற காரியம் நாட்டின் போக்கை சீர்கேடான நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது.

கடவுளும் - அதன் பாதையும் - அருள்நெறியும் அது காட்டும் வழியும் - அன்பும் - அதனால் உண்டாகும் நன்மைகளும் நல்லனதாம். அவைகளைப் பற்றிய உண்மைக் கருத்துக்களை இன்றைய உலகில் அருளுடைப் பெருமக்களும், நாட்டில் வாழ்கின்ற நல்லன்பர்களும், அறநெறிச் செல்வர்களும் நன்கு உணர்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை. கடவுள்நெறி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளாத மக்கள் செய்கின்ற காரியங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் எத்தகைய முறையில் இருக்கின்றன என்பதும் அன்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள், அவைகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற காரணத்தால் அவர்களுக்கு அதனைப் புரிந்து கொள்ளும் திறனும் -அறிவும் - போக்கும் கிடையாது. உண்மையான அறிவுக்கண் கொண்டு - மாற்றுக் கருத்துக்களை அகற்றி, மனம் அனைத்தும் ஒரு திறனாய்ப் பண்டைய இலக்கியங்களைப் படித்து உணர்ந்தால் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கடவுட்கொள்கைகள் - சொல்லோவியங்கள் - பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்குத் தெள்ளெனப் புலனாகும்.

நாம் எந்தத் துறையில் அறிவைச் செலுத்துகின்றோமோ அத்துறையில்தான் நமக்குக் காட்சி தர முடியுமே அல்லாது வேற்றுத்துறையில் காட்சிதர முடியாது. மனம் போல வாழ்வு என்பதனைக் கொண்டு ஒருவனின் வாழ்வை நிர்ணயித்தார்கள் நமது பெருமக்கள். இன்றைய உலகில் இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதனின் அறிவு பல்வேறுபட்ட போர்வைகளைப் போர்த்திக் கொண்டு செல்லாநின்ற நிலை விபரீதமாகவும் - விசித்திரமாகவும் இருக்கின்றது.

இத்தகு காலத்திலும் இங்குக் கூடியிருக்கின்ற மாபெரும் கூட்டம், தமிழ்நாடும் - தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுப் பண்பாட்டை, கலாசாரத்தை - தமிழர்களின் நாகரீகத்தை - குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றை இன்னும் இழக்கவில்லை என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதன் அதனை மறந்தோ, ஒதுக்கியோ, தனி இடம் கொடுத்தோ வாழ முடியாது. வாழ முற்பட்டாலும் அவனுக்கு வாழ்வதற்குத் தகுந்ததோர் வழி கிடைக்காது என்று உறுதியாகக் கூறலாம். விஞ்ஞானம் - அணுகுண்டு - அறப்போர். போர் - அஹிம்சை - அன்பு அறம் - பொருள் - பிரார்த்தனை - பட உலகம் - மேடைப் பேச்சு சமயப் பெரியார்களின் தொண்டுள்ளம் - தியாகிகளின் சேவை அனைத்திலும் இந்த இருபதாம் நூற்றாண்டு மிகமிக முக்கியத்துவம் பெற்று விட்டது என்பதை எவரும் நன்கு உணர்வர். மனித சமுதாய வாழ்விற்கு வேண்டிய அனைத்திலும் முக்கியத்துவம் தகுதியான இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டினை எப்படி நாம் ஒதுக்கி வாழ முடியும்?

மனிதர்களின் கருத்தும் - சிந்தனையும் நாட்டை வாழ்விக்க முடியாது. காலமும் கருத்தும் சிந்தனையும் நாட்டை நல்ல நிலைமையில் இட்டுச் செல்லும் என்று மக்கட் சமுதாயம் கருதுவது சரியன்று. காலமும் - கருத்தும் - சிந்தனையும் செயலும் ஒத்து நின்று இயங்கினால் ஓரளவுதான் பயனைத் தர முடியும். இவை அனைத்தும் நாட்டிற்கும் நமக்கும் பயனைத் தர வேண்டுமேயானால், அருளியல் கலவாத எதுவும் பயனைத் தர முடியும் என்று எதிர்பார்த்துச் செயல் செய்ய முனைதல் முடிவில் ஏமாற்றத்தைத் தான் தரும் என்பதை மக்கட் சமுதாயம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அருளியல் கலவாத அறிவு அழிவைத்தான் தரும்.

மதம் நாட்டின் நச்சுக் கோப்பை - அது வேண்டாத ஒன்று என்று கூறுவதன் காரணம் என்ன? மதம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? அது எப்பொழுது தோன்றியது? என்ற பல கேள்விகளை எழுப்பி நன்கு சிந்தித்துப் பார்த்துப் பின்னர் முடிவுக்கு வாருங்கள். நீங்கள், காணுகின்ற நல்லதொரு முடிவு உங்களுக்கு விடையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூறுகின்றவர்கள் இடித்தலையும், எரித்தலையும் துணையாகக் கொண்டிருந்தால் அவர்கள் எடுத்திருக்கின்ற குறிக்கோள், செய்ய முனைந்திருக்கின்ற காரியங்கள் - அவர்களின் இலட்சியத்தில் எழுப்பப்பட்ட கொள்கைகள் அனைத்தும் எவ்விதம் நன்மையாக முடியும்?  நன்மையாக முடியும் என்று எதிர்பார்த்து இத்தகு காரியங்களில் ஈடுபட்டிருப்பதும் தவறுடையது என்பதை நம்முடைய மதிப்பிற்குரிய தோழர்கள் மறந்துவிடக் கூடாது.

இடித்தலும், எரித்தலும், உடைத்தலும், அழித்தலும் எந்தக் காரியத்தையும் சாதித்து விட முடியாது. நாட்டின் நன்மையைக் கருதித் தொண்டில் ஈடுபடுகின்ற அன்பர்கள் எக்காலத்தும் எந்தவிதக் காரணத்தைக் கொண்டும் தீய செயல்கள் செய்ய முனைதல் கூடாது. ஏன்? சிந்தனையில் - கருத்தில் கூட தீய கருத்துக்கள் தோன்றக் கூடாது. நமது எண்ணத்தின் எதிரொலிதான் நம் வாழ்வில் பிரதிபலிக்கும். எண்ணம்தான் சிந்தனையாக மாறும் - சிந்தனை உருப்பெற்ற பின் செயலில் உருவெடுக்கின்றது. ஆதலால், நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் மனதில் தீய கருத்துக்களுக்கு இடம் கொடுத்தல் கூடாது. பகைவர்களிடம் அன்பு சொரியும் பண்பாட்டுடன் நடந்துகொள்ளும் உளப் பண்பு நன்றாக வளரவேண்டும்.

ஒரு நாட்டின் நாகரிகம் - கலாசாரம் - பண்பாடு - வளம் - மொழி - நாகரீகம் முதலியவற்றை அந்நாட்டின் இலக்கியங்களின் மூலந்தான் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான இலக்கியங்கள்தான் அந்நாட்டின் படப்பிடிப்பு. நம் நாட்டு இலக்கியங்கள் பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் கடலாலும் - கறையானாலும் சூறையாடப்பட்டன. எஞ்சியிருக்கின்ற ஒன்று இரண்டு உண்மையான இலக்கிய ஏடுகளையும் இற்றைப் பகுத்தறிவுவாதிகள் எரிக்க முற்பட்டு விட்டார்கள். செய்யத் தகாத - நினைக்கவும் முடியாத காரியத்தையெல்லாம் புதுமையின் துணைகொண்டு அறிவினால் செய்துவிட முடியும் என்று கருதவும் தொடங்கி விட்டனர்.

இச்செய்தியைக் கேட்டதும் - உண்மையாகத் தமிழ் தமிழ்நாடு - தமிழ்க் கலாசாரம் - ஏன் குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றுடைய ஒவ்வொரு தமிழனின் குருதியும் கொதிப்பேறுகின்றது. அவர்கள் கூறுகின்ற, கருதுகின்றபடி எஞ்சியிருக்கின்ற உண்மை இலக்கியங்கள் ஒன்று இரண்டையும் எரிக்கத் தலைப்பட்டு விட்டால் பண்டைத் தமிழகம், இற்றைத் தமிழகம், நாளைத் தமிழகம் பற்றி அறிந்து கொள்ள என்ன இருக்கின்றது?

அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற, செய்கின்ற ஒவ்வொரு காரியத்தாலும் கலாசாரம் - பண்பாடு முதலியவற்றிற்கு அழிவே இல்லை என்பதை நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது. அவர்கள் எதனை எதிர்பார்த்துச் செய்கின்றார்களோ அதற்கு மாறாகத்தான் நாடு இயங்கி வருகின்றது என்பதை உணர்ந்த பின்னர்தான் அவர்கள் தாங்கள் முயற்சித்த அந்தந்தக் காரியங்களை விடுத்துப் புதுப்புதுக் காரியங்களில் முனைகின்றனர் என்பதை யாவரும் நன்கு அறிந்திருக்கலாம்.

அழிவு ஏற்படும் என்று கருதிய உள்ளம், மேன்மேலும் நன்கு வளர்ச்சியைக் கண்டு மயங்குகின்றது. அவர்கள் செய்ய முனைந்த செயலால் நல்லதொரு வளர்ச்சிதான் காணமுடிகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால் பிள்ளையார் உடைப்பு - கம்பராமாயண எரிப்பு முதலியவற்றால் இன்றைய மக்களிடம் புதியதோர் மறுமலர்ச்சி எழும்பி இருக்கின்றது. மக்களிடம் காணப்பட்ட மகத்தான மறுமலர்ச்சியால் இன்றைய நாட்டில் இலக்கியப் பற்றும், திருவுருவ வழிபாடும், சமயப்பற்றும் வளர்ந்தோங்கி உள்ளன. மக்கள் உள்ளத்தில் பற்றுதல் உண்டான காரணத்தால் நல்லதொரு வெற்றிதான் கிடைத்திருக்கின்றது என்பதை எல்லோரும் நன்கு அறிதல் வேண்டும்.

"கல்லிலும் செம்பிலுமா கடவுள் இருக்கின்றார்” என்று இதுவரை கூறி வந்தவர் இன்றைய தினம் அதற்கு மாறாக நடந்து காட்டி விட்டனர். நீங்கள் காட்டும் கல்லிலும் செம்பிலும் மட்டும் கடவுள் இல்லை. நாங்கள் செய்கின்ற, செய்து உடைக்கின்ற களிமண் பொம்மையிலும் கடவுள் இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். கடவுள் இல்லை என்றால் அவர்கள் செய்த அந்தக் களிமண் விநாயகர் பொம்மையை உடைத்திருக்க வேண்டியதில்லையே! “கடவுள் அந்தக் களிமண் பொம்மையிலும் இருக்கின்றார்” என்ற நம்பிக்கையால்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்கள் என்பதை இன்றைய உலகில் யாவரும் நன்குணர்வர்.

என்றும் நம்பிக்கை இல்லாதவனை, நம்பிக்கை உள்ளவனாக நம்பும்படி செய்வதுதான் - நம்புகின்ற ஒரு மனித உருவாகச் செய்வதுதான் முடியாத காரியம். நம்பிக்கை உண்டானபின் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்து விட முடியும். “உருவத்திலும் கடவுள் இல்லை" என்று இதுவரை கூறிவந்தார்கள். இன்று “உருவத்திலும் கடவுள் இருக்கின்றார்” என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்கள். உருவத்திலும் கடவுள் உண்டு என்று கூறும் அவர்களை நம்பிக்கையில் உள்ள அவர்களை வழிபாட்டில் கொண்டு வருவது எளிது. நமக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் யார் செய்கின்ற எச்செயலும் நம்மை எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் நேர்மையும் - நம்பிக்கையும் - தன்னடக்கமும் - கட்டுப்பாடும் - உறுதியும் தகுதியான இடத்தைப் பெறுவதோடு நன்முறையில் நம் உள்ளத்தில் வளம் பெற வேண்டும்.

யார் எதனைச் செய்தாலும் அதனை அன்புடன் - முக மலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எது வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் நல்ல இதயம் வேண்டும். துன்பம் செய்தாரிடத்தும் அன்பு காட்டுங்கள். இன்னல் செய்தாரிடத்தும் அன்புமொழி பேசுங்கள். மாற்றாரிடத்தும் உற்றார் உறவினர் என்ற உள்ளத்துடன் பழகுங்கள். அதுதான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆடும் புலியும் ஒரே துறையில் நின்று நீர் அருந்திய தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் நாம் என்பதை நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள். நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் எக்காலத்தும் உங்கள் வாழ்நாளில் வெறுப்பிற்கும் - வெறிக்கும் ஆளாகி விடாதீர்கள். வெறுப்பும் வெறியும் மக்கள் சமுதாயத்தைக் கெடுத்து விடும். அது மக்கள் சமுதாயத்தின் துரோகி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மாற்று எண்ணம் கொண்டு, அறிந்தோ அறியாமலோ, அவர்கள் நம்மை எது கூறினாலும் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தும் அன்பின் வாழ்த்து வேறு விதத்தில் நம்மை நாடி வருகின்றது என்று எண்ணுங்கள். அந்த எண்ணந்தான் நம்மை அன்புடையவர்களாக என்றென்றும் வாழ்விக்கும்.

நாம் அன்புடையவர்களாக வாழ்ந்தால்தான் நாடும் அன்புடைய நாடாக வாழமுடியும். மாற்று எண்ணங்கொண்டு அவர்கள் கூறுகின்ற அனைத்தும் நம்மை அல்ல. ஆக்கவும் காக்கவும் வல்ல அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கின்ற கடவுளைத் தான் கூறுகின்றார்கள் என்று நம்புங்கள். அந்த உயரிய நம்பிக்கை தான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும்.

பிள்ளையார் உடைப்புச் செய்தவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு தெரியும். அவர்கள் நமது சாக்கிய நாயனார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சாக்கியனார், தனது மதத்திற்குத் தெரியாமல் இந்து மதத்தில் பற்றுக் கொண்டு சமயக் கொள்கையில் பற்றுக் கொண்டு நமது திருவுருவங்களை அன்புடனும் அருளுடனும் வழிபட்டு வந்தனர். அதுபோலத்தான் இன்றைய பிள்ளையார் உடைப்புக் கட்சிக்காரர்களின் போக்கும் போய்க் கொண்டிருக்கின்றது.

இதுநாள்வரை உருவ வழிபாடு கூடாது என்று கூறிய நாம், இனிக் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டால், உலகம் நம்மை நிலையில்லாதவன் என்று தூற்றுமே; நாம் நமது அன்பை ஆண்டவனிடம் உடைப்பின் மூலமாகத்தான் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்களேயன்றி வேறில்லை. சாக்கிய நாயனார்க்கு இடம் கொடுத்த சமயம், இவர்களுக்கும் இடம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

“உண்மையுமாய் இன்மையுமாய்” இருக்கின்ற ஆண்டவன் “ஒளியாகவும் ஒலியாகவும் இருக்கின்ற ஆண்டவன்", தின்கின்ற வெற்றிலையாகவும் உண்கின்ற சோறாகவும் காட்சி தருகின்ற ஆண்டவன் “உடைப்பார் இடத்தும் எரிப்பார் இடத்தும்" உறுதியாக அன்பு காட்டுவான். அடக்கம்தான் என்றும் நன்மையைத் தரும்.

உலகில் இருளை ஒட்ட யாரும் முற்படுவதில்லை. ஒளியினை உண்டாக்கினால் இருள் தானாக ஓடிவிடும். நமக்கு வேண்டிய ஒன்றிலேயே அதன் வளர்ச்சி குறித்துக் கண்ணோட்டம் செலுத்தினால், வேண்டாத - விருப்பப்படாத ஒன்று தானாக விலகிச் செல்லும் என்பதை இளமை உள்ளங்கள் உணர்ந்து வாழ முற்பட வேண்டும். மாற்றாரின் தகாத செயல்களுக்குப் பரிகாரம் தேட முனைகிற காலத்து, அவைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து, நாம் நமது காரியங்களிலேயே கண்ணோட்டம் செலுத்தினால் நலம் உண்டு. உங்களுடைய பிரார்த்தனை உள்ளம் தோய்ந்ததாக இருக்கட்டும்.

சந்தேகப் பிராணிகள் எது வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். அவர்களின் கூற்றைப் பெரிதென மதித்து நாம் செவி சாய்க்கக்கூடாது. “சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு” என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நாம் சந்தேகம் என்ற ஒன்றிற்கு எக்காரணத்தைக் கொண்டும் இடங்கொடுத்தல் கூடாது. நாம் சந்தேகத்தைக் கைக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வில் நாம் முன்னேற்றம் காணமுடியாது. முன்னேற்றம் காண்பது ஒருபுறமிருக்க இருக்கின்ற தகுதியையும் இழக்க நேரிடும். சந்தேகப் பேய்க்கு இடங்கொடுத்தால் அதனின்றும் தப்பி வாழ வழி கிடையாது. தத்துவங்கள் சடங்குகள் - சின்னங்கள் சம்பிரதாயங்கள். கடவுள் கொள்கைகள் முதலியன பற்றித் தெரிந்து கொள்ளாமலே குறை கூறுவதனால் என்ன பயன்? அதனால் விபரீதங்கள்தான் விளைகின்றன.

கடவுள் என்பது ஆதி மனிதன் காலத்தில், கற்காலத்தில் - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த தமிழ்க் குடியினர் கண்டது. கடவுள் நெறி - அன்பு நெறி - அருள் நெறி ஆதிமனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. அவன், தான் கண்டுபிடித்த அப்பாற்பட்ட சக்திக்குக் கடவுள் என்ற பெயர் கொடுத்தான். அதனை உருவத்தில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டான்.

அந்த உயரிய தத்துவத்தை இன்று இருக்கின்ற புதுமை விரும்பி என்ற பெயர் கொண்டவர்கள் - தத்துவம் புரியாதவர்கள் - அழுக்கு மனம் படைத்தவர்கள் - குறுக்குப் புத்திக்காரர்கள் - மாற்று எண்ணம் கொண்டு, வேற்றுருவில் நடமாடுகின்ற மனித உருவங்கள் குறை கூறுகின்றன. இயற்கையின் படைப்புக்கு மனிதனின் அறிவும் - கருத்தும் - சிந்தனையும் பெயர் கொடுத்ததே அன்றிப் புதிதாக இந்த உலகில் இதுவரை ஒன்றையும் காணவில்லை. அடிப்படைத் தத்துவத்தை “பழமை” என்ற பெயரால் பிரிவுபசாரப் பத்திரம் வாசித்து வெறுத்து ஒதுக்குவதேன்?

மனிதனின் அறிவு உயிரற்ற ஒன்றைத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆண்டவன் படைப்பில் உயிர் உள்ளதும் - உயிர் இல்லாததும் இருக்கின்றன. மனிதனின் அறிவிற்கும் ஆண்டவனின் படைப்பிற்கும் உள்ள வேறுபாடு இதுதான். பழமை இன்றிப் புதுமை இயங்க முடியாது. வேண்டாத ஒன்று என்று பழமையை வெறுத்து ஒதுக்குகின்றவர்கள் பழமைதான் , புதுமையின் தாயகம் என்பதை நன்கு உணர வேண்டும். புதுமையின் தாயகமான இன்றையப் பகுத்தறிவு வாதியர், சின்னங்களையும் சடங்குகளையும் வெறுத்து ஒதுக்குகின்றனர். சின்னங்களும் சடங்குகளும் இன்றி எதுவும் காண முடியாது. அவர்கள் கருதுகின்றபடி செய்தால் காலமும் பொருளும் குறைவாக இருக்கலாமே அன்றி, அவைகள் இன்றி எந்தக் காரியமும் செய்ய முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் சின்னங்களும் - சடங்குகளும் பின்னிக் கிடக்கின்றன. சின்னத்தையும் சடங்கையும் ஒதுக்குகின்றவர்கள் போடும் ஆரவாரமும் மந்திரமும் அதனுள் கட்டுப்பட்டன என்பதை மறந்து விடாதீர்கள்.

குறை கூறும் மக்கள் எதனையும் முழுதும் படிப்பதில்லை. பண்டைய இலக்கியங்களை முழுதும் படித்து அறிந்துணரும் திறன் இல்லை என்பதை அவர்கள் கூறாமல் கூறிக் கொள்ளுகின்றார்கள்.

மனிதனின் அறிவு, இரும்பை மைக் ஆகவும் - அரிசியைச் சோறாகவும் - துணியைச் சட்டையாகவும் கண்டது. அதுபோல, அருளுடைப் பெருமக்களின் அறிவு, கல்லைக் கடவுளாகக் கண்டது. இதில் என்ன தவறு? அறிவும் ஆராய்ச்சியும் ஓரளவுதான் பயன்தர முடியும். திருக்கோயில்களில் காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தை விளக்குகின்றன என்று தெளிவாக - ஆணித்தரமாக - துணிவுடன் எடுத்துக் கூறுங்கள். சமயச் சின்னங்களை அணிந்து தெருவில் வாருங்கள்.

இலக்கியத்தின் மூலம் சமயக் கொள்கைகளுக்கு மறுப்புக் காட்டினால், அது உண்மையான தமிழ் இலக்கியமாக இருக்க முடியாது. போலி இலக்கியங்களின் துணைகொண்டுதான் மறுக்க முடியும். பிளாட்டோ - இங்கர்சால் - ஜேம்ஸ் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் துணைகொண்டு மறுக்க முற்படலாம். அவர்களும் உண்மைச் சமயத்தை வெறுத்தார்கள் அல்லர். சமயத்தில் காணப்பட்ட குறைகளைத்தான் கண்டித்தார்கள். அறிவுலக மேதை பெர்னாட்ஷாவும் சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவேதான் பாடுபட்டார். சமயம் மண்னோடு மண்ணாகி மக்கி மடியவேண்டும் என்று அவர் கருதினார் அல்லர். சமயம் திருந்தினால்தான் சமூகம் திருந்தி வாழ முடியும் என்ற காரணத்தால் அறிஞர் பெருமக்கள் அருளுடைய பெருமக்கள் காட்டிய கண்டு வாழ்ந்த உண்மைச் சமயத்தையும் அதன் அடிப்படைக் கொள்கையையும் - உண்மை இலக்கிய ஏடுகளையும் காண முற்பட்டார்கள்.

“சமயத்தில் பெருமையைத் தேடி தோல்வி உற்றவன்தான் கடவுள்மேல் - மதத்தின் மேல் - சமயக் காப்பாளர்கள் மேல் குறை கூறுகின்றான். தோல்வியுற்றவன் கண்டதுதான் நாத்திகம். விதி - வினை முதலியவற்றை வெல்ல முடியாத உனக்கு இவ்வுலகில் வாழ்வில்லை. வாழத் தெரியாத நீ துணிவு இல்லாத நீ சமயத்தைப் பற்றிக் குறை கூறுவது ஏன்?.."என்று அழகுபட மாவீரன் மாஜினி எழுதுகின்றான். குறைகூறுகின்ற மக்கள் அனைவரும் குறை கூறுமுன் சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஜனநாயகத்தில் இவ்வாறு இல்லாதிருக்க வேண்டுமேயானால், அரசு மதச்சார்பற்றதாக இருக்கட்டும். ஆனால் அதே நேரத்தில் மதச்சார்புடை அரசாகத்தான் இருந்தாக வேண்டும். அரசாங்கத்திற்கு வரி கொடுப்போரில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் மதத்தின் அடிப்படையை பின்பற்றி வாழ்கின்றவர்கள். ஜனநாயக அரசு அவர்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாது சிறுபான்மையோரின் அரசாக இருத்தல் கூடாது. பெரும் பான்மையோரின் வாழ்விற்குப் புறம்பாகப் பேசவோ எழுதவோ படவுலகில் காட்டவோ இசையின் மூலம் பரப்பவோ உரிமை கொடுப்பதும் தவறுதான்.

பள்ளிகளில் பிறநாடுகள் போல, சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். "சமயப் பாடமே கற்பிக்கப்படாத பள்ளிகளே இந்திய நாட்டில் இல்லை” என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பள்ளிகளில் சமயப் பாடம் சட்டபூர்வமாக என்று கொண்டு வரப்படுகின்றதோ அன்றுதான் காந்தியடிகள் கண்ட நாட்டிற்கு அடிகோலியவர்கள் ஆவோம்.

காந்தியடிகள் கண்ட நாட்டை அமைத்தால்தான் நாமும் - பிற்காலச் சந்ததியார்களும் இன்புற்று வாழ முடியும். மேலும் உலகப் பெரியாரின் பொன்மொழியைக் காப்பாற்றிய - இலட்சியத்தை நிறைவேற்றிய பெருமையும் நம்மைச் சேரும். காந்தியடிகள் கண்ட நாட்டைக் காண எல்லோரும் பிரார்த்தனையைக் கைக்கொள்வோமாக.

மக்கட் சமுதாயத்தில் பிரார்த்தனை என்று வளம் பெறுகின்றதோ, அன்றே இயற்கையும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனைதான் அண்ணல் காந்தியடிகளின் மருந்து.

அண்ணல் காந்தியடிகள் நோயுற்றிருந்த காலத்து உடனிருந்த அனைவரும் மருத்துவரை அழைத்து வர எண்ணினர். அவர்களின் எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அண்ணல் காந்தியடிகள், “என்னுடைய உயிரை இந்த மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது. காப்பாற்றக் கூடிய ஒரு மருத்துவன் இருக்கின்றான். அவனை அழையுங்கள். அவன் நினைத்தால்தான் முடியும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆக்கவும் காக்கவும் வல்ல மாபெரும் சக்தி அவனுக்குத்தான் உண்டு. ஆதலால், நீங்கள் எல்லோரும் உலகின் நலம் கருதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார். அண்ணல் காந்தியடிகள் பிரார்த்தனையை வலியுறுத்திக் கூறும் காலத்து, "என்னால் பல நாள் உணவின்றி இவ்வுலகில் வாழ முடியும். ஆனால், ஒரு நாள்கூடப் பிரார்த்தனை இன்றி வாழ முடியாது” என்று கூறினார்.

நாம் அனைவரும் உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையுடன் ஆண்டவனை வழிபட்டால் அவன் உறுதியாக நமக்கு வாழ்வளிப்பான் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனை வீடுகள்தோறும், தெருக்கள்தோறும் கிளம்ப வேண்டும். பிரார்த்தனைதான் நம் உள்ளத்தைத் துய்மைப்படுத்தும் நமது பிரார்த்தனைதான் நம் உள்ளத்தில் உள்ள மாசுமறுவினைப் போக்க - வியாதியினைப் போக்க ஏற்றதொரு மருந்தாம். உள்ளத்து வியாதியினைப் போக்கப் பிரார்த்தனையைத் தவிர வேறு மருந்தில்லை. நமது பிரார்த்தனை உளங்கனிந்த பிரார்த்தனையாக இருக்கட்டும். ஒவ்வொரு தனிமனிதனும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்ந்தால் சமுதாயம் தானே திருந்தி வாழும்.


No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...