இறைவனைப் புகழ்வது எப்படி?

 

இறைவனைப் பாடுவது எப்படி?

----

கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்குத் தக நிற்க வேண்டும். இதுதான் அனுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே,  எல்லை இல்லாத பேரின்பத்தை அருளக் கூடிய இறைவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படை பிழையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவனிடத்தில் அன்பு வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். 

"அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலவன் கவியை, அன்பால் எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்" என்கிறார் அருணகிரிநாதர். இது அவர் பாடியருளிய பாடல்களுக்கு மட்டும் அல்லாமல், அவருக்கு முன்னாலே தோன்றிய அருளாளர்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், திருஞானசம்பந்தர் முதலியவர்கள் சிவபரம்பொருளைப் பற்றியும் பாடியருளி உள்ள பாடல்கள் அத்தனைக்கும் பொருந்தும். இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பலப்பல பாடல்கள் அருளாளர்கஙள் பாடி இருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இவ்வாறு கந்தர் அலங்காரத்தில் பாடினார் அருணகிரிநாதர்.

தமிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே பாடல்களால் அமைந்தவை. "பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை" என்பது பெரியபுராணம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு. குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு. குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு. குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு.  திருமணம் வந்தால் பாட்டு. இறுதியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வு அளப்பரிய பாடல்களால் ஆனது. அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் காலத்தை வெல்ல முடியாது. காலத்தை வென்றவன் ஆன இறைவன் திருவருளைப் பெற முடியாது.

பாடல்களைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி மனதில் உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால்  அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும்.

பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இறைவனிடம் இருந்தே தோன்றியது. எழுத்துக்களுக்குத் தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. "வாக்தேவதை" என்று சொல்வார்கள். ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, முகவரியையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது அல்லவா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால்,  அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

அழுகையே தன் மொழியாகக் கொண்டு பிறக்கும் குழந்தை, பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன. "குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

  'திருவள்ளுவருக்கு இசை வராது போலிருக்கிறது. அதனால்தான் அவருக்கு யாழின் இனிமையும் தெரியவில்லை. குழலின் இனிமையும் தெரியவில்லை' என்று நாயனார் கருத்து இன்னதென்று அறியாதவர்கள் அப்படிச் சொல்லலாம். குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது நாயனார் கருத்து அல்ல. முயற்சியும் பயிற்சியும் இருந்தால், சில ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் அப்படியே. வித்தையில் எவ்வளவுதான் வல்லவனாக ஒருவன் இருந்தாலும், சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச அவனுக்கு வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம். யானை மாதிரி பிளிறலாம்.  வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேச முடியாது. முயற்சி செய்து கற்றுக் கொள்ளுகிற குழலையும் யாழையும் விட, கற்றுக் கொள்ள முடியாத மழலையே சிறந்தது, இனிமையானது. முழு வார்த்தையையும் பேச வராத குழந்தை மழலை பேசுகின்றது. அதைக் கேட்டு மகிழ்கின்றனர் தாயும், தந்தையும். எழுத்து நன்றாகத் தெரியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் மகிழ்ச்சி அடைவதில்லை.  "குழந்தைக்கு ஏதோ என்னவோ!" என்று பயந்து, மருத்துவரிடம் அழைத்துப் போவார்கள். மழலைதான் இனிது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயதில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர் மகிழமாட்டார்கள். அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள்.

ஒரு விதையை நட்டால் முளை வெளியே வந்தவுடன் அது இனிச் செடியாகி நன்றாக வளரும் என எண்ணி மகிழுவது போல, அந்த மழலைச் சொல்லைக் கேட்டவுடன், இனி நன்றாக வளர்ந்து அழகாகப் பேசும் நிலையை அக்குழந்தை அடைந்து விடும் என்று எண்ணி தாய்தந்தையர் மகிழச்சி அடைகிறார்கள். மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெருவரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. பேச்சிலும் நல்லது, பொல்லாதது உண்டு. பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்து, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சு; நல்ல பேச்சு, பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு.

'நான் உனக்கு உதவுகிறேன்' ஒருவன் என்று சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவனுடைய உள்ளம் குளிருகின்றது. அவன் மேலும் நமக்கு உதவுவான் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். 

பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறது?  இறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவது உபகாரம் உண்டா?  என்றால் இல்லை. இதைப் பட்டினத்து அடிகளார் ஒரு பாடலின் வழி காட்டி உள்ளார்.


"பொன்னால் பிரயோசனம் பொன்படைத்

தாற்கு உண்டு, அப் பொன்படைத்தான்

தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு

  ஏது உண்டு, அத் தன்மையைப்போல்

உன்னால் பிரயோசனம் வேணது

  எல்லாம் உண்டு, இங்கு உன்தனக்கே

என்னாதல் பிரயோசனம் ஏது உண்டு

  காளத்தி ஈச்சுரனே"

நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற இறைவனுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று பட்டினத்து அடிகளார் சொல்கிறார். ஆனால், அபகாரந்தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினால் வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம், அவன் குழந்தைகளாகிய மக்களை வைது பேசுகிறோம். இப்படி அவனுக்கு நாம் அபகாரம் செய்கிறோமே தவிர, ஒரு விதமான உபகாரமும் செய்யவில்லை.

குழந்தை தத்தித் தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலே, அம்மா என்று குழந்தை கூப்பிட்டால் அதனைக் கேட்டு எல்லையில்லாத ஆனந்தம் அடைகிறாள். பள்ளியில் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்கிறது. அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல வேலைக்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகின்றது. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம், அக் குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும்விட மிக அதிகமானது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். எல்லா உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும் விளங்குகிறவன் இறைவன். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் சிறந்து விளங்கினால் இறைவன் திருவுள்ளம் மகிழும்.

ஒரு தாய், தன் மகன் தினமும் பள்ளிக்குப் போகும் போது, மத்தியான்ன வேளையில் வயிறு பசித்தால் ஏதாவது வாங்கித் தின்னட்டும் என்று கைக்காசு கொடுத்து அனுப்புவாள்.  பள்ளியின் வாசலுக்கு எதிரே ஒரு கிழவி சுண்டலை விற்றுக் கொண்டிருந்தாள். அதனை வாங்கி இரண்டு மூன்று நாள் சாப்பிட்டான். உடனே அவனுக்கு உடல் நலிவு வந்துவிட்டது. தலைவலி என்றான்; உடம்பு வலி என்றான். பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டுவிட்டான். 'ஏதோ நல்ல பொருளாகப் பசி நேரத்திற்கு வாங்கிச் சாப்பிடட்டும் என்று காசு கொடுத்தால் இந்தப் பையன் உடம்புக்கு ஆகாத பொருளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது. வாந்தி எடுக்கிறான். இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது'  என்றுதானே தாய் நினைப்பாள்?

இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். பள்ளிக்குச் சென்ற பிள்ளையைப் போலச் செய்தால் எப்படி? தாய் தான் காசு கொடுத்ததை நிறுத்திக் கொண்டது போல, இறைவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால், அவன் அடுத்த பிறவியில் நம்மை ஊமையாக்கி விடுவான்.

நாம் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு அதைத் திரும்ப வெளியில் துப்பினால் அதனை எச்சில் என்று சொல்லுகிறோம். உடம்புக்குள் போன எந்தப் பொருளாகட்டும், எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோ, மலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து ஒதுக்குகிறோம். உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று, எச்சில் படாத ஒன்று, மலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளி வருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும், மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அனுபவிக்கக் கூடியது பேச்சு மட்டும்தான். அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பலர் பயன்படுத்துகிறார்கள்.  இறைவனுடைய அருளினால் பெற்ற வாக்கை அவனுடைய திருவருளை நினைந்து பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த பயன்.

இறைவன் நமக்கு வாய் தந்திருப்பது சாப்பிடுவற்காக மாத்திரம் என்றால், எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால் அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி.  ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். எனவே, சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. 

"வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே."

என்று அப்பர் பெருமான் பாடி இருக்கிறார்.

நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும், அந்த வாயையும், நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன்?  அந்த வாய்க்குக் குடிக்கக் கூழும் கிடைக்காது என்கிறார் வள்ளல்பெருமான். "எந்தை! நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறு வாய்”. எனவே, வாய் கொடுத்த இறைவனை வாழ்த்துவது நம்முடைய முதற்கடமை. நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் புகழ வேண்டியது நம்முடைய கடமை. நாம் நம்முடைய நாவைக் கொண்டு மற்ற மக்களைப் புகழ்ந்து பேசினால் அவர்களுக்கு இன்பம் உண்டாகும். ஆனால் அவரிடம் விருப்பம் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாகும். யார் நமக்கு உபகாரம் செய்கிறார்களோ, அவர்களைப் புகழ்கிறோம். உபகாரம் செய்பவரைப் புகழ வேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும்.

இறைவன் புகழ் ஒன்றே பொருள்சேர் புகழ். அவனைப் புகழ்ந்தார்க்கு இருள்சேர் இருவினையும் சேரா என்கிறார் திருவள்ளுவ நாயனார். "இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்பது திருவள்ளுவர் வாய்மொழி. பொருள்சேர் புகழ் என்பதற்கு உண்மையான புகழ் என்பது பொருள். இறைவனுடைய புகழ் ஒன்றே உண்மையான புகழ்.  அவன் ஒருவனே புகழத் தக்கவன். எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகிய ஆண்டவனைப் புகழ்ந்தால், உண்மையை நாம் உணர்ந்து கொண்டவர்களாகவும் ஆவோம்; எல்லோரையும் புகழ்ந்ததாகவும் ஆகும். இதனை அப்பர் பெருமான் அருளிய திருத்தாண்டகப் பாடல் வழி அறியலாம்.

"நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்!

நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்!

மன் ஆனாய்! மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்!

மறைநான்கும் ஆனாய்! ஆறு அங்கம் ஆனாய்!

பொன் ஆனாய், மணி ஆனாய், போகம் ஆனாய்!

பூமிமேல் புகழ்தக்க பொருளே! உன்னை

என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்

ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே. "

இறைவனைப் புகழ்ந்து பாடும் நன்றி உணர்வால் வாய் பெற்ற பயன் பெற்றது அல்லமால், மற்றொரு பயனும் உண்டு. இறைவன் பாடலை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள், சாகும் காலத்தில் வந்து மிரட்டுகிடன்ற பாவி ஆகிய இயமனுக்கு அஞ்ச வேண்டாம். அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால், அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானே, அப்பொழுதா படிக்க முடியும்? சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்ல வராது. 

இறைவன் நினைப்புச் சாகிற காலத்தில் வருமா என்பதை அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். நம் நினைவில் என்ன என்ன எண்ணப்படுகின்றனவோ அவை கனவில் வருகின்றன. திருடனைக் கண்டு பயப்படுகிறோம்; திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம். நம் நினைவில் உள்ள திருடன் கனவில் வரும்போது, தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால் கனவிலும் இறைவன் வருவான். ஆனால், நாம் நினைப்பதில்லை.  அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகள் கனவில் தோன்றுகின்றன. கனவிலே இறைவனைக் காண வேண்டுமென்றால் நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு இறைவனது நினைவு எப்படி வரும்?

சுந்தரமூர்த்தி சுவாமிகள் "பிழைப்பன், ஆகிலும் திருவடிப் பிழையேன்; வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்" என்றும், "நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்று பாடுகிறார். இறைவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கிறதாம். அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால், கழிந்த நாள் கிடக்கட்டும், இப்பொழுதிலிருந்தாவது இறைவன் திருப்புகழைச் சொல்லப் பழகி வரவேண்டும். 

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்'  என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் சில்லென்று விழுகிறது. காரணம்? அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள்.

இதைப் போலவேதான் இறைவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.

"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்

எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன

விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே."  --- கந்தர் அலங்காரம்.

நாம் இயமன் வாயில்தான் தூங்குகிறோம். நம்மை அவன் எந்தச் சமயத்திலும் கொண்டு போய்விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. இயமன் முன் எச்சரிக்கை அனுப்பிவிட்டு வருகிற பேர்வழி அல்ல. அதனால் நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பு இறைவனை நினைந்து அவனை வாயாரப் பாடிப் பகழ்தலே. திருஞானசம்பந்தர், "நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்?"

என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார்.


No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...