பொது --- 1087. குடமென ஒத்த

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குடம் என ஒத்த (பொது)


முருகா! 

முத்திப் பேற்றை அருள்வாய்.


தனதன தத்த தந்த தனதன தத்த தந்த

     தனதன தத்த தந்த ...... தனதான


குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்

     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே


வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த

     மதசல முற்ற தந்தி ...... யிளையோனே


இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து

     இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய்


தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து

     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.


                           பதம் பிரித்தல்


குடம்என ஒத்த கொங்கை, குயில்மொழி ஒத்த இன்சொல்,

     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே!


வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த!

     மதசலம் உற்ற தந்தி ...... இளையோனே!


இடம்உடன் வைத்த சிந்தை இனைவு அற, முத்தி தந்து,

     இசை அறிவித்து வந்து ...... எனை ஆள்வாய்.


தடவரை வெற்பில் நின்று, சரவணம் உற்று எழுந்து,

     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.

பதவுரை

குடம் என ஒத்த கொங்கை --- குடத்தை நிகர்த்த கொங்கைகளையும்,

குயில் மொழி ஒத்த இன் சொல் --- குயிலை ஒத்த இனிய சொற்களையும் உடைய,

குறமகள் வைத்த நண்பை நினைவோனே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகி தேவரீர் மீது வைத்த அன்பை நினைந்து அவருக்கு அருள் புரிந்தவரே!

வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த --- வடதிசையில் உள்ள திருக்கயிலை மலையில் வீற்றிருக்கும் மகாதேவர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய கந்தசுவாமியே!

மதசலம் உற்ற தந்தி இளையோனே --- மதநீர் பொருந்திய யானைமுகத்தினை உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

தடவரை வெற்பில் நின்று --- உயர்ந்த திருக்கயிலை மலையில் அவதரித்து,

சரவணம் உற்று எழுந்து --- சரவணப் பொய்கையில் வளர்ந்து,

சமர்கள வெற்றி கொண்ட பெருமாளே --- சூரபதுமனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பெருமையில் மிக்கவரே!

இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து --- அடியேனுடைய மனத்தில் தேவரீர் இடம் பெறவேண்டும் என்று வைத்த வருத்தம் நீங்கும்படியாக அடியேனுக்கு முத்திப் பேற்றினை அருள் புரிந்து,

இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் --- இசை ஞானத்தை ஊட்டி வந்து அடியேனை ஆண்டு அருள் புரிவீராக.

பொழிப்புரை

குடத்தை நிகர்த்த கொங்கைகளையும், குயிலை ஒத்த இனிய சொற்களையும் உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகி தேவரீர் மீது வைத்த அன்பை நினைந்து அவருக்கு அருள் புரிந்தவரே!

வடதிசையில் உள்ள திருக்கயிலை மலையில் வீற்றிருக்கும் மகாதேவர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய கந்தசுவாமியே!

மதநீர் பொருந்திய யானைமுகத்தினை உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

உயர்ந்த திருக்கயிலை மலையில் அவதரித்து, சரவணப் பொய்கையில் வளர்ந்து, சூரபதுமனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பெருமையில் மிக்கவரே!

அடியேனுடைய மனத்தில் தேவரீர் இடம் பெறவேண்டும் என்று வைத்த வருத்தம் நீங்கும்படியாக அடியேனுக்கு முத்திப் பேற்றினை அருள் புரிந்து, இசை ஞானத்தை ஊட்டி வந்து அடியேனை ஆண்டு அருள் புரிவீராக.

விரிவுரை

வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த --- 

வரை - மலை. வடவரை - வடதிசையில் உள்ள திருக்கயிலை மலை.

மகாதேவர் என்னும் சொல் மகதெவர் என வந்தது.


மதசலம் உற்ற தந்தி இளையோனே --- 

மதசலம் --- மதநீர்.

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. மூத்தபிள்ளையார் என வழங்கப் பெறும் விநாயகப் பெருமானுக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. 

மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்தொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.

விழிமலர்ப்பூ சனைஉஞற்றித் திருநெடுமால் 

பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

முடைநாற்றம் மாறும் ஆற்றால், 

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

பூசைகொண்டு புதிதா நல்கிப், 

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

மதமாவைப் பணிதல் செய்வாம்.  --- காஞ்சிப் புராணம்.                                           


 உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்

தறிநிறுவி, உறுதியாகத்

தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,

இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்

களித்து உண்டு, கருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை  நினைந்து

வரு வினைகள் தீர்ப்பாம். --- திருவிளையாடல் புராணம்.

        எனவே, இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.


இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற  --- 

இனைவு - வருத்தம், 


கருத்துரை


முருகா! முத்திப் பேற்றை அருள்வாய்.


No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...