பொது --- 1088. மடவியர் எச்சில்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மடவியர் எச்சில் (பொது)


முருகா! 

அடியேனை ஆண்டு அருள்வாய்.

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த

     தனதன தத்த தந்த ...... தனதான


மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து

     மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான


சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து

     தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய்


படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற

     பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே


குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த

     குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.


                                பதம் பிரித்தல்


மடவியர் எச்சில் உண்டு, கையில் முதலைக் களைந்து,

     மறுமை தனில் சுழன்று, ...... வடிவான


சட(ம்)மிக வற்றி நொந்து, கலவி செயத் துணிந்து,

     தளர்வு உறுதற்கு முந்தி ...... எனை ஆள்வாய்.


படஅரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற

     பசு முகிலுக்கு உகந்த ...... மருகோனே!


குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த

     குமர! குறத்தி நம்பு ...... பெருமாளே.

பதவுரை

பட அரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற பசுமுகிலுக்கு உகந்த மருகோனே --- படங்களை உடைய (ஆதி சேடன் என்னும்) பாம்பே படுக்கைக்குத் தக்க இடம் என்று கொண்டு அதில் பள்ளி கொண்டருளி கரிய மேகம் போன்ற திருமாலின் அன்புக்குரிய திருமருகரே!

குடமுனி கற்க --- அகத்திய முனிவர் கற்க வேண்டி,

அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர --- அக்காலத்தில் தமிழின் பொருளை அவர் செவியில் உபதேசித்து அருளிய குமாரக் கடவுளே!

குறத்தி நம்பு பெருமாளே --- குறமகள் வள்ளிநியாகி விரும்பிய பெருமையில் மிக்கவரே!

மடவியர் எச்சில் உண்டு --- பொதுமகளிரின் வாயில் ஊறும் எச்சிலை உண்டு,

கையில் முதலைக் களைந்து --- கையில் உள்ள மூலப்பொருளை அவர்பொருட்டுச் செலவழித்து,

மறுமை தனில் சுழன்று --- மறுபிறப்புக்கு ஏதுவான செயல்களில் உழன்று.

வடிவான சடம் மிக வற்றி நொந்து --- அழகான உடம்பு மிகவும் இளைத்து, அதனால் மனமும் உடலும் வருந்தி,

கலவி செயத் துணிந்து --- புணர்ச்சி இன்பத்தில் திளைத்து இருக்கத் துணிந்து,

தளர்வு உறுதற்கு முந்தி எனை ஆள்வாய் --- தளர்ச்சியை அடையும் முன்பாக அடியேனை ஆண்டு அருளவேண்டும்.

பொழிப்புரை

படங்களை உடைய ஆதி சேடன் என்னும் பாம்பே படுக்கைக்குத் தக்க இடம் என்று கொண்டு அதில் பள்ளி கொண்டருளி கரிய மேகம் போன்ற திருமாலின் அன்புக்குரிய திருமருகரே!

அகத்திய முனிவர் கற்க வேண்டி, அக்காலத்தில் தமிழின் பொருளை அவர் செவியில் உபதேசித்து அருளிய குமாரக் கடவுளே!

குறமகள் வள்ளிநியாகி விரும்பிய பெருமையில் மிக்கவரே!

பொதுமகளிரின் வாயில் ஊறும் எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்பொருட்டுச் செலவழித்து, மறுபிறப்புக்கு ஏதுவான செயல்களில் உழன்று. அழகான உடம்பு மிகவும் இளைத்து, அதனால் மனமும் உடலும் வருந்தி, புணர்ச்சி இன்பத்தில் திளைத்து இருக்கத் துணிந்து, தளர்ச்சியை அடையும் முன்பாக அடியேனை ஆண்டு அருளவேண்டும்.

விரிவுரை

குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர --- 

குடமுனி --- ஒருகாலத்தில் கடற்கரையில் இருந்த மித்திரா வருணர் என்பவர்கள் ஊர்வசி என்னும் தேவமாதைக் கண்டு காம உணர்வு மேலிட்ட போது, தங்கள் வீரியத்தை ஒருவர் கும்பத்திலும் ஒருவர் தண்ணீரிலும் விடுக்க, கும்பத்தில் இருந்து அகத்தியரும் தண்ணீரில் இருந்து வசிட்டரும் தோன்றினர் என்றும், இதனால் அகத்தியர் குடமுனி என்றும், வசிட்டர் கும்பமுனி என்றும் வழங்கப்படுகின்றனர்.

அகத்திய முனிவர் ஒருகாலத்தில் சிவபெருமானுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிச், "செந்தமிழ் மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகை மலைக்குச் சென்று முருகனை நோக்கித் தவம் செய்வாயாக. அவ்வாறு செய்யின், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். தணிகை மலைக்குப் போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும், அவ்வூர்ப் பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப் பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும். அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களை எல்லாம் போக்குவதும் அல்லாமல் பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும் ஒழிக்கும். மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும் ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச் செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் அடைதற்கு எண்ணினாலும், மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளை எல்லாம் அத் திருத்த நீராடலால் அடையலாம்.

அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை என்று ஒருகால் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும் துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத்தணிகை மலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட் பிறப்பால் அடைய எண்ணிய நால்வகைப் பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை அடைவதற்குக் காலத்தினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அருட்செல்வம் மிகுந்த திருத்தணிகை மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க்குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோ, தொழில்முறைகளாலோ தணிகைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவோரும் கூட மறுபிறவியில் கந்தலோகத்த அடைந்து இன்புறுவார்கள். தணிகைப் பதியில் செய்யப்பெறும் அறங்கள் பிற இடங்களில் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும். அப்பதியில் முருகக் கடவுள் இச்சை, ஞானம், செய்கை என்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி 'ஞான சத்திதரன்' என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள் சாயுச்சிய பதவியை அடைந்து, அம்முருகப் பெருமானே ஆவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.

இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக் கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு வந்தார். நந்தியாற்றில் நீராடினார். வீராட்டகாசத்தையும் முருகக் கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பலநாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை எல்லாம் உபதேசித்து அருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார். இவ்வாறு தணிகைப் புராணம் கூறும்.


குறத்தி நம்பு பெருமாளே --- 

நம்புதல் - விரும்புதல்.  "நம்பும் அடியர்தமை ஆளவந்த பெருமாளே" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் குறித்துள்ளது காண்க. 


கருத்துரை


முருகா! அடியேனை ஆண்டு அருள்வாய்.


No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...