60. கற்பில் மேம்பட்டவர்கள்

 60. கற்பு மேம்பாடு உடையவர்கள்

-----


"தன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்

     தனக்கு இணங்காத நிறையாள்,

  தழல்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்

     சாபம் கொடுத்த செயலாள்,


மன்னிவளர் அழல்மூழ்கி உலகு அறியவே தனது

     மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,

  மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி

     வாள்மாலை யான கனிவாள்,


நல்நதி படிந்திடுவது என்ன ஆர் அழல்மூழ்கி

     நாயகனை மேவு தயவாள்,

  நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,

     நளினமலர் மேல்வை தேகி


அன்னம் என வருசந்த்ர மதிதுரோ பதை என்பர்

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆதியே --- முதற்பொருள் ஆனவரே!

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தன் கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன் தனக்கு இணங்காத நிறையாள் நானிலம் புகழ்சாலி --- தன்னுடைய கணவனின் வடிவத்துடன் தன்னைக் கூட வந்தவனுக்கு இணங்காத நிறைந்த கற்பினை உடையவள் உலகம் புகழும் அருந்ததி ஆவாள், 

தழல் கதிர் எழாமலும் பொழுது விடியாமலும் சாபம் கொடுத்த செயலாள் பேர் பெறு நளாயினி ---  கதிரவன் தோன்றாமலும், இரவு கழியாமலும் சாபம் கொடுத்த செய்கையினை உடையவள் புகழ்பெற்ற நளாயினி ஆவாள், 

மன்னி வளர் அனல் மூழ்கி உலகு அறியவே தனது மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள் நளின மலர் மேல் வைதேகி --- பொருந்தி வளர்ந்த தீயில் புகுந்து உலகம் அறியுமாறு தன் கணவனை அடைந்த அன்பினை உடையவள் தாமரை மலர்மேல் இருக்கும் இலக்குமியின் வடிவான சீதை, 

மைந்தனைச் சுட வந்த இறைவன் தடிந்த வடிவாள் மாலையான கனிவாள் அன்னம் எனவரு சந்திரமதி ----இறந்த தனது மகனைத் தீயில் இட சுடுகாட்டுக்கு வந்தபோது, தன் கணவன் வெட்டிய கூரிய வாள் ஆனது மலர் மாலையான கனிவினை உடையவள் அன்னம் போன்ற நடையை உடைய சந்திரமதி, 

நல் நதி படிந்திடுவது என்ன ஆர் அழல் மூழ்கி நாயகனை மேவு தயவாள் துரோபதை --- நல்ல ஆற்றிலே மூழ்குவதுபோல நிறைந்த தீயிலே முழுகித் தன் கணவனைக் கூடும் அன்பினை உடையவள் திரௌபதி, 

என்பர் --- என்று மேலோர் கூறுவர்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...