அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுடரொளி கதிரவன் (பொது)
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ...... தனதான
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
சூழ்ந்தோங் ...... கிடுபாரிற்
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
சோர்ந்தோய்ந் ...... திடநாறுங்
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
கான்போந் ...... துறவோருங்
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
காய்ந்தாண் ...... டருளாயோ
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
தாந்தோய்ந் ...... திருபாலும்
தமருக வொலிசவு தத்திற் றத்தத்
தாழ்ந்தூர்ந் ...... திடநாகம்
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
பாய்ந்தாய்ந் ...... துயர்கானம்
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
பாங்காம் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுடர்ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச்
சூழ்ந்து ஓங் ...... கிடு பாரில்,
துயர், இருவினை, பல சுற்றப் பட்டுச்
சோர்ந்து ஓய்ந் ...... திட நாறும்
கடுக என எடும் என் உடல் பற்று அற்றுக்
கான்போம் ...... துறவோரும்,
கனல் இடை விதியிடு தத் துக்கத்தைக்
காய்ந்து ஆண்டு ...... அருளாயோ?
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க,
தாம் தோய்ந்து ...... இருபாலும்
தமருக ஒலி சவுதத்தில் தத்த,
தாழ்ந்து ஊர்ந் ...... திட, நாகம்
படி நெடியவர் கரம் ஒத்தக் கெத்துப்
பாய்ந்து ஆய்ந்து ...... உயர்கானம்
பயில்பவர் புதல்வ! குறத் தத்தைக்குப்
பாங்கு ஆம் ...... பெருமாளே.
பதவுரை
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்கத் தாம் தோய்ந்து --- பெருமை உடைய வயிரவர்கள் செருக்குற்று ஒன்று கூடிப்பொருந்தி,
இருபாலும் தமருக ஒலி சவுதத்தில் தத்த --- இருபுறமும் உடுக்கையின் ஓசை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க,
தாழ்ந்து ஊர்ந்திட நாகம் படி நெடியவர் கரம் ஒத்த --- திருச்சடையில் அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் திருமால் கைகளால் மத்தளம் வாசிக்க
கெத்துப் பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் பயில்பவர் புதல்வ --- கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்து இலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே திருநடனம் புரிபவரான சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!
குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!
சுடர் ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச் சூழ்ந்து ஓங்கிடு பாரில் ... ஒளி வீசும் கதிரவன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில்
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட --- துயரம், நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, அதனால் சோர்வடைந்து அலுத்து ஓய்ந்து இறுதியில் பிணமாக,
நாறும் கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று --- பிணம் நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த உடல் மீது கொண்டுள்ள பற்று ஒழிந்து,
கான் போந்து உறவோரும் கனல் இடை விதி இடு --- சுடுகாட்டுக்குப் போய் உறவினரும் பிறரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற,
தத் துக்கத்தைக் காய்ந்து ஆண்டு அருளாயோ --- அந்தத் துக்கத்தை ஒழித்து, அடியேனை ஆண்டு அருள மாட்டாயோ?
பொழிப்புரை
பெருமை உடைய வயிரவர்கள் செருக்குற்று ஒன்று கூடிப்பொருந்தி, இருபுறமும் உடுக்கையின் ஓசை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, திருச்சடையில் அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் திருமால் கைகளால் மத்தளம் வாசிக்க, கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்து இலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே திருநடனம் புரிபவரான சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!
குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!
ஒளி வீசும் கதிரவன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துயரம், நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, அதனால் சோர்வடைந்து அலுத்து ஓய்ந்து இறுதியில் பிணமாக, பிணம் நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த உடல் மீது கொண்டுள்ள பற்று ஒழிந்து, சுடுகாட்டுக்குப் போய் உறவினரும் பிறரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற, அந்தத் துக்கத்தை ஒழித்து, அடியேனை ஆண்டு அருள மாட்டாயோ?
No comments:
Post a Comment