57. இவை எல்லாம் பயன்படாமல் அழியும்.

 


57.  இவை எல்லாம் பயன்படாமல் அழியும்.

                             -----


"மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,

     மூதுஅரண் இலாத நகரும்,

  மொழியும்வெகு நாயகர் சேர்இடமும், வரும்எதுகை

     மோனை இல்லாத கவியும்,


காப்புஅமைவு இலாததோர் நந்தவனமும், நல்ல

     கரை இலா நிறை ஏரியும்,

  கசடு அறக் கற்காத வித்தையும், உபதேச

     காரணன் இலாத தெளிவும்,


கோப்புஉள விநோதம்உடை யோர்அருகு புகழாத

     கோதையர்செய் கூத்தாட்டமும்,

  குளிர்புனல் நிறைந்து வரும் ஆற்று ஓரம் அதில்நின்று

     கோடு உயர்ந்து ஓங்கு தருவும்,


ஆப்பு அது இல்லாத தேர், இவைஎலாம் ஒன்றாகும்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஐயனே --- தலைவனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மூப்பு ஒருவர் இல்லாத குமரி குடி வாழ்க்கையும் --- மூத்த ஒருவருக்கு அடங்கி வாழாமல் சுயேச்சையாக வாழ்கின்ற இளம் பெண்ணின் வாழ்க்கையும்,

  மூது அரண் இலாத நகரும் --- பழைமையான காவல் இல்லாத நகர மும், 

மொழியும் வெகுநாயகர் சேர் இடமும் --- அதிகாரம் படைத்தவர்கள் சேர்ந்துள்ள இடமும்,

வரும் எதுகை மோனை இல்லாத கவியும் --- இலக்கடத்தில் சொல்லப்படும் எதுகையும் மோனையும் சேராத பாடலும், 

காப்பு அமைவு இலாதது ஓர் நந்தவனமும் --- காவல் பொருந்தி இராத ஒரு பூங்காவும், 

நல்ல கரை இலா நிறை ஏரியும் --- நல்ல கரையில்லாது உள்ள நீர் நிறைந்த ஏரியும், 

கசடுஅறக் கற்காத வித்தையும் --- மனக் குற்றங்கள் அறுமாறு கல்லாத கல்வியும், 

உபதேச காரணன் இலாத தெளிவும் --- கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைகளால் வருகின்ற தெளிவும், 

கோப்பு உள விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர் செய் கூத்தாட்டமும் --- கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத விறலியர் என்பவர்கள் ஆடுகின்ற கூத்தும், 

குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் --- குளிர்ந்த நீர் நிறைந்து வரக்கூடிய ஆற்றின் கரையிலே வளருகின்ற நீண்ட உயர்ந்த கொம்புகளை உடைய மரமும், 

ஆப்பு அது இல்லாத தேர் ---- அச்சாணி இல்லாத தேரும், 

இவையெலாம் ஒன்று ஆகும் - இவை யாவும் ஒரே தன்மையுடையன ஆகும். இவை எல்லாம் அழியக் கூடியவை ஆகும்.


      விளக்கம் --- இதே பொருள் பட வந்துள்ளது, பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று.

"மூப்பு இலாக் குமரி வாழ்க்கை, 

முனை இலா அரசன் வீரம்,

காப்பு இலா விளைந்த பூமி, 

கரை இலாது இருந்த ஏரி,

கோப்பு இலான் கொண்ட கோலம், 

குருஇலான் கொண்ட ஞானம்,

ஆப்பு இலா சகடுபோலே 

அழியும் என்று உரைக்கல் ஆமே."

(தனக்கு மூத்தோர் ஒருவர் இருந்து, அவருக்கு அடங்கி வாழாத இளம் பெண்ணின் வாழ்க்கை, கோபம் கொள்ளாத அரசனின் வீரம், காத்தல் இல்லாத, நெல் விளைந்த நிலம், வலிமையான கரை இல்லாமல் இருந்த ஏரி, (குளம் என்றும் கொள்ளலாம்), பெருமைக்கு உரிய செல்வத்தைத் தன்னிடம் கொண்டு இராத ஒருவன் செய்துக் கொண்ட ஆடம்பரமான அலங்காரம்,

குருநாதர் ஒருவர் மூலம் அறிந்துகொள்ளாமல், ஒருவன் தானே கற்றுக் கொண்ட கல்வி அறிவு, இவை எல்லாம், அச்சாணி இல்லாத வண்டி போல, பயன்றறவையாய் அழிந்து போகும் என்று உறுதியாகச் செல்லலாம் என்பது இப்பாடலின் பொருள்.)

முதுமை + அரண் : மூதரண் என வந்தது. கோட்டை. 


மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் 

காடும் உடையது அரண். ---  திருக்குறள்.


மணிபோல் தெளிந்த நீர் நிலையும், நிலப்பகுதியும், மலைத் தொடர்களும், தொடர்ந்த நிழலோடு கூடிய காடுகளும் ஒரு நாட்டிற்குச் சிறந்த அரண்கள் ஆகும்.

அதிகாரம் படைத்தவர்கள் ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தால், தங்களில் யார் அதிகாரம் நிறைந்தவர் எனக் காட்டிக் கொள்வதிலும், ஒருவர் அதிகாரத்தை இன்னொருவர் பறிக்கும் செயலும் மிகுந்து இருக்கும்.

பாடலுக்கு இலக்கணமாக (இலட்சணமாக) உள்ளவை எதுகையும், மோனையும். அப்படி அமைந்தால் பாடல் இனிமையாக, சொல்லழகும், பொருள் அழகும் நிறைந்து இருக்கும். இக் காலத்தில் வரியைப் பிளந்து எழுதினாலே பாட்டு என்று ஆகிவிட்டது. "கானமயில் ஆடக் கண்டு இருந்த வான்கோழி, தானும் அதுவாகப் பாவித்து, தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி" என்னும் ஔவைப் பிராட்டியின் பாடல் இக்காலத்தில் பொருந்தும்.

கற்கவேண்டிய நூல்களைக் கற்று மனமாசு அடங்குவதே கல்வியாகும். கசடு அறக் கற்றலாவது,  நூலைக் கற்கும்போது உண்டாகும் விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடன் இருந்து பலகாலும் பயிலுதல் எனப் பரிமேலழகர் பெருமான் காட்டியது.

உபதேசகாரணன் - கற்பிக்குந் தலைவன். ‘கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்', ‘ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்' என்பவை இங்கு நினைக்கத் தக்கவை.

    கருத்து --- எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.


No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...