58. இவையே போதும்
"பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர்
பூவலம் செய வேண்டுமோ?
பொல்லாத கொலைகளவு இலாத நன்னெறி உளோர்
புகழ்அறம் செய வேண்டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
நல்லறம் செய வேண்டுமோ?
நல்மனோ சுத்தி உண்டான பேர் மேலும் ஒரு
நதி படிந்திட வேண்டுமோ?
மெய்யா நின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
விரும்பி வழிபட வேண்டுமோ?
வேதியர் தமைப் பூசை பண்ணுவோர் வானவரை
வேண்டி அர்ச்சனை செய்வரோ?
ஐயாறு உடன் கமலை, சோணாசலம், தில்லை
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை அதிபனே --- திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் எனப்படும் தில்லை ஆகிய திருத்தலங்களின் தலைவனே! அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர் பூவலம் செய வேண்டுமோ --- அழிவில்லாத உண்மையும் ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வருதல் வேண்டுமோ?
பொல்லாத கொலை களவு இலாத நன்னெறி உளோர் புகழ்அறம் செயவேண்டுமோ --- தீய கொலையும் களவும் ஆகிய பாதகச் செயல்கள் அற்று, நல்லொழுக்க நெறியில் நற்பவர் புகழத்தக்க அறங்களைச் செய்தல் வேண்டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ --- என்றும் குறையாத ஆசையையும் உலோபத்தனத்தையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தைச் செய்தல் வேண்டுமோ?
நல் மனோ சுத்தி உண்டான பேர் மேலும் ஒரு நதி படிந்திட வேண்டுமோ --- நல்ல உள்ளத் தூய்மை பெற்றவர்கள், புண்ணிந நதிகளில் முழுகுதல் வேண்டுமோ?
மெய்யா நின் அடியரை பரவுவோர் உன்பதம் விரும்பி வழிபட வேண்டுமோ --- உமது அடியவரை உண்மையாக வணங்குவோர், உமது திருவடியைப் போற்றி வழிபட வேண்டுமோ?
வேதியர் தமைப் பூசை பண்ணுவோர், வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ --- மறையவரை வணங்குவோர், வானவரை விரும்பி மலரிட்டு வழிபடுவரோ?
விளக்கம் --- பூவலம் செய்தல் என்பது திருத்தல யாத்திரை, தீர்த்த யாத்திரை சென்று வருவதைக் குறிக்கும். அருள் நூல்களையும் நீதி நூல்களையும் ஓதி மெய்யறிவு பெறுதல் வேண்டும். அது குருமுகமாக அமைவதே சிறந்தது.
சற்குருவின் பெருமையைத் திருமந்திரம் கூறுமாறு காண்க...
"தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு,
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து, தத்துவ அதீதத்துச் சார் சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே."
இப் பாடலின் பொழிப்புரை : சற்குருவே தன்னை அடைந்த மாணாக்கர்க்குத் திருவருளை வழங்கிக் காக்கும் பதி ஆவான். அவனை அடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தையாலும், திருவடி சூட்டலாலும் தன்னை அடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்து விடுவான்.
எனவே, சற்குருவின் பெருமை அவரது செயலால் விளங்கும் என்பதும், அது வெற்று வேடத்தால் மட்டுமே விளங்காது என்பதும் அறியப்படும்.
"தவிர வைத்தான் வினை, தன் அடியார் கோள்
தவிர, வைத்தான் சிரத்தோடு தன் பாதம்,
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்,
தவிர வைத்தான் பிறவித் துயர் தானே."
இப் பாடலின் பொழிப்புரை : (சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும், ஒன்பது கோள்களின் தீங்கு நீங்கவும், யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.
எனவே, சற்குரு ஒருவனுக்கு இறையருளால் வாய்க்கவேண்டும். அதற்காகத்தான், தீர்த்த யாத்திரையும், தலயாத்திரையும் மேற்கொள்ளுவது. "மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" என்னும் தாயுமான அடிகளின் அருள் வாக்கு உணரத்தக்கது.
குருமுகமாக இருந்து அருள் நூல்களையும், நீதி நூல்களையும் ஓதித் தெளியவேண்டும். ஓதுவது, ஒழியாமல் நிகழவேண்டும். "ஓதுவது ஒழியேல்" என்ற ஔவையார் திருவாக்கின்படி, அறநூல்களை ஓயாது ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் குற்றமற ஓதுதல் வேண்டும். குற்றம் என்பது, ஐயம், திரிபு, மயக்கம் என குற்றங்கள் மூன்று என உணர்க. பொருளினிடத்தில் உண்டா, இல்லையா என்று ஐயுறுதல், ஒன்றை ஒன்றாக மாறுபட அறிதல், உண்மை அறியாமல் மயங்குதல். இந்தக் குற்றங்கள் கடிந்து கற்றல் வேண்டும்.
இதனையே, திருவள்ளுவர், "கற்க. கசடுஅறக் கற்க. கற்பவை கற்க. கற்றபின் அதற்குத் தக நிற்க" என்று கூறுகின்றார்.
"கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
ஓதுவதன் பயன் ஒழுக்கம் உடைமை எனவும், ஒழுக்கம் இல்லாதார் ஓதியும் பயனில்லை என உணர்க.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். --- உலகநீதி.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.--- கொன்றைவேந்தன்.
ஓதலின் நன்று ஒழுக்கம் உடைமை.. --- கொன்றைவேந்தன்.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.--- கொன்றைவேந்தன்.
கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல். --- வெற்றிவேற்கை.
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை.. --- முதுமொழிக் காஞ்சி.
"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்." --- அறநெறிச்சாரம்.
"பேருரை கண்டு அறியாது தலைச்சுமை
ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,
போரில் நடந்து அறியாது பதினெட்டு
ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,
ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்
பொருள் சுமந்த அறிவிலோனும்,
காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
கழுதைக்குஒப் பாவர் தாமே." --- தண்டலையார் சதகம்.
இனி, ஓதுகின்ற நாள்களும் குற்றமில்லாத நாள்களாக அமைய வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, புவுர்ணமி, அமாவாசை, பிரதமை. என மாதத்தில் எட்டு நாள்கள் ஓதக் கூடாது.
"அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது,
சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும், --- கெட்டஉவா
வித்தைக்கு நாசமாம், வெய்ய பிரதமையில்
பித்தரும் பேசார் பிழை." --- ஔவையார்.
ஆசிரியர் கற்பிக்கும்போது கவனமின்றிக் கேட்டல், பராக்குப் பார்த்தல், சிந்தையை வேறு இடத்தில் செலுத்துதல், அசட்டையாக இருத்தல், அவமதிப்புடன் நிற்றல் முதலியவைகளும் குற்றம் என அறிக. எனவே, குற்றம் கடிந்து, குணம்கொண்டு அடக்கமும் பணிவும் மேற்கொண்டு, அறிவை வளர்க்கும் அறநூல்களை ஓதுதல் வேண்டும்.
"ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும், தான்அடங்காப்
பேதையில் பேதையர் இல்." --- திருக்குறள்.
அவ்வாறு, பூவலம் செய்வதால் உண்டாகும் நற்பண்புகள் இயல்பாகக் கைவரப்பெற்ற ஒருவர் மேலும் பூவலம் செய்தல் வேண்டத் தகுவது அல்ல என்பதைக் காட்ட ‘பொய்யாத ....... வேண்டுமோ!' என்றார்.
கொலை, களவு முதலிய பெரும் பாதகங்களை ஒருவன் செய்யாது ஒழுகுதல் நன்னெறி ஆகும். அதுவே அறமும் ஆகும் என்பதால், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்" என்றார் திருவள்ளுவ நாயனார். மனமாசு அற்று, உயிர்கள்பால் கருணை பூண்டவர்கள், உலகமக்கள் எக்காலத்திலும் இன்புற்றிருக்க எண்ணுவார்கள். "எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" எனாறர் தாயுமானார்.
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவை உட்பகை என்பர் பெரியோர். உள்ளத்தில் மறைந்து உள்ள இந்தப் பகைகள் ஆன்மலாபத்தைக் கெடுத்து, உயிரைப் பிறவிக் குழியில் வீழ்த்துவன.
நையாத காமம் - குறையாத ஆசை.
சோண + அசலம். சோணாசலம், நெருப்பு மலை. திருவண்ணாமலையைக் குறிக்கும்.
அடியவர் உள்ளத்தே ஆண்டவன் குடிகொண்டு இருப்பான். எனவே, அடியாரை வழிபட்டால் ஆண்டவனையே வழிபட்டதாகும். அடியார் வழிபாடு மிகுந்த நன்மையை அளிக்கும். அடியார்க்கு அடியாரையும் வழிபடலாம் என்பதால், "அடியார்க்கு அடியேன்" என்றும் "அடியார் அடியார்க்கும் அடியேன்" என்றும் திருத்தொண்டத் தொகை அறிவுறுத்துகின்றது.
மெய்யடியார் பெருமையைக் குறிக்கும் பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க...
"மிடிஇட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலம் எனவும்
மெய் எலாம் உள் உடைந்து,
வீறிட்ட செல்வர்தம் தலைவாயில் வாசமாய்
வேதனைகள் உற, வேதனும்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான், பாவிநான்
தொடர்இட்ட தொழில்கள் எல்லாம்
துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டு ஆயது, உன
தொண்டர்பணி செய்வது என்றோ?
அடிஇட்ட செந்தமிழின் அருமை இட்டு ஆரூரில்
அரிவை ஓர் பரவைவாயில்
அம்மட்டும் அடிஇட்டு நடை நடந்து அருள் அடிகள்
அடிஈது முடிஈது என
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே!
வளமருவு தேவைஅரசே!
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காதலிப் பெண்உமையே." --- தாயுமானார்.
:பூரணி, புராதனி, சுமங்கலை, சுதந்தரி,
புராந்தகி, த்ரியம்பகி, எழில்
புங்கவி, விளங்கு சிவசங்கரி, சகஸ்ரதள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி, மனாதீத நாயகி, குணாதீத
நாதாந்த சத்தி என்று உன்
நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே
நான் உச்சரிக் கவசமோ?
ஆர் அணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ,
அகிலாண்ட கோடிஈன்ற
அன்னையே! பின்னையும் கன்னி என மறைபேசும்
ஆனந்த ரூபமயிலே!
வார் அணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவைஅரசே!
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே." --- தாயுமானார்.
"பார்கொண்ட நடையில் வன்பசி கொண்டு வந்து இரப்
பார்முகம் பார்த்து இரங்கும்
பண்பும், நின் திருவடிக்கு அன்பும், நிறை ஆயுளும்,
பதியும், நல்நிதியும், உணர்வும்,
சீர்கொண்ட நிறையும், உள்பொறையும், மெய்ப்புகழும், நோய்த்
தீமைஒரு சற்றும் அணுகாத்
திறமும்,மெய்த் திடமும், நல்இடமும், நின்அடியர் புகழ்
செப்புகின்றோர் அடைவர்காண்;
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும், மயிலும், ஒரு
கோழிஅம் கொடியும், விண்ணோர்
கோமான்தன் மகளும்,ஒரு மாமான்தன் மகளும்,மால்
கொண்டநின் கோலம் மறவேன்,
தார்கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!" --- திருவருட்பா
"வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ?
வானைஒரு மான் தாவுமோ?
வலிஉள்ள புலியை ஓர் எலிசீறுமோ? பெரிய
மலையை ஓர்ஈ சிறகினால்
துன்புற அசைக்குமோ? வச்சிரத் தூண்ஒரு
துரும்பினால் துண்டம் ஆமோ?
சூரியனை இருள் வந்து சூழுமோ? காற்றில் மழை
தோயுமோ? இல்லை, அதுபோல்
அன்புஉடைய நின்அடியர் பொன் அடியை உன்னும் அவர்
அடிமலர் முடிக்கு அணிந்தோர்க்கு,
அவலம் உறுமோ? காமம் வெகுளி உறுமோ? மனத்து
அற்பமும் விகற்பம் உறுமோ?
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!" --- திருவருட்பா.
"வேதத்தை விட்ட அறம் இல்லை" என்றது திருமந்திரம். "வேதம்" என்னும் சொல், 'வித்' என்னும் சொல்லின் அடியாக வந்தது. வித் என்றால் வித்தை அல்லது அறிவு எனப்படும். மெய்யறிவு பெறுவதற்குத் துணை புரிவது வேதம். மெய்யறிவு பெற்ற உயிரானது அறவழியில் ஒழுகும். வேதம் என்பது வாழ்வியல் நெறி. ஆகமம் என்பது வழிபாட்டு நெறி. அறவழியில் நின்றோர் அனைவரும் அந்தணர். அவர் எல்லா உயிரும் இன்புற்றிருக்க எண்ணுவர். உலக நன்மைக்காகவே வாழ்வர் என்பதால், "அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்" என்றார் திருவள்ளுவ நாயனார். இவருள்ளத்தும் இறைவன் குடிகொண்டு இருப்பான். எனவே, வேதியரை வணங்கினோர் வேறு தேவரை வணங்கவேண்டியதில்லை என்றார்.
No comments:
Post a Comment