திருவிடைக்கழி - 0807. முலை குலுக்கிகள்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முலை குலுக்கிகள் (திருவிடைக்கழி)

முருகா!
விலைமாதர் வசப்படாமல் காத்து அருள்வாய்.


தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
     தனன தத்தன தனதன ...... தனதான


முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
     முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல்

மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
     முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ்

கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம ளியின்மிசை
     கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி

கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
     கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே

அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
     அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா

அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
     அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே

சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
     திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே

திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
     திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

முலை குலுக்கிகள், கபடிகள், வடி புழுக்கைகள், சடிகள்,
     முறை மசக்கிகள், திருடிகள், ...... மதவேள் நூல்

மொழி பசப்பிகள், விகடிகள், அழும் மனத்திகள், தகுநகை
     முகம் மினுக்கிகள், கசடிகள், ...... இடையே சூழ்

கலை நெகிழ்த்திகள், ளைஞர்கள் பொருள் பறித்து, அமளியின் மிசை
     கனி இதழ்ச் சுருள் பிளவு இலை ...... ஒருபாதி

கலவியில் தரும் வசவிகள், விழி மயக்கினில் வசம் இழி
     கவலை அற்றிட, நினது அருள் ...... புரிவாயே.

அலை நெருப்பு எழ, வடவரை பொடி பட, சமணர்கள்குலம்
     அணி கழுப் பெற நடவிய ...... மயில்வீரா!

அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபட, பிரியமும்வர
     அவரவர்க்கு ஒரு பொருள்புகல் ...... பெரியோனே!

சிலை மொளுக்கு என முறிபட, மிதிலையில் சநக மன் அருள்
     திருவினைப் புணர் அரி திரு ...... மருகோனே!

திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது, கதலிகள் வளர்
     திரு இடைக்கழி மருவிய ...... பெருமாளே.


பதவுரை

      அலை நெருப்பு எழ --- கடல் தீப்பிடிக்க,

     வடவரை பொடிபட --- வடக்கிலுள்ள கிரவுஞ்ச மலை பொடியாக,

     சமணர்கள் குலம் அணி கழுப்பெற நடவிய மயில் வீரா --- சமணர்களின் கூட்டமானது வரிசையாக அமைக்கப்பட்ட கழுமரங்களில் ஏறத் திருஞானசம்பந்தராக வந்து அவதரித்த மயில் வீரரே!

      அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபட --- அரன், திருமால், பிரமன் மூவரும் முன்பு வழிபட்டுப் போற்ற,

     பிரியமும் வர --- அவர்கள்பால் அன்பு வைத்து,  

     அவர் அவர்க்கு ஒருபொருள் புகல் பெரியோனே --- அவரவர்க்கு உரிய முறையில் ஒப்பற்ற மெய்ப்பொருளை உபதேசித்த பெரியவரே!

      மிதிலையில் --- மிதிலை நகரில்,

     சிலை மொளுக்கு என முறிபட --- வில்லானது மொளுக்கு என்று முறிந்து விழச் செய்து,

     சநக மன் அருள் திருவினைப் புணர் அரி திருமருகோனே ---  ஜனக மன்னர் அருளிய திருமகளைத் திருமணம் புணர்ந்த இராமபிரான் ஆகிய திருமாலின் அழகிய மருகரே!

      திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது --- திரண்டு வளர்ந்துள்ள பலா மரங்கள், கமுகு மரங்கள் சொரிகின்ற தேன் பொழிகின்ற வயல்களில்,

     கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே --- வாழைகள் செழித்து வளர்கின்ற திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      முலை குலுக்கிகள் --- தங்கள் முலைகளைக் குலுக்குபவர்கள்.

     கபடிகள் --- வஞ்ச மனத்தவர்கள்.

     வடி புழுக்கைகள் --- மிகவும் இழிந்தவர்கள்.

     அசடிகள் --- மூடர்கள்.

     முறை மசக்கிகள் --- உறவுமுறை சொல்லி அறிவு மயக்குபவர்கள்.

     திருடிகள் --- திருடிகள்.

      மதவேள் நூல்மொழி பசப்பிகள் --- மன்மதனுடைய காம நூலின் வழி நின்று இன்முகம் காட்டி ஏய்ப்பவர்கள்.

     விகடிகள் --- செருக்கு உடையவர்கள்.

     அழும் மனத்திகள் --- அழுகின்ற மனத்தை உடையவர்கள்.

     தகு நகை முகம் மினுக்கிகள் --- தக்க விதத்தில் சிரித்து முகத்தை மினுக்குபவர்கள்.

     கசடிகள் --- குற்றம் உடையவர்கள்.

     இடையே சூழ் கலை நெகிழ்த்திகள் --- இடையில் சூழ்ந்துள்ள ஆடையை நெகிழ்த்து விடுபவர்கள்.

      இளைஞர்கள் பொருள் பறித்து --- இளைஞர்களின் பொருளைப் பறித்து,

     அமளியின் மிசை --- படுக்கையில் அவர்க்கு

     கனிஇதழ்ச் சுருள் பிளவு இலை ஒரு பாதி --- தமது கனி போன்ற வாயில் சுருட்டி மென்று வைத்து உள்ள வெற்றிலையில் ஒரு பாதியை

     கலவியில் தரும் வசவிகள் --- புணர்ச்சிக் காலத்தில் தந்து மயக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின்

     விழி மயக்கினில் வசம்அழி கவலை அற்றிட --- பார்வை மயக்கில் பட்டு, நான் வசம் அழியும் கவலையானது ஒழிய

     நினது அருள் புரிவாயே --- தேவரீர் திருவருளைப் புரியவேண்டும்.

பொழிப்புரை

         கடல் தீப்பிடிக்க, வடக்கிலுள்ள கிரவுஞ்ச மலை பொடியாக, சமணர்களின் கூட்டமானது வரிசையாக அமைக்கப்பட்ட கழுமரங்களில் ஏறத் திருஞானசம்பந்தராக வந்து அவதரித்த மயில் வீரரே!

     அரன், திருமால், பிரமன் மூவரும் முன்பு வழிபட்டுப் போற்ற, அவர்கள்பால் அன்பு வைத்து, அவரவர்க்கு உரிய முறையில் ஒப்பற்ற மெய்ப்பொருளை உபதேசித்த பெரியவரே!

         மிதிலை நகரில், வில்லானது மொளுக்கு என்று முறிந்து விழச் செய்து, ஜனக மன்னர் அருளிய திருமகளைத் திருமணம் புணர்ந்த இராமபிரான் ஆகிய திருமாலின் அழகிய மருகரே!

         திரண்டு வளர்ந்துள்ள பலா மரங்கள், கமுகு மரங்கள் சொரிகின்ற தேன் பொழிகின்ற வயல்களில், வாழைகள் செழித்து வளர்கின்ற திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         தங்கள் முலைகளைக் குலுக்குபவர்கள். வஞ்ச மனத்தவர்கள். மிகவும் இழிந்தவர்கள். மூடர்கள். உறவுமுறை சொல்லி அறிவு மயக்குபவர்கள். திருடிகள். மன்மதனுடைய காம நூலின் வழி நின்று இன்முகம் காட்டி ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர்கள். அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க விதத்தில் சிரித்து முகத்தை மினுக்குபவர்கள். குற்றம் உடையவர்கள். இடையில் சூழ்ந்துள்ள ஆடையை நெகிழ்த்து விடுபவர்கள். இளைஞர்களின் பொருளைப் பறித்து, படுக்கையில் அவர்க்கு  தமது கனி போன்ற வாயில் சுருட்டி மென்று வைத்து உள்ள வெற்றிலையில் ஒரு பாதியைப் புணர்ச்சிக் காலத்தில் தந்து மயக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் பார்வை மயக்கில் பட்டு, நான் வசம் அழியும் கவலையானது ஒழிய தேவரீர் திருவருளைப் புரியவேண்டும்.


விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடலில் காம இச்சையும் பொருள் ஆசையும் கொண்டு, அதற்காகத் தமது உடற்சுகத்தை விலை பேசும் விலைமாதர்களின் பண்புகளை விரித்துக் காட்டி, தம்மைக் காத்துக் கொள்ள இறைவன் திருவருளை நாடுமாறு அடிகளார் அறிவுறுத்துகின்றார்.

பொருளாசை கொண்டவர்கள் எத்தகு தீவினைகளையும் அஞ்சாமல் புரிவார்கள். ஆடவர்களும் அவ்வாறே. ஆயினும் பெண்களுக்கு இயல்பாகவே இறையருளால் வாய்த்துள்ள இளமை நலத்தைத் தீயவழியில் செலுத்தி, சுகபோகத்தைத் துய்ப்பதோடு பொருளையும் சேர்க்கவேண்டும் என்னும் தீயப் பண்பு விளங்கும். நல்வினைப் பயன் வாய்க்காதபோது, தீயவழிகளில் மனமானது செல்லும். அதனால் இடர் உறும். விலைமாதர் வயப்படுவதும், பிறனில் விழைவதும் முற்பிறவியில் செய்த தீவினையின் பயனே ஆகும்.

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என் செய்யார்?
காமம் கதுவபட் டார்.                            

என்றது நீதிநெறி விளக்கம்.

காமவெறி கொண்டவர்கள் கொலை செய்ய அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல நாணமாட்டாரகள். மானத்தைக் காத்துக் கொள்ள மாட்டார்கள். திருட்டுத் தொழில் மட்டுமல்ல, மற்ற இழி தொழில்களையும் செய்யத் தலைப்படுவார்கள். பழிக்கும் பாவத்துக்கும் இடமான செயல் ஆயிற்றே என்று தெரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் எண்ணத்திற்குத் தடையாக எது வந்தாலும், அதை நீக்குவதற்கு, தகாத செயல்கள் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

அவ்வாறு காமம் மீதூரப்பட்டால், அறிவு, பொருள், கல்வி ஆகியவை யாவும் அழிவுறும் என்கின்றார்

நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண்தொடீ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.             ---  நல்வழி.

நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் அழிவு அடையும் காலத்திலே, முறையே தாம் கொண்ட குஞ்சும், முத்தும், அரிசியும், குலையும் ஆகியவற்றை ஈனும். அதுபோல,
அறிவும், செல்வமும், கல்வியும் அழிந்து போகும் காலம் வரும்போது, பிற மகளிர் மேல் ஆசையை வைப்பார்கள் ஆடவர்கள்.

மருவஇனிய சுற்றமும், வான்பொருளும், நல்ல
உருவும், உயர்குலமும் எல்லாம், - திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும், அவள்பிரிந்து
போம்போது அவளொடு போம்.                --- மூதுரை.

தழுவிய இனிய உறவும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், சீதேவி வந்து கூடும் பொழுது, அவளுடனே வந்து கூடும். அவள் நீங்கிப் போகும் பொழுது, அவளுடனே நீங்கிப் போகும்.

பிறப்புக்கு விதை அவா. ஒவ்வொரு பிறப்பை நல்கும். பெண்ணவா பெருந்துன்பத்தைத் தரும். இதிலும் பொதுமகளிர் உறவு திருவையும் தெளிவையும் உருவையும் அழிக்கும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.                   ---  திருக்குறள்.
  
கள்ளைப்போல், அறிவை மயக்கும் தன்மை விலை மகளிர் உறவு. அதனால் திருவள்ளுவர் வரைவின் மகளிர்என்ற அதிகாரத்துக்குப் பின் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை அமைத்தனர்.

விலைமாது ஒருத்தி, தனது தோழியிடம் கேட்கின்றாள். "தோழி, என்னைப் புணர ஆசைப்பட்டு வருபவர்கள், எனக்கு இன்பத்தைத் தருவதோடு, தமது பொன்னையும் கொடுத்து, எனது பாதத்திலும் விழுவது ஏன்?"

அன்னையே அனைய தோழி,
     அறம்தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மை கேட்பேன்,
     உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையே புணரு வோர்கள்
     எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, பாதப்
     போதினில் வீழ்வது ஏனோ.

இதற்குத் தோழி பகரும் மறுமொழி... "செல்வத்தை நிரம்பப் படைத்து இருந்தும், செம்மையாக அறம் செய்யாதவர்களுடைய செல்வமானது சிதறிப் போகவேண்டும் என்பதற்காகவே, விலைமாதர்களாகிய உம்மையும், கள்ளையும், சூதாட்டத்தையும் பிரமதேவன் படைத்து வைத்தான்."

பொம்மெனப் பணைத்து விம்மி
     போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முளையி னாளே,
     கூறுவேன் ஒன்று கேண்மோ,
செம்மையில் அறஞ்செய் யாதார்
     திரவியம் சிதற வேண்டி
உம்மையும் கள்ளும் சூதும்
     நான்முகன் படைத்த வாறே.     --- விவேகசிந்தாமணி.

விலைமாதருடைய மெல்லிய தோள்கள், அறிவில்லாத மூடர்கள் அழுந்துகின்ற நரகம் என்றும் திருவள்ளுவனார் கூறுகின்றார்.

வரைவிலா மாண்இழையார் மென்தோள், புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

ஆதலின், அம்மகளிர் பின் சென்று அவமே அலைந்து திரியாது, ஆன்றோர் பின்சென்று மாந்தர் உய்தல்வேண்டும்.

பொது திகழ்மாதர் பின் செருமி அழிவேனோ  என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். 

அம்மி துணையாக ஆறு இழிந்த ஆறு ஒக்கும்,
கொம்மை முலை பகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று, மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.                ---  நல்வழி.

பகட்டு மொழி பேசும் பரத்தையர்களின் உடல் உறுப்புக்களின் கவர்ச்சியைக் கண்டு, அவர்களிடம் மயங்கி, மனத்தைப் பறிகொடுப்பது, அம்மிக் கல்லை மிதக்கும் கட்டையாக எண்ணி, அதனைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் இறங்குவதற்கு ஒப்பாகும். அவர்களுடன் தொடர்பு கொள்வது, இந்தப் பிறவிக்கும், இனி வரும் பிறவிக்கும் பாவத்தைத் தேடுவது ஆகும். வேசியர் நட்பானது பெரிய செல்வத்தையும் அழித்து, கைப்பொருள் இல்லாத வெறுமையையும் வறுமையையும் உண்டாக்கும்.

எனவே, தீவினை வயப்பட்டு, விலைமாதர் பின் சென்று அழியும் நிலையை விலக்கி, நல்லறிவும் நல்லருளும் தந்து ஆட்கொள்ள வேண்டும் என்று அடிகளார் வேண்டிக் கொள்கின்றார். நாம் வேண்டத்தக்கதும் அதுவே ஆகும்.


அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழுப்பெற நடவிய மயில் வீரா ---

முருகப் பெருமான் மயில் மீது ஆரோகணித்த போது, அந்த மயிலின் ஆற்றலால் கடல் வற்றிப் போனது, மலை பொடியானது என்பதை,

"குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசை இடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு, அடியிட எண்-
திசைவரை தூள்பட்ட, அத்தூளின் வாரி திடர்பட்டதே"

என்று கந்தர் அலங்காரப் பாடலில் அடிகளார் அழகுறக் காட்டியதை எண்ணுக.

அமரர்கள் அனுபவித்து வந்த துன்பத்தைத் தீர்க்க, மயில் ஏறி வந்து, வேலாயுதம் தாங்கிப் போர் புரிந்து அவுணர் குலத்தை வேர் அறுத்தார் முருகப் பெருமான்.

அவ்வாறே, சமணர்களால் சிவனடியார்கள் அனுபவித்து வந்த துன்பத்தைத் தீர்த்து, தமிழ்நாடு ஈடேறும்படியாக, அவர்களோடு திருநீற்றுப் போர் புரிந்து, அவர்கள் அனைவரும் தாமாகவே கழுவில் மாயுமாறு அருள் புரிந்த அருமையை அடிகளார் இங்கு நமக்குக் காட்டுகின்றார்.

சமணர்கள் கழு ஏறிய வரலாறு

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழமன்னனது திருமகளாய், பாண்டி மாதேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராய் இருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடன் உதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.

அப்போது திருஞான சம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் அறிந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள். அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து, பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் எனத் தெரிவித்து நின்றார்கள். திருஞானசம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பர் பெருமானிடம் விடை கேட்டனர். திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை உன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று. கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

வேயுறு தோளிபங்கன்விடமுண்ட கண்டன்
         மிகநல்ல வீணைதடவி
 மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ
         னுளமே புகுந்த வதனால்
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
         சனி பாம்பிரண்டு முடனே
 ஆசறு நல்லநல்ல வவைநல்லநல்ல
         அடியாரவர்க்கு மிகவே”

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலிவேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார், வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பிக் கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் பெருமான் சிவிகை விட்டிழிந்து, அவரைத் தமது திருக்கைகளால் எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும், திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி, “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி யெதிர் காலத்தின் சிறப்பும், இன்று எழுந்தருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம்; நன்றிஇல் நெறியில் அழுந்திய நாடும் நல்தமிழ் வேந்தனும் உய்ந்து, வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் பெற்றனம்” என்றார்.

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்துத் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி, கோயிலுள் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார்.

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரம் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவில் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால் வந்தது என்று உணர்ந்து,

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல் என்று அருள் செய், எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

என்று பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரம் சொல்லி, மயிற்பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிருக் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச்சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற, அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கம் நான் சேருவேன். அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசைஇன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேன்நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பம் செய்தனர்.

திருஞானசம்பந்தர் அவர்க்கு அபயம் தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாயு் உலகாண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார். பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பீடம் இடச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

மானின்நேர் விழிமாதராய், வழுதிக்கு மாபெருந்தேவி,கேள்
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென, அமணர் இடப்புற நோயை நீக்குவோம் என்று மந்திர உச்சாடனத்துடன் மயிற்பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலிவேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டும் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெருநெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற திருப்பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை சாம்பலாயின.  

புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவில் ஏறுவதென்று துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது. திருஞானசம்பந்தப் பெருமான், "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் திருப்பாசுரத்தை அருள் புரிந்தார். வையை ஆற்றில் இட்ட அந்த ஏடு, ஆற்று வெள்ளத்தை எதிர்த்து விரைந்து மேல் சென்றது. அவ்வேடு நிற்க “வன்னியு” மென்ற பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை யெடுத்த இடம் திருவேடகம் என்பர். வேந்தனும் ஓங்குக” எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவாக்கின்படி, பாண்டியன் தனது கூன் நிமிரப் பெற்று, நின்ற சீர் நெடுமாறன் ஆயினார். மும்முறையும் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

"பால் அறாத் திரு வாயால் ஓதிய
     ஏடு நீர்க்கு எதிர் போயே, வாதுசெய்,
     பாடல் தோற்று, ரு நாலாம் ஆயிர ...... சமண்மூடர்

பாரின் மேல் கழு மீதே ஏறிட,
     நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட,
     பாது காத்து அருளாலே கூன்நிமிர் ......இறையோனும்

ஞாலம் ஏத்தியது ஓர் மா தேவியும்,
     ஆலவாய்ப் பதி வாழ்வு ஆமாறு எணும்
     ஞான பாக்கிய பாலா! வேலவ! ...... மயில்வீரா"!

என்னும் பூவாளூர்த் திருப்புகழ்ப் பாடல் காண்க.

"திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு
     செழியன் உடல் சென்று பற்றி, ஆருகர்
     திகையின் அமண் வந்து விட்ட போதினும் ......அமையாது,
சிறிய கர பங்கயத்து நீறு, ஒரு
     தினை அளவு சென்று பட்ட போதினில்
     தெளிய, இனி வென்றி விட்ட மோழைகள் ......கழு ஏற,

மகிதலம் அணைந்த அத்த! யோனியை
     வரைவு அற மணந்து நித்தம் நீடு அருள்
     வகைதனை அகன்று இருக்கு மூடனை, ...... மலரூபம்
வரவர மனம் திகைத்த பாவியை,
     வழி அடிமை கொண்டு, மிக்க மாதவர்
     வளர்பழநி வந்த கொற்ற வேலவ! ...... பெருமாளே".

என்னும் பழநித் திருப்புகழ் காண்க.

"பீலி வெந்து, யர் ஆலி வெந்து,
     அசோகு வெந்து, மண் மூகர் நெஞ்சிடை
     பீதி கொண்டிட, வாது கொண்டு, ருள் ......எழுதுஏடு

பேணி அங்கு, திர் ஆறு சென்றிட,
     மாறனும் பிணி தீர, வஞ்சகர்
     பீறு வெங்கழு ஏற, வென்றிடு ...... முருகோனே"!

என்னும் பழநித் திருப்புகழையும் காண்க.


அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவர் அவர்க்கு ஒருபொருள் புகல் பெரியோனே ---

முருகப் பெருமான் தமது தந்தையார் ஆகிய சிவபெருமானுக்கும், தமது மாமனார் ஆகிய திருமாலுக்கும், தமது மைத்துனர் ஆகிய பிரமதேவருக்கும் அவரவர் நிலையை அறிந்து மெய்ப்பொருளை உபதேசித்து அருள் புரிந்தார்.


மிதிலையில் சிலை மொளுக்கு என முறிபட சநக மன் அருள் திருவினைப் புணர் அரி திருமருகோனே ---

மிதிலை நகரில், சனகப் பேரரசர் வசம் இருந்த சிவவில்லினை மொளுக்கு என முறிந்து விழச் செய்து, அவரது திருமகளாகிய சீதாதேவியை இராமபிரான் திருமணம் புணர்ந்தார்.

தாடகை உரம் கடிந்து, ஒளிர்
     மாமுனி மகம் சிறந்து, ரு
     தாழ்வுஅற நடந்து, திண்சிலை ...... முறியா,ஒண்
ஜாநகி தனம் கலந்தபின்,
     ஊரில் மகுடம் கடந்து, ரு
     தாயர் வசனம் சிறந்தவன் ...... மருகோனே!

என்னும் திருப்புகழ்ப் பிரமாணத்தைக் காண்க.


திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே ---

வருக்கை - பலா.

கமுகு - பாக்கு.

கதல் - வாழை.

பலா மரங்களில் பழுத்து வெடித்த பழங்களில் இருந்தும், பாக்கு மரங்களில் இருந்தும் வடிகின்ற தேனானது, வாழை மரங்கள் நிறைந்துள்ள வயல்களில் விழுகின்ற வளம் செறிந்தது திருவிடைக்கழி என்னும் திருத்தலம். அங்கே முருகப் பெருமான் திருக்குரா மரத்தின் நிழலில் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் "திருவிடைக்கழி" திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது. அண்மையில் உள்ள திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.

இறைவர்                  : காமேசுவரர்.
இறைவியார்              : காமேசுவரி.
தல மரம்                   : குரா, மகிழம். 
தீர்த்தம்                    : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.

தெய்வயானை அம்மையார் இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
   
அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
   
மூலத்தானத்தில் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

சேந்தனார் பாடியுள்ள "திருவிசைப்பா" திருப்பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

முருகப் பெருமான் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயரும் உண்டு. தெய்வயானை அம்மை தனிச் சந்நிதியில் தவக்கோல தரிசனம்.
   
சேந்தனார் முத்தி பெற்ற தலம். திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
   
இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு திருத்தல மரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம். திருத்தல மரமாகிய "குரா மரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குரா மரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழ் அமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.

முருகப் பெருமான் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையது ஆகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
   
சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.

கருத்துரை

முருகா! விலைமாதர் வசப்படாமல் காத்து அருள்வாய்.


No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...