🕉🕉 கற்க கசடு அற 🕉🕉
-----
"கல்வி" என்பது, "கல்" என்னும் சொல்லை அடியாகக் கொண்டது.
கல்(வி) = வெட்டி எடு. அகழ்ந்து எடு. தோண்டி எடு. பயில்.
நம்மிடம் இயல்பாகவே பொருந்தி உள்ள அறியாமையை அகற்றி, அறிவைப் புகுத்துவதால், கல்வி எனப்பட்டது. இங்கே அறிவு என்று சொல்லபட்டது உலகியல் அறிவு அல்ல. உண்மை அறிவு என்னும் மெய்யறிவு. மெய்ப் பொருளையும், மெய்த் தன்மையையும் காண்பது மெய்யறிவு. நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து தெளிதல் அறிவு. இத்தகு அறிவு வளர, வளர, ஆணவம் தேயும். அன்பு பெருகும். உண்மை அறிவு விளங்க விளங்க, உயிர்க்கு உள்ள குற்றங்கள் தாமாக அழிந்து போகும் என்பதை, தெய்வச் சேக்கிழார் பெருமான், ஏனாதிநாத நாயனார் வரலாற்றில், பெரியபுராணத்தில் காட்டுமாறு காணலாம்.
அடியவராகிய ஏனாதி நாத நாயனாரை எதிர்த்து வந்த அதிசூரனது படை வீர்ர்கள், ஏனாதிநாரின் வாளால் கொல்லப்பட்டு அழிந்து போயினர். மோதாத அஞ்சிய வீரர்கள், நிலையான, உண்மையான உணர்ச்சியாகிய ஞானம் உண்டான சமயத்தில், அழிந்து போன ஆசை முதலிய குற்றங்களைப் போலப் போர்க்களத்தை விட்டு அகன்று ஓடினார்கள் என்கின்றார் சேக்கிழார் பெருமான்.
தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார், முட்டாதார் கொல்களத்தை விட்டு,
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்,
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம்போல் ஆயினார்
இதன் பொருள் ---
போரில் தம்முடன் எதிர்ந்தவர்கள் அனைவரும் ஒப்பில்லாத வீரரான ஏனாதிநாதரின் வாளால் கொல்லப்பட்டனர். அதைக்கண்டு அவரை எதிர்க்காத வீரர்கள் எல்லாம், போர்க்களத்தை விட்டு, இறைவன் திருவடியிலே ஒன்றி நிற்கும் மெய்யுணர்வு தலைப்பட்டபோது, காமம், வெகுளி, மயக்கம் முதலான குற்றங்கள் அழிந்து ஒழிவதைப் போல போர்க்களத்தை விட்டு அகன்று ஒடினார்கள்.
மெய்யுணர்வு சிறிது குன்றத் தலைப்பட்டாலும், உயிர்க் குற்றங்கள் சிறிது சிறிதாக வந்து ஒட்டிக் கொள்ளும். எனவே, மெய்யறிவு நூல்களை, கசடு அறக் கற்றல் அவசியம் ஆகின்றது. கற்ற வழி நிற்க அறியாதவர்கள், கல்வியினால் ஆய பயனைப் பெறாதவர்களே ஆவர்.
"கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள். கற்றும் அறிவு இல்லாத என் கர்மத்தை என் சொல்லுவேன்" என்றார் தாயுமானார். கல்வியைக் கற்பதனால் உண்மை அறிவு விளங்க வேண்டும். அறியாமை நீங்கவேண்டும். கற்றும் அறிவில்லாமல் இருத்தல் கூடாது. "கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்" என்பது "வெற்றிவேற்கை". கற்றவர் வாயில் இருந்து பிறக்கும் சொல் கசடு அற்றதாக இருத்தல் வேண்டும். அதுவே, கல்லாதவரிடத்து உள்ள கசட்டுத் தன்மையைப் போக்கும்.
கற்கக் கற்க அறிவு வளரும் என்பது முற்றிலும் உண்மைதான். ஆனால், கூடவே, "நான் கற்றேன்" என்னும் ஆணவமும் முளைக்கும். நன்கு வளர்கின்ற பயிரின் ஊடு, களை தோன்றுவது போல்வது இது. களை ஆகிய கசடு களையப்படவேண்டும். "நான் கற்றேன்" என்னும் "கசடு" நீங்கினால், கற்றதன் உண்மையான பயன் விளைந்ததாகக் கொள்ளலாம். எனவே, "கற்க, கசடு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். நூல்களைக் கற்பதாலேயே கசடு அறாது. கற்றவழி ஒழுகுவதாலேயே அது கூடும் என்பதால், "கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்றும் கூடவே காட்டினார் நாயனார். ஆக, அறியாமை நீங்கவேண்டுமானால், நான் என்னும் ஆணவம் நீங்க வேண்டும்.
கற்றும் அறிவு இல்லாதவர்களை, "கல்லாத மூடர்" என்கின்றார் திருமூல நாயனார். இந்த மூடர்களைக் காண்பதும் ஆகாது. இவர்களுடைய சொற்களைக் கேட்பதும் கூடாது என்கின்றார். கல்லாத மூடர்களுக்குக் கற்றவர்கள் பயனற்றவர்களாகவே தோன்றுவர். அவர்களது சொல் இவர்களுக்குக் கசக்கும். அறிவு நூல்களைப் பயிலாத மூடர்களுக்கு, அவர்களை ஒத்தவர்களே நல்லவர்களாகத் தோன்றுவர். இவர்களுக்கு இருப்பது புன்மையான அறிவு. புல்லறிவு கூடி உள்ளவர்கள் புல்லர்கள் எனப்படுவர்.
"கல்லாத மூடரைக் காணவும் ஆகாது;
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று;
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்;
கல்லாத மூடர் கருத்து அறியாரே"
என்பது நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்.
இதன் பொருள் ---
கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் நன்மையினையும் அறியாதவர் ஆவர். அதனால், காட்சி அளவிலேயே தீமை உண்டாவதால், அவரைக் காணுதலும் கூடாது. அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியானது அல்ல. அவர்க்கு, அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுவர். கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்ற மாட்டார்.
புல்லர்களுக்கு, நல்லவர்கள் சொல்லும் சொல்லானது காதில் ஏறவே ஏறாது. காரணம், அவர்கள் நல்லதை என்றுமே பொருட்படுத்துவது இல்லை.
இந்த வாழ்வியல் உண்மைகளை, பெரியோர் புராணங்கள், காப்பியங்கள் மூலமாக விளக்குவார்கள். கல்லாத புல்லர்களுக்கு நல்லோர்கள் சொன்ன சொல், அவர்களது உள்ளத்தில் தங்காமல், எப்படி, எவ்வளவு வேகமாக வெளியேறும் என்பதை, கம்பராமாயணத்திலும், வில்லிபாரதத்திலும் காணலாம்.
இராமலக்குவர்கள் விசுவாமித்திரனுடன் தாடகைவனம் அடைகிறார்கள். அவ்வனம் பாழ்பட்டுக் கிடத்தலைக் கண்டு அதன் வரலாறு அறிய விரும்பிய இராமனுக்கு, அகத்திய முனிவரால் சாபமுற்று அரக்கியாக மாறிய தாடகை மற்றும் அவளுடைய மக்கள் ஆகிய மாரீசன், சுபாகு ஆகியோரின் கொடுமையால் இந்த வனம் இவ்வாறு ஆனது என்றும், இலங்கையரசன் இராவணன் ஏவலால் இவள் எங்கள் தவத்திற்கு இடையூறு செய்த வண்ணம் இருக்கிறாள் என்றும் கூறிக்கொண்டே வருகையில், பெருங்கோபம் கொண்ட தாடகை எதிரில் தோன்றிக் கல்மாரி பொழிந்து, வேற்படையை எறிய முற்படுகிறாள். பெண் என மதித்து, இராமன் அம்பு தொடுக்காது இருக்கையில், அவளது கொடுமைகளை எல்லாம் விளக்கிய விசுவாமித்திரர், “இவளைப் பெண் என்று கருதாதே. சினம் காரணமாக நான் இவளை வெறுக்கவில்லை. அறம் காரணமாக. இவள் அழிதல் நல்லது. எனவே, இவளைக் கொல்வாயாக” என்றான். அதனைக் கேட்டதும் இராமன், குருவார்த்தையை மீறுதல் அறம் அல்ல என்பதை மனத்தில் கொண்டு, “ஐயனே! அறம் அல்லாத ஒரு செயலைச் செய்க என்று நீர் ஏவினும், அதனை வேத வாக்காகக் கொண்டு செய்து முடிப்பதே எனக்கு அறம் ஆகும்” என்று கூறிச் சுடுசரம் ஒன்று ஏவி, தாடகையைக் கொல்லுகின்றான் என்று கம்பர் அருளிய இராமாயணம் கூறுகிறது.
தாடகை மேல் இராமன் தொடுத்த அம்பு எப்படிப்பட்டது? அது என்ன செய்தது? என்பதைக் கம்பநாட்டாழ்வார் விளக்குமாறு காண்க.
"சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடுசரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்
விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
பொருள் எனப் போயிற்று அன்றே!"
இப் பாடலின் பொருள் ---
நிறைமொழி மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடு சரத்தை, கரிய நிறமும். அழகும் உடைய இராமபிரான், இருள் போன்ற நிறத்தை உடைய
தாடகையின் மீது செலுத்தி விடுதலும், அந்த அம்பு, வைரம் பாய்ந்த கல்போன்ற அத்தாடகையின் நெஞ்சில் தங்கி இராமல், அவளது நெஞ்சில் பாய்ந்து, பின் முதுகின் புறமாகக் கழன்று, கல்வி அறிவில்லாத புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல ஓடிப்போய்விட்டது.
கல்வி அறிவு இல்லாத கீழோருக்கு, அறிவாற்றல் மிக்க மேலோர் கூறும் அறம், அவர் உள்ளத்தில் நிலைபெறாது ஒரு காதில் புகுந்து, மறுகாது வழியாகப் போவதுபோல. தாடகையின் முதுகுப்புறம் இராமனது அம்பு விரைந்து சென்றது என்று கம்பர் அழகாகக் காட்டினார்.
இராமன் நல்லவன். அவனது அம்பு நல்லோர் சொன்ன சொல்லுக்கு உவமை ஆயிற்று. தாடகை இரக்கம் ஒன்று இல்லாத அரக்கி. ஆதலால், கல்லாத புல்லரை ஒத்தவள் ஆனாள்.
இந்தப் பாடலின் கருத்தைத் தெளிவுபட விளக்கி, நீண்டதொரு விளக்கத்தை, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சென்னை சைதாப்பேட்டையில் 1968-ஆம் ஆண்டு கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்ச்சிகளில் இசையோடு பாடி விளக்கி அருளியது இன்றும் உள்ளத்தில் பசுமையாக உள்ளது. 🕉🕉🕉 குருவருள். குருவருள். 🕉🕉🕉
இது நிற்க, வில்லிபாரதத்தில், பாரதப் போரின் பதினேழாம் நாளன்று, அருச்சுனன் விட்ட அஞ்சரீகம் என்னும் அம்பு பட்டு, கர்ணன் தரையில் விழுந்தான் என்பதைச் சொல்ல வந்த வில்லிப்புத்தூரார், பின் வருமாறு பாடுகின்றார்.
பகலவன்தன் மதலையை, நீ பகலோன் மேல்பால்
பவ்வத்தில் படுவதன்முன் படுத்தி" என்ன,
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம்
எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக,
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான்,
அந்த ஆசுகம் உருவி, அப்பால் ஓடி,
தகல் உடையார் மொழி போலத் தரணியூடு
தப்பாமல் குளித்தது, அவன்தானும் வீழ்ந்தான்".
"ஆசுகம்" என்னும் சொல்லுக்கு, காற்று, அம்பு என்று பொருள்.
அருச்சுனன், தன்னோடு போர் புரியும் சூரியபுத்திரனாகிய கர்ணனை நோக்கி, "நீ இன்று கதிரவன் மேல்பால் உள்ள கடலில் மறைவதற்கு முன்னர் மடிவாய்" என்று கூறி, அஞ்சரிகம் என்னும் அம்பினை எடுத்து, கர்ணனின் இதயத்தை இலக்காகக் கொண்டு, உலகில் உள்ள வீரர்களை யாவரும் மதிக்கும்படியாக எய்தான். அந்த அம்பானது, தகுதி உடைய பெரியோர் சொன்ன மொழி போலச் சிறிதும் தப்பாது, கர்ணனது உடலில் ஊடுருவி, அப்பால் ஓடி நிலத்தில் விழுந்தது. கர்ணனும் கீழே விழுந்தான்.
இங்கே, தகுதி உடைய பெரியோர் சொல்லானது, அருச்சுனனது அம்புக்கு உவமை ஆக்கப்பட்டது. கம்பநாட்டாழ்வார் தாடகையைச் சொன்னது போல், புல்லன் என்று கர்ணனை வில்லிபுத்தூரார் சொல்லவில்லை. காரணம், கர்ணன் நல்லவன். தானத்தில் சிறந்தவன். நட்புக்கு இலக்கணமாவன். கொடியவனான துரியோதனனைச் சார்ந்து இருந்த ஒன்றுதான் அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்தது.
கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கசடு அறக் கற்பதும், கற்ற பெரியோர்களோடு கூடி இருத்தலும் நன்மை தரும். "கற்ற மேலவரொடும் கூடி நில்லேன், கல்வி கற்கும் நெறி நேர்ந்து கல்லேன்" என வரும் வள்ளல்பெருமான் அருள்வாக்கையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம். அறிவு நூல்களைக் கற்பதும், நூற்பொருள்கைளக் கற்றார் வாய்க் கேட்டலும் உடையவர்களே பெரியவர்கள் ஆவார் என்பதை, "கற்றல் கேட்டல் உடையார் பெரியார்" என்னும் திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறியலாம்.