நல்லவர்க்கு உபகாரம் செய்வது நல்லது

 

 

                                            நல்லவர்க்கு உபகாரம் செய்வது நல்லது 

                                                                        ----


ஆலம் கிடக்கும் மனத்தார்க்கு ஒரு நன்றி, அம்பில் இட்ட

கோலம் கிடக்கும் கண்டாய், குறையாத குணம் உடைய

சீலம் கிடக்கும் மனத்தார்க்கு ஒரு நன்றி செய்யில், வெகு

காலம் கிடக்கும் கண்டாய், வணிகா! செந்தில் காத்தவனே!

 

சொக்கநாதப் புலவர், பாட்டுடைத் தலைவனாக  திருச்செந்தூர் முருகன் மீது பாடி வைத்த நீதிநெறிப் பாடல்.

 

இதன் பொருள்---

 

செட்டியே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமானே! நச்சுத் தன்மையை உள்ளத்தில் கொண்டுள்ளவர்க்கு செய்த ஓர் உபகாரமானது, தண்ணீரில் எழுதப்பட்ட  எழுத்தினைப் போல விரைவில் அழிந்து போகும்.  (கீழ்மையை உடைய அவர்கள், பிறர் தமக்குச் செய்த நன்மையை அப்போதே மறந்து விடுவார்கள், தீமையே செய்வார்கள்).  நற்குணங்களால் நிறைந்த உள்ளத்தை உடைவருக்கு செய்த உபகாரமானது நெடுங்காலம் நிலைத்து இருக்கும். (அவர்கள் பிறர் தமக்குச் செய்த உபகாரத்தை மறக்க மாட்டார்கள்).

 

நல்லவர்க்கு உதவி செய்வது நல்லது என்பது கருத்து.

 

ஆலம்--விஷம், நஞ்சு.

அம்பு-- தண்ணீர்.

கோலம்-- எழுத்து. 

 

முருகனுக்கு "செட்டி" என்ற பெயர் உண்டு என்பதை, எனது முந்தைய பதிவினால் அறியப்படும். செட்டி என்பதால், "வணிகா" என்றார்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...