இல்லறம் அல்லது நல்லறம் அன்று

 

இல்லறமே நல்ல அறம்

-----

 

     "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" என்கின்றது ஔவைப் பிராட்டியார் அருளிய "கொன்றைவேந்தன்".

 

     இல்வாழ்வில் உள்ள ஒருவன், மற்ற நிலையில் உள்ள மூன்று தரத்தாருக்கும் உரிய துணை ஆவான். இயல்பு நெறியான பிரமச்சரியம் அல்லது மாணாக்கர் நிலை, வானப்பிரஸ்தம் என்னும் தவநிலை, சந்நியாசம் என்னும் துறவு நிலை, ஆக மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் நல்ல துணையாக விளங்குபவன். இதனைத் திருவள்ளுவ நாயனார், பின்வரும் ஒரு திருக்குறளால் காட்டுகின்றார்..

 

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்

நல்ஆற்றின் நின்ற துணை.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறள் அறத்துப்பாலுக்கு அரியதொரு உரை விளக்கம் கண்டவர், கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தமது உரையில் மூவர் என்னும் சொல்லுக்கு, "தாய், தந்தை, தாரம்" என்னும் மூவரையே குறித்தருளினார்.

 

     இதனையே திருவள்ளுவ நாயனார், வேறுவகையில் ஒருவனுக்கு இல்லறக் கடமைகள் எவை என்பதை உணர்த்துகின்றார்..

 

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

 

     இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் வருகின்ற திருக்குறள் இது. மறைந்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினரிடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே சிறப்பு என்பது இதன் பொருள்.

 

     கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தமது உரையில் "தென்புலத்தார்" என்னும் சொல்லுக்கு, "மெய்யறிவு உடையவர்" என்றே உரை கண்டருளினார். இதுவே, எனக்கும் உடன்பாடானது.

 

     இல்லறமே சிறந்தது என்பதனை மேலும் நமக்குத் தெளிவாக்குவது அறப்பளீசுர சதகம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல். இல்லறம் என்பதன் இலக்கணத்தையும், அது துறவறத்தை விடச் சிறந்தது என்பதையும் அற்புதமாக விளக்குவது.

 

தந்தைதாய் சற்குருவை, இட்டதெய் வங்களை,

சன்மார்க்கம் உளமனை வியைத்

தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

தனைநம்பி வருவோர் களைச்

 

சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

தென்புலத் தோர் வறிஞரைத்

தீதுஇலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

தேனுவைப் பூசுரர் தமைச்

 

சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

தான்புரிந் திடல்இல் லறம்;

சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

தம்முடன் சரியா யிடார்!

 

அந்தரி உயிர்க்குஎலாம் தாய்தனினும் நல்லவட்கு

அன்பனே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

அறப்பளீ சுரதே வனே!

 

இப் பாடலின் பொருள்....

 

     அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு

அன்பனே --- பார்வதி தேவியும், எவ்வுயிர்க்கும் தாயினும் நல்லவளும் ஆன உமாதேவியின் அன்புக்கு உகந்தவனே!, எமது அருமை மதவேள் --- எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு --- எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளி உள்ள அறப்பளீசுர தேவனே!

 

     தந்தைதாய் சற்குருவை --- தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை --- வழிபாட்டிற்கு உரிய தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை --- நல்லொழுக்கமுடைய இல்வாழ்க்கைத் துணையையும், தவறாத சுற்றத்தை --- நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை --- ஒரு செயலைச் சொல்லும் முன்னரேயே சொல்லுகின்றவரின் குறிப்பை அறிந்து செயல் செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை --- தன்னை நம்பி வருகின்றவர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை --- மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும்,

 

     தென்புலத்தோர் --- மறைந்த முன்னோரையும், , வறிஞரை --- ஏழைகளையும், தீது இலா அதிதியை --- குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை --- அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை --- பசுக்களையும், பூசுரர் தமை --- அந்தணர்களையும், (ஆதரித்தலும்)

 

     சந்ததம் செய் கடனை --- எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை --- (ஆகிய) இவைகளை, சந்ததம் பிழையாது --- எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் --- ஒருவன் செய்து வருவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் --- பொருந்திய நன்மையை உடையவர்களாகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இப்படிப்பட்ட இல்லறத்தானுக்கு ஒப்பாகமாட்டார்கள்.

 

     இல்லறத்தின் சிறப்பை மேலும் தெளிவுபடுத்தும் விதத்திலே இன்னொரு பழம் பாடலையும் காண்போம். பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

புல்லறிவுக்கு எட்டாத தண்டலையார்

     வளம்தழைத்த பொன்னி நாட்டில்,

சொல்லறமா தவம்புரியும் சௌபரியும்

     துறவறத்தைத் துறந்து மீண்டான்!

நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை

     மனைவியுடன் நடத்தி நின்றான்!

இல்லறமே பெரிதாகும்! துறவறமும்

     பழிப்புஇன்றேல் எழில தாமே!

 

இதன் பொருள்.....

 

     புல் அறிவுக்கு எட்டாத தண்டலையார் வளம் தழைத்த பொன்னி நாட்டில் --- சிற்றறிவு உடையவர்களால் காணமுடியாத தண்டலையாரின் வளம் மிகுந்த காவிரி (பாயும் சோழ) நாட்டில், சொல் அற மாதவம் புரியும் சௌபரியும் --- பேச்சு அற்ற நிலையில் பெருந்தவம் செய்து வந்த சௌபரி என்பவனும், துறவறத்தைத் துறந்து மீண்டான் --- துறவறத்தை விட்டு இல்வாழ்க்கைக்குத் திரும்பினான், வள்ளுவர் போல மனைவியுடன் நல்லறம் ஆம் குடிவாழ்க்கை நடத்தி நின்றான் --- திருவள்ளுவ நாயனாரைப் போல இல்லாளுடன் நல்ல அறமாகிய குடிவாழ்க்கையை இனிதே கழித்தான். (ஆகையால்), இல் அறமே பெரிது ஆகும் --- மனையறமே சிறந்தது ஆகும், துறவு அறமும் பழிப்பு இன்றேல் எழிலது ஆம் --- துறவறமும் (பிறரால்) பழிக்கப் படாமல் இருந்தால் அழகியதாகும்.

 

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்

பிறன்பழிப்ப(து) இல்லாயின் நன்று'

 

என்னும் திருக்குறளின் பொருள் இங்கு வந்துள்ளது.

 

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...