வஞ்சகரை அஞ்சுக

 

 

 

வஞ்சகரை அஞ்சுக

-----

 

     திருக்குறளில் "கூடாநட்பு" என்னும் ஓர் அதிகாரம். தமக்கு உள்ள பகைமை உணர்வு காரணமா, அது முடிக்கும் காலம் வரை உள்ளத்தால் கூடாது இருந்து, புறத்தில் நண்பர் போல் நடிக்கின்றவரின் நட்பை, "கூடாநட்பு" என்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "முகத்தினால் சிரித்துப் பழகி, உள்ளத்தினால் இன்னாத வஞ்சகரின் நட்புக் குறித்து அஞ்சவேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     மனத்தில் இனிமை கொள்ளுவதால் மலரவேண்டிய முகத்தைக் கண்டு, இவர் நமக்கு இனியவர் என்று எண்ணி, அவரிடத்தில் நட்புக் கொண்டால், இந்த வஞ்சகர் தமது முகத்தில் பகைமையைக் காட்டாது வஞ்சித்து, முகத்தில் மட்டும் இனிமையைக் காட்டிப் பழகி, பின் தமது பகைமையை முடித்துக் கொள்ளுகின்ற காலம் வரும்போது, நண்பராகப் பழகியவரை, அவரால் பெறப்பட்ட நன்மைகள் யாவற்றையும் மறந்து, பழைய பகைமை உணர்ச்சியே மேலிட்டுத் துன்புறுத்துவார்கள் என்பதால், அப்படிப்படவர்களோடு பழகுவதற்கு அச்சம் கொள்ளவேண்டும் என்றார்.

 

முகத்தின் இனிய நகாஅ, அகத்து இன்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.                

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாகப் பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதைக் காண்க...

 

புறநட்டு அகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை   

வெளியிட்டு வேறுஆதல் வேண்டும், - கழிபெரும்   

கண்ணோட்டம் செய்யார், கருவிஇட்டு ஆற்றுவார்   

புண்வைத்து மூடார் பொதிந்து.     

 

"நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகள் பாடிய இப் பாடலின் பொருள்....

 

     புண் --- புண்ணை, கருவியிட்டு ஆற்றுவார் --- கருவியினால் அறுத்து அதனைக் குணப்படுத்துவார்கள்; (அவ்வாறின்றி) பொதிந்து மூடார் --- அதனை மறைத்து மூடி வையார்; (அதுபோல்) புறம் நட்டு --- வெளிக்கு உறவு காட்டி. அகம் வேர்ப்பார் --- உள்ளே கோபிப்பவரது, நச்சுப் பகைமை --- நஞ்சுபோலும் கொடிய பகைமையை, வெளியிட்டு --- வெளியாக்கி, வேறு ஆதல் வேண்டும் --- நீங்குதல் வேண்டும்; கழிபெருங் கண்ணோட்டம் செய்யார் --- (அத்தகைய வஞ்சகமான பகைவர்பால்) மிகுந்த அன்பு செய்யமாட்டார்.

 

முன்னின்று ஒருவன் முகத்தினும் வாயினும்

கல் நின்று உருகக் கலந்து உரைத்துப்-பின்னின்று

இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்

விழித்து இமையார் நின்ற நிலை.

 

"அறநெறிச்சாரம்" என்னும் நூலில் வரும் இப் பாடலின் பொருள் ---

 

     தேவர் விழித்து இமையார் நின்ற நிலை --- தேவர்கள் தமது விழித்த கண்களை மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன்னின்று --- ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக ---கல்லும் உருகுமாறு முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து ---முகமலர்ந்து வாயால் இன்சொல் கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று --- அவன் அகன்ற பின்னர், இழித்து உரைக்கும் ---அவனையே இகழ்ந்து கூறுகின்ற, சான்றோரை அஞ்சியே ---கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே ஆகும்.

 

     கயவர்களைச் சான்றோர் என்றது இழிவு பற்றி.

 

     முகத்தினால் மலர்ந்து இனிமையாகப் பேசிச் சிரித்துப் பழகி, அதே சமயம் மனத்தினுள் தீயவற்றையே நினைக்கும் வஞ்சகர்களைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். அவர்களுடன் நட்புக் கூடாது. முகம் சிரிக்கும்போதே, அகம் தீங்கு செய்ய நினைக்கும். இவர்கள் மிக அசாதாரணமான நண்பர்கள் ஆவர். அசாதாரணம் என்றால், பழகுகின்ற ஒருவனுக்கு நன்மையைக் கருதுபவர் இவர் போல் இல்லை என்று கருதும் அளவுக்கு, மிக மிக நல்லவராகவே பழகுவார்.

 

     நெருங்கிய நண்பர்கள் போலவே உறவாடுவதால் உள்ளத்தில் பகை உணர்வு கொண்டவர்களைக் காணுகின்றபோது, அவர்களை இனம் காண முடிவதில்லை. நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் போலத்தான் தோன்றுவார்கள். இனிமையான புன்முறுவலுடன் சிரித்துப் பேசிப் பேசி, அவர்கள் மீது ஐயம் தோன்றாதபடி பார்த்துக்கொள்வர். ஆனால், ஏமாந்த போது, காலம் அறிந்து, அந்த வஞ்சகர்கள் ஏமாற்றிவிடுவார்கள்.

 

     "அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம் கடுத்தது காட்டிவிடும்" என்பது உண்மைதான். இது உள்ளத்தில் வஞ்சகம் இல்லாதவர்க்குப் பொருந்தும். முகத்தில் மலர்ச்சியைக் காட்டி, உள்ளத்தில் உள்ள பகையை மறைத்து விடக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் வஞ்சர்கள். உதட்டில் தேனும், உள்ளத்தில் நஞ்சும் ஒரே காலத்தில் இவர்களிடத்தில் பொருந்தி இருக்கும். உறவாடிக் கொண்டிருக்கும்போதே தமது தீயநோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பர். எனவேதான் இவர்கள் அஞ்சத்தக்கவர்கள் என்று அருளினார் நாயனார். யாராக இருந்தால் என்ன என்று, பாராமுகமாக இருந்து நட்பைத் தொடர்ந்தால் பின்னால் துன்பமே உண்டாகும். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" என்று நாயனார் பிறிதொரு திருக்குறளில் காட்டி இருப்பதையும் கருத்தில் கொள்ளுதல் நலம். அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவின்மை ஆகும்.

 

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...