நீதியால் தொழுதல்
----
மனிதன் தனது தேவைக்கேற்ப வருவாய் வந்து கொண்டிருக்கும் வரையில் நேர்மை உடையவனாக, ஒழுக்க நெறியில், அறத்தின் வழிச் செல்பவனாக வாழ்கிறான். தேவைகள் மிகுதிப்படுகின்ற சூழல் நேர்ந்து, தனது வருவாயைக் கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது, அதுவரையில் அவன் வாழ்ந்து வந்த திசைமாறுகிறது. அவனது சிந்தனை முழுதும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதைப் பற்றியே இருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ளோரைச் சற்றே எண்ணிப் பார்க்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாழ்க்கை தடுமாற்றம் அடைந்து தடம் மாறத் தொடங்குகிறது. முன்னாலே அவனுக்குத் தோன்றிய நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கத் தொடங்குகிறான்.
"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
பசுஏது, பாசம்ஏது,
பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
மனம்விரும்பு உணவு உண்டு, நல்
வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே"
என்று வள்ளல்பெருமான் பாடியபடி பலர் இக்காலத்திலும், ‘தேகமே ஆத்மா, போகமே மோட்சம்’ என்று உலகாயதம் மேலிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குப் பெயர் ‘பகுத்தறிவு’ என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள் உலகாயதர்கள் எனப்படுவர். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்பதில்லை. நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் தொடர்பினால் ஆகியதே உடம்பு என்பர். அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்பதுன்பங்கள் என்பதும் பொய். இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.
இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான். ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தடுமாற்றத்தைத் தடுக்கவே சமயநெறி மனிதனுக்குத் தேவைப்படுகிறது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். வாழ்க்கையில் சின்னச் சின்னத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது ஒழுக்கநெறி சிதைகின்றது. இப்படி மனிதனது மனத்திலே தோன்றும் தீய எண்ணங்களுக்கும், தடுமாற்றமான, தெளிவில்லாத சிந்தனைகளுக்கும் சமயநெறியிலே இடம் இல்லை. சமயச் சார்பு இல்லாத ஒழுக்கநெறி, காது இல்லாத ஊசியைப் போன்றது. மணல்பரப்பின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போன்றது.
மனிதனை மனிதன் வஞ்சித்து ஏமாற்றி வாழ்கின்ற சிந்தனை முதலில் தோன்றுகிறது. சிந்தனை செயலாக வந்த பின்னர், செயலைத் திருத்த முற்படுகிறது சட்டம். குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது சட்டம். குற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை முதலிலேயே மாற்றி, நல்வழிப் படுத்த உதவுகிறது சமயம். மனித வாழ்க்கை எப்பொழுதுமே குறைவு உடையதுதான். எல்லாருக்கும், எவ்வகையிலாவது குறைவு இருந்துகொண்டேதான் இருக்கும். குறைவிலா நிறைவாக உள்ளவன் யார் என்பதைக் துருவித் துருவி ஆராய்கின்ற பொழுது, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் ஒருவன்தான் என்ற முடிவு ஏற்படும். எனவேதான், “குறைவு இலா நிறைவே, குணக்குன்றே” என்றும், குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே” என்றும் இறைவனைப் பாடினார்கள். இறைவன் குறைவு அற்றவனாக, அன்பே உருவாக, இன்பமே வடிவினனாக இருக்கின்றான். இத்தகு பொருளை மனிதன் சார்ந்திருந்தால், அவனும் குறைவு இல்லா நிறைவு உடையவனாக ஆகிவிடுகின்றான். இறைவனைச் சார்வதற்குச் சமயநெறியும், வழிபாடும் உறுதுணை ஆக நிற்கின்றன.
இருட்டு அறையில் உள்ள குருட்டுக் குழந்தையைப் போல் உயிரானது அறியாமை என்னும் அஞ்ஞான இருளில் அவதிப்படுகின்றது. “காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த எமை” என்பார் தாயுமான அடிகளார். ஊனத் திரளில் நாம் ஒன்றுபட்டு இருக்கின்றோம். ஞானத்திரளாக நிற்கும் இறைவனைத் தொழுவதன் மூலம், அறியாமையாகிய ஊனத்திரள் நீங்கப் பெறும். “ஞானத் திரளாய் நின்ற பெருமான், நல்ல அடியார்மேல் ஊனத் திரளை நீக்கும், அதுவும் உண்மைப் பொருள் போலும்” என்று பாடுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான். துன்பத் தொடக்கில் தொல்லையுறும் உயிர், அதிலிருந்து விடுதலை பெற்று, இன்பத்தில் திளைத்து மகிழ்கிறது. அது சாதாரண இன்பம் அல்ல. சிறிது நேரமே நிலைத்து இருக்கக் கூடிய இன்பம் அல்ல. மறவா, நினையா, அளவு இல்லா, மாளா இன்பம் அது.
இறைவனைத் தொழுதல் இறைவனுக்காக அல்ல. அவன் பெறக்கூடியது ஒன்றுமில்லை. இறைவனைத் தொழுதல் உயிரின் நன்மைக்கும் வளர்ச்சிக்குமே ஆகும். இறைவனைத் தொழுதல் என்றால் உடனடியாகச் சடங்குகளே நினைவுக்கு வரும். சடங்குகள் சமயம் ஆகமாட்டா. அவையே இறைவனைத் தொழுதலும் ஆகா. ஆனால் அவையின்றியும் சமய வாழ்வு அமையாது. கடவுளைத் தொழுதலும் ஆகாது. சடங்குகள் சமயவாழ்க்கைப் பயிற்சிக்குத் தொடக்க நிலையில் துணை செய்வன. வழிபாட்டுணர்வில் நிலைத்து நிற்கக் காப்பாக அமைவன. இறைவனைச் சடங்குகளால் தொழும் அளவிலேயே தொழுகை முற்றுப்பெறாது. சடங்குகள் தொடக்க நிலையின. சமய வாழ்க்கையானது சீலத்தால், நோன்பால், செறிவால், அறிவால் என்று முழுமை பெறுகிறதோ அன்றே இறைவனைத் தொழுதல் முழுமை எய்துகிறது.
இறைவனைச் சடங்குகளால்தான் தொழுதல் வேண்டும் என்பது நாடகத்தால் அடியார்போல் நடிப்பதாகவே முடியும். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் அழுக்காறு அடங்கவில்லை. ஆசைகளால் அலைப்புண்டு வாழ்கின்றனர். வெகுளியால் வெந்து அழிகின்றனர். கடுமொழி பேசுகின்றனர். ஆங்காரம் மேலிட்டு, பகைமை உணர்வால் பலருக்கும் துன்பம் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மனிதரில் “பொக்கு” போன்றவர். “பொக்கு” என்றால் உள்ளீடில்லாத பதர், “பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன்” என்பது அப்பர் பெருமான் வாக்கு. இத்தகையோர் சமய வேடங்கள் பூணலாம். ஆரவாரமான சமய சடங்குகளைச் செய்யலாம். அது இறைவனைத் தொழுதலாகாது. “சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று, விழுந்து கிடப்பேனை” என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க.
திருஞானசம்பந்தர் இறைவனைத் தொழும் நெறி இன்னது என்று காட்டுகிறார். நூறாயிரம் சடங்கை விட, புலன்களால் நின்றொழுகும் பண்பு இருந்தால் மட்டுமே பயன் உண்டு. இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலாதவன், நீதியின் வடிவம் ஆனவன். அவனை கல்விச் செருக்காலும், செல்வச் செருக்காலும் அடைய முடியாது உண்மை அன்பு ஒன்றினால் மட்டுமே அடைதல் கூடும். “பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே” என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க. “நீதியும் நீயே” நக்கீரதேவர் அருளிய பெருந்தேவபாணி.
உயிர்க்குலம் அனைத்துக்கும் ஊறு செய்யாத தத்துவமே நீதி. “தயா மூல தன்மம் எனும் தத்துவத்தின் வழி நின்று, சார்ந்தோர்க்கு எல்லாம் நலம் கொடுக்கும் நம்பி” என்று இறைவனைப் போற்றுவார் அப்பர் பெருமான். அந்த வழியையே இறைவன் தனக்கு நல்கியதாகவும், “தயாமூல தன்மவழி எனக்கு நல்கி மனம் திருத்தும் மழபாடி வயிரத் தூணே” என்றும் இறைவனைப் பாடி உள்ளார். பிறரை வாழ்விப்பதில் வாழ்வதுதான் நீதி. இத்தகைய நிறைந்த நீதியாய் வாழ்கின்ற வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழுதால், வினைச் சார்பு வராது என்கிறார் திருஞானசம்பந்தர். வினையே ஆடவர்க்கு உயிரே” என்றாற்போல, செயல் புரிவது உயிரின் இயற்கை. செயல் மாண்டு அடங்குதல் மனித வாழ்வின் மேம்பட்ட நிலை. செயல்வழித் தவம் செய்தல் வேண்டும். அதாவது வினை செய்தலில், தவம் செய்தலே சிறந்தது. வினை செய்தால் அவ்வழி பற்றும் பாசமும், இன்பமும் துன்பமும் வரும். அதனால் உயிரரானது மன அலைவுகளுக்கு ஆளாகும். ஆனால், நீதியால் நின்று வினை செய்யும்பொழுது, அந்த வினை செயலைப் பெருக்குவதைவிட செயல் மாண்டு அடங்கத் துணை செய்கிறது.
அதுவே, இறைவனைத் தொழும் முறை என்பது திருஞானசம்பந்தர் காட்டுகிறார்.
“போதியார் பிண்டியார் என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின், அம் மாஎனும் கச்சியுள்
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின், நும் மேல்வினை நில்லாவே.”
போதிமர நிழலில் அமர்ந்த புத்தனை வணங்குவோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். உங்கள் மேல் வரும் வினைகள் நில்லா.
உமது வினைகள் முற்றிலும் அழிந்து ஒழியவேண்டுமானால், நாளும் வழிபடவேண்டிய முறையால் வழிபடவேண்டும் என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
“நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்,
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையும் தண்கழுக் குன்றமே.”
நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை உடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள்.
நீதியால் தொழுதல் குறித்துத் திருஞானசம்பந்தப் பெருமான் மேலும் தெளிவாக ஒரு பாடலில் காட்டுகின்றார்.
“ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய
சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி,
நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த,
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!”
திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! உள்ளத்தில் பரபரப்பு (வேகம்) அடங்கப் பெற்று, மனதை ஒருமுகப்படுத்தி, கள்ளத்தனம், கபடம், வஞ்சகம் நீங்கி, கடுமையான சொற்களைத் தவிர்த்து, மனதைத் தூய்மைப்படுத்தி, காம உணர்வுகளை நீக்கி, நல்லமுறையில் உமது திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தை நாவாரச் சொல்லி வழிபடுகிறேன். அடியேனுக்குத் தகுதிக்கு ஏற்ப வந்து அருள் புரியவேண்டும்.
வேகம் அடங்கினால் விவேகம் பிறக்கும் என்பதால், “ஒல்லை ஆறி” என்றார். “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்” என்றார் மணிவாசகப் பெருமான். பரபரப்பு கூடாது. பரபரத்தல் என்னும் சொல்லுக்கு, தீவிரப்படல், மிகவிரைதல், தன்வசம் அழிதல் என்று பொருள். வாழ்க்கையில் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி பெற்று அமைதியும் இன்பமும் சூழ வாழ விரும்பினால் பரபரப்பு உணர்ச்சி கூடாது.
முதலில் பரபரப்பு அடங்கவேண்டும், இரண்டாவதாக உள்ளம் ஒருமைப்பட வேண்டும். மூன்றாவதாக, கள்ளத்தனம் கூடாது. நான்காவதாக, வெய்ய சொல் கூடாது, ஐந்தாவதாக மனம் தூய்மை ஆக வேண்டும். ஆறாவதாக காம உணர்வுகள் கூடாது. இந்த நிலையில் இறைவனைத் தொழுவதே “நீதியால் தொழுதல்” ஆகும்.
No comments:
Post a Comment