71. ஒழியாதவை

“உபசாரம் செய்பவரை விலக்கிடினும்

     அவர்செய்கை ஒழிந்து போகாது;

அபசாரம் செய்வாரை அடித்தாலும்

     வைதாலும் அதுநில் லாது;

சுபசாரத் தண்டலையார் வளநாட்டில்

     திருடருக்குத் தொழில்நில் லாது;

விபசாரம் செய்வாரை மேனியெல்லாம்

     சுட்டாலும் விட்டி டாரே.”


இதன் பொருள் –


    சுபசாரத் தண்டலையார் வளநாட்டில் - நலம் நிறைந்த திருத்தண்டலை இறைவரின் வளம் நிறைந்த நாட்டினில், உபசாரம் செய்பவரை விலக்கிடினும் அவர் செய்கை ஒழிந்து போகாது - நலம் புரிவாரைத் தடுத்தாலும் அவர் செயல் நீங்கிவிடாது, அபசாரம் செய்வோரை அடித்தாலும் வைதாலும் அது நில்லாது - தீங்கு புரிவோரைத் தண்டித்தாலும் பழித்தாலும் அவர் செயல் ஒழியாது, திருடருக்குத் தொழில் நில்லாது - திருடரை (என்ன செய்தாலும்) திருட்டுத் தொழில் விடாது, விபசாரம் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும் விட்டிடார் - விபசாரத் தொழிலில் ஈடுபட்டவரை உடம்பெல்லாம் சூடு போட்டாலும் விடமாட்டார்.


11. இல்வாழ்தல்

  “உற்றபெருஞ் சுற்றம் உற,நன் மனைவியுடன் பற்றிமிக வாழ்க; பசுவின்வால் - பற்றி நதிகடத்தல் அன்றியே, நாயின்வால் பற்றி நதிகடத்தல் உண்டோ நவில்.” ...