“சீரிலகும் தண்டலையார் வளநாட்டில்
ஒருதோழன் தீமை தீர
வாரமிகும் பிள்ளைதனை அரிந்துண்டான்
ஒருவேந்தன் மணந்து கொண்ட
ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி
வடிவுகொண்டாள்! ஆகை யாலே
ஊரிலொரு வன்தோழன்! ஆரும்அற்ற
தேதாரம்! உண்மை தானே?”
இதன் பொருள் ---
சீர் இலகும் தண்டலையார் வளநாட்டில் - அழகுமிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் வளமிக்க நாட்டிலே, ஒரு தோழன் தீமை தீர வாரம் மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான் - ஒரு நண்பனுடைய பொல்லாங்கு நீங்க அன்பு மிகும் குழந்தையை அரிந்து உண்டான், ஒரு வேந்தன் மணந்துகொண்ட ஆர்வமிகும் மனைக்கிழத்தி ஆண்டிச்சி வடிவு கொண்டாள் – ஓர் அரசன் மணம் புரிந்துகொண்ட அன்பு மிக்க இல்லக்கிழத்தி ஆண்டிச்சியின் கோலங் கொண்டாள். ஆகையாலே, ஊரில் ஒருவன் தோழன் - ஆகையால் ஊரில் ஒருவனே நண்பனாகத் தக்கவன், (பலர் இருக்க இயலாது), ஆரும் அற்றதே தாரம் - எவரும் ஆதரவாக இல்லாதவளே மனைவியாகத் தக்கவள்; உண்மைதானே - இது வாய்மையானதே ஆகும்.
‘ஊரில் ஒருவனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்' என்பது பழமொழி. இப்பாடலில் குறித்த இரு கதைகளும் இன்னது என்று அறியக் கூடவில்லை. அறிந்தார்பால் கேட்டு அறியவும்.