திரு ஏகம்ப மாலை - 7

 

"அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால்,

சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப்

பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக்கு

என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சிஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  பொய்யாகிய உடம்பைப் போற்றி வளர்க்கும் பொருட்டு மனிதனுக்கு முதலில் எழுகின்ற கவலை உணவைப் பற்றியது. அந்தக் கவலை எவ்வகையிலாவது நீங்கினால், அடுத்து உடம்பைக் கிடத்த நல்ல படுக்கை, இருக்க வீடு, உடுத்த உடை தேவைப்படுவதால், அதற்கான பொருளைத் தேடுவது அடுத்த கவலை ஆகிறது.  இவையெல்லாம் வாய்த்துவிட்டால், அழகு மிக்க மயில் போலும் சாயலை உடைய இளம்பெண்களைப் புகழ்ந்து பேசும் இந்த விசாரம்  பலகாலத்து விசாரமாக உள்ளது.  சித்த சாந்தம் அடையாத, இந்தப் பாவியின் மனத்திற்கு  வேறு என்ன கவலையை வைத்தாய்.

விளக்கம் : மனிதன் கலியுகத்தில் அன்னத்தால் உயிர் பெற்று விளங்குவான் என்பது சரித்திரம். இதனை உயிரானது முதலாம் யுகத்தில் எலும்பிலும், இரண்டாம் யுகத்தில் தசையிலும், மூன்றாம் யுகத்தில் இரத்தத்திலும், நான்காம் அன்னம் முதலியவற்றிலும் இருக்கும் என்று பராசரஸ்மிருதி, ஆசார காண்டம், யுகதர்ம பேதத்தில் கூறியவாற்றான் உணர்க என்று திரு.வி.க. அவர்கள் காட்டியுள்ளார்.  

சோற்றுக் கவலை முதல் கவலை என்பதற்கு, நல்வழி என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார் காட்டுவது....

"சேவித்தும், சென்றிரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்,

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்"

இப் பாடலின் பதவுரை...

வயிற்றின் கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றேம்.

வீட்டு நெறியில் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் என்பது கருத்து.

சொன்ன விசாரம். சொர்ணம் என்பது சொன்னம் என்று ஆயிற்று. கர்ணன், கன்னன் ஆனது போல. சொர்ணம் என்றால் பொன். அடுத்துப் பொருள் தேடும் கவலை. இந்தக் கவலையைப் பற்றி  நீதிவெண்பா என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்...

"இன்னல் தரும்பொருளை ஈட்டலும் துன்பமே,

பின்அதனைப் பேணுதலும் துன்பமே -- அன்னது

அழித்தலும் துன்பமே, அந்தோ, பிறர்பால்

இழத்தலும் துன்பமே ஆம்."

இதன் பொருள் ---

துன்பத்தைத் தரக்கூடிய செல்வத்தைத் தேடுதலும் துன்பம்.  தேடிய பொருளை காத்தலும் துன்பம். அதனைச் செலவழித்தலும் துன்பமே.  அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போவதும் துன்பமே.


நாலடியார் கூறுவதையும் காண்போம்....

"ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்

காத்தலும் ஆங்கே கடுந்துன்பம், - காத்தல்

குறைபடில் துன்பம், கெடில்துன்பம், துன்பக்கு

உறைபதி மற்றைப் பொருள்."

பொருள் திரட்டுதலும் துன்பம்; திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும் அவ்வாறே மிக்க துன்பமாகும்;  அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள் தன் அளவில் குறைந்துபோகுமாயின் துன்பமே, இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்து போகுமானால் பின்னும் துன்பம்; ஆதலால், பொருள் துன்பங்கள் எல்லாவற்றிற்கும் தங்கும் இடம் என்க.


அருணகரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றின் கருத்தினையும் இங்கு வைத்துச் சிந்தித்தல் நலம்.


"உடுக்கத் துகில் வேணும், நீள்பசி

     அவிக்கக் கனபானம் வேணும், நல்

          ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய் ...... உறுநோயை


ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்

     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்

          படுக்கத் தனிவீடு வேணும், இவ் ...... வகை யாவும்


கிடைத்துக் க்ருகவாசி ஆகிய

     மயக்கக் கடல்ஆடி, நீடிய

          கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ...... அவமே போம்.


க்ருபைச் சித்தமும், ஞான போதமும்

     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ

          கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ...... ஒருநாளே.


குடக்குச் சில தூதர் தேடுக,

     வடக்குச் சில தூதர் நாடுக,

          குணக்குச் சில தூதர் தேடுக, ...... என மேவிக்


குறிப்பில் குறி காணும் மாருதி,

     இனித் தெற்கு ஒரு தூது போவது

          குறிப்பில் குறிபோன போதிலும் ...... வரலாமோ?


அடிக் குத்திர காரர் ஆகிய

     அரக்கர்க்கு இளையாத தீரனும்,

          அலைக்கு அப்புறம் மேவி, மாதுஉறு ...... வனமே சென்று,


அருள்பொன் திரு ஆழி மோதிரம்

     அளித்து உற்றவர் மேல் மனோகரம்

          அளித்துக் கதிர்காமம் மேவிய ...... பெருமாளே."

இதன் பொழிப்புரை ---

மேற்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், வடக்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், கிழக்கே சிலதூதர்கள் தேட வேண்டும் என்றும் அனுப்பி வைத்து, குறிப்பில் குறிப்பறிகின்ற அனுமனை இனி தெற்கே ஒரு தூதனாகப் போக வேண்டியது என்று சொல்லியனுப்பும் குறிப்பு விவரத்தின்படி குறித்த பொருள் கிடைத்தல் தவறிப் போன போதிலும் திரும்பி வீணே வரலாமோ? வருதல் நன்றல்ல (என்று சுக்ரீவன் சொல்லியனுப்ப) அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாய்க் கடலைக் கடந்து அப்புறம் இலங்கைக்குப் போய், சீதை இருந்த அசோகவனம் புகுந்து, இராமர் தந்த அழகிய பொன் மோதிரத்தைக் கொடுத்துத் திரும்பிய அனுமனுக்கு அன்புடன் அருள் புரிந்து கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமையில் மிக்கவரே!

உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத் தணிப்பதற்குக் கெட்டியான பானகம் முதலிய சுவை நீர் வேண்டும்; உடல் அழுக்கு நீங்கி ஒளி பெற தூயநீரும், ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள் இருப்பதற்கு இளம் மனைவி வேண்டும்; படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள் யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக் காப்பவனாயிருந்து, முடிவில் உயிர் வீணே அழிந்து போம்; ஆதலால் உமது கருணை உள்ளத்தையும், சிவஞான போதத்தையும் அடியேனை அழைத்துத் தந்தருளவேண்டும்; ஊழ்வினையாகிய மலைச்சூழலில் சுழலுகின்ற என்னை ஆண்டு அருளும் நாள் ஒன்று கிடைக்குமோ?



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...