"வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கு ஓதுவேன், அஞ்செழுத்தும் சொலேன், தமியேன் உடலம்
நரிக்கோ, கழுகு, பருந்தினுக்கோ, வெய்ய நாய்தனக்கோ,
எரிக்கோ, இரைஎதுக்கோ, இறைவா, கச்சிஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, செவ்வரிகளை உடையதும், அழகிய வேலை ஒத்ததும் ஆகிய கண்களை உடைய பெண்களின் காம மயக்கத்தில் போய், அவருடைய நட்பு வேண்டி, அவர்களைப் புகழ்ந்து பேசுவேன். உனது மந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதமாட்டேன். ஆதலால், அடியேனது உடம்பானது, விழுந்தால், நரிக்கு உணவாகுமா? கழுக்குக்கா?, பருந்தினுக்கா?, கொடிய நாயினுக்கா? அல்லது நெருப்பில் தான் இட்டு சுடப்படுமா? வேறு எதற்கு இரை ஆவேன்?
விளக்கம் : அனைத்தையும் துறந்த துறவிகளையும் வேல் போல் தைத்து உருவி, அவர்களைத் தம் வயப்படுத்துவது விலைமகளிரின் கண்கள் ஆகும். அதனை வரிக்கோல வேல் விழி என்றார். அநுராகம் - காம மயக்கம். அவர்களின் அநுராகத்தில் மயக்கமுற்று, வாழ்நாளை வீணாள் ஆக்குவேன், அவர்கள் தரும் இன்பத்தை வேண்டி அவர்களைப் புகழ்ந்து உரைப்பேன் ஆதலால், சரிக்கு ஓதுவேன் என்றார். காமநூல்களை ஓதுவேன் என்றலும் உண்டு. விலைமகளிர் பற்றி அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் பலபடக் கூறி உள்ளார்.
"வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன்" என்று பாடினார் சுந்தரர் பெருமான்.
"வைப்பு மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே, செப்புநேர் முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை என்றும் குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியருளியதையும் கருத்தில் கொள்க.
"வேனில் வேள் மலர்க்கணைக்கும், வெண் நகை, செவ்வாய், கரிய
பால்நலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே,
உன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வான்உளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."
என்று மணிவாசகப் பெருமான் பாடினார்.
"சுடர்இலை நெடுவேல் கரும்கணார்க்கு உருகித்
துயர்ந்து நின்று, அலமரும் மனம், நின்
நடம்நவில் சரண பங்கயம் நினைந்து
நைந்து நைந்து உருகும் நாள் உளதோ?"
என்றும்,
"பெண்அருங்கலமே, அமுதமே, எனப் பெண்
பேதையர்ப் புகழ்ந்து அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன்தரல் அறிந்து, நிற் புகழேன்."
என்றும் சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.
"தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த
தாயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை"
என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.
இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும். ஆனால், பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம். பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.
No comments:
Post a Comment