"நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும்,
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்,
காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சிஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! நாயாகிப் பிறந்து இருந்தாலும் நல்ல வேட்டையாடித் தன்னை வளர்ப்பவனுக்கு நன்மையைச் செய்யும். தாய் வயிற்றில் மனிதராய்ப் பிறந்து, பின் செல்வம் உள்ளவர்களாய் ஆகியும், காய்க்காத மரத்தைப் போலவும், நீர் வற்றிப் போன குளத்தைக் போலவும், கல்லால் ஆன பசுவைப் போலவும் ஒருவர்க்கும் ஒன்றைக் கொடுக்காமல், யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் இந்தப் பூமியில் வாழும் மனிதர்களை எதற்காகப் படைத்தாய்.
விளக்கம் -- உலகில் ஆறு அறிவு உள்ள மனிதனாகப் பிறந்து விட்டு, என் நல்ல செயலையும் செய்யாது, பிறர் தமக்குச் செய்த உதவியையும் நன்றி உணர்வோடு எண்ணிப் பாராது உள்ளவர்கள் மக்களாய்ப் பிறந்தாலும், கீழான நாயினும் கீழாவர் என்பதால் "நாயாயப் பிறந்திடினும் நல்வேட்டை ஆடி நயம் புரியும்" என்றார். நன்றி உணர்வு மிக்கது நாய் என்பதால், அதனைச் சிறப்பித்து, அந்த உணர்வு இல்லாத மனிதனைத் தாழ்த்தினார்.
வீட்டை அடைதற்கு உரிய மானிடப் பிறவியை எடுத்தாலும், பிறந்த பிறகு பொருள், கல்வி, அறிவு கைகூடுதலும், அவை கூடிய காலத்தில், பிறர்க்குப் பயன்பட வாழ்தல் வேண்டும். தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளர் என்னும் தகைமையோடு வாழ வேண்டும். இவையெல்லாம் முன்செய்த வினைப்பயனால் நிகழ்பவை. அதனால், "தாயார் வயிற்றில் சம்பன்னராய் பிறந்து" என்றார்.
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையன் கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஊரில் நடுவில் இருந்தும், பழுக்காமல், பிறருக்கு எந்தப் பயனும் இல்லாமல் இருப்பதால், "காயா மரம்" என்றார்.
ஊரின் நடுவில் இருந்து ஊருணி என்று பேர் பெற்றும், அந்தக் குளமானது வறண்டு போய் இருந்தால், நீர் இன்மையால் யாருக்கும் பயன் படாதது குறித்து "வறளாம் குளமும்" என்றார்.
ஆ, பசு. பசு என்று இருந்தால் பால் தரவேண்டும். மலட்டுச் பசுவாக இருத்தல் கூடாது. பால் தருகின்ற பண்பு இல்லாமையால், கல்லால் ஆன பசு என்பார், "கல் ஆ" என்றார்.
காயாத மரமும், நீர் வற்றிய குளமும், கல் ஆவும் பிறர்க்குப் பயன்படாதது போல், ஈகைக் குணம் இல்லாத மனிதரும் பயன் அற்றவர் என்றார்.
No comments:
Post a Comment