"மாயநட் போரையும், மாயா மலம்எனும் மாதரையும்,
வீயவிட்டு ஓடி, வெளியே புறப்பட்டு, மெய்அருளாம்
தாயுடன் சென்று, பின் தாதையைக் கூடி, பின்தாயை மறந்து
ஏயும் அதே நிட்டை என்றான், எழில் கச்சிஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன், (குருநாதனாக எழுந்தருளி வந்து) வஞ்சகம் செய்து மயக்கும் நட்பினரையும், அழியாத மலம் என்னும் பெண்களையும், தன்னை விட்டுக் கெட்டு ஒழியத் துரத்தி, துறந்து, உண்மைத் திருவருள் எனப்படும் தாயோடு தொடர்ந்து சென்று, பிறகு தந்தையாகிய சிவத்தைச் சேர்ந்து, அதற்குமேல், தாயை மறந்து, தந்தையைப் பொருந்தி இருப்பதே நிட்டை என்று உபதேசித்து அருளினான்.
விளக்கம் : மாய நட்போரை என்றது தத்துவங்களை. தத்துவங்களைப் பொய் என உணர்ந்து, அவற்றைக் கடந்து வரவேண்டும். சகல அவத்தை நிலை தத்துவங்களோடு கூடியிருக்கும் நிலை. மாயாமலம் என்றது, சகஜமலம் என்னும் ஆணவமலத்தை. மாயாத மலம் - கெடாத மலம். இது ஆணவம் எனப்பட்டது. திருவருட் பயன் என்னும் சித்தாந்த சாத்திர நூலில் ஆணவத்தைப் பெண்ணிற்கு உருவகித்துக் கூறப்பட்டுள்ளது காண்க. ஆன்மா அறிவு ஏதும் விளங்காது மயங்கிக் கிடந்த கேவல அவத்தை என்னும் நிலையைக் குறித்தது. முத்தி நிலையிலும் ஆணவ மலமானது தனது வலி குன்றிக் கிடப்பதால், அது மாயாமலம் எனப்பட்டது.
தாய் என்பது உண்மை அருள் என்று சொல்லப்படும் மெய்அருள் ஆகிய திருவருளை. "அருள் அது சத்தியாகும் அரன் தனக்கு" என்னும் சாத்திர உண்மையை உணர்க. தந்தை என்றது சிவத்தை. திருவருள் துணை இல்லாமல் சிவத்தைக் கூடுதல் இல்லை என்பது சாத்திர நூல்களின் கருத்து. திருவருள் துணையால், ஆன்மா சிவத்தைக் கண்டபின், ஆன்மா சிவத்தோடு ஒன்றிக் கிடக்கும். அப்போது திருவருளாகிய தாயை மறக்கின்ற நிலை தானே வரும். நிட்டை என்றால், செயல் அற்றுக் கிடப்பது. "சேவடி சேறல் செயல் அறல் தானே" என்பது திருமந்திரம்.
No comments:
Post a Comment