"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற
தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினருக்கு ஒன்று
ஈயார், இருந்து என்ன, போய் என்ன, காண் கச்சி ஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! ஒழியாமல் பொய் பேசுவார்கள். நல்லவர்களைப் பழிப்பார்கள். தன்னைச் சுமந்து பெற்ற தாயையே திட்டிப் பேசுவார்கள். பல வஞ்சனைகளைச் செய்வார்கள். ஞான நூல்களை ஆராய மாட்டார்கள். பிறருக்கு எந்த உபகாரமும் செய்யாமாட்டார்கள். தன்னை நாடி வந்தவருக்கு எதையும் கொடுக்கமாட்டார்கள். இத் தன்மையானவர்கள் உலகில் இருந்தால் என்ன பயன். இறந்து ஒழிந்தால் என்ன கெடுதி.
விளக்கம்: "பொய்யாமை", "வாய்மை" என்னும் திருக்குறள் அதிகாரங்கள் காண்க.
நல்லோரை நிந்திப்பது பெரும்பாவம் என்பதால், மனுமுறை கண்ட வாசகத்திலே, முதலாக இதையே வைத்து, "நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ" என்றார் வள்ளல் பெருமான்.
"தாயில் சிறந்த கோயிலும் இல்லை", "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்", "தாயோடு அறுசுவை போம்" என்னும் ஆத்த வாக்கியங்களை ஓதி உணர்ந்தால், தாயாரையே வையும் கொடுமை ஒருவனது மனத்தில் நிகழாது.
பிறருக்கு உரிய பொருளை வஞ்சித்துக் கொள்வதற்கு, அந்தப் பொருளுக்கு உரியவரது செர்வு பார்த்து இருந்து, அதற்கேற்ப வஞ்சகச் செயல்களைச் செய்வதால் "சதி ஆயிரம்" என்றார்.
துன்பத்தில் கொண்டு சேர்க்கும் நூல்களை ஓயாமல் படிப்பர். ஆனால் இம்மை மறுமைப் பயனைத் தரும் நூல்களைப் படிக்கமாட்டார்கள்.
ஈதல், இசைபட வாழ்தல், பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் என்பவற்றின் உண்மையை உணர்ந்து, உயிருக்கு ஆக்கம் தேடாமல், தேடிச் சென்று பிறருக்கு உபகாரம் எதையும் செய்யமாட்டார்கள்.
தேடிச் சென்று செய்யாதவர்கள், தன்னை நாடி வந்தவருக்கும் எதையும் கொடுக்கமாட்டார்கள்.
"தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று." --- திருக்குறள்.
தோன்றாமை நன்று என்றதால், புகழோடு வாழாதவன் இருந்தும் பயனில்லை; இறந்தாலும் நட்டமில்லை என்பது புலனாயிற்று.
No comments:
Post a Comment