அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருவினைகள் ஈட்டும் (பொது)
முருகா!
திருவடி அருள்வாய்.
தனதனன தாத்த தனதனன தாத்த
தனதனன தாத்த ...... தனதான
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை
யெடுமெடென வீட்டி ...... லனைவோரும்
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்
எரியஎரி மூட்டி ...... யிடுமாறு
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
கயிறிறுக மாட்டி ...... யழையாமுன்
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு
பழையகுற வாட்டி ...... மணவாளா
பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு
பகருநுதல் நாட்ட ...... குமரேசா
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
அடைவடைவு கேட்ட ...... முருகோனே
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருவினைகள் ஈட்டும் இழவுபடு கூட்டை
எடும் எடு என, வீட்டில் ...... அனைவோரும்
இறுதி இடுகாட்டில் அழுது, தலை மாட்டில்
எரிய எரி மூட்டி ...... இடுமாறு,
கரியஇரு கோட்டு முரண் எருமை மோட்டர்
கயிறு இறுக மாட்டி ...... அழையாமுன்,
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
கழல் இணைகள் காட்டி ......அருள்வாயே.
பருவமலை நாட்டு மருவு கிளி ஓட்டு
பழைய குறவாட்டி ...... மணவாளா!
பகைஞர் படை வீட்டில் முதியகனல் ஊட்டு
பகரு நுதல் நாட்ட! ...... குமர ஈசா!
அருமறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டை
அடைவு அடைவு கேட்ட ...... முருகோனே!
அலைகடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி
அமரர் சிறை மீட்ட ...... பெருமாளே.
பதவுரை
பருவ மலைநாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா --- உயர்ந்த வள்ளிமலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே தேவரீரைக் குறித்துத் தவம் புரிந்து கொண்டிருந்த) பழைய உறவைப் பூண்டிருந்த குறமகள் ஆகிய வள்ளியநாயகியின் மணவாளரே!
பகைஞர் படைவீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமர --- தன்னோடு பகைத்தவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளிருகின்ற நெற்றி விழியினை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!
ஈசா --- எப்பொருட்கும் இறைவரே!
அருமறைகள் கூட்டி உரைசெய் தமிழ்ப் பாட்டை அடைவு அடைவு கேட்ட முருகோனே --- அருமையான வேதமொழிகளின் கருத்துக்களைக் கூட்டி உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப்பாடல் ய(ஆகிய திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகவேளே!
அலை கடலில் ஈட்ட அவுணர் தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே --- அலைகள் வீசும் கடலில் திரண்டு இருந்த அரக்கர்களை ஓட்டி, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!
இரு வினைகள் ஈட்டும் இழவு படு கூட்டை எடும் எடும் என --- நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளால் உண்டாகி, உயிர் இறந்து போன கூடான இவ்வுடலை எடுங்கள் எடுங்கள் என்று ஊரில் உள்ளார் கூற,
வீட்டில் அனைவோரும் இறுதி இடு காட்டில் அழுது --- வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் இறுதியாகச் சுடுகாட்டில் சென்று அழுது,
தலைமாட்டில் எரிய எரி மூட்டி இடுமாறு --- தலைப் பக்கம் எரியுமாறு நெருப்பை மூட்டி வைக்கும்படி,
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் --- கருநிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமை மீது வந்த மூர்க்கராகிய யமதூதர்கள் பாசக் கயிற்றை இறுக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக,
கனகமணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே --- பொன்னையும், இரத்தினத்தையும் ஒளிமழுங்கச் செய்வதாய்ப் பொருந்தின கழல்களை அணிந்துள்ள திருவடி இணைகளைக் காட்டி அருள் புரிவீராக.
பொழிப்புரை
உயர்ந்த வள்ளிமலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே தேவரீரைக் குறித்துத் தவம் புரிந்து கொண்டிருந்த) பழைய உறவைப் பூண்டிருந்த குறமகள் ஆகிய வள்ளியநாயகியின் மணவாளரே!
தன்னோடு பகைத்தவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளிருகின்ற நெற்றி விழியினை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!
எப்பொருட்கும் இறைவரே!
அருமையான வேதமொழிகளின் கருத்துக்களைக் கூட்டி உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப்பாடல் (ஆகிய திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகவேளே!
அலைகள் வீசும் கடலில் திரண்டு இருந்த அரக்கர்களை ஓட்டி, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!
நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளால் உண்டாகி, உயிர் இறந்து போன கூடான இவ்வுடலை எடுங்கள் எடுங்கள் என்று ஊரில் உள்ளார் கூற, வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் இறுதியாகச் சுடுகாட்டில் சென்று அழுது, தலைப் பக்கம் எரியுமாறு நெருப்பை மூட்டி வைக்கும்படி, கருநிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமை மீது வந்த மூர்க்கராகிய யமதூதர்கள் பாசக் கயிற்றை இறுக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, பொன்னையும், இரத்தினத்தையும் ஒளிமழுங்கச் செய்வதாய்ப் பொருந்தின கழல்களை அணிந்துள்ள திருவடி இணைகளைக் காட்டி அருள் புரிவீராக.
விரிவுரை
இரு வினைகள் ஈட்டும் இழவு படு கூட்டை ---
ஈட்டுதல் - கூடுதல், சம்பாதித்தல். ஈட்டம் - தேட்டம், தேடிய பொருள், சம்பாத்தியம்.
இருவினைகள் - நல்வினை, தீவினை.
"இருவினை ஊண் பசும்பை" என்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில். நல்வினை, தீவினை எனப்படும் இருவினைகளின் பயனான புண்ணிய பாவங்களை அனுபவிப்பதற்கு இடமாக, உயிர்களுக்கு மாயாகாரியமான உடம்பானது இறைவனால் படைத்து அளிக்கப்படுகின்றது. மூலமலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிக்கிறான் இறைவன். உடம்பு, தனு எனப்படும். மனம் முதலிய கருவிகள் கரணம் எனப்படும். இந்த உலகு புவனம் என்று குறிக்கப்படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போகம் எனப்படும். உயிர்கள் இறையருளால் தனு கரணம் புவனம் போகம் ஆகிய இந்நான்கினோடும் பொருந்தி வாழ்வதே உலகவாழ்க்கை. உயிர்கள் தனுவாகிய உடம்பினுள் நின்று, கரணங்களின் உதவியால் அறிந்து புவனத்திடையே போக்குவரவு செய்து, போகங்களை நுகர்ந்து கொண்டு வாழ்கின்றன. தோன்றிய எதுவும் அழிவுக்கு இடமானவை. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரர் தேவாரம். உயிர் குடியிருப்பதற்கு இடமாகிய உடம்பு, உயிர் நீங்கிய பின்னர் உடம்பு வெறும் கூடுதான். உயிர் இல்லாத உடல் பிணம் ஆகும். அது நாறி அழியக்கூடியது. எனவே, பிணத்தை இடுகாட்டில் கொண்டு சென்று புதைப்பர். அல்லது எரிப்பர்.
இழவுபடு கூட்டை எடும் எடும் என ---
"குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே, உடம்பொடு உயிர் இடை நட்பு" என்றார் திருவள்ளுவ நாயனார். "உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள நட்புத் தொடர்பானது, முட்டை ஓடு தனித்துக் கிடக்க, அதனுள் இருந்த பறவையானது, பருவம் வந்தபோது பறந்து போனது போன்றதாகும்" என்கின்றார் நாயனார்.
"குடம்பை தனித்து ஒழிய" என்றதனால், முட்டையும், அதனுள் இருந்த கருவும் ஒன்றாய்ப் பிறந்து, அது வேறு ஆகும் அளவும், கருவுக்கு ஆதாரமாக முட்டை ஓடு இருத்தல். இது உயிருக்கு ஆதாரமாக உடம்பு இருத்தலை உணர்த்தியது. முட்டைக்குள் பறவையானது வேற்றுமை இல்லாது இருந்து, பின்பு அதனுள் திரும்பவும் நுழையாமல், வேறுபட்டுப் போவதால், பறவை உயிருக்கு உவமானம் ஆயிற்று.
நட்பு என்றது, நட்பு இல்லாது போதலை அறிவித்தது. அறிவாயும், அருவாயும், நித்தியமாயும் உள்ள உயிரானது, அறிவற்ற சடமும், நித்தியம் இல்லாததும் ஆன உடம்போடு கூடி இருப்பது, வினைவசத்தால் கூடியதே அல்லாமல், நட்பு இல்லை என்பது தெளியப்படும்.
இனி, குடம்பை என்பதற்கு, கூடு என்று பொருள் கூறுதலும் உண்டு. கூடு பறவையுடன் தோன்றாது இருப்பதனாலும், கூட்டினை விட்டுச் சென்ற பறவை, அதனுள் மறுபடியும் வந்து நுழைவது உண்டு என்பதாலும், இது பொருந்தாது என்பதை அறிக. உடம்பில் இருந்து பிரிந்த உயிர், வேறு உடம்பில் புகுவது அன்றி, மறுபடியும் அதே உடம்பில் புகுவது இல்லை.
"கறந்த பால் முலைப் புகா,
கடைந்த வெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஒசை,
உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ, உதிர்ந்த காயும்,
மீண்டு போய் மரம் புகா,
இறந்தவர் பிழைப்பது இல்லை,
இல்லை, இல்லை, இல்லையே".
என்னும் சிவவாக்கியர் பாடல் காண்க.
"கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள், --- வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து." --- நாலடியார்.
இதன் பொருள் ---
வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல, மாந்தர்கள் - மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல் தோன்றி - ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் - பேசாமலே இறந்து போய் விடுவார்கள்.
சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க என்பது கருத்து
"விடம்பயில் எயிற்று அரவு உரியும், வீநுழை
குடம்பையும் தான் எனும் கொள்கைத்தே கொலாம்,
நடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர்வாழ்
உடம்பையும் யான் என உரைக்கற் பாலதோ." --- தி. வி.புராணம்.
இதன் பொருள் ---
நடம் பயில் கூத்தரின் - ஆடுகின்ற கூத்தர்களைப் போல, நடிக்கும் ஐவர் வாழ் - நடிக்கின்ற ஐம்பொறிகள் வாழா நின்ற; உடம்பையும் - உடலையும், யான் என - நான் என்று, உரைக்கற் பாலதோ - (உயிர்) கூறும் பகுதியை உடையதாமோ (அங்ஙனம் கொள்ளின் அது), விடம் பயில் - நஞ்சு தங்கிய, எயிற்று அரவு - பற்களையுடைய பாம்பு, உரியும் - தனது தோலையும், வீ - பறவை, நுழை குடம்பையும் - தான் நுழைகின்ற கூட்டையும், தான் எனும் கொள்கைத்து - தான் என்று கொள்ளும் கொள்கையை உடையதாம்.
உயிர் நீங்கி பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும் இந்த உடலைத் தான் பிரியமுடன் வளர்க்கின்றோம். இறைவன் திருவடியில் பிரியம் வைக்கவில்லை. பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர், பாடையில் கிடத்தி, சுடலைக்குக் கொண்டு சென்று,தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது,மாய உடம்பு இது" என்றார் அடிகளார்.
பருவ மலைநாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா ---
பருவம் - உயர்ச்சி, பெருமை. பருவமலை - உயர்ந்ததும், வள்ளிநாயகியார் அவதரித்துத் தவம் புரிந்ததுமான் பெருமை மிக்க மலை வள்ளிமலை.
தேவசேனை அம்மை முருகப் பெருமானை நோக்கி வள்ளியின் வரலாறு யாது எனக் கேட்டார். அதற்கு முருகப் பெருமான், "நீங்கள் இருவரும் திருமாலிடத்தே தோன்றியவர்கள். பன்னிரண்டு ஆண்டுக் காலமாக என்னை அடையத் தவம் செய்தீர்கள். அப்போது யாம், ஒருவர் விண்ணிலும், ஒருவர் மண்ணிலும் தோன்றுவீர்கள். தக்க காலத்தில் உங்களை மணம் புணர்வோம் என்று அருளினோம். நீ தேவர் கோனாகிய இந்திரன் மகளாய்த் தோன்றி, அவனுடைய வெள்ளை யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்டாய். யாம் முன்பு கூறியவாறே முதலில் உன்னை மணந்து கொண்டோம். உனது இளையாள் ஆகிய வள்ளி, மான் வயிற்றில் உதித்து, வேடர் குலத்தில் வளர்ந்தாள். இவளைப் பின்னர் "அந்தம் இல் மாயைகள் ஆற்றிய பின்னர்" மணந்துகொண்டோம் என்றார். இதனைக் கந்தபுராணம் விளக்குகின்றது. முருகப் பெருமான், முன்பு வாக்களித்த படியே அம்மையர் இருவரையும் மணம் புரிந்துகொண்டார். எனவே, வள்ளிநாயிகியைப் "பழைய குறவாட்டி" என்றார் அருணை வள்ளலார்.
பகைஞர் படைவீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமர ---
பகைஞர் - திரிபுரத்தவர்.
நுதல் நாட்ட குமர - நெற்றி விழியை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரர்.
சிவபரம்பொருள் நெற்றிவிழியால் முப்புரம் எரித்த வரலாறு
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காருமின்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் பிரமதேவர் அவர்முன் முன்தோன்றி யாது வரம் வேண்டும் என்றார். மூவரும் “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?" என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்கள் உலகில் வருவரும் இல்லை. அழியாதவைகளும் உலகில் ஒன்றும் இல்லை. கற்ப காலம் கழிந்தால் நானும் இறப்பேன். எமது தந்தையாகிய திருமாலும் அப்படியே! கங்கைக் கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசன் ஒருவரே. தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக் கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டினால் தருவோம்” என, தானவர்கள் மூவரும் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். மூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் ஈந்து தனது இருக்கை சேர்ந்தனன்.
மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுரகுலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர். அது கண்ட நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதி என்று கருதி, தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியார். ஆதலின், அவர்களைச் அழித்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.
திருமால் 'தேவர்களே அஞ்சாதீர்கள்' என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடக ஆகமத்தைப் பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரே. ஆதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராது ஒழியுங்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அது அறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய போர்க் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி அண்ணல் மேருவரை சேர்ந்து, சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரித்து வந்தனர்.
நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று, தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங்குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.
தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே நாராயணர் இடபமாக வடிவெடுக்க, அவ்விடபத்தின் மேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மார காலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகப் பெருமான்,
"கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ".
என்று பாடி அருளினார்.
விரிஞ்சன் விநாயக பூசனை புரிய, அவரருளால் இரதம் முன்போலாக, சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்று அண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.
அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்து ஏந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின், அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும், படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் சிவபரம்பொருள் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.
"குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வாய் ஓட்டி அடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னைச்
சிவனே, எம் பெருமான் என்று இருப்பார்க்க் என்றும்
நன்றாகும் நம்பியை, நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே." --- அப்பர்
"வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற." --- மணிவாசகர்.
"ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற." --- மணிவாசகர்.
“உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
உருளை இருசுடர் வலவனும் அயன்என மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ" --- (அருவமிடை) திருப்புகழ்.
திருத்தணிகைத் திருப்புகழில், "கொடுசூரர் சினத்தையும் உடல் சங்கரித்த மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர்வேலா!" என்று பாடி உள்ளதைக் கொண்டு, முருகப் பெருமான் சூராத அவணர்களின் பாசறையைத் தனது நெற்றி விழியால் அழித்தார் என்றும் கொள்ளலாம். ஆறுமுகக் கடவுள் சூரபன்மனுடன் போர் புரிந்த காலத்து, பூமண்டலத்து உள்ள அவுணசேனைகள் முழுவதையும் கொன்றருளினார். மேலும் மேலும் அண்டங்களிலுள்ள அவுணசேனைகள் வந்து கொண்டே இருந்தன. அவைகளையும் கொல்ல உதிர வெள்ளம் ஓடிற்று. நிணமும் தசையும் உதிரமும் சேர்ந்து சேறாயின. பிணமலைகள் குவிந்தன. அதனால் தேர் செல்லத் தடைப்பட்டது. அது கண்ட பெருமான் புன்முறுவல் பூத்தனர். அம்முறுவலில் சிறு நெருப்புப் பொறி பரந்தது. அப்பொறியால் பிணமலைகளும் அசுரசேனைகளும் எரிந்து கரிந்து சாம்பர் ஆயின.
அருமறைகள் கூட்டி உரைசெய் தமிழ்ப் பாட்டை அடைவு அடைவு கேட்ட முருகோனே ---
தமிழ்ப்பாட்டு - திருமுருகாற்றுப்படை. அடைவு அடைவு - முழுதும்.
சிவபூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண் பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்து வைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.
நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக் கரையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்து விட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.
அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தாயே. நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே. பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? இனி நாங்கள் என்ன செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீவிர் அஞ்சற்க. முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .
'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது.
“அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சலென் றங்கீரனுக் குதவி” --- பூதவேதாள வகுப்பு
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை
இடித்துவழி காணும் --- வேல்வகுப்பு.
ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை யாகிவிடும் அன்று நக்கீரர்வர
ஓடிப் பிடித்து அவரையும்
காராய குன்றத்து அடைத்துஉரிய நியதிக்
கடன் துறை முடிக்க அகலக்
கருதி "முருகாறு" அவர் உரைத்தருள நீலக்
கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றந் திறந்து,இவுளி முகியைப்
பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்த கரன் ஊராளி
சிறுதேர் உருட்டி அருளே
செய செய என அமரர் தொழ, அசுரர் மிடி சிதறு முனி
சிறுதேர் உருட்டி அருளே. --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.
கருத்துரை
முருகா! திருவடி அருள்வாய்.
No comments:
Post a Comment