சோமநாதன்மடம் - 0832. ஒருவழி படாது


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒருவழிபடாது (சோமநாதன்மடம்)

முருகா!
அடியேனுக்கு உபதேச ஞானவாளைத் தந்து,
எனது உட்பகை தீர அருள் புரிவீர்.


தனதனன தான தான தனதனன தான தான
     தனதனன தான தான ...... தனதான


ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
     முழலுமநு ராக மோக ...... அநுபோகம்

உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
     வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்

கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
     மெனமொழியும் வீசு பாச ...... கனகோப

எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
     யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே

அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
     அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்

அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
     அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்

முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
     முகரசல ராசி வேக ...... முனிவோனே

மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
     முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஒருவழி படாது, மாயை இருவினை விடாது, நாளும்
     உழலும் அநுராக மோக ...... அநுபோகம்,

உடலும் உயிர் தானும் ஆய் உன் உணர்வில் ஒரு கால் இராத
     உளமும் நெகிழ்வு ஆகுமாறு ...... அடியேனுக்கு,

இரவுபகல் போன ஞான பரம சிவயோக தீரம்
     என மொழியும் வீசு பாச ...... கனகோப

எமபடரை மோது மோன உரையில் உபதேச வாளை
     எனது பகை தீர நீயும் ...... அருள்வாயே.

அரிவை ஒரு பாகம் ஆன அருணகிரி நாதர் பூசை
     அடைவு தவறாது பேணும் ...... அறிவாளன்,

அமணர் குலகாலன் ஆகும், அரிய தவ ராஜராஜன்,
     அவனி புகழ் சோமநாதன் ...... மடமேவும்,

முருக! பொரு சூரர் சேனை முறிய,வட மேரு வீழ,
     முகர சல ராசி வேக ...... முனிவோனே!

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும், வேறு
     முனிய அறியாத தேவர் ...... பெருமாளே.


பதவுரை

      அரிவை ஒரு பாகம் ஆன அருணகிரி நாதர் பூசை --- உமாதேவியை ஒருபாகத்தில் தரித்தவராகிய அருணாசலக் கடவுளது வழிபாட்டை

      அடைவு தவறாது பேணும் அறிவாளன் --- முறைமை தவறாமல் விரும்பிச் செய்பவரும், அறிவின் மிக்கவரும்,

      அமணர் குல காலன் ஆகும் அரிய தவராஜராஜன் --- அமணரது குலத்திற்கு முடிவைச் செய்தவரும்,  ஒரு யமனாகத் தோன்றியவனும், அருமையான தவச் சக்கரவர்த்தியும்

      அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் முருக --- இந்த உலகெல்லாம் புகழ்பவரும் ஆன சோமநாதன் என்பவருடைய திருமடத்தில் எழுந்தருளி இருக்கின்ற முருகப் பெருமானே

      பொரு சூரர் சேனை முறிய --- போர் புரிவதில் வல்லவர்களாகிய சூராதி அவுணர்களின் சேனைகள் அழியவும்,

      வட மேரு வீழ --- வடக்கு திசையிலுள்ள மேருமலை பொடிபட்டு விழவும்,

      முகர சலராசி வேக முனிவோனே --- ஒலிக்கின்ற கடல் வெந்து வற்றவும் முனிவு கொண்டவரே,

      மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் --- தேவரீருடைய புகழை எப்போதும் கூறுகின்ற அடியார்கள், தங்களுக்கு வேண்டியவற்றைக் கோடி முறை வேண்டினாலும்,

      வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே --- மாறுபட்டுக் கோபிப்பது என்பதையே அறியாத, தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே

      ஒருவழி படாது --- ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல்,

     மாயை இருவினை விடாது --- மாயையும்,  நல்வினை, தீவினைகளும் என்னும் இரண்டு வினைகளும் விடாமல்,

      நாளும் உழலும் அனுராக மோக அனுபோகம் --- என்றும் அலைகின்ற மிக்க காம வாஞ்சையின் இன்ப நுகர்ச்சியை உடைய

      உடலும் உயிர் தானுமாய் --- உடலையும் உயிரையும் உடையவனாய்,

      உன் உணர்வில் ஒரு கால் இராத --- தேவரீரை அறியம் மெய்ஞ்ஞானத்திலே ஒரு பொழுதும் நிலைத்து இராத

      உளமும் நெகிழ்வு ஆகுமாறு --- என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு

     அடியேனுக்கு --- அடியவனாகிய எனக்கு,

      இரவுபகல் போன ஞான --- மறப்பு நினைப்பு நீங்கிய மெய்யுணர்வும்,

     பரமசிவ யோக, தீரம் என மொழியும் --- பெரிய சிவயோகத்தின் முடிவாக விளங்குவது என்று ஆன்றோர்களால் கூறப்படுவதும்

      வீசு பாச கன கோப எமபடரை மோது --- வீசுகின்ற பாசக்கயிறையும் மிக்க கோபத்தையும் உடைய கால தூதரைத் தாக்குவதும்,

       மோன உரை இல் உபதேச வாளை --- சொல்லற்ற மவுன உபதேசமும் ஆகிய வாளாயுதத்தை

      எனது பகை தீர நீயும் அருள்வாயே --- அடியேனுடைய மலமாயா கன்மங்களாகிய பகை ஒழியுமாறு தேவரீர் தந்து அருளுவீர்.

பொழிப்புரை


         உமாதேவியை ஒருபாகத்தில் தரித்தவராகிய அருணாசலக் கடவுளது வழிபாட்டை முறை தவறாமல் விரும்பிச் செய்பவரும், அறிவின் மிக்கவரும், அமணரது குலத்திற்கு முடிவைச் செய்தவரும்,  ஒரு யமனாகத் தோன்றியவனும், அருமையான தவச் சக்கரவர்த்தியும் இந்த உலகெல்லாம் புகழ்பவரும் ஆன சோமநாதன் என்பவருடைய திருமடத்தில் எழுந்தருளி இருக்கின்ற முருகப் பெருமானே

         போர் புரிவதில் வல்லவர்களாகிய சூராதி அவுணர்களின் சேனைகள் அழியவும்,  வடக்கு திசையிலுள்ள மேருமலை பொடிபட்டு விழவும், ஒலிக்கின்ற கடல் வெந்து வற்றவும் முனிவு கொண்டவரே,

         தேவரீருடைய புகழை எப்போதும் கூறுகின்ற அடியார்கள், தங்களுக்கு வேண்டியவற்றைக் கோடி முறை வேண்டினாலும், மாறுபட்டுக் கோபிப்பது என்பதையே அறியாத, தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே

         ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயையும்,  நல்வினை, தீவினைகளும் என்னும் இரண்டு வினைகளும் விடாமல், என்றும் அலைகின்ற மிக்க காம வாஞ்சையின் இன்ப நுகர்ச்சியை உடைய உடலையும் உயிரையும் உடையவனாய், தேவரீரை அறியும் மெய்ஞ்ஞானத்திலே ஒரு பொழுதும் நிலைத்து இராத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, மறப்பு நினைப்பு நீங்கிய மெய்யுணர்வும், பெரிய சிவயோகத்தின் முடிவாக விளங்குவது என்று ஆன்றோர்களால் கூறப்படுவதும், வீசுகின்ற பாசக்கயிறையும் மிக்க கோபத்தையும் உடைய கால தூதரைத் தாக்குவதும், சொல்லற்ற மவுன உபதேசமும் ஆகிய வாளாயுதத்தை அடியேனுடைய மலமாயா கன்மங்களாகிய பகை ஒழியுமாறு தேவரீர் தந்து அருளுவீர்.


விரிவுரை

ஒரு வழி படாது ---

மனம் பலப்பல வழியில் சென்று பாழ்படுகின்றது. அதனால் சுகப்பேறு கிட்டவில்லை. அங்ஙனம் பல்வழிப் படாமல், ஒருவழிப் பட்டுப் பழகவேண்டும். பிற இடங்களில் இதனையே அழகாகக் கூறுமாறும் காண்க.

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி
 தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை
 வெகுமலர் அதுகொடு வேண்டி ஆகிலும்,
ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து, யான்உனை
விதம்உறு பரிவொடு வீழ்ந்து தாள்தொழ ...... அருள்வாயே.....--- திருப்புகழ்.
  
அருவம் இடையென வருபவர் துவரிதழ்
     அமுது பருகியு முருகியு ம்ருகமத
          அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
     அமளி படஅந வரதமு மவசமொ
          டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத்

தருவை நிகரிடு புலமையு மலமல
     முருவு மிளமையு மலமலம் விபரித
          சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
     மினியு னடியரொ டொருவழி படஇரு
          தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே.. --- திருப்புகழ்.

மாயை இருவினை விடாது ---

மாயையும் இருவினையும் விடாமல் தொடர்ந்து வருகின்றன.  இருவினையால் வந்ததுவே இவ்வுடம்பு. வினை ஒழிந்தால் ஒழிய, பிறவி தொலையாது.

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பு பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.  ---  பட்டினத்தடிகள்.
  
இருவினை மும்மலமும் அற, இறவியொடு பிறவி அற,
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனனை அருள், இடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
                                                                        ---  அறுகுநுனி திருப்புகழ்.

என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய்
தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.  ---  தாயுமானார்.


நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் உடல் ---

அனுராகம் - அன்பு. காமப்பற்று

நிலைத்த உறுதியின்ற சதா இப்படியும் அப்படியுமாக உழன்று மிகுந்த காமவேதனையால் இன்பங்களை நுகர்ந்து நுகர்ந்து அலையும் உடம்பு.

உன் உணர்வில் ஒருகால் இராத உளமும் நெகிழ்வு
ஆகுமாறு ---

உன்னுதல் - நினைத்தல்.

முருகப் பெருமானை அறியும் பதிஞானத்தில் தலைப்பட வேண்டும். ஒருபொழுதும் பதியை அறியும் அறிவில்லாத உளம் என்பார்.

அத்தகைய உள்ள உருகி உருகி இறைவனை உன்னுதல் வேண்டும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்

என்று கந்தரநுபூதியில் வேண்டுகின்றனர்.

நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே
         நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து, அருளமுதே! நன்னிதியே! ஞான
         நடத்தரசே! என் உரிமை நாயகனே! என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம், வம்மின் உலகியலீர்!
         மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்!
புனைந்துஉரையேன், பொய்புகலேன், சத்தியம் சொல்கின்றேன்,
         சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
                                                                                          ---  திருவருட்பா.

இரவு பகல் போன ஞானம் ---

இரவு - மறைப்பு. 

பகல் - நினைப்பு.

கேவல சகலம் எனப்படும் வடமொழியில்.

நினைப்பு மறப்பு இன்றிய நிலையே சமாதி நிலை. 

இந்த நிலையைத்தான் எல்லாப் பெரியோர்களும் வியந்து கூறுகின்றனர். இதனைப் பெறுதற்கு ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.

இறைவனுடைய திருமேனி நமது உடம்பு போன்றது என்று மயங்கித் திரிபவர் பலர்.  வாய்க்கு வந்தவாறு பிதற்றுவர் பலர்.  நமது உடம்பு எலும்பு நரம்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆயது.  இறைவனுடைய உருவம் இத்தன்மையது அன்று. அது அறிவு மயமானது. அந்த அறிவும் நமக்கு உள்ள உலகஅறிவு, கலையறிவு, வேறுள்ள ஆராய்ச்சியறிவுகள் அன்று.

அந்த அறிவின் இலக்கணத்தைத் தான் இந்தத் திருப்புகழில் பதின்மூன்று வரிகளால் மிக விரிவாக அடிகள் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

சிங்கமுகன் கூறுகின்றான்....

ஞானம்தான் உருஆகிய நாயகன் இயல்பை
யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃதுஎளிதோ
மோனம் தீர்கிலா முனிவரும் தேற்றிலர், முழுதும்
தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந்தலைமை.

முருகவேளை வழிபடுவது எற்றுக்கு? எனின், அறிவு திருமேனியாகக் கொண்ட பரம்பொருளை வழிபடுவதனால் அறிவு நலத்தை நாம் பெற்று உய்யலாம் என்க.

அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார்
என்உடையரேனும் இலர்.       

என்று பொய்யாமொழி கூறியப்படி, அறிவு எல்லா நலன்களையும் எளிதில் தரும். அறிவு நிரம்பப் பெற்றவன் அஞ்சாமையையும் அமைதியையும் பெறுவான். பின்னே வருவதை முன்னே அறிவான். ஆகவே, அறிவு நமக்கு இன்றியமையாத சிறந்த செல்வம்.

அறிவு திருமேனியாக உடைய அறுமுகப் பெருமான் அடிமலரைச் சிந்தித்து வாழ்த்தி வந்திப்போர், அறிவு நலத்தையும், அதனால் ஏனைய நலங்களையும் எளிதில் பெற்று இன்புறுவர் என்பது உறுதி.

இராப்பகல் அற்ற இடம்காட்டி, யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டைஅம் தாள்அருளாய், கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்று,அக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல, நிருத சங்கார, பயங்கரனே. --- கந்தர் அலங்காரம். 

அராப்புனை வேணியன்சேய் அருள்வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும், கொடிய ஐவர்
பராக்கு அறல் வேண்டும்,  மனமும் பதைப்பு அறல் வேண்டும், என்றால்
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.  --- கந்தர் அலங்காரம்.

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
     அந்திபகல் அற்றநினைவு ...... அருள்வாயே.... --- திருப்புகழ்.

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.                  --- கந்தர் அநுபூதி.

இரவுபகல் அற்றஇடத்து ஏகாந்த யோகம்
வரவும் திருக்கருணை வையாய் பராபரமே....
கங்குல்பகல் அற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே...       ---  தாயுமானார்.

 
பரம சிவயோக தீரம் ---

பரம – பெரிய.  தீரம் - கரை, முடிவு. பெரிய சிவயோகத்தின் முடிவாகத் திகழ்கின்றது.

அருணகிரிநாத சுவாமிகள் அடயோகத்தைக் கண்டித்து, சிவயோகத்தை உபதேசிக்கின்றனர்.

துருத்தி எனும்படி கும்பித்து, வாயுவைச் சுற்றி, முறித்து
அருத்தி உடம்பை ஒறுக்கில் என்ஆம், சிவயோகம் என்னும்
குருத்தை அறிந்து, முகம் ஆறுஉடைக் குருநாதன் சொன்ன
கருத்தை, மனத்தில் இருந்தும் கண்டீர் முத்தி கைகண்டதே. 
                                                                                 --- கந்தர் அலங்காரம்.

அனித்தம் ஆன ஊன்நாளும் இருப்பதாகவே நாசி
     அடைத்து, வாயு ஓடாத ...... வகைசாதித்து,
அவத்திலே குவால்மூலி புசித்து வாடும், ஆயாச
     அசட்டு யோகி ஆகாமல், ...... மலமாயை,

செனித்த காரிய உபாதி ஒழித்து, ஞான ஆசார
     சிரத்தை ஆகி, யான்வேறு, என் ...... உடல்வேறு,
செகத்து யாவும் வேறாக நிகழ்ச்சியா, மனோதீத
     சிவச்சொரூப மாயோகி ...... எனஆள்வாய்..    ---  திருப்புகழ்.

எமபடரை மோது மோன உரையில் உபதேச வாள் ---

முருகன் அருணகிரியார்க்கு உபதேசித்தது, சும்மா இரு, சொல் அற என்பதுவாகும். அதனையே, இங்கு உரை இல்லாத மோனம் என்கின்றார். உபதேசத்தை வாள் என்று உருவகம் புரிந்தனர்.  வாள் எதிர்த்தவர்களையும், தன்னைக் கட்டுப்படுத்தும் முட்செடிகளையும் சேதிக்கும். உபதேச வாள் எமபடரையும், காமக்ரோதங்களையும், பந்தபாசத் தளையையும் சேதிக்கும்.

செவ்வேள் பரமன் சிவபெருமானுக்கு உபதேசித்ததையும் ஒரு வாள் என்றே உருவகித்துக் கூறுகின்றனர்.

தந்தைக்கு முன்னம் தனிஞான வாள்ஒன்று சாதித்து அருள்
கந்தச் சுவாமி எனைத் தேற்றிய பின்னர், காலன் வெம்பி
வந்து இப்பொழுது என்னை என்செய்யலாம், சத்திவாள் ஒன்றினால்
சிந்தத் துணிப்பன், தணிப்ப அரும் கோப த்ரிசூலத்தையே.
                                                                                 --- கந்தர் அலங்காரம்.

"மோனம் என்பது ஞான வரம்பு" என்ற கொன்றைவேந்தன் திருவாக்கின்படி, மோனமே முடிந்த நிலை. மனசம்பந்தம் இல்லாதது மௌனம். "சரணமும் மவுனமும் அருள்வாயே" என்பார் "அருவமிடையென" என்று தொடங்கும் திருப்புகழில்.  "மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை" என்பார் "மூலமந்திரம்" எனத் தொடங்கும் திருப்புகழில்.

அறிவு வடிவாக நிளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில் எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க.

மன சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர். 
வாய் பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது "வாய்மௌனம்" எனப்படும்.

கைகால் அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு "காஷ்டமௌனம்" என்று பேர்.

மனமே அற்ற நிலைக்குத் தான் "பூரணமௌனம்" என்று பேர்.

அங்கே தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும். 

அந்த இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திரபோக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.

இந்த மௌனத்தை அருளுமாறு ஒரு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை வேண்டுகின்றார்.

அருவம் இடைஎன வருபவர், துவர்இதழ்
  அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
    அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ......     அதிபார
அசல முலைபுள கிதம்எழ, அமளியில்
  அமளி படஅந வரதமும் அவசமொடு
     அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்

தருவை நிகரிடு புலமையும் அலம்அலம்,
  உருவும் இளமையும் அலம்அலம், விபரித
    சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில லிபியன சனனமும் அலம்அலம்,
   இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
     தமர பரிபுர சரணமும் மவுனமும் ...... அருள்வாயே..      ---  திருப்புகழ்.

அந்த மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும். அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார் கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...

    ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
    மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
    சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
    எல்லாம்நல் மோனவடி வே.             

    எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
    நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
    நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
    ஏன்அலைந்தேன் மோனகுரு வே.                 

    மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
    ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
    நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
    என்றுஅறிந்தேன் ஆனந்த மே.                    

    அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,
    மறிந்தமனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
    நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
    கூட்டினான் மோன குரு.                              

    குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
    உரு,.நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
    வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
    ஈங்குஒருவர் உண்டோ இனி.                 

    இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
    நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
    பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
    கற்றிலேன் ஏதும் கதி.                       

    ஏதுக்கும் சும்மா இருநீ எனஉரைத்த
    சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
    நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
    கொன்றதற்கோ பேசாக் குறி.             

    குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
    அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
    சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்
    கைம்மாறு நான்ஒழிதல் காண்.                    
   
     நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
    வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்
    வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
    துய்த்துவிடும் ஞான சுகம்.               

    ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
    தானந் தருமம் தழைத்தகுரு, - மானமொடு
    தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை
    கோயில்என வாழும் குரு.                    

    சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லைஎன்ற
    நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
    பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
    கற்றோமே மோனக் குரு.  


எனது பகை தீர நீயும் அருள்வாயே ---

இங்கே பகை என்றது உட்பகையை. ஆழ்ந்து சிந்தித்தால் பகை வெளியே இல்லை.

ஒருவன் தன்னை நிந்திப்பானானால், நிந்திக்கப்பட்டவனது வினையை நிந்திப்பவன் பகிர்ந்து கொள்வான். அங்ஙனமாயின், வினையைப் பங்கிட்டுக் கொள்பவன் தனக்கு உற்றவனே அன்றி பகைவனாக மாட்டான். அன்றியும் தான் முந்திய பிறப்பில் ஒருவரை அகாரணமாக நிந்தித்த வினையே இப்போது ஒருவன் மூலமாகத் தனக்கு வருகின்றது. ஆதலின், தனது வினையை நோவாமல் மற்றவரை நோவது அறிவுடைமையாகுமா
  
வைததனை இன்சொல்லாக் கொள்வானும், நெய்பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும் - ஊறிய
கைப்பு அதனைக் கட்டிஎன்று உண்பானும், இம்மூவர்
மெய்ப்பதம் கண்டு வாழ்வார்.                 ---  திரிகடுகம்.

அதுவேயும் அன்றி தன்னைக் காரணம் இன்றி ஒருவன் நிந்திப்பானாயின், அதன் பயனாக அவன் நரகு எய்தித் துன்புறுவானோ என்று அவன் பொருட்டு இரங்குதல் வேண்டும்.

தம்மை இகழ்ந்தாரைத் தாம்பொறுப்பது அன்றி,
எம்மை இகழந்த வினைப் பயத்தால் - உம்மை
எரிவாய் நரகத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.                 ---  நாலடியார்.

ஆதலினால், இவ்வுலகில் நமக்கு யாரும் பகையில்லை.  இருப்பதாக எண்ணவே கூடாது. 

காமாதி உட்பகைவரை வெல்லுதல் வேண்டும்.

காமஉள் பகைவனும், கோபவெம் கொடியனும்,
                  கனலோப முழுமூடனும்,
         கடுமோக வீணனும், கொடுமதம் எனும் துட்ட
                  கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாச்சரிய விழலனும், கொலை என்று
                  இயம்பு பாதகனும் ஆம், இவ்
         எழுவரும், இவர்க்கு உற்ற உறவுஆன பேர்களும்
                  எனைப் பற்றிடாமல் அருள்வாய்! ---  திருவருட்பா.

அரிவை ஒரு பாகமான …..... சோமநாதன் ---

சோமநாதன் என்பவர் மிகச் சிறந்த ஒருவராகத் தெரிகின்றது.  இவர் அருணகிரிநாதர் காலத்தில் இருந்திருக்க வேண்டும்.  அல்லது அவர் காலத்திற்குச் சிறிது முன்னர் இருந்திருக்க வேண்டும். இவர் திருவண்ணாமலையில், அல்லது அடுத்துள்ள இடங்களில் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.  இவரைப் பற்றி ஒன்றும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனால் மிகச் சிறந்தவராகக் காணப்படுகின்றது. நரர்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களை மிக மிக கண்டிக்கின்றவரும், நமனையும் நான்முகனையும் மதியாது பாடுகின்றவரும், முருகன் திருவருள் முழுதும் பெற்றவரும், பரமஞானியுமாகிய அருணகிரிநாத சுவாமிகள், தமது திருவாக்கால் இவரை, அரிய தவராஜன், அவனி புகழ் சோமநாதன் என்று வாயாரப் புகழ்ந்து கூறுவாரானால், இவருடைய மகிமை மலையினும் மாணப் பெரிதாக இருந்திருத்தல் வேண்டும். இவர் அருணாசலப் பெருமானை வழிபட்டவர் என்றும், முறைதவறாது அவ் வழிபாட்டில் உறைத்து நின்றவர் என்றும், மிக்க அறிவு உடையவர் என்றும், தீயொழுக்கமும் மதவெறியும் பிடித்த அமணர்களை அழித்தவர் என்றும், மிக்க தவசீலர் என்றும், உலகமெல்லாம் புகழும் உத்தமர் என்றும் இத் திருப்புகழ் அடிகளால் புலானாகின்றது. இம்மடம், திருவாரூரில் இருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.  அருணகிரிநாத சுவாமிகளால் பாராட்டப்பெற்ற இத்துணைப் பெரியவருடைய வரலாறு விளங்காதது நாம் செய்த தவக்குறைவே.  இவர் ஓர் திருமடம் புதுக்கி, அதில் முருகப் பெருமானை எழுந்தருளப் புரிந்து வழிப்பட்டனர்.

-----------------------------------------------------------------------------------

ஒரு சாரார் கருத்து பின்வருமாறு ----

திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது.


மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே ----

ஒரு மனிதனுக்கு சினம் வருவது தருமம் செய்யும் போது தான்.  ஆனால் தருமம் செய்யும்போது சினம் வரக்கூடாது. யாசிப்பவர் சினம் மூட்டுவர். அதுகாலை ஒரு சிறிதும் சினம் கொள்ளல் ஆகாது. அதனால் தான், "அறம்செய விரும்பு" என்று கூறிய ஔவையார், அடுத்து, "ஆறுவது சினம்" என்று கூறியருளினார். சினமானது ஆறவில்லையானால், அது போரிலே முடியும் என்பதால், "தீராக் கோபம் போராய் முடியும்" என்றார் தமிழன்னை. ஒருமுறை கேட்டவன் மறுமுறை வந்தால் சிறிது சலிப்பு வருகின்றது. மூன்றாவது முறை வந்தால் வெறுப்பு வருகின்றது. நான்காவது, ஐந்தாவது முறை வந்தால், "இவனுக்கு இதே வேலையாகி விட்டது. அடிக்கடி வந்து நம்மை தொல்லைப் படுத்துகின்றான்" என்று கொதிப்பு வருகின்றது. ஆனால், முருகவேள் கோடிமுறை வந்து தனது குறையைக் கூறினாலும், குறையை நீக்கி, கேட்டவற்றை வழங்குவர். முனிய அறியாதவர்.

கழலிணை பணியும் அவருடன் முனிவு
கனவிலும் அறியாப்           பெருமாளே.   ---  (தறுகணன்) திருப்புகழ்.

அடியவர்கட்கு அறுமுக வள்ளல் அருளும் திறத்தை அடிகள் கூறுமாறு கண்டு மகிழ்க...

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அதை
வேண்ட வெறாது உதவு         பெருமாளே..    --- (சாந்தமில்) திருப்புகழ்.

வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரியபொருளை
வேண்டும் அளவில் உதவு      பெருமாளே...  --- (கோங்கமுகை) திருப்புகழ்.

அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
அவைதரு வித்தருள்            பெருமாளே..   --- (கலகலென) திருப்புகழ்.

ஏலம் வைத்த புயத்தில் அணைத்து, அருள்
வேல் எடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்குத் மனத்தில் நினைப்பவை    அருள்வோனே.. --- (ஆலம்வைத்த) திருப்புகழ். 
 
யார் வேண்டினாலும் கேட்ட பொருள்ஈயும்
த்யாகாங்க சீலம் போற்றி....          --- (நாகாங்க) திருப்புகழ்.

பதினாலு உலகத்தினில் உற்றுஉறு பத்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே... ---  (கோமள) திருப்புகழ்.


கருத்துரை


முருகா! அடியேனுக்கு உபதேச ஞானவாளைத் தந்து, எனது உட்பகை தீர அருள் புரிவீர்.

        

No comments:

Post a Comment

கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

  கேளுங்கள் ,  அருமையான ஓர் வரம் -----      வள்ளல்பெருமான் என வழங்கப்படும் ,  இராமலிங்க சுவாமிகள் ,  சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் ,  விரா...