செய்ந்நன்றி அறிதல்
நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை.
                  -----

மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் பல ஆகும். அப்பண்புகள் அனைத்திலும் தலையாயது, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் பண்பு ஆகும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்று அறவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார்.

கொள்வதும் கொடுப்பதும் ஆக அமைவதே வாழ்க்கை ஆகும். முட்டுப்படாமல் யாரும் வாழ்ந்துவிட முடியாது. சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வாக விளங்குகின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதில் சமுதாயமானது உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது. அலுவலகத்தில் பல்லாண்டு காலம் பணியாற்றிய நமக்கு மிக நன்றாகவே தெரியும் இந்த சமுதாய இயல்பு பற்றி.

ஒருவர் ஒரு காலத்தில் தமக்குச் செய்த நன்மையை மறவாமல் போற்றுவது மனிதப் பண்பின் சிகரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், "தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை" செய்ந்நன்றி அறிதல் என்பார்.

மணக்குடவர் மேலும் ஒரு படி கடந்து, "பிறர் செய்த தீமையையும் மறந்து நன்மையை மறவாமை" என்றார்.

"நன்றி எனப்படுவது இதயத்தின் நிறைவு" (Gratitude is the memory of the heart) என்று மேசியூ என்னும் மேல்நாட்டு அறிஞர் குறிப்பிடுவார். சர் ராபர்ட் வால்போல் எனும் அறிஞர், "எதிர்கால நன்மைக்கு நிகழ் காலத்தில் நன்றி என்னும் உணர்வு நின்று நிலைத்து இருக்கவேண்டும் (Gratitude is a lively sense of future favours) என்பார்.

நமது தமிழ் நாட்டு நீதிநூல் ஆகிய "வாக்குண்டாம்" என்பது ஔவையார் இயற்றியது. நன்றியுடைமையின் இன்றியமையாமையை நாள்தோறும் தாம் காணும் காட்சியினை வைத்தே அது அறிவுறுத்துகின்றது.

தென்னங்கன்றுக்கு மனிதன் அதன் வேரில் நீரை ஊற்றுகின்றான். தென்னங்கன்று வளர்கின்றது. எருவை இடுகின்றான். மேலும் நன்றாக வளர்கின்றது. நீண்ட மரமாக உயர்ந்து குலை தள்ளியது. மனிதன் இளநீரைப் பறித்து, அதன் உள்ளிருக்கும் நீரைப் பருகுகின்றான். அது இனிக்கின்றது. இவன் ஊற்றிய தண்ணீர் போல் இல்லை.

"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால், அந்நன்றி
என்று தரும்கொல் என வேண்டா --- நின்று
தளரா வளர் தெங்கு, தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்"

என்று பாடிக் காட்டினார் ஔவைப் பிராட்டியார்.

அறத்தை நாளும் செய்யவேண்டும் என்பது வாழ்வியல் நெறி ஆகும். அறங்களைச் சிதைத்தல் மறம் ஆகும். அது மன்னிக்க முடியாத பெரும் குற்றமும் ஆகும். ஒருவன் பெரிய அறங்களைச் சிதைத்தால் கூட, பாவம் என்னும் பாழ் நரகில் இருந்து மீண்டு விடலாம். ஆனால், ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு, எப்படிப் பார்த்தாலும் பாவத்தில் இருந்து விடுதலை இல்லை.

பின்வரும் புறநானூற்றுப் பாடலைக் காணலாம்....

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,
நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடிற்றே, ஆயிழை கணவ!"

இதன் பொருள் ----  அழகிய அணிகலன்களை அணிந்துள்ள மங்கையின் மணவாளனே! பசுவின் மடியை அறுத்த பெரும்பாவத்தைப் புரிந்தோர்க்கும், பெண்ணின் தாய்மைப் பேற்றை அழித்த கொடுமையைப் புரிந்தோர்க்கும், இருமுது குரவர்களாகிய தாய், தந்தை, குரு முதலானோரைப் பழித்த கொடுமையாளர்க்கும், அவர்கள் செய்த தீமைகளுக்குப் பரிகாரம் உண்டு. ஆனால், இந்த மண்ணுலகமே கீழ்மேலாகப் புரளும் ஊழிக் காலம் வந்தாலும், செய்த நன்றியைக் கொன்றவர்களுக்கு அந்தப் பாவத்தில் இருந்து விடுபட வழியே இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

துன்பப்பட்ட காலத்தில் உதவிய ஒருவனுக்கு, அவன் துன்பப்படும் காலத்தில் உதவவில்லை என்றால், அது அவன் பரம்பரைக்கும் ஆகாது என்கின்றது கலித்தொகை என்னும் சங்கநூல்.

"ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் தெறியாது விடாதே காண்"..


இசையா ஒருபொருள் இல்என்றால் யார்க்கும்
வசைஅன்று, வையத்து இயற்கை –--  நசைஅழுங்க
நின்றுஓடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.         

என்கிறது நாலடியார்.

தம்மிடம் கொடுக்க இயலாத ஒரு பொருளை வந்து கேட்பவரிடம் இல்லை என்பது ஒன்றும் குற்றம் இல்லை. இது உலக இயல்புதான். ஆனால், ஒன்றைத் தருவதாக வாக்களித்து விட்டு, பின் அந்த நம்பிக்கை கெட, இல்லை என்று பொய் கூறுவது, செய்த நன்றியை மறப்பதற்கு ஒப்பான குற்றம் ஆகும்.

சிதைவு அகல் காதல் தாயை,
     தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
     பாலரை, பாவைமாரை
வதை புரிகுநர்க்கும் உண்டாம்
     மாற்றலாம் ஆற்றல், மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும்
     ஒழிக்கலாம் உபயம் உண்டோ?

என்கின்றது கம்பராமாயணம்.

தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும். இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்கு உரிய கழுவாய் உண்டு.ஆனால், செய்ந்நன்றி மறத்தலுக்கோ அத்தகைய கழுவாய் இல்லை.


கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,
மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே.
                    

இதுவும் கம்பராமாயணம் காட்டுவதே.

தனக்கும் கன்றக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப் பாலை இறைவன் அளித்திருக்கின்றான். கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல், தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆகும். பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்து, அதைக் கைப்பற்றல் அறம் அல்லாத செயல் ஆகும்.. தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன் நாகரிகம் ஆற்ற நாவினை உடையவன். இவர்கள் அடைவது நரகமே ஆகும்.

    
'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்.

இதுவும் கம்பராமாயணம் தான்.

ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்து, பெறுவதற்கு அருமையான நட்பாகிய அன்புக் கயிற்றினை அற அழித்து, எல்லோர்க்கும் ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையைக் குலைத்துவிட்டு, வாக்குத் தவறியவனை; கொன்று ஒழிப்பது, பழிபாவங்களிலிருந்து நீங்கிய செயலே ஆகும்.
                                                                                                       
நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்
குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனங் கூடி
ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு             
சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்...

என்று கல்லாடம் அறிவுறுத்தும்.2 comments:

 1. தமிழ் மணக்கும் தங்கள் வலைப்பதிவுகள் எங்கள் வலைத் திரட்டியிலும் மணக்கிறது.

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது செய்ந்நன்றி அறிதல் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
 2. அருமையான, ரசிக்க வைத்த தொகுப்பு.

  ReplyDelete

கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

  கேளுங்கள் ,  அருமையான ஓர் வரம் -----      வள்ளல்பெருமான் என வழங்கப்படும் ,  இராமலிங்க சுவாமிகள் ,  சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் ,  விரா...