பொது --- 1041. தோல் அத்தியால்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தோல் அத்தியால் (பொது)

 

முருகா! 

தேவரீர் திருவடியை மறவாமல் வழிபட்டு உய்யத் 

திருவருள் புரிவாய்.

 

 

தானத்த தானத்த தானத்த தானத்த

     தானத்த தானத்த ...... தனதான

 

 

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற

     தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே

 

சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு

     வேதித்த சூலத்த ...... னணுகாமுன்

 

கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ

     டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா

 

கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி

     கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய்

 

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

     ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே

 

ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு

     மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே

 

சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட

     தோதக்கண் மானுக்கு ...... மணவாளா

 

தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்

     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பு இலாது உற்ற

     தோளு கை கால் உற்ற ...... குடில் ஊடே,

 

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு

     வேதித்த சூலத்தன் ...... அணுகா முன்,

 

கோலத்தை வேலைக்குளே விட்ட சூர்கொத்தொ-

     டே பட்டு வீழ்வித்த ...... கொலைவேலா!

 

கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி

     கூர்கைக்கு நீ கொற்ற ...... அருள்தாராய்.

 

ஆலத்தை,ஞாலத்து உளோர்,திக்கு வானத்தர்,

     ஆவிக்கள் மாள்வித்து ...... மடியாதே,

 

ஆலித்து,மூலத்தொடே உட்கொள் ஆதிக்கும்

     ஆம் வித்தையாம் அத்தை ...... அருள்வோனே!

 

சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேல் இட்ட

     தோதக் கண் மானுக்கு ...... மணவாளா!

 

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர்

     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            ஆலத்தை ஞாலத்து உளோர்,திக்கு வானத்தர் --- (திருப்பாற்கடலில் வந்து எழுந்த) ஆலகால விடத்தை பூமியில் உள்ளவர்களும்,பல திசைகளில் இருந்த விண்ணோர்களும்

 

            ஆவிக்கள் மாள்வித்து மடியாதே --- தத்தம் உயிர் மாண்டு மடிந்து போகாமல்படிக்குவைத்த 

 

            ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் --- கருணைப் பெருக்கால் மகிழ்வோடு அடியோடு உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும்

 

            ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே --- ஏற்றதான உண்மைஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்து அருளியவரே!

 

            சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட ---  சேல் மீனைப் போன்றதும்வேலாயுதம் நிகர்த்ததும்,  நீலோற்பல மலரினும் சிறந்ததும் ஆகிய

 

            தோதக் கண் மானுக்கு மணவாளா --- கண்களைக் கொண்டு தேவரீருக்கு விரகதாபம் மூட்டிய மான் போன்ற வள்ளிநாயகிக்கு மணவாளரே!

 

            தீது அற்ற நீதிக்கு(ள்) ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க --- குற்றம் அற்ற திருநெறியில் பொருந்தி இருக்கும் அறிவுள்ள அடியார்கள் போற்றி வழிபட,

 

            வாழ்வித்த பெருமாளே --- அவர்களை வாழ்வித்த பெருமையில் மிக்கவரே!

 

            கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் --- தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரபதுமன்,

 

            கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா --- தனது குலத்தோடு அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதரே!

 

            தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற--- தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள

 

            தோளு கை கால் உற்ற குடிலூடே --- தோள்கைகால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில்

 

            சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு --- தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருக்கும் காலத்தில் எனது உயிரைப் பற்றிச் செல்வதற்கு

 

            வேதித்த சூலத்தன் அணுகா முன் --- மாறு கொண்டதிரிசூலத்தை ஏந்தியயமன் என்னை நெருங்கிவரும் முன்பாக,

 

            கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு --- குற்றமற்ற உமது திருவடியில் பக்தி மிகுந்த புத்தியை வைப்பதற்கு,

 

            நீ கொற்ற அருள் தாராய் --- வெற்றி தருவதாகிய திருவருளை அடியேனுக்குத் தந்து அருள்வீராக.

 

பொழிப்புரை

 

     அமுதம் வேண்டி தேவர்கள் கடைந்த திருப்பாற்கடலில் வந்து எழுந்த ஆலகால விடத்தை பூமியில் உள்ளவர்களும்,பல திசைகளில் இருந்த விண்ணோர்களும்தத்தம் உயிர் மாண்டு மடிந்து போகாமல்படிக்குவைத்த கருணைப் பெருக்கால் மகிழ்வோடுஅந்த விடத்தைஅடியோடு உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும்ஏற்றதான உண்மைஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்து அருளியவரே!

 

            சேல் மீனைப் போன்றதும்வேலாயுதம் நிகர்த்ததும்,  நீலோற்பல மலரினும் சிறந்ததும் ஆகியகண்களைக் கொண்டு தேவரீருக்கு விரகதாபம் மூட்டிய மான் போன்ற வள்ளிநாயகிக்கு மணவாளரே!

 

            குற்றம் அற்ற திருநெறியில் பொருந்தி இருக்கும் அறிவுள்ள அடியார்கள் போற்றி வழிபட அவர்களை வாழ்வித்த பெருமையில் மிக்கவரே!

 

     தனது உருவை கடலுக்குள் மாமரமாய் மாற்றுவித்த சூரபதுமன்,தனது குலத்தோடு அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதரே!

 

            தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ளதோள்கைகால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில்தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருக்கும் காலத்தில் எனது உயிரைப் பற்றிச் செல்வதற்குமாறு கொண்டதிரிசூலத்தை ஏந்தியயமன் என்னை நெருங்கிவரும் முன்பாககுற்றமற்ற உமது திருவடியில் பக்தி மிகுந்த புத்தியை வைப்பதற்கு,வெற்றி தருவதாகிய திருவருளை அடியேனுக்குத் தந்து அருள்வீராக.

 

 

விரிவுரை

 

 

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே--- 

 

அத்தி - எலும்பு. 

 

அப்பு --- தண்ணீர். 

 

சராசரியாக மனித உடலில் 60-70 சதவீதம் தண்ணீர் உள்ளது. 

 

குடில் -- சிறு குடிசை. 

 

இந்த உடம்பு வச்சிரத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன உடம்பு இது.தோல் எலும்பு உதிரம் முதலியவைகளால் ஆனது என்பார், "தோல்எலும்புசீநரம்புபீளைதுன்று கோழைபொங்குசோரி பிண்டமாய் உருண்டு வடிவானதூல பங்க காயம்" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல... கசுமாலம்"

 

என்பார் பழநித் திருப்புகழில்.

 

அழியக் கூடியது என்பதால் இந்த உடம்பைக் குடிசை என்றும் சிறுகுடில் என்றும் கூறுவர்.

 

 

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்குநீ கொற்ற அருள் தாராய்---

 

கால் -- பொழுது. வழி.

 

இந்த உடல் ஒரு நாள் தளர்ந்து போகும். உடல் தளர்ந்து போனாலும்,ஆவி சோர்ந்து போகாமல்படிக்கு,  இறைவனுடைய திருவடியை வணங்கி வாழுகின்ற காலத்தில்இந்த உயிரை இயமன் வந்து பற்றிக் கொண்டு போதல் கூடாது. முத்தியைப் பெறவேண்டும். அதற்கு ஒரை வழி இறைவன் திருவடியில் முறுகிய பத்தி கொண்டு வாழ்தலே ஆகும். ஏனவே,இறைவன் திருவடியை எந்நாளும் மறவாமல் வழிபட்டு வருகின்ற அறிவினைத் தந்து அருள வேண்டும் என்று அடிகளார் வேண்டிக் கொள்கிறார்.

 

கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா--- 

 

வேலை -- கடல். 

 

கொத்தோடு --- குலத்தோடு.

 

முருகப் பெருமானுடைய விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொலலுவேன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்சஉலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தான். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு தேவர்கள் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

 

"நண்ணினர்க்கு இனியாய் ஓலம்ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம்பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம்யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்".

 

"தேவர்கள் தேவே ஓலம்சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம்வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம்பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம்ஓலம்".

 

"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கு இவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய்,நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.

 

"ஏய் என முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீஅழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே".

 

அதுகண்ட சூரபன்மன்வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவில் ஒளித்தான். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

 

திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்....   ---  வேல் வகுப்பு.

                                          

சூரபதுமன் அண்ட முகடு முட்டநூறாயிர யோசனை அளவுடைய பெருமரமாகி நின்றுமண்ணும் விண்ணும் விழல் பரப்பிகிளைகளை அசைத்துஉலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகிமடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும்மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி,பழைய அசுர வடிவம் கொண்டுவாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்துவேதங்கள் ஆர்ப்பதேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்றுஅங்கியின் வடிவம் நீங்கிஅருள் வடிவைத் தாங்கிவான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

 

"புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கிஅருள்உருக் கொண்டுவான்தோய்

கங்கையில் படிந்து மீண்டுகடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று இருந்ததுஅன்றே".

 

சிவபெருமான் தந்த வர பலத்தால்சூரபதுமன் அழிவில்லாதவன் ஆகிமீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும்மற்றொரு கூறு மயிலுமாகிமிக்க சினத்துடன் சிறகுகளை வீசிஅதனால் உலகங்களைத் துன்புறுத்திமுருகவேள் திருமுன் வந்தான்.

 

"தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்".

 

அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கிதெளிந்த உள்ளமும்சிவஞானமும்அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும்மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான்.  அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல்கந்தவேள் கருணை நோக்கால்சூரன் மறவடிவு நீங்கிஅறவடிவு பெற்றான்.

 

"மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன்எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன்சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்".

 

"தீயவை புரிந்தா ரேனும் முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோஅடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்".

 

அசுரர்கள் குலம் முழுதும் மடிந்து போகுமாறு எம்பெருமான் வேலை விடுத்து அருளினார் என்பதை, "அடல் அசுரர்கள் குலம் முழுது மடிய,உயர்அமரர் சிறையை விட,எழில் மீறும்அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடும்அரகர! சரவணபவ! லோலா!" என்று பழனித் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.

 

.....           .....           .....  சகம்உடுத்த

வாரிதனில்புதிய மாவாய்க் கிடந்தநெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

 

அங்கம் இருகூறுஆய்அடல் மயிலும்சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்துஎழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

 

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

 

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!        --- கந்தர் கலிவெண்பா.

 

தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,

     சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர்அத்

தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்துஇடம் புக்குத்

     தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே.      --- பொதுத் திருப்புகழ்.

 

கடல் சலம் தனிலே ஒளி சூரனை

     உடல் பகுந்துஇரு கூறு எனவேஅது

     கதித்து எழுந்துஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா!  --- அவிநாசித் திருப்புகழ்.

                           

கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்

     குரைகடல் செம்பசக்- ...... கரவாளச்

சிலை பகஎண் திக்குத் திகிரிகளும் பத்துத்

     திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்

திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!

     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.    --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.

                                

கொலைகாட்டு அவுணர் கெடமாச் சலதி

     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு

     கொதிவேல் படையை ...... விடுவோனே!     --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

                                

 

ஆலத்தை ஞாலத்து உளோர்,திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே--- 

 

ஆலித்து --- மகிழ்ச்சி ஆரவாரம் பெரிந்து.

பாற்கடலில் தோன்றிய ஆலாலவிடத்தைக் கண்டு அமரர்கள் அஞ்சிஅரனாரிடம் முறையிடசிவபெருமான் சுந்தரரை, "அவ் விடத்தை இவ்விடத்திற்குக் கொணர்வாய்" என்று பணித்து அருளினார். சுந்தரர் சென்று மாலயனாதி வானவர் நெருங்க முடியாத பயங்கரமான விடத்தை நாவல் பழம்போல் திரட்டிக் கொணர்ந்துஅரனாரிடம் அளித்தனர். அதனை வாங்கிபெருமான் கண்டத்தில் தரித்து நீலகண்டர் ஆக விளங்கினர்.

கனத்தார் திரைமாண்டு அழல் கான்ற நஞ்சை,

"என்அத்தா" எனவாங்கிஅது உண்ட கண்டன்

மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய

நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.   --- திருஞானசம்பந்தர்.

 

     திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவிஅதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுக வள்ளல் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்துதாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

 

     பின்னர் ஒருகால் கந்தமாதனகிரியின் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்தந்தையாராகிய தழல்மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து,உச்சி மோந்துமுதுகு தைவந்துகுமரா! உனது பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய உன்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்துஅதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுபுன்முறுவல் பூத்த முகத்தினராய் குமரநாயகனை நோக்கிஅமரர் வணங்கும் குமர நாயக! அறியாமை காரணமாகவோஉரிமைக் குறித்தோ நட்புப் பூண்டவர் இடத்தில் பிழைகள் தோன்றுதல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்யார். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும்அறியாமையாலும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் ,பிரமதேவனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய்எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் உனக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

 

     எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவன் ஆவது எவ்வாறுஅங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர். (தகுதி இல்லாதவருக்குத் தலைமைப் பொறுப்பை வழங்குதல் இவ்வாறுதான் முடியும். பொருள் அறியாது ஓதுவதை விடபொருள் அறிந்து ஓதுவது நன்மை தரும்.)

 

     சிவபெருமான் மைந்தா! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்னகுன்று எறிந்த குமாரக் கடவுள் அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்துமுறையினால் சொல்லவல்லேன்” என்றனர். 

 

     சிவபெருமான் கேட்டு,  செல்வக் குமரா! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் திருத்தணிகை மலையை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு திருத்தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

 

     குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டுபிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கக்கூடியது என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகை மலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்றுவேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்அத் தணிகைமலை, "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

     கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர்வேலண்ணல் தோன்றலும்ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கிவடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டுசீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு மாணவ பாவகமாக நின்று வந்தனை வழிபாடு செய்துபிரணவ உபதேசம் பெற்றனர்.

 

"எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றிஅங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்".      

              

என்று தணிகைப் புராணம் கூறும்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

ஞான வார்த்தை அருளிய பெருமாளே--- திருப்புகழ். 

 

நாதா குமரா நம என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்--- கந்தர்அநுபூதி 

 

சிவனார் மனம் குளிரஉபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...         --- திருப்புகழ்.

 

     பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால்,சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

     தேவதேவன் அத்தகைய பெருமான். மாணவ பாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத் தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணரமுருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.   

 

என்று தணிகைப் புராணம் கூறும்.

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

     அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.

 

சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.         --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

  

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

                                     

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துஇங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.  ---சிவஞான சித்தியார்.

                                                                    

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே--- 

 

தீது அற்ற நீதி --- குற்றம் அற்ற நெறி. அது சிவநெறி என்வும்செந்நெறி எனவும்முத்திநெறிசன்மார்க்கநெறி எனவும் வழங்கப்படும். அத்தகைய நெறியில் நின்று வழிபாடு இயற்றுகின்ற அடியவர்களை வாழ்வாங்கு வாழவைப்பது இறைவன் திருவருள்.

 

கருத்துரை

 

முருகா! தேவரீர் திருவடியை மறவாமல் வழிபட்டு உய்யத் திருவருள் புரிவாய்.

 

                        

 

 

 

No comments:

Post a Comment

பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய விடுதல்

  பிரபஞ்சச் சேற்றைக் கழிக்க வழிவிட்டவன் -----        கந்தர் அலங்காரமே ஒரு பெரிய கோயிலைப் போன்றது. அது ஓர் அருமையான சொற்கோயில்.  அதன் முகப்பி...