கால் பட்டு தலையெழுத்து அழிந்தது.

 


கால் பட்டு தலையெழுத்து அழிந்தது

-----


"சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன்  கையெழுத்தே".

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய அற்புதமான கந்தர் அலங்காரப் பாடல் ஆகும்.

 

இதன் பொருள் ---

 

     திருச்செந்தூரில் உள்ள வயல்களும் பொழில்களும் சேல் மீன்கள் குதித்துத் திரிவதனால் அழிந்து போயின. சோலைகளில் உள்ள அழகியமுருகப் பெருமானுக்கு உகந்தவையான கடப்பமலர்களின் மேல் கொண்ட விருப்பத்தால் மலர்க் கொடி போன்ற பெண்களின் மனமானது அழிந்து போனது. கடலும்சூரபதுமனும்கிரவுஞ்ச மலையும்பெருமை தங்கிய மயில் வாகனத்தை உடைய முருகப் பெருமானின் வேலாயுதமானது பட்டதனால் அழிந்து போயின. இவ்வுலகில் அடியேனுடைய தலைமேல் எழுதப்பட்டு இருந்த பிரமதேவனின் கையெழுத்தானதுஅந்த முருகப் பெருமானுடைய திருவடி பட்டதால் அழிந்து போயிற்று.

 

     இறைவனுடைய திருவருட் பெருமையை மக்கள் எல்லோரும் உணர்வதற்கு வாயிலாகஅவனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருளச் செய்வது வழக்கம். உள்ளே இருக்கிற சிறிய மூர்த்திக்கு பெரிய திருக்கோயில்களை இந்த நாட்டில் கட்டியிருக்கிறார்கள் வாகனம்தேர் முதலியவைகளின் மேல் ஆண்டவனுக்கு அலங்காரம் பண்ணி ஊர்வலமாக எழுந்தருளச் செய்வதும் மக்களுடைய உள்ளத்தை அவன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் ஆடம்பரமே. பொருள் எத்தனை உயர்வு உடையதாக இருந்தாலும் அதற்கும் விளம்பரம் வேண்டும் என்ற உலககத்தில் நாம் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். பொல்லாத சரக்குகளுக்குக் கூடச் செய்யப்படும் பெரிய விளம்பரங்கள் நம்மை மதி மயங்கச் செய்து விடுகின்றன. ஆனால் பழங்காலத்தில் நல்ல பொருள்களுக்குத்தான் விளம்பரம் செய்தார்கள். எல்லோரும் அவற்றை அனுபவித்து மகிழ வேண்டுமென்ற எண்ணத்தால்"நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்னும் கருத்தில் விளம்பரம் செய்தார்கள். இறைவனுக்கு உருவம் கொடுத்துஅவ்வுருவம் நமது மனதில் நன்றாகப் பதிய வேண்டும் என்ற கருத்தோடு அலங்காரம் செய்து காட்டினார்கள். தம் பெண்ணை நல்ல மாப்பிள்ளை கைக்கொள்ள வேண்டுமென்ற கருத்தால் நல்ல நல்ல அணிகலன்களால் அலங்காரம் செய்து நிறுத்தும் தாயைப் போல இறைவனுடைய திருவருளினால் இன்ப அநுபவங்களைப் பெற்ற நம் பெரியோர்கள்மற்றவர்களும் அவனைப் பற்றுக் கோடாகக் கொண்டு இன்பங்களைத் துய்க்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு அவனுக்கு அலங்காரம் செய்தார்கள். 

 

     அப்படிப் பண்ணுகிற அலங்காரங்கள் சில காலமே இருக்கும். மலர்ஆடைநகை முதலியவைகள் எல்லாம் ஒரு காலஎல்லைக்குள் அடங்கியவைகளே. "தமிழ்ச் சொல்லால் அலங்காரம் செய்" என்று சிவபரம்பொருளே ஒரு குழந்தையைப் பார்த்துக் கூறினான். பல மலர்களால் நாள்தோறும் பூசை செய்யும் பணியை மேற்கொண்டு இருந்த சுந்தரமூர்த்தி நாயனாரிடம், "நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால்,மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்"என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுகின்றார். சுந்தரருடைய திருவாக்கினாலே சூட்டப்படுகின்ற நல்ல சொல் மலர் மாலையை அணிந்து கொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விரும்பினான். அந்த மாலை அந்தக் காலத்தில் மட்டும் மணத்தைத் தருவதோடு நில்லாமல்,எல்லாக் காலத்திலும் மணத்தைத் தரக்கூடியது. வேறு வேறு காலத்தில் வருகின்றவர்கள் யார் யார் படித்தாலும்பாடினாலும்கேட்டாலும்அவர்கள் உள்ளம் நைந்து உருகச் செய்வது. 

 

     கையால் மலர் மாலைகளால் எம்பெருமானுக்கு அலங்காரம் செய்வதைவிடச் சொல் மாலைகளால் அலங்காரம் பண்ணி மக்களுடைய உள்ளத்தில் இறைவனது நினைவைப் பதியச் செய்யலாம் என்று நினைத்தார் அருணகிரிநாதப் பெருமான்அந்த நினைவில் எழுந்த சொல்வளம் மிக்க மாலைதான் "கந்தர் அலங்காரம்". அதற்கான சொல் வளத்தையும் முருகன் அருளாலேயே அவர் பெற்றிருந்தார். "அருணதள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா"என்று திருப்புகழில் பாடுகிறார். தமிழுக்குத் தலைவனாக விளங்கும் முருகப் பெருமான் அழகான தமிழை உலகத்திற்கு வழங்கினான். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்றார் திருமூல நாயனார். சிவபெருமானிடத்தில் இருந்து அகத்தியர் நேரே தமிழைக் கற்றாலும்அவருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர் குமாரக் கடவுள்தான். அத்தோடு நில்லாமல்மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே தலைமைப் புலவராக வீற்றிருந்த நக்கீரர் எழுதிய இறையனார் அகப்பொருள் உரையே சிறந்த உரை என்பதை நீதிபதியாக இருந்து நிறுவினவர் முருகப் பெருமான். இப்படிப் பல வகையாலும் தமிழை ஒளிமிக்கதாக பெருமான் வளர்த்ததற்குக் காரணம் தன் அழகிய திருவடியைதிருப்புகழை எல்லோரும் அழகிய தமிழிலே பாடவேண்டும் என்பதற்காகத்தான். ஆகையால்அருணகிரியார் அழகிய முருகனை அழகான தமிழால் அலங்காரம் செய்தார். சொல்லாகிய வாடா மலர்களால் தொடுத்த அலங்கார மாலையைச் சூட்டி அப்பெருமானின் திருவருள் எல்லார் உள்ளங்களிலும் பதியும் வண்ணம் பல பாடல்களை அருளிச் செய்தார். 

 

     ஆண்டவனுக்குச் சொல் மாலைகளால் அலங்காரம் செய்யும் போதுதமிழில் எத்தனை வகையான அழகுகள் உண்டோ அத்தனை வகைகளாலும் அலங்காரம் பண்ணிக் களித்த அருட்புலவர்கள் பாடிய பிரபந்தங்கள் உள்ளன. பெரிய கடவுளையும் சிறு குழந்தையாகப் பாவித்து வர்ணித்துப் பாடுகின்ற சிறுநூலுக்குப் "பிள்ளைத் தமிழ்" என்று பெயர். 

 

     பிள்ளைத் தமிழிலே ஆண்பாலைப் பற்றிச் சொல்லும் போது சிற்றில் பருவம் என்று ஒரு பருவம் வரும். கிராமங்களிலே உள்ள தெருக்களில்கார் வராத வீதியில்தார் போடாத திருவீதியில்சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். இளமைப் பருவத்தில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சேர்ந்து விளையாடினாலும் அந்த விளையாட்டிலும்ஆணுக்கு ஆணின் இயல்பும்பெண்ணுக்குப் பெண்ணின் இயல்பும் வெளிப்படுவதைப் பார்க்கலாம். வீதியிலே கிடக்கும் மண்ணைப் பெண் குழந்தைகள் சிறு சிறு செப்புகளிலே எடுத்து வைத்துக் கொண்டு சோறு சமைப்பதாகவும்அந்தச் சோற்றைத் தன் கணவனுக்கும் குழந்தைக்கும் போடுவதாகவும் பாவித்து விளையாடும். இது பெண் குழந்தைகளுடைய இயற்கை. வீடு கட்டுவதும் அப்படித்தான். மண்ணைக் குவித்து வீடாகக் கட்டி அதற்குத் தன்னைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு மணல் சோறு ஆக்கும். அக்குழந்தைக்குக் கணவனாக இருந்து விளையாடும் ஆண் பிள்ளைபொருள் சேகரித்து வர வெளியே போகிறவனைப் போல அப்பால் சென்று நிற்பான். திடீர் என்று ஒடி வந்து தன்னுடைய காலினாலே அப்பெண் குழந்தை கட்டியிருக்கும் மணல் வீட்டைச் சிதைப்பான். "டேய்டேய்இந்தச் சின்ன மணல் வீட்டைச் சிதைக்காதே" என்று சொல்வாள் பெண் குழந்தை. அப்படிச் சொல்வது போன்ற பாவனையில், "அடியேம் சிற்றில் சிதையேலேஎன்று பாடிச் சிற்றில் பருவத்தை அமைப்பார்கள். 

 

     இந்தச் சிற்றிற் பருவம் அருணகிரியாருக்கு நினைவு வந்தது. மற்றக் குழந்தைகள் எல்லாம் பாதையில் இருக்கிற சிற்றிலைச் சிதைப்பார்கள். முருகப் பெருமானோ உயிருக்குச் சிற்றில் ஆக அமைந்துள்ள உடம்பை வராமல் செய்து பிறப்பையே அழித்து விடுகிறவன். அவன் ஒன்றை அழித்து விளையாடுகிறவன். எதை அழிக்கிறான்உயிர்களின் தலையின் மேல் எழுதப்பட்ட எழுத்தை அழிக்கிறான். மற்றக் குழந்தைகள் பெண்களின் உள்ளத்திலே கவலை உண்டாக்குவது போல அவன் அழிக்கவில்லை. கவலைப்படுகிற மக்களின் துன்பங்களுக்குக் காரணமான தலை எழுத்தையே அழித்துமுத்தி இன்பத்தை வழங்குகிறான்.

 

     "அவன் கால்பட்டு அழிந்ததுஇங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே" என்று பாடுகிறார் அருணை வள்ளலார். நமது தலையின்மேலே எழுதித் தொலைக்கின்ற அந்த பிரமன் யார்திருமாலின் பிள்ளையாகிய பிரமன் என் தலைமேலே தனது  கையால் எழுதிய எழுத்தைச் சிவபெருமான் பிள்ளையாகிய முருகப் பெருமான் தனது காலால் அழித்து விட்டான். தனது மாமன் பிள்ளை கையாலே எழுதிய எழுத்தைஇந்தப் பிள்ளை காலாலே அழித்தான் என்று சொல்கிறார் அருணகிரியார்.

 

     தலை எழுத்து என்கிற விவகாரம் எப்போது வருகிறதுநமக்குக் கொஞ்சம் பொருள் வருகின்றது. அல்லது நம் குழந்தை தேர்ச்சி பெறுகின்றான். இவற்றைத் தலையெழுத்து என்று யாரும் சொல்வதில்லை. விரும்பாதவை நடந்தால்தலையெழுத்து என்போம். நல்லதுகெட்டது எல்லாமே தலை எழுத்தினால்தான் விளைகின்றன. என்றாலும் தலையெழுத்தைச் சொல்லும்போது துன்பங்களையே சொல்லுவது வழக்கமாகி விட்டது. எல்லாத் துன்பங்களும் தலையெழுத்தால்தான் உண்டாகின்றன. அதை மாற்ற முடியாது என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கின்றார்கள். தலையெழுத்துக்கு உட்பட்ட மக்களால் மாற்ற முடியாது. ஆனால் தலையிலே எழுதுகின்ற பிரமனுடைய தலையிலேயே ஒரு குட்டுக் குட்டிஏற்கெனவே அடையாளம் பண்ணி வைத்த அறுமுகப் பண்ணவனுக்கா மாற்ற முடியாது 'அவன் என் தலை எழுத்தை அழித்து விட்டான்என்கிறார் அருணகிரியார். 'இங்குவன்மையான என்னுடைய தலைமேல் பிரமன் அழுத்தி எழுதிய கையெழுத்தானதுஎம்பெருமான் திருவடி என் தலைமேல் பட்டதால்  அழிந்து போய்விட்டது. பிரமன் கையால் எழுதியதை,எம்பெருமான் காலாலே அழித்து விட்டான்என அலங்காரமாகப் பாடுகின்றார்.அவன் திருவடி படுகின்ற இடத்திலே எனது தலையை வைத்தேன்அவன் பார்த்து அழித்துவிட்டான் என்கின்றார்.

 

     "கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலைஎனத் திருவள்ளுவ நாயனார். தலை என்று இருந்தால்அதைத் தாழ்த்தி இறைவன் திருவடியை வணங்கவேண்டும். இறைவன் தாள் (திருவடி) படவேண்டுமானால்நமது சென்னி தாழ்ந்து கிடக்கத்தான் வேண்டும்.  "வணங்கத் தலை வைத்து" என்றார் மணிவாசகர். அவன் திருவடி மலர் நம் தலைமேலே பட்டால்முன்னாலே பிரமன் எழுதி வைத்த தலை எழுத்து அழிந்து போகும். இதன் மூலம் இனி எனக்குப் பிறவி இல்லை என்று சொன்ன அருணகிரிதாநப் பெருமான்முருகப் பெருமான் திருவடியை யாரும் சிரம் தாழ்த்தி வணங்கினால்அப்படி வணங்குகின்றவர்களது தலையெழுத்தை அழித்து விடுவான் என்ற குறிப்பினையும் தந்தார். 

 

     முருகப் பெருமான் திருவருளால் தமக்கு இறப்பு என்பது இல்லைஇறவாத இன்பநிலையே உண்டு என்பதை உணர்ந்துகொண்ட அடிகளார்எமனைப் பார்த்து, "வாராது அகல் அந்தகா! வந்தபோது உயிர் வாங்குவனே" என்று வீரத்துடன் பாடினார். "வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் கந்தா" என்று திருப்புகழில் காட்டிய அடிகளார்தமக்கு என்றும் வாய்த்த துணையாக முருகப் பெருமானின் வேலும் மயிலும் உள்ளதால்தமக்கு மரணபயம் சிறிதும் இல்லை என்பதை, "மரணப் பிரமாதம் நமக்கு இல்லையாம்என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே" என்றும் அலங்காரமாகவே பாடினார். "வேல் உண்டு வினை இல்லைமயில் உண்டு பயம் இல்லை" என்பார்கள் முருகன் அடியார்கள்.

 

     திருச்செந்தூருக்கு வந்த அடிகளார்இதை நமக்கு உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தனது தலைமேல் எழுதப்பட்ட பிரமன் கையெழுத்து எப்படி அழிந்தது என்பதற்கு உதாரணமாகத் திருச்செந்தூரில் கண்ட இயற்கை நிகழ்வுகளோடுபுராண நிகழ்வையும் காட்டுகின்றார் அடிகளார். திருச்செந்தூருக்குள் நுழையும்போதே வயல் வெளிகள். சுற்றிலும் சோலைகள். நீர் நிலைகள்.  செங்கதிர்கள் தழையப் பயிர்கள் வளர்ந்து சாய்ந்து இருப்பதைப் பார்க்கின்றார்.  வயல்களில் நிறைந்துள்ள நீரில் சேல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. "ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியதை அறிநீர் நிறைந்த நெல் வயல்களில் மீன்கள் நிறைந்து இருக்கும் என்பது விளங்கும். பழுத்த சைவ அன்பர்கள் வாழுகின்ற திருத்தலம் திருச்செந்தூர். ஆதலால்வயல்களில் நிறைந்து உள்ள மீன்களைப் பிடித்துத் தின்பார் அங்கு இல்லை. சேல் மீன்கள் துள்ளிக் குதிக்கும் வயல்களுக்குப் பக்கத்தில் சோலைகள் இருக்கின்றன. அந்தச் சோலை மரங்களின் நிழல் வயலிலே விழுகின்றது. நிழல் விழுந்தால் பயிர் வளராது.  வயல்களின் நிழல் விழச் செய்யும் மரங்களை வெட்டுகிறவர்களும் இல்லை. மீன்களால் திருச்செந்தூரில் உள்ள வயல்களில் உள்ள பயிர்கள் அழிந்தன. வயல் அழிந்ததோடுவயல்களைச் சூழ்ந்து உள்ள சோலைகளும் அழிந்தன.

 

     அடுத்துபூங்கொடியைப் போன்ற மெல்லியலை உடைய பெண்கள்முருகப் பெருமான் விரும்பி அணிந்துள்ள தேன் நிரம்பிய கடம்ப மலரின் மேல் கொண்ட ஆசையால்அவர்களின் மனமானது அழிந்தது. இறைவனுக்குச் சாத்தப்பட்ட கடப்பமலர் மாலை தங்களுக்குப் பிரசாதமாகக் கிடைக்க வேண்டும் என்ற ஆசை அங்கே உள்ள பெண்களுக்கு உண்டு. "மால் கொண்ட பேதைக்கு உன் மணம் நாறும் மார் தங்கு தாரைத் தந்து அருள்வாயே" என்றும், "குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீரகுளிர்மாலையின்கண் அணிமாலை தந்துகுறைதீர வந்து குறுகாயோ" என்றும் அகத்துறையில் திருப்புகழ்ப் பாடல்களில்பழுத்த அடியார்களின் இந்த மனநிலையை வைத்துக்  காட்டி அருளினார் அருணை அடிகளார். பூங்கொடியார் என்பது உடம்பினாலே பெண்ணாகத் தோன்றுகிறவர்களை மட்டும் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது. நாம் உடம்பினாலே பெண் என்றும்ஆண் என்றும் இருக்கிறோம். உயிரிலே ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. பூங்கொடியார் என்றதுபக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும்.திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை அடைவதற்காகதோற்றத்தால் ஆணாகவும் பெண்ணாகவும் இருந்தாலும்எல்லா மக்களும் இறைவன் திருவருளுக்கு ஏங்கும் மெய்யடியார்களாக விளங்குகின்றார்கள். தலைவனை அடையத் துடிக்கும் பூங்கொடியார்களாகத் தவம் கிடக்கிறார்கள். தலைவன் மீது கொண்ட விரக தாபத்தினால் தவிக்கின்ற பூங்கொடியார்களாக இருக்கிறார்கள்.

 

     அடுத்துகந்தபுராணக் கதையை நினைப்பூட்டுகிறார் அருணகிரிநாதப் பெருமான். ஆணவம் ஆகிய சூரபதுமன்வினைக்கூட்டம் ஆகிய கிரவுஞ்ச மலையைத் தனக்குக் கவசமாகப் பூண்டுஆசை என்னும்கடலுக்குள் ஒளிந்து கொண்டான். ஆணவம்வினைஆசை இவை உள்ளவரையில் உயிருக்குப் பிறவி வந்துகொண்டே இருக்கும். முருகப் பெருமான் தனது திருக்கையிலுள்ள ஞானசக்தியாகிய வேலை விடுத்தருளினார். அதனால்சூரனைப் பற்றி இருந்த ஆசையாகிய கடல் வற்றிப் போனது. சூரனுக்குக் கவசம் போன்றிருந்த வினைத் தொகுதி என்னும் கிரவுஞ்ச மலையும் அழிந்தது. சூரபதுமனின் ஆணவமும் வலி குன்றிப் போனது. ஆன்மா ஆகிய சூரபதுமன் அழியவில்லை. அவன் சேவலும் மயிலும் ஆனான். சேவலைத் தனது கொடியாகவும்மயிலைத் தனது வாகனமாகவும் கொண்டு அருள் புரிந்தார் முருகவேள். வேலையும் சூரனும் வெற்பும் வேல்பட்டு அழிந்தமையாலே சூரன் மாமயில் ஆனான். எம்பெருமான் திருவடி அவன் மீது பட்டமையால்பிரமதேவன் எழுதி இருந்த தலையெழுத்து அழிந்துஅரக்க நிலை மாறிஅழியாத முத்தி நிலை பெற்றான். இதனை, "வரம்பு இல்லா அருள் பெற்று உய்ந்தான்மாயையின் மகனும்" என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

 

"தீயவை புரிந்தாரேனும் 

     குமரவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் 

     தொல்கதி அடைவர் என்கை 

ஆயவும் வேண்டுங்கொல்லோ?

     அடுசமர் அந்நாள் செய்த 

மாயையின் மகனும் அன்றோ 

     வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்" --- கந்தபுராணம்.

     நம்முடைய பிறவி அழிய வேண்டுமானால் எம்பெருமானின் திருவடி எப்போது நமதுதலையில் படும் என்று ஏங்கி உருகிமனம் நெகிழ்ந்துஅவன் திருவடியை நாடிதிருத்தலங்கள்தோறும் நடமாடுகிற அடியார்களின் திருக்கூட்டத்திலே கூடி இருந்து,தலை வணங்கிக் கிடந்தால் நமக்கும் அந்த பெறுதற்கு அரிய பேறு நிச்சயம் வாய்க்கும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...