அறிவின் பயன் உயிர் இரக்கமே
-----
உலகில் பசியினாலும் நோயினாலும் பகையினாலும் உயிர்கள் படும் துயரங்களைக் கேட்டு இருந்தும், நேரில் கண்டிருந்தும் அவற்றைப் போக்கும் வழிகளை ஒரு சிறிதும் நினையாது தமது உயிர்வாழ்க்கை ஒன்றனையே இனிது எனக் கருதி வாழ்வார் மிகப்பலர். நாம் மட்டும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்று, தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, எவ்வகையிலும் பிறர்க்குப் பயன்படாது வாழ்வோர் தமக்கு அறிவு உள்ளதாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். அறிவு இல்லாதவர் என்று தம்மை யாரும் சொல்வதை விரும்பமாட்டார்கள். பெறுதற்கு அரிய மானுடப் பிறவியைப் பெற்றுவிட்டு, எத்துணைப் பேரறிவும் பேராற்றலும் பெருஞ்செல்வமும் உடையவராக இருந்தாலும், அவர்கள் பெற்றுள்ள அறிவும் ஆற்றலும் செல்வமும் முதலாயின, மக்கள் பண்பு ஆகிய அன்பு இல்லையானால், அவை யாவும் பயனற்றவையே என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
"அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய்
தன் நோய்போல் போற்றாக் கடை" --- திருக்குறள்.
திருக்குறள் வகுப்பு நடத்தியவரும், திருக்குறளைப் பதிப்பித்தவரும் ஆன வள்ளல்பெருமான், திருவள்ளுவ நாயனாரின் கருத்தை அடியொற்றி, அறங்கள் பலவற்றுள்ளும் தலைசிறந்து விளங்குவது சீவகாருண்ணிய ஒழுக்கமே என்கிறார். பிறவுயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய மக்கள் உள்ளத்திலே இயல்பாகத் தோன்றும் இரக்க உணர்வு காரணமாக அவைகளின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் கருணைத் திறம் சீவகாருண்ணியம் ஆகும். கொல்லாமை, புலால் உண்ணாமை; ஏழைகளின் பசிதீர்த்தல் என்னும் மூவகை அறங்களையும் உள்ளடக்கியதே சீவகாருண்ணிய ஒழுக்கமாகும்.
காணா மரபினவாகிய உயிர்களுக்குக் காணுதற்குரிய உடம்புகள் இறைவனால் படைத்து அளிக்கப் பெற்றதன் நோக்கம், எல்லா உயிர்களும் தம்மை ஒத்த மன்னுயிர்களை உணர்ந்து அன்பு செலுத்துதற் பொருட்டே என்பதும், அவ்வாறு உயிர்கள்பால் அன்பு செலுத்தும் உணர்வுரிமை மனவுணர்வு பெற்ற மக்கள் குலத்தார்க்கே நன்கு அமைந்துள்ளது என்பதும் ஆகிய உண்மையினை "ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை" என்ற சொற்றொடரால் வள்ளல்பெருமான் தெளிவாகப் புலப்படுத்தி உள்ளார். நன்றும் தீதும் பகுத்து உணர வல்ல மனிதர்கள், தம் இனத்தார் படும் துயரங்களையும் தம்மினும் தாழ்ந்த விலங்கு பறவை முதலிய உயிர்கள் படும் துன்பத்தையும் கண்டு, அத்துன்பங்களைக் களைதற்கு உரிய அருள் முயற்சியாகிய இரக்க உணர்வினைப் பெறுதல் வேண்டுமென்பது வள்ளல்பெருமான் அறிவுறுத்திய ஒழுக்க நெறியின் குறிக்கோளாகும். இத்தகைய அருளுணர்வு உயிர்க்கு உயிராகிய தெய்வத்தின் திருவருள் பெற்றோர்க்கே உள்ளத்தில் கருணையாக நிறைந்து, பிற உயிர்கள் படும் துன்பத்தைத் துடைக்கவல்ல பேராற்றலை மக்களுக்கு வழங்குவதாகும்.
"எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே"
"எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தபோதனர்கள்
செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்பது எந்நாளோ?"
எனத் தாயுமான அடிகளார் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணி, அவ்வுயிர்கள் படும் துயர்த்துக்கு உள்ளம் இரங்கி அவற்றின் துன்பங்களைத் துடைக்க முற்படும் கருணைத் திறமாகிய உயிர் இரக்கவுணர்வினை இறைவனது திருவருளால் பெறுதல் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இத்தகைய உயிர் இரக்க உணர்வு என்பது இறைவனது திருவருள் ஒன்றினாலேயே பெறுதற்கு உரியது என்பதனை "கருணை நிறைந்து, அகம்புறமும் துளும்பி வழிந்து, உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகித் தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண் உடையோய்" என இறைவனைப் போற்றும் முகத்தால் வள்ளல்பெருமான் அறிவுறுத்தி உள்ளார்.
உயிர்க்கு உயிராகிய கடவுளின் இயற்கை விளக்கமே அருள் எனப்படும். "அருள் என்பது தொடர்பு பற்றாது (உறவு முறை கருதாது) இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை" என விளக்கம் தந்தார் பரிமேலழகர். செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறப்புடைய செல்வமாவது அருளால் வரும் செல்வமே. ஏனைப் பொருளால் வரும் செல்வங்களோ இழிந்தாரிடத்தும் உள்ளன. மன்னுயிர்களை ஒம்பி அவ்வறத்தினால் மேம்படுதலாகிய அருட்செல்வம், அறிவு ஒழுக்கங்களால் சிறந்த உயர்ந்தோரிடத்திலேயே நிலைத்து நிற்கும் ஆதலால், அவ்வருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறப்புடைய செல்வமாகும் என்பதை,
“அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள”
எனவரும் திருக்குறளால் அறியலாம்.
தன் ஆருயிர்த் தலைவியைப் பிரிந்து மன்னனுக்குத் துணையாய்ச் சென்ற தலைவன், அத்தொழில் நிறைவேறிய நிலையில், தலைவியின் பிரிவுத் துன்பத்தை நீக்குதற் பொருட்டுத் தேரில் ஏறி விரைந்து வருகின்றான். அவ்வாறு வரும்போது வழியிடையில் உள்ள காடுகளிலே மலர்களில் உள்ள தேனைப் பருகி ஆணும் பெண்ணுமாகக் கூடி இன்புற்றிருக்கும் வண்டுகளின் அன்பின் நிலையை எண்ணிப் பார்க்கின்றான. மணிகள் கட்டிய தன் தேர் அக்காட்டின் வழியே விரைந்து செல்லுமானால், தன் தேரில் கட்டிய மணிகளின் பேரொலியின் அதிர்ச்சியினால் அவ்வண்டுகள் துன்புறுமே எனச் சிந்திக்கின்றான். தன்னுடைய தேரின் ஆரவாரம் காட்டில் உள்ள வண்டுகளாகிய சிற்றுயிர்களுக்கு அதிர்ச்சியைத் தந்து துன்பம் விளைக்காதவாறு தன் தேரில் கட்டிய மணியின் நாவினை ஒலி எழாதபடி கயிற்றால் பிணித்துக் கட்டிக் காட்டின் வழியே செல்கின்றான். இவ்வாறு வண்டுகளாகிய சிற்றுயிர்க்கும் துன்பம் விளையாதவாறு உயிரிரக்க உணர்வு உடையோனாய்த் தேரில்வரும் தலைமகனது அருள் விளக்கத் தோற்றப் பொலிவினைத் தோழி அவனது ஆருயிர்த் தலைவிக்குப் புலப்படுத்தும் நிலையினை
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறலு அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்"
எனவரும் அகநானூற்றுப் பாடற்பகுதி எடுத்துக் கூறும்.
பறம்புமலைத் தலைவனாகிய பாரிவள்ளல் மலைவளம் காணத் தேரில் சென்று, தன் தேரினை ஓரிடத்தே நிறுத்திவிட்டு உலவச் சென்றான். சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து தன் தேரினைப் பார்த்தபோது அவ்வழியிலே, படர்வதற்கு உரிய கொழுகொம்பு இல்லாமல் தளர்ந்து அசைந்த முல்லைக்கொடி ஒன்று தன் தேரினைப் பற்றிச் சிறிது படர்ந்திருந்த காட்சியைக் கண்டான். தன் தேரைப் பற்றிய ஒரறிவு உயிராகிய அந்த முல்லைக் கொடியின் தளர்ச்சியை நீக்கக் கருதிய அருளுள்ளம் படைத்தோனாகிய பாரிவள்ளல், தான் ஊர்ந்து வந்த தேரினையே அக்கொடி படர்தற்குரிய கொழுகொம்பாக நிறுத்திவிட்டு நடந்து சென்றான் என்பது புறநானூறு கூறும் வரலாற்றுச் செய்தியாகும்.
“பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது, ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்க எனத் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி" --- புறநானூறு.
இதன் பொருள் ---
பூக்களைத் தலையிலே நீங்காது சுமந்து இருந்தாலும், வாய் திறந்து பரிசில் வேண்டும் எனப் பாடாத முல்லைக் கொடிக்கு, மணி ஒலிக்கும் தனது தேரினைத் தந்துவிட்டுச் சென்று பரந்து விளங்கும் பறம்புமலைத் தலைவனான பாரி"
வளைந்த சிறகினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் தாக்குதலுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாக அடைந்த புறாவினது வருத்தத்துக்கு அஞ்சி, தனது துயரத்தைப் பொருட்படுத்தாது, புறாவினைத் தொடர்ந்த பருந்தினது பசியை அடக்குதல் வேண்டிப் புறாவின் நிறை அளவிற்கு ஈடாகத் தனது உடம்பினைத் தராசில் நிறுத்துத் தந்தவன் சிபிச் சக்கரவர்த்தி. அவனது பெருமையினை.
"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன்"
என்று பாடுகிறது புறநானூறு. "நிலவுலகில் வாழ்வோர் துயரம் தீர, சுடுகின்ற சூரியனின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு, காற்றையே உணவாகக் கொண்டு, காலையும் மாலையும் தவம் புரியும் முனிவர்களும் கண்டு மயங்க, கூரிய நகமும் வளைந்த சிறகும் உடைய பருந்தினிடம் இருந்து தப்ப, தன்னை வந்து வந்து தஞ்சம் அடைந்த புறாவினை அழிவில் இருந்து காப்பாற்ற எண்ணி, தனது அழிவிற்கு அஞ்சாது, துலாத் தட்டில் ஏறி அமர்ந்த வரையாது கொடுக்கும் வள்ளல்" என்பது இதன் பொருள்.
பேகன் என்னும் வள்ளல், குளிரால் நடுங்கிய மயிலின் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காது, தான் அணிந்திருந்த பொன்னாடையைப் போர்த்தி அதன் குளிரைப் போக்கினான் என்ற செய்தியும் புறநானூற்றில் போற்றப்பட்டு உள்ளது.
"மடத்தகை மாமயில் பனிக்கு மென் றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!"
இதன் பொருள் ---
மென்சாயல் உடைய மயிலானது குளிரால் வருந்தும் என்று எண்ணி, தன் மேல் அணிந்திருந்த போர்வையை எடுத்து, அந்த மயிலுக்குப் போர்த்தி அருளிய, மதயானையும் எனச் செருக்கு உடைய குதிரையும் உடைய பேகன்.
"உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்"
இதன் பொருள் ---
மயிலானது எப்போதும் தன்மேல் போர்த்திக் கொண்டு இராது என்பதை அறிந்தும், மயிலுக்குத் தன் மேலாடையை அணிவித்த மேன்மையாளன், மதம் மிக்க யானைகளும், வலிமை மிக்க குதிரைகளும் கொண்ட அந்தப் பேகன்.
இவ்வாறு, உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் இரங்கி அவற்றின் துன்பங்களை விரைந்து நீக்க முற்படும் உயிரிரக்க உணர்வு ஆறறிவு படைத்த மனிதகுலத்துக்கு இன்றியமையாதது. பிற உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு இரங்கும் அருளொழுக்கம் (சீவகாருண்ணிய ஒழுக்கம்) வாய்க்கப் பெறாதார் பெற்றுள்ள அறிவினால் சிறிதும் பயனில்லை என்பதையே மேற்குறித்த திருக்குறளின் வழி அறிவுறுத்தினார் நாயனார்.
தனக்குப் பிறர் செய்யும் துன்பங்கள் தன்னுயிர்க்கு வருத்தம் தருதலைத் தன் அனுபவத்தால் அறிந்த ஒருவன், பிற உயிர்கட்குத் தான் துன்பம் செய்தல் என்ன காரணத்தாலோ? என அவனது பேதைமையை நினைந்து இரங்கிய திருவள்ளுவ நாயனார்,
"தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான், என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்?"
என்றார். தன் உயிர்க்குத் துன்பம் என்பதை அறிந்த ஒருவன், அவ்வாறே துன்பங்களை உணரும் பிற உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் ஏனோ? என்கிறார்.
இதுவரை எடுத்துக்காட்டியவற்றால், தமிழ் மக்கள் பண்டைக் காலம் தொட்டே எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி இரங்கும் சீவகாருண்ணிய உணர்வு உடையராய் வாழ்ந்தார்கள் என்பது புலனாகும். தமிழ் முன்னோர் கொண்டொழுகிய உயிரிக்கம் என்னும் சீவகாருண்ணிய ஒழுக்கத்தை மீண்டும் வற்புறுத்தி எல்லோரும் பின்பற்றுமாறு செய்த பெருமை வள்ளல்பெருமானுக்கு உரியது.
எல்லா அண்டங்களையும் எல்லாப் புவனங்களையும் எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும் எல்லாப் பயன்களையும் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம இலாபமாகும். சீவகாருண்ணிய ஒழுக்கத்தினால் கடவுளின் அருளைப் பெறக் கூடும். அல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது. அருள் என்பது கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருண்ணியம் என்பது சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்.
இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் கூடும். வேறொன்றினால் பெறக் கூடாமை அனுபவம். ஆதலின் சீவகாருண்ணியத்தைக் கொண்டு இறைவனது அருளைப் பெறுதல் கூடும். வேறொன்றினாலும் பெறுதல் இயலாது. கடவுள் அருளைப் பெறுதற்கு உயிரிரக்கமாகிய சீவகாருண்ணியமே வழி. உயிர் இரக்கமாகிய சீவகாருண்ணியம் மக்கள் உள்ளத்தே விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் பிறவுயிர்க்கு உதவி செய்யத் தோன்றும். அந்த ஆற்றலால் எல்லா நன்மைகளும் தோன்றும். மக்கள் உள்ளத்தில் உயிரிரக்கம் மறையும் போது அறிவும் அன்பும் உடனே மறைந்துவிடும். அதனால், பிற உயிர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆற்றல் மறையும். அது மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆதலின், புண்ணியம் என்பது சீவகாருண்ணியமே என்றும் பாவமென்பது சீவகாருண்யம் இல்லாமையே என்றும் அறிதல் வேண்டும்.
உயிர்கள், பசி, தாகம், இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாகிலும், கேட்டபோதாகிலும், இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாகிலும், உயிர்களின் தொடர்பாக ஆன்ம உருக்கம் உண்டாகும். உலகில் பலர் பசி தாகம் பயம் முதலியவற்றால் மிகவும் துன்புறக் காண்கின்றோம். இவர்கள் முன்னைப் பிறப்பில் சீவகாருண்ணிய ஒழுக்கத்தை விரும்பாமல், வன்னெஞ்சத்தவராய்த் தீது நெறியில் நடந்தவர். ஆகையால் கடவுளின் ஆணைப்படி பசி தாகம் பயம் முதலியவற்றால் துன்பப்படுகிறார்கள் என்று அறிய வேண்டும்.
சீவகாருண்ணிய ஒழுக்கம் சிறிதுமில்லாத புலி சிங்கம் முதலிய விலங்குகள் திரியும் காட்டிலே இவ்வுலகியல் ஒழுக்கம் நிலைபெறாது. அதுபோல் சீவகாருண்ணியம் இல்லாத மனிதர்கள் வாழும் இடத்திலும் இவ்வுலகியல் ஒழுகலாறு செவ்வையாக நடைபெறாது. சீவகாருண்ணியம் இல்லாத போது மக்கள் உள்ளத்தே அருள் விளக்கம் தோன்றாது. அது தோன்றாதபோது, கடவுள்நிலை கைகூடாது. அது கைகூடாத போது, வீடுபேற்று இன்பத்தினை ஒருவரும் அடைய மாட்டார்கள். ஆகவே பரலோக ஒழுக்கமும் சீவகாருண்ணியத்தாலேயே கைகூடும் என்று அறிதல் வேண்டும், சீவகாருண்ணியம் ஆன்மாக்களின் இயற்கை விளக்கமாதலால், அந்த இயற்கை விளக்கம் இல்லாத உயிர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.
உயிர்கள் எல்லாம் இயற்கை விளக்கமாகிய கடவுளது அருள் அறிவுக்கு அறிவாய் விளங்குவதற்கு ஒத்த உரிமையுடைய இடங்களாக அமைந்துள்ளன. அவ்வுயிர்கள் உடம்புடன் கூடி அன்புடையராய் வாழ்தற்குப் பூதகாரியமான உடம்புகளே உரிமையாக உள்ளன. அவ்வுடம்புகளில் ஆன்மாக்கள் நிலைபெறாவிடில் ஆன்மவிளக்கமாகிய இரக்கம் மறைபடும்; அதனால், கடவுளின் அருள்விளக்கம் வெளிப்படாது. அப்போது அறியாமையே மிகுந்து தோன்றும்.
ஊழ்வினையாலும் விழிப்பின்மையாலும் வரும் இடர்களை நீக்கிக் கொள்ளமாட்டாமல் வருந்துகின்ற பிற உயிர்களின் வாழ்க்கையில் நேரும் இடர்களை நீக்கத் தக்க ஆற்றல் பெற்ற மக்கள், அவ்வுயிர்கள் படும் துன்பத்தை நீக்குவித்தல் வேண்டும். இவ்வாறு மன்னுயிர்களுக்கு நேரிடுகின்ற அல்லல்களைப் போக்குவதற்கு உரிய வல்லப சுதந்திரமும் அறிவும் இருந்தும், அல்வாறு செய்யாமல், தமது ஆற்றலை வஞ்சித்து ஒழுகும் மாந்தர்க்கு இவ்வுலக இன்பத்தோடு முத்தியின்பத்தையும் அனுபவிக்கின்ற உரிமை இறையருளால் இல்லாது ஒழிந்தது. இன்னோர் இக்காலத்தில் நுகருகின்ற புவனபோகங்களையும் இழந்து விடுவர் என அருள் நூல்கள் விதித்திருக்கின்றன. உயிரிரக்க ஒழுகலாறாகிய இதன்கண் உண்மையாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கவும். கொலைப்படும் சீவர்களுக்கு உரிய காலத்தில் வந்து தடுக்கும் செயல் வகையால் கொலைத் துன்பத்தை நீக்கியும், இவ்வாறு மனநிறைவாகிய இன்பத்தை உண்டு பண்ணுவதே அறிவறிந்த மக்கட் பிறப்பினால் அடைதற்குரிய மேலான நற்பயனாகும், என வள்ளல்பெருமான் தமது "சீவகாருண்ய ஒழுக்கம்" எனனும் நூலின் முற்பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளார்.
அருட்பிரகாச வள்ளலார் இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றிய 'பிள்ளைப் பெரு விண்ணப்பம்' என்னும் பாடல் தொகுதியில் 'சீவகாருண்ணியம்' என்ற வடமொழித் தொடர்ப் பொருளை உயிரிரக்கம் எனத் தமிழ்த் தொடராக்கி விளக்கம் தந்துள்ளார்கள். இந்நுட்பம்:
"வரும் உயிர் இரக்கம் பற்றியே உலகவழக்கில்
என் மனம் சென்ற தோறும்
வெருவி நின்அடிக்கே விண்ணப்பித்து இருந்தேன்;
விண்ணப்பம் செய்கின்றேன் இன்னும்;
உருவ என்னுயிர்தான் உயிரிரக்கம் தான்
ஒன்றதே, இரண்டு இலை; இரக்கம்
ஒருவில் என் உயிரும் ஒருவும்; என்உள்ளத்து
ஒருவனே நின்பதத்து ஆணை"
என்று வள்ளல்பெருமான் அருளிய பாடலால் விளங்கும்.
உண்மையான ஞானம் என்பது உயிர்களிடத்திலும் உயிர்க்கு உயிராகிய இறைவனிடத்திலும் செலுத்தும் அன்பே ஆகும். இவ்வுண்மையை,
"ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர்
ஞானம் உண்டார்" --- பெரியபுராணம்.
எனவரும் சேக்கிழார் அருள்மொழியால் நன்கு தெளியப்படும். அன்பின் மிகுதியாகிய ஆர்வத்தை உடைய உருகும் மனத்து அடியார்கள் பிறவிவேர் அறுக்கும் இறைவனைக் கண்டு இன்புறுவர். எவ்வுயிர்க்கும் இரங்குதலாகிய அன்பினை உடையவர்கள் எவ்விடத்தும் இறைவன் திருவடியினைக் கண்டு மகிழ்வார்கள் என்னும் உண்மையினை,
"ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை,
ஈரம் உடையவர் காண்பார் இணையடி"
எனவரும் தொடரில் திருமூலநாயனார் தெளிவித்து உள்ளார்.
"அன்பினில் விளைந்த ஆரமுதே" என்பதும், "நேயத்தே நின்ற நிமலன்" என்பதும் மணிவாசகப் பெருமான் அருள்வாக்குகள். இதன் பொருளை மக்கள் எல்லோரும் உணர்ந்து உயிரிரக்கம் உடையவராய், அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் போற்றி உய்தி பெறுதல் வேண்டும் என்னும் பெருவேட்கையினாலேயே வள்ளல்பெருமான் சீவகாருண்ணிய ஒழுக்கத்தினை வற்புறுத்தி அருளினார்.
No comments:
Post a Comment