இறைவன் உள்ள பொருளா? கற்பிக்கப்பட்ட பொருளா?

 கடவுள் உள்ள பொருளா? கற்பிக்கப்பட்டதா?

----

இந்த ஐயம் காலகாலமாக, இந்த நாட்டில் மட்டுமல்ல; எல்லா இடங்களிலும் நிகழ்ந்து வருவதுதான். ஏற்றுக் கொண்டவர்கள் எப்படித் தெளிந்தார்கள் என்னும் ஐயம் ஒருபுறம் இருக்க, இல்லை என்று சொன்னவர்களில் பலர் காலப்போக்கில், தமது கருத்தை மாற்றிக் கொண்டதும் உண்டு. இல்லை என்று சொன்ன சிலரை, நான் திருத்தலங்களுக்கு வழிபாட்டிற்காகச் சென்ற திருக்கோயில்களில் பார்த்ததும் உண்டு.

ஆக, தெய்வம் உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை. எல்லாம் அவரவர் புரிதலில்தான் உள்ளது. இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு வழி உண்டு. ஒருவர் ஆங்கிலத்தில், "God is nowhere" என்று எழுதிவைத்தார் என்றால்,  அதனைப் படிக்க வருபவர் "God is now here" என்று படித்துக் கொள்ள இடம் உண்டு.

கடவுள் என்பது எள்ளில் எண்ணெய் போல், பாலில் நெய் போல், பழத்தில் இன்சுவை போல், எங்கும் கலந்து நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருள். எங்கும் நிறைந்து உள்ள பரம்பொருள் கல்லிலும் செம்பிலும் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரிலும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்றது.. எனவேதான், "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்றார் மணிவாசகப் பெருமான். "நீங்காதான்" என்னும் சொல்லை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். அவனாகப் போகமாட்டான்,  அவனைப் போகச் செய்யவும் நம்மால் முடியாது. ஏனெனில், அவனுக்கு இருப்பிடம் ஒவ்வொரு உயிருமே தான். உயிர்கள் இல்லை என்றால்,  கடவுளுக்கு வேலை இல்லை. அவனை நினைப்போரும் இல்லை. அந்த நிலையில் அவன், இல்லாத பொருளே ஆவான். "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா" என்பார் மணிவாசகப் பெருமான். ஓங்காரப் பொருளாக உள்ளத்தில் நின்றவன் இறைவன்.

வெளியில் நாம் காணும் பொருள்களில் இறைவன் உள்ளான் என்றால், உள்ளத்திலும் உள்ளான் என்பது விளங்கும்.

"உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பார்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பார்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே"

என்று தெளிவாக அருளிச் செய்தார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

இதற்குப் பெரியோர், தருக்க ரீதியாகச் சொல்லும்போது, "சற்காரிய வாதம்" என்பார்கள். "சற்காரியம்" என்றால் "உள்ள பொருள்" என்று பொருள். சத்து - உள்ளது. நிலையானது, காரியம் - பொருள். "சற்காரிய வாதம்" என்றால், "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது. இப்படியும் சொல்லலாம்... உள்ள பொருள் தோன்றும். இல்லாத ஒரு பொருள் தோன்றுவதற்கு இல்லை.

சத்து என்னும் சொல்லுக்கு, உள்ளது, நிலையானது என்று கண்டோம். நிலையானது என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். சித்து என்றால், அறிவு உள்ளது என்று பொருள். சத்து+சித்து+ஆனந்தம் என்னும் மூன்று சொற்களும் கூடி, சச்சிதானந்தம் என்று ஆனது. 

சத்து - நிலையானதாகவும், அழிவற்றதாகவும் உள்ள பொருளை; சித்து - அறிவு நிலையில் கண்டு, ஆனந்தம் - ஆனந்தம் அடைவது. இந்த அருள் நிலையை சச்சிதானந்தம் என்றனர் பெரியோர்.

தமிழில், 'சத்து' என்றால் மெய்ம்மை, 'சித்து' என்றால் அறிவு, ஆனந்தம் - ஆனந்தம், ஆகக் கூடி, "சச்சிதானந்தம்" என்பது "உண்மை அறிவு ஆனந்தம்" எனப்படும். சச்சிதானந்தப் பரம்பொருள் என்றால், உண்மை அறிவில் கண்போர்க்கு ஆனந்தம் தரும் பொருள்.

சத்து என்றால் உண்மையானது, நிலையானது, அழிவு இல்லாதது என்று கண்டோமல்லவா? உலகில், உண்மையான, நிலையான, அழிவற்ற பொருள்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று, இறைவன். மற்றொன்று, உயிர்.

சித்து என்றால் அறிவு என்ற கண்டோமல்லவா? உலகில், அறிவு உள்ள பொருள்கள் இரண்டு உள்ளன. ஒன்று இறைவன். மற்றொன்று உயிர்.

இறைவனும் அழியாத பொருள், அறிவு உள்ள பொருள். உயிரும் அழியாத பொருள், அறிவு உள்ள பொருள்.

இறைவனுக்கும் வயது இல்லை. உயிருக்கும் வயது இல்லை. இரண்டும் சமம். எனவேதான், இறைவனை, அவன் இவன் என்று ஒருமையில் அழைக்கின்றோம். இது சொரூப நிலை.

அறிவு நிலையில் மட்டும் இறைவனுக்கும், உயிருக்கும் வேற்றுமை உண்டு. இறைவன் முற்றறிவினன், உயிர் சிற்றறிவினை உடையது. இறைவன் தூய அறிவை உடையவன். (வாலறிவினன் - மெய்யறிவினன்). உயிர் அறிவு தூய்மை அற்றது. இறைவன் எல்லாவற்றையும் ஒருங்கே அறிபவன். உயிர் அறிவித்தால் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளும். இறைவனுக்கு மறதி இல்லை. உயிருக்கு, மறதி உண்டு. அறிந்ததை அப்போதே மறக்கும். காலப்போக்கிலும் மறக்கும். அறிவு விளங்க விளங்க, மறதி குறைந்துகொண்டே வரும். அறிவு விளங்க விளங்க, தூய்மை பெறும்.

பண்புகள் எல்லாம் ஒருபொருளின் மூலமாகத் தான் விளங்கும். அதைத் தனியாகக் காணமுடியாது. காட்டவும் முடியாது. அது உணர வேண்டிய ஒன்று. அறிவு, அன்பு, ஆற்றல், முதலானவைகள் எல்லாம் பண்புகள். இவற்றுக்கு மாறானவை தீய பண்புகள்.

சொரூப நிலை, தடத்த நிலை என்று இருநிலைகள் இறைவனுக்கும், உயிர்களுக்கும் உண்டு. "சொரூப நிலை" என்பது இயல்பு நிலை, சூட்சும நிலை (சூக்கும நிலை), நுண்மை நிலை என்றெல்லாம் பொருள்படும். சிறப்பு நிலை என்றும் சொல்லப்படும். வடிவு, பெயர் முதலியன இல்லாத நிலை. கண்ணால் காணப்படாத நிலை. இந்த நிலையில் இறைவன் அறியப்படுபவன் அல்ல. அறியப்படாதவனும் அல்ல. "தடத்த நிலை" என்பது, பொது இயல்பு ஆகும். வடிவோடு இருப்பது. அயல் இடத்து இருப்பது. இந்த நிலையில் உருவமும், பெயரும் உண்டு.

சொரூப நிலையில் இறைவனுக்கு ஓர் உருவம் இல்லை. உருவம் இல்லை என்றதனாலேயே ஒரு பெயரும் இல்லை. சொரூப நிலையில் இறைவனுக்கு ஒரு வடிவமும், பெயரும் இல்லாமை பற்றியே, "ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று மணிவாசகர் திருவாசகத்தில் காட்டினார். சொரூப நிலையில் உயிருக்கும் ஒரு வடிவம் இல்லை. ஒரு பெயரும் இல்லை. அது ஒரு உடம்பை எடுக்கும் போதுதான், பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும் உண்டாகின்றது. பொதுப் பெயர் என்பது, வர்க்கப் பெயர். மரம், செடி, கொடி, மனிதன் என்பது போல. சிறப்புப் பெயர், அரச மரம், மல்லிகைக் கொடி, முருகன், வள்ளி என்பன போல.

இந்த உடம்போடு உயிர் ஒன்றி இருக்கும்போதுதான், அந்த வடிவத்திற்கு, "சுப்பன்" "குப்பன்" என்று ஒரு பெயர் வழங்கப்படுகின்றது. உயிர் போனபிறகு, உடம்பு பிணம் எனப்படும். உயிரானது உடலில் எப்படி இருந்தது? உடம்பை விட்டு எங்கே போனது? எப்படிப் போனது? என்பதை நாம் அறிய முடியாது. உடம்பு இயங்கியதால், உயிர் இருந்தது என்று கொண்டோம். உடம்பு இயங்காததால், உடம்பில் உயிர் இல்லை என்று கொண்டோம். உயிர் உடம்பில் இருக்கும்போது தடத்த நிலை. உயிரை விட்டு நீங்கியபோது சொரூப நிலை. அது போலவே, சொரூப நிலையில் இறைவன் அறிய முடியாதவன். உணரத் தான் முடியும்.

அவனை உணர்ந்து கொள்ளும் அறிவு நிலைக்கு உயிர்கள் வந்து, உணர்வு நிலையில் திகழும் பொருட்டு, தனது பெருங்கருணை காரணமாக இறைவன், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று பஞ்சகிருத்தியம் என்று சொல்லப்படுகின்ற ஐந்து தொழில்களை மேற்கொள்ள வேண்டியே, இறைவன் திருமேனி கொண்டு எழுந்து அருள்கின்றான்.

இயங்குகின்ற பொருள்களை அனைத்திற்கும் இருவகையான ஆற்றல் உண்டு. ஒன்று நிலை ஆற்றல் அல்லது சாத்திய ஆற்றல் (Potential Energy). இன்னொன்று, இயக்க ஆற்றல் (Kinetic Energy). சாத்திய ஆற்றல் இல்லாமல் இயக்க ஆற்றல் இல்லை.

சாத்திய ஆற்றல்தான் பரம்பொருள். அது சிவம் என்று சொல்லப்படும். 'சிவமே என்று கிடக்கின்றான்' என்றால், செயல் இல்லாமல் சும்மா இருக்கின்றான் என்று பொருள். ஒரு சாரார் சிவம் என்கிறார்கள். அதுபோலவே, அவரவரும் அவரவருக்குப் பிடித்த வடிவில் கற்பனை செய்து வழிபடுகிறார்கள். நமது வீடுகளில் சும்மா இருக்கின்ற ஆற்றல் உள்ளவர்களான பெரியவர்கள், தனக்குக் கீழ் உள்ளவர்களை ஏவல் கொள்கின்றனர். சாத்திய ஆற்றல் நினைப்பதை எல்லாம், இயக்க ஆற்றல் செயல்படுத்துகின்றது. இறைவனுக்கு இயக்க ஆற்றல் என்பது சக்தி எனப்படுகின்றது. அது பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, கிரியாசத்தி, ஞானசத்தி என்று ஐவகைப்படும். இந்த ஐவகைச் சத்திகள் தாம், ஐந்தொழில் எனப்படும் பஞ்ச கிருத்தியங்களை, இறைவன் ஆணைப்படி இயற்றுகின்றன.

ஐந்து தொழில்களை வடமொழியில், "பஞ்ச கிர்த்தியம்" என்பர். ஆக்கல் என்பது சிருஷ்டி அல்லது சிருட்டி. காத்தல் என்பது திதி அல்லது ஸ்திதி. அழித்தல் என்பது, சங்காரம், சம்மாரம், சம்ஹாரம். மறைத்தல் என்பது திரோபவம், அருளல் என்பது அனுக்கிரகம். இவ்வாறு சொல்லப்பட்ட ஐந்தொழில்கள், தூல ஐந்தொழில், சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில் என்று மூவகைப்படும். அவற்றையும் விரித்தால் மிகப் பெருகும்.

இறைவன் திருமேனி கொண்டு எழுந்தருள்வதை, சமய நெறிகள் ஒவ்வொரு விதமாகத் தமக்கு வகுத்துக் கொண்டன. அவரவர் விருப்பப்படி இறைவனுக்குப் பெயரையும் அமைத்துக் கொண்டன. எந்தெந்த வடிவில் இறைவனை வழிபடுகின்றார்களோ, அந்த வடிவில் எழுந்து அருள் புரிவது ஒரு பரம்பொருள்தான். மனித குலம் ஒன்று என்று கொண்டால், இறைவனும் ஒருவனே. மனித குலம் பலவேறு பிரிவாக இருப்பதால், அந்தந்தப் பிரிவினர் அவரவருக்குத் தோன்றும் வடிவில் இறைவன் வழிபடுகின்றார்கள். இறைவனும், அவ்வாறு கற்பிக்கப்பட்ட வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றான். "அன்பால் நினைவாரது இதயக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேருதல்" என்று, "மலர்மிசை ஏகினான்" என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடித்த உரையைக் காண்க.

கோதுமை மாவு ஒன்று. அதை சப்பாத்தி, பூரி, பரோட்டா என்பன போன்ற வடிவங்களில் மக்கள் வடித்துக் கொள்கின்றார்கள். அரிசி மாவு ஒன்றுதான். அதை, இட்டகளியாகவும் (இட்லி), தோசைகளில் பலவிதமாகவும், மற்றும் பல்வேறு பண்டங்களாகவும் ஆக்கிக் கொள்வது போல, இறைவனுக்கு உருவத்தையும், பெயரையும் படைத்துக் கொண்டவை பலவேறு சமயங்கள். கல் ஒன்றுதான், அதை பல வடிவங்களில் சிலைகளாக வடிக்கின்றார்கள். வடித்த பின், சிவன், திருமால் முதலிய  பெயர்களை வழங்குகின்றோம். வடிப்பதற்கு முன் கல் என்ற ஒரு பெயரே உண்டு. உண்மையில் சிவன் கல் என்றும், திருமால் கல் என்றும் ஒன்று இல்லவே இல்லை. பொருள் ஒன்றுதான். அது பல பண்டங்களாக வரும்.

சமயம் கடந்த ஒப்பற்ற முதல் ஞானியாகிய திருவள்ளுவ நாயனார், முதல் அதிகாரத்தில், இறைவனை "மலர் மிசை ஏகினான்" என்றார். எந்த வடிவத்தையும் அவர் குறிக்கவில்லை. "மலர்" என்று குறித்ததும், ஆன்மாக்களின் இதயத் தாமரையையே. பொதுவாக, "மலர்" என்று சொன்னால், அது தாமரையையே குறிக்கும். எண்ணெய் என்று சொன்னால், எள்ளில் இருந்து வடித்த எண்ணெயையே (எள்+நெய்) குறிக்கும். மேற்குறித்த திருக்குறளுக்கு உரை வடித்த பரிமேலழகர், பிறப்பால் வைணவராக இருந்தும், தனக்கு ஏற்றவாறு கொள்ளாமல், இறை உண்மையை உள்ளபடி உணர்ந்து, "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண், அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" என்று உண்மை கண்டார். "அவர் நினைந்த வடிவம்" என்னும் சொற்றொடரைக் கருத்தில் இருத்திக் கொண்டால் போதும்.

"ஆர் உருவ உள்குவார் உள்ளத்து உள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்"

என்றார் அப்பர் பெருமான். யார் யார் எந்த எந்த வடிவில் நினைக்கின்றார்களோ அந்த வடிவில் நிற்பான் இறைவன் என்கின்றார்.

"சுருதி வானவனாம், திருநெடு மாலாம்,

சுந்தர விசும்பின் இந்திரனாம்,

பருதி வானவனாம், படர்சடை முக்கண்

பகவனாம், அகஉயிர்க்கு அமுதாம்,

எருது வாகனனாம், எயில்கள்மூன்று எரித்த

ஏறு சேவகனுமாம், "பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம்", கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே."   --- திருவிசைப்பா.

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே வேதங்களை ஓதும் பிரமனாகவும் மேம்பட்ட நீண்ட வடிவு எடுத்த திருமாலாகவும், அழகிய தேவர்கள் தலைவனாகிய இந்திரனாகவும், சூரிய தேவனாக வும், பரவிய சடைமுடியையும் மூன்று கண்களையும் உடைய சிவ பெருமானாகவும், உயிரகத்து அதனைத் தளிர்ப்பிக்கும் அமுதமாக வும், காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த, மேம்பட்ட வீரனாகவும், "இவற்றைத் தவிர வேண்டுவார் வேண்டும் உருவத்தில் தோற்றம் வழங்குபவனாகவும் உள்ளான்".

"நூல் அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக

நீல மணிமிடற்றான் நீர்மையே - மேல்உலந்தது

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத்து அவ்வுருவே ஆம்."

இது காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி. "தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்கு அருளுதலே இறைவனது இயல்பு" என்பதை அறியாதார், "பொடி பூசி, எலும்பணிந்து, சுடலை ஆடுதலையே இவனது உண்மை இயல்பாக மயங்கித் தாம் தாம் அறிந்தவாறு பேசுவர். அது பற்றி எமக்கு வருவதோர் இழுக்கில்லை" என்றார் காரைக்கால் அம்மையார்.

முன்னர், இறைவனது சொரூப நிலை, தடத்த நிலை பற்றிப் பார்த்தோம். சொரூப நிலை என்பது சாத்திய ஆற்றல். தடத்த நிலை என்பது இயக்க ஆற்றல். இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு நிலை உள்ளது. அது அட்டமூர்த்த நிலை. மூர்த்தம் என்றால் உடல், உறுப்பு, அல்லது வடிவு உடைய பொருள் என்று கொள்ளவேண்டும். அட்டமூர்த்தத்தை எட்டுநிலை அல்லது எண்மை நிலை என்பர் பெரியோர். இங்குதான் ஒரு சூட்சுமம் உள்ளது.

எட்டு மூர்த்தங்கள் என்பது, மண், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும் பூதங்கள். சூரியன் சந்திரன் ஆகிய ஒளிப் பொருள்கள் இரண்டு. ஆன்மா ஆகிய அறிவுப் பொருள் ஒன்று.

"அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்

அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே

இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய், ஞான

மயனாகி நின்றானும் வந்து."

என்பது காரைக்கால் அம்மையார் பாடல். பல பாடல்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் இங்கே கொண்டுள்ளேன்.

"அறிவே வடிவமான பெருமான் இறைவன். இது அவனது உண்மை நிலை (சொரூப நிலை). அவன் தான் உலக உயிர்களுக்கு ஐம்பெரும் பூதங்கள், இருசுடர், உயிர் ஆகிய எட்டு உருவானவன். இது எண்மை நிலை." "எண்மைநிலை" என்றால், "எட்டு நிலை" என்றும், நாம் எண்ணுகின்ற, கருதுகின்ற, வடிக்கின்ற, கற்பித்துக் கொள்ளுகின்ற நிலை என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த எட்டுப் பொருள்களில் இறைவன் விளங்குவதை அறியலாம். ஐம்பெரும் பூதங்களாகிய வானில் கலப்பு நிலையிலும், காற்றில் இயக்க நிலையிலும், நீரில் குளரிச்சி நிலையிலும், தீயில் வெம்மை நிலையிலும், மண்ணில் திண்மை நிலையிலும் விளங்குவது இறைவன். கதிரவனில் சோதி அமைத்தவனும், சந்திரன் ஒளியில் குளிர்ச்சியை வைத்தவனும் அவன்தான். உயிரிகளில் (ஆன்மாக்களில்) அறிவு நிலையில் விளங்குகின்றான். இந்த எட்டுப் பொருள்களில், உயிரைத் தவிர, பிற ஏழு பொருள்களும் அறிவுற்ற பொருள்கள். ஆன்மா ஒன்றே அறிவுள்ள பொருள். சிற்றறிவு கொண்ட ஆன்மாவின் அறிவு விளக்கம் பெறுவதற்காக, சடமான ஏழு பொருள்களில் இறைவனது விளக்கம் நிகழ்கிறது. நாம் படிக்கின்ற புத்தகம் சடப் பொருள். அது எதற்காக உள்ளது? உயிருள்ள பொருளாகிய ஆன்மா அறிவு விளக்கம் பெறுவதற்காக.

கடவுளும் உயிரும் சித்து அல்லது அறிவுப் பொருள்கள் என்ற வகையில் ஓர் இனம். என்றாலும், அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டன ஆகும்.  கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவது.  உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது.  கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது.  உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது.

இறைவனுக்கு உள்ள கோயில்கள், படிமங்கள் எல்லாம் மனிதனால் கற்பித்து உருவாக்கப்பட்டவை. அவைகளிலே, நமது வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன் எழுந்தருள் புரிகின்றான். எழுந்தருளப் பண்ணுவதை, வடமொழியில் "ஆவாகனம்" என்பர். கற்பிக்கப்பட்டவை "படமாடக் கோயில்". வேண்டினாலும், வேண்டாவிட்டாலும், இறைவன் அந்தர்யாமியாக (உள்ளுறை பொருளாக) எல்லா உயிர்களிலும் உள்ளான். நினையாதவர் உள்ளத்தில் ஒளித்து இருக்கின்றான். நினைப்பவர் உள்ளத்தில், அறிவு உருவாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றான். எனவே, உயிர்களை "நடமாடக் கோயில்" என்பர்.

ஒரு பொருளைக் காணாத காலத்தில், கருத்தினாலே காண்பதற்குத் தூண்டு கோலாக இருப்பது அதனுடைய பெயர் மற்றும் உருவம்.  யாரேனும் மிகவும் அன்பு உடையவர்கள் இறந்து போனால் அவர்களுடைய நினைவாகவே இருக்கிறோம். அதனுடைய பயனாக நம்முடைய நனவிலும்,  கனவிலும் அவர்களுடைய உருவம் அடிக்கடி வந்து தோன்றுகிறது. இதற்குக் காரணம் நமக்கு அவர்களிடத்தில் உள்ள அன்புதான். அந்த அன்பு எவ்வளவுக்கு எவ்வளவு உரமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுடைய உருவம் நம்முடைய கனவில் வந்து நிற்கும். இது மனிதன் தன்னுடைய அனுபவத்தில் காண்பது. இது போலவே இறைனுடைய திருக்கோலத்தைக் கண்ணாலே கண்டு, மீதூர்ந்த காதலினால் நெஞ்சத்தில் வைத்துத்  தியானம் பண்ணிப் பழகினால், கண்ணாலே காணாத காலத்தும் அக்கோலத்தோடு நினைவில் வந்து நிற்பான்.  கனவிலும் வந்து நிற்பான். அவன் திருவுருவத்தைக் காணும் பேறு நமக்குக் கிடைக்கும். பழகப் பழக நெஞ்சிலே தோன்றும் உருவமே கண் முன்னாலும் தோன்றும். அந்தத் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். "நனவினும் கனவினும், நம்பா, உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்" என்றார் திருஞானசம்பந்தர்.

கவிச்சக்கரவர்த்தி,  இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார்.  சூர்ப்பனகை இராமனைக் கண்டு ஆசை கொள்கிறாள். அவனை அணுகியபோது இலட்சுமணனால் தண்டிக்கப் பெற்றுத் திரும்புகிறாள். இராவணனிடம் வந்து, தான் மூக்கை இழந்ததற்குக் காரணம் ஒன்றைக் கற்பித்துக் கூறுகிறாள். பேரழகியாகிய சீதையைத் தூக்கிக் கொண்டு வந்து, இராவணனுக்கு இன்பம் தரும் பொருளாக ஆக்க முயன்றதாகவும், அப்போது இலட்சுமணன் தன்னை இந்தக் கோலம் செய்ததாகவும் கூறுகிறாள். சீதையைப் பற்றி சூர்ப்பனகை பலபடியாக வருணிக்கக் கேட்ட இராவணனுக்கு சீதாதேவியிடம் ஆசை உண்டானது. அவளுடைய உருவத்தை அவன் கற்பனை செய்து கொள்கிறான். காமம் மிகுதியால் அவன் மிகவும் துன்பப்படுகிறான். அப்போது அவனுக்கு உருவெளித் தோற்றமாக ஒரு பெண்ணின் உருவம் தோன்றுகிறது. சீதையை அவன் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. ஆனாலும் முன்னால் தோற்றுகின்ற பெண்ணின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அதை அவன் கண்டபோது அவள்தான் சீதையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, உடனே சூர்ப்பனகையை அழைத்துவரச் சொல்கிறான். சீதை சீதை என்று எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்தமையினால் அவனுக்குப் பார்க்கும் இடம் எங்கும் சீதையாகத் தோன்றும் நிலை வந்து விட்டது. இராவணன் ஏவலின்படி சூர்ப்பனகை அங்கே வந்தாள். அவளோ இராமனிடத்தில் தீரா விருப்பம் கொண்டவள். அவளைப் பார்த்ததும் இராவணன்  "இதோ பார் இவள்தானா நீ சொன்ன சீதை" என்று கேட்கிறான்.  

சூர்ப்பனகைக்கு எப்போதும் இராமனுடைய நினைவாகவே இருக்கிறது. இராவணனுக்குச் சீதையிடத்தில் உள்ள ஆசை எத்தனை வலியதோ, அத்தனை வலியது சூர்ப்பனகைக்கு இராமனிடத்தில் உள்ள ஆசை. இராவணன் தான் கண்ட உருவெளித் தோற்றத்தைக் காட்டி,  'இவள்தானே சீதை' என்று கேட்டபோது சூர்ப்பனகை பார்க்கிறாள். அவளுக்கு அங்கே சீதை தோன்றவில்லை. இராமன்தான் தோன்றுகிறான். உடனே அவள் வியப்பு மீதுர்ந்து,  'இவன்தான் அந்த வல்வில் இராமன்'  என்கிறாள்.

அற்ப சிற்றின்பத்தில் நாட்டம் உள்ள காமிகளுக்கே மனக்கண்ணிலும்,  புறத்திலும் அவர்கள் நினைத்த உருவம் தோற்றம் தருமானால்,  இறைவன்பால் எல்லை இல்லா அன்பு கொண்ட அடியார்களுக்குத் தோற்றுவதற்குத் தடை இருக்காது. மனம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். பத்தி உணர்ச்சி மிக்கவர்கள் இறைவனுடைய தியானத்தினால் அவன் திருக்கோலத்தை நினைத்த இடம் எல்லாம் காண்பதற்குரிய நிலையை அடைவார்கள். 

நம்மிடத்து அன்பு பூண்டுள்ள ஒருவரை நாம் அன்போடு அடிக்கடி எண்ணுகின்றோம். அப்படி எண்ணும்போது, அவரது உருவம் நமது மனக்கண்ணில் தோன்றுகிறது. வேண்டாதவரை நாம் நினைப்பது இல்லை. அதுபோலவே, இறைவனை நாம் கருதுகின்ற வடிவத்தில், உள்ளத்தில் தியானிக்க முற்பட்டால், அவனது உருவம் நாம் காணுகின்ற பொருள்களில் எல்லாம் தோன்றும். 

"காக்கை சிறகினிலே, நந்தலாலா! – நின்றன் 

கரிய நிறம் தோன்றுதையே, நந்தலாலா! 

பார்க்கும் மரங்களெல்லாம், நந்தலாலா! – நின்றன் 

பச்சை நிறம் தோன்றுதையே, நந்தலாலா!"

என்று பாரதியார் பாடியதைச் சிந்தித்தால் விளங்கும்.

எனவே, இறைவன் என்பது உள்ள பொருள்தான். இல்லை என்பது இல்லை. அவரவர் கற்பித்துக் கொண்ட வடிவிலே அவன் எழுந்தருள் புரிவதால், இறைவன் கற்பிக்கப்பட்ட பொருளே என்பதில் ஐயம் ஏதும் இல்லை.




No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...