பொது --- 1075. ஒழுகூன் இரத்தம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஒழு கூனிரத்தம் (பொது)


முருகா! 

தேவரீரது திருநாமத்தை ஓதி உய்ய அருள்.


தனனா தனத்த தனனா தனத்த

     தனனா தனத்த ...... தனதான


ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி

     உயர்கால் கரத்தி ...... னுருவாகி


ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து

     உழல்மாய மிக்கு ...... வருகாயம்


பழசா யிரைப்பொ டிளையா விருத்த

     பரிதாப முற்று ...... மடியாமுன்


பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்

     பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே


எழுவா னகத்தி லிருநாலு திக்கில்

     இமையோர் தமக்கு ...... மரசாகி


எதிரேறு மத்த மதவார ணத்தில்

     இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ்


செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து

     செழுதீ விளைத்து ...... மதிள்கோலித்


திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


ஒழுகு ஊன், இரத்தமொடு, தோல் உடுத்தி,

     உயர்கால், கரத்தின் ...... உருவாகி,


ஒருதாய் வயிற்றின் இடையே உதித்து

     உழல், மாய மிக்கு ...... வருகாயம்,


பழசாய், இரைப்பொடு இளையா, விருத்த

     பரிதாபம் உற்று ...... மடியாமுன்,


பரிவால் உளத்தில் முருகா எனச்சொல்

     பகர்வாழ்வு எனக்கும் ...... அருள்வாயே.


எழு வானகத்தில் இருநாலு திக்கில்

     இமையோர் தமக்கும் ...... அரசாகி,


எதிர் ஏறு மத்த மதவாரணத்தில்

     இனிது ஏறு கொற்றம் ...... உடன்வாழும்


செழுமா மணிப் பொன் நகர் பாழ் படுத்து,

     செழுதீ விளைத்து, ...... மதிள்கோலித்


திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.

பதவுரை

எழுவானகத்தில் இருநாலு திக்கில் --- விளங்கும் விண்ணுலகில் எட்டுத் திசையிலும் உள்ள 

இமையோர் தமக்கும் அரசாகி --- தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி, 

எதிர் ஏறு மத்த மதவாரணத்தில் இனிதேறு கொற்றமுடன் வாழும் --- அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாகிய ஐராவதத்தின் மீது இனிதாக ஏறிவரும் வெற்றியோடு வாழ்ந்த 

செழுமா மணிப்பொன் நகர்பாழ் படுத்து --- செழிப்பான அழகிய அமராவதி நகரைப் பாழ்படுத்தி,

செழு தீ விளைத்து மதிள்கோலி திடமோடு அரக்கர் கொடுபோய் அடைத்த --- பெரும் தீயிலிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் தேவர்களைக் கொண்டுபோய் அடைத்து வைத்த, 

சிறைமீள விட்ட பெருமாளே --- சிறையை நீக்கி தேவர்களை விடுவித்த பெருமையில் மிக்கவரே!

ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி --- பரந்து உள்ள ஊனும்,  இரத்தமும் சேர்ந்து குழைத்துத் தோலால் மூடப்பட்டு, 

உயர்கால் கரத்தின் உருவாகி --- உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி, 

ஒருதாய் வயிற்றின் இடையே உதித்து உழல் --- ஒரு தாயின் வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து உழலுகின்ற, 

மாய மிக்கு வருகாயம் பழசாய் --- மாயையால் ஆன இந்த உடலானது முதுமையை அடைந்து, 

இரைப்பொடு இளையா விருத்த பரிதாபம் உற்று --- மூச்சு இரைப்பால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து,

மடியா முன் --- இறந்து போவதற்கு முன்பாக, 

பரிவால் உளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ்வு எனக்கும் அருள்வாயே --- உள்ளத்தில் அன்போடு "முருகா" என்ற தேவரீரது திருநாமத்தைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை அடியேனுக்கும் அருள்வாயாக.

பொழிப்புரை

பரந்து விளங்கும் விண்ணுலகில் எட்டுத் திசையிலும் உள்ள தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி,  அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாகிய ஐராவதத்தின் மீது இனிதாக ஏறிவரும் வெற்றியோடு வாழ்ந்த செழுமை உடைய அழகிய அமராவதி நகரைப் பாழ்படுத்தி, பெரும் தீயிலிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் தேவர்களைக் கொண்டுபோய் அடைத்து வைத்த, சிறையை நீக்கி தேவர்களை விடுவித்த பெருமையில் மிக்கவரே!

பரந்து உள்ள ஊனும்,  இரத்தமும் சேர்த்துக்  குழைத்துத் தோலால் மூடப்பட்டு, உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி,  ஒரு தாயின் வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து உழலுகின்ற, மாயையால் ஆன இந்த உடலானது முதுமையை அடைந்து,  மூச்சு இரைப்பால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக, உள்ளத்தில் அன்போடு "முருகா" என்ற தேவரீரது திருநாமத்தைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை அடியேனுக்கும் அருள்வாயாக.

விரிவுரை

ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி..... மாய மிக்கு வருகாயம்  --- 

ஒழுகுதல் - பரந்து படுதல், வளர்தல். 

ஊன் - தசை, இறைச்சி.

நமது உடம்பில் பரந்துள்ள தசையானது, உணவால் வளர்ச்சி அடைந்து, இறுதியில் தளர்ச்சி அடைகிறது. இது மாயையால் ஆனது. மண் புனல் தீ காற்று வெளி என்ற ஐம்பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய உடம்பு.

“ஐந்துவிதம் ஆகின்ற பூதபேதத்தினால்

   ஆகின்ற யாக்கை”                        --- தாயுமானார்.


கருத்துரை

முருகா! தேவரீரது திருநாமத்தை ஓதி உய்ய அருள்.




No comments:

Post a Comment

எமனுக்கு எச்சரிக்கை

  எமனுக்கு எச்சரிக்கை ---- வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமை...